Welcome..! Join us to Develop your Humanity
பரம் சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை
விஜய் பாண்டுரங் பட்கர்-மீத்திறன் கணினியை(super computer) கண்டிராமல் அதனை வடிவமைத்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய கணிப்பொறி விஞ்ஞானி
மீத்திறன் கணினியைப் பற்றிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் எண்பதுகளின் பிற்பகுதியில், அமெரிக்கா க்ரே (Cray)மீத்திறன் கணினிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியதற்குப் பின்தான் தொடங்கியது. எண்பதுகளில் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயற்கைக்கோள் மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் மீத்திறன் கணினிகளை உருவாக்கின. ஆனால் அந்த நாடுகள் மீத்திறன் கணினிகள் பற்றிய அறிவை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. ஏனெனில் வளரும் நாடான இந்தியா மீத்திறன் கணினிகளை வானிலை ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல், ஏவுகணை மற்றும் போர் விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற அச்சம்!
மீத்திறன் கணினி என்னும் கருத்தை அருமையாக மாற்றுவது என்னவென்றால் சமாந்தர கணினிப் படித்துகை(parallel computing) என்னும் முறையாகும். இந்த முறையின் மூலம் ஒரு செயல்(அ) வேலையை பல சிறிய துண்டுகளாகப் பிரித்து இணையாக செய்வதாகும். இறுதி விடையானது அனைத்து வெளியீடுகளையும் (output) ஒரு செயலி ஒன்றாக்கிய பின் கிடைக்கும்.
குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு பின்னர் பிரதமரின் அறிவியல் ஆலோசனை மன்றம்(SAC-PM), உயர்நிலை கணினி முன்னேற்றத்திற்கான மையத்தை(C-DAC) அறிவியல் ஆராய்ச்சி சமூகமாக, மின்னணுவியல் துறையின்கீழ் மார்ச் 1988 ஆம் ஆண்டு நியமித்தது. (தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறை), இது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மீத்திறன் கணினி, அது அதிவேகமாக செயல்பட்டு அறிவியல் மற்றும் ஏனைய கணினி சார் முன்னேற்றத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் படி அமைய வேண்டும்.
இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்துவதற்கு, பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், விஜய் பாண்டுரங் பட்கர் அவர்களை நியமித்தார். பட்கர் அவர்கள் தனது வாழ்க்கையில் மீத்திறன் கணினியை முன்னமே கண்டதே இல்லை.
பிரதமர் ராஜீவ்காந்தி பட்கரிடம் மூன்று கேள்விகள் கேட்டார்:
"நம்மால் செய்ய முடியுமா?"
அதற்கு பட்கர்,"நான் என் வாழ்வில் மீத்திறன் கணினியை இதுவரை கண்டதில்லை, ஏனென்றால் நம்மிடம் அதற்குரிய வசதிகள் இல்லை. கிரேவின் (Cray) மீத்திறன் கணினியின் புகைப்படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன், ஆனால் நம்மால் செய்ய முடியும்"என்று கூறினார்.
"அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?"ராஜீவ்காந்தி வினவினார்
அதற்கு அவர்,"க்ரேவை (Cray) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நேரத்தை விட குறைவுதான்"என்றார்.
"அதற்கு எவ்வளவு செலவு ஆகும்?"என்றார் ராஜீவ்.
அதற்கு அவர்,"முழுமையான முயற்சி, ஒரு நிறுவனத்தை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்குதல், அதற்கு விற்பனை பங்கு, போன்ற அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் முதல் மீத்திறன் கணினியை நிறுவுவதற்கு க்ரே (Cray) மீத்திறன் கணினியை விட குறைந்த செலவே ஆகும்", என்று கூறி பிரதமரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதைக்கேட்டு ஆனந்தமடைந்த பிரதமர் பணியை அவரிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட இந்தியா முழுவதிலுமிருந்து C-DAC ஆராய்ச்சியாளர்கள் புனேவில் ஒன்று கூடினர். மூன்றாண்டுகளில் அந்த அசாதாரணமான நிகழ்வு நடந்தது. அனைத்து விஞ்ஞானிகளும் மும்முரமாக வேலை செய்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை செய்து முடித்தனர். தங்கள் கையில் உள்ள பொருட்களை வைத்து விஞ்ஞானிகள் 1991ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உள்நாட்டு மீத்திறன் கணினியான பரம் - PARAM 8000 செய்து முடித்தனர்.
கணினித் துறையில் ஒரு வளரும் தேசம் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைவது அதுவே முதல் முறையாக இருந்தது. உலகம் இந்த வளர்ச்சியைக் கண்டு நம்ப முடியாமல் இருந்தது. பலபேருக்கு பரம் - PARAM ஒரு மீத்திறன் கணினி தானா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் பட்கர் அவர்கள் பரம் - PARAMன் மூல முன்மாதிரியை (prototype) உலகின் முக்கியமான மீத்திறன் கணினி மாநாடுகளுக்கு, கண்காட்சிகளுக்கும் எடுத்துச் சென்று விளக்கினார். இந்கு திறன் மதிப்பு நடைபெற்று, செயல் விளக்கம் அளிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக மீத்திறன் கணினி என அறிவிக்கப்பட்டது. அமெரிக்கப் பத்திரிகை தனது தலையங்கத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சினத்தில் இந்தியா சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியே விட்டது(,"Denied supercomputer, Angry India does it! ) எனக் குறிப்பிட்டது.
