Welcome..! Join us to Develop your Humanity
கடல்சார் தொல்லியல் துறையின் தந்தை
டாக்டர் எஸ் ஆர் ராவ்- கடல்சார் சிந்து சமவெளி மற்றும் துவாரகை நகரத்தை வெளி கொணர்ந்த கடல்சார் தொல்லியல் துறையின் தந்தை- 50 ஆண்டுகால அற்பணிப்பு.
டாக்டர் ஷிகரிப்பூர் ரங்கநாத ராவ் தொல்லியல்துறை ஆராய்ச்சியில் பலகாலம் முன்னணி நிலை வகித்தவர், அவர் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் நிபுணர் மற்றும் பிரசித்திப்பெற்ற ஆராய்ச்சியாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். லோத்தல் பகுதியில் சிந்து சமவெளியின் அகழ்வாய்வு, சிந்து நாகரிகத்தின் எழுத்து ஆராய்ச்சி மற்றும் கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகர் கண்டுபிடிப்பு ஆகியவை அவர் செய்த பல அரும் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்திய தொல்லியல் துறையில் தொல்லியல் மேற்பார்வையாளராக 50 ஆண்டுகள் பணிசெய்து ஓய்வு பெற்ற பின்பு CSIRல் ஏமெரிட்டஸ் சயின்டிஸ்ட் ஆகவும் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்,
அவர் சுமார் 50 கடைக்கால ஹரப்பான் மற்றும் பிந்தைய ஹரப்பான் பகுதிகளை அகழ்ந்து வெளிக்கொணர்ந்தார். அவர் 1952 முதல் 1965 வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில், குஜராத்தில் உள்ள லோத்தல் பகுதியில் ஹரப்பான் காலத்திய துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஹரப்பான் நாகரிகம் குஜராத் வரை நீடித்ததும் மற்றும் உலகின் தொன்மையான கப்பல் பட்டறை அங்கு இருந்ததும் நிரூபிக்கப்பட்டது.
ஷிகரிப்பூர் ரங்கநாத ராவ் 1922ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் சாகர் தாலுகாவிலுள்ள அனந்தபுரம் என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஷிகரிப்பூர் உச்சா ராவ் அவர்கள், மாநில அரசில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்றவர். எஸ் ஆர் ராவ் தன்னுடைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை 1936ல் ஷிமோகாவில் உள்ள அரசுப்பள்ளியில் முடித்தார். அவரை மைசூரிலுள்ள கல்லூரியில் சேர்ப்பதற்கு அவருடைய தந்தையார் மிகவும் சிரமப்பட்டார். அவ்வேளையில் எம்.வெங்கடகிருஷ்ணன் என்ற தனவந்தர் மைசூரில் நடத்திய கல்வி நிறுவனத்தில் இலவசமாக தங்கி படிக்கும் வாய்ப்பு எஸ்.ஆர். ராவிற்கு கிடைத்தது. அந்த நிறுவனம் வறியவர்களுக்கு உதவி செய்த அதேவேளையில் கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. 1942ம் ஆண்டில் நடைபெற்ற B.A Honors தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற திரு எஸ் ஆர் ராவ் அவர்கள், Sir Hugh Candy தங்கப் பதக்கத்தையும் வென்றார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் சிறிது காலம் வேலையில் ஈடுபட்டார். பின்பும் மீண்டும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து M.A பட்டம் பெற்றார் அதன்பின் அவர் எழுதிய லோத்தல் மற்றும் சிந்து கலாச்சாரம் என்ற புத்தகத்திற்காக D.Litt பட்டமும் பெற்றார்.
பரோடா மாநிலத்தில் தொல்லியல் துறையில் மார்ச் மாதம் 1948ல் உதவி இயக்குனராக சேர்வதற்கு முன்பாக அவர் சிறிது காலம் ஒரு கல்லூரியிலும் பின்னர் உதவி மேலாளர் மற்றும் துணை ஆசிரியராக ஒரு பத்திரிக்கையிலும் பணி புரிந்தார். தொல்லியல் துறையில் பணிக்கு சேர்ந்த பின்பு, சர். மார்டிமர் வீலர்-ன் மேற்பார்வையின் கீழ், ஒரிசா மாநிலத்தில் உள்ள சிசுபல்கர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் பயிற்சி பெற்றார். சிசுபல்கர் பயிற்சி அவருக்கு குஜராத்தில் உள்ள அம்ரேலியில் சுயமாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவிற்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் லண்டனில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் ஆர்க்கியாலஜி என்ற நிறுவனத்தில் பேராசிரியர் F.E.ஜென்னர் என்பவரிடம் நதிக்கரையோர நாகரீகங்களின் ஆராய்ச்சியில் பயிற்சி பெற்றார்.பின்னர் குஜராத்தில் உள்ள pre-historic எக்பெடிஷனில் சேர்ந்து சபர்மதி மற்றும் நர்மதை பள்