இந்தப் பலச்செயலி இயந்திரம், பரம்-PARAM-8000ன் திறன் மதிப்பு ஜிஃப்ளாப்-Gflops ல் நடைபெற்று, அந்நேரத்தில் உலகின் இரண்டாவது மிக வேகமான மீத்திறன் கணினி என அங்கீகரிக்கப்பட்டது. இது அமெரிக்காவின் க்ரே - cray கணினி போலவே செயல்பட்டது. ஆனால் இதன் விலையோ அந்தக் கணினி விலையில் ஒரு சிறு பகுதியாகும். இதன் காரணமாக க்ரே- cray கணினியை தயாரித்த அமெரிக்க நிறுவனம் அதன் விலையை குறைக்க நேரிட்டது.
இந்த பரம் - PARAM 8000 பல உயர் செயல்திறன் பரம் - PARAM கணினிகளை வடிவமைக்க அடித்தளமாக அமைந்தது, அது பரம் - PARAM தொடர் என அழைக்கப்பட்டது. 2002இல் பரம் - PARAM 20000 மற்றும் பரம் பத்மா - PARAM Padma ஆகியவை டெராஃப்ளாப்- teraflop தடையைத் தகர்த்தெறிந்து, உச்ச வேகமான 1 டிஃப்ளாப்- 1 tflop வேகத்தை எட்டியது . பரம் இஷான்PARAM Ishan மற்றும் பரம் கஞ்சன் ஜங்கா PARAM Kanchenjunga, ஆகியவை பரம்- PARAM தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை.
ஐ.ஐ.டி ( IIT) கவுகாத்தியில் நிறுவப்பட்டுள்ள பரம் இஷான் -PARAM Ishan,கணக்கீட்டு வேதியியல்,கணக்கீட்டுதிரவ இயக்கவியல், கணக்கீட்டு மின்காந்தவியல், குடிமுறை பொறியியல், காலநிலை மாற்றம் மற்றும் நில அதிர்வு தரவு போன்ற விஷயங்களில் பயன்படுகிறது.என்.ஐ.டி (NIT) சிக்கிமில் அமைந்துள்ள மீத்திறன் கணினி மையத்தில் அமைந்துள்ள பரம் கஞ்சன் ஜங்காவை PARAM Kanchanjunga அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொறியியல் ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்துகின்றனர். ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் பரம் -PARAM என்றால் சமஸ்கிருதத்தில் உச்சநிலை எனப்பொருள்.
பரம் -PARAM கணினியை மையமாக வைத்து, பட்கர் அவர்கள் தேசிய பரம் சூப்பர் கம்ப்யூட்டிங் ஆய்வகம் (National Param Supercomputing Facility (NPSF) என்னும் நிறுவனத்தை அமைத்தார். இது தேசிய அறிவு சார் மையத்தில் (National Knowledge Centreல் கருடா சட்டகம்(grid) மூலமாக, அதிவேக, உயர்தர கணினி செயலாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீத்திறன் கணினியின் பயன்பாட்டை இந்தியாவின் மற்ற மொழிகளிலும் உபயோகிக்க இவர் முயற்சிகள் எடுத்தார் அதில் வெற்றியும் கண்டார்.
விஜய் பட்கர் மற்றும் C-DAC ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால், உத்தியோக மற்றும் பொருளாதார ரீதியாக நம் இந்தியாவை மீத்திறன் கணினி வரை படத்தில் சில உயர்ந்த நாடுகளின் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
டாக்டர் விஜய் பாண்டுரங் பட்கர் 11 அக்டோபர் 1946ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் முரம்பாவில் பிறந்தார். 1965 ஆம் ஆண்டு நாக்பூர் பல்கலைக்கழத்தில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 1968ஆம் ஆண்டு பரோடா M.S பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை பட்டம் பெற்றார். இவர் 1972ஆம் ஆண்டு டெல்லி, ஐ.ஐ.டி (IIT) இல் பொறியியல் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் தற்பொழுது அறிவியல் மற்றும் ஆன்மிகக் ஒருங்கிணைப்பு குறித்து நவீன அறிவியல் மற்றும் பண்டைய சாஸ்திரங்களின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு துவக்கமாக இந்தியாவின் ஆன்மீகத் தலங்களை, அறிவியல் அறிவு சார்ந்த இடங்களாக மாற்ற அவர் முயற்சிகள் செய்து வருகிறார்.
அவருக்கு பல விருதுகளும் பட்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை 2000ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் ஆகிய விருதுகளும் ஆகும். இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த பட்டங்களாகும். 40 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளவற்றது. தற்போது விஜய் பாண்டுரங்க பட்கர் நமது சங்கத்தின் பரிவார் அமைப்பான விஞ்ஞான பாரதியின் தலைவராகவும் உள்ளார் என்பது நமக்கு பெருமை தரும் விஷயமாகும். இவரைப் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகளின் அரிய முயற்சிகளால் பாரத அன்னை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறாள்.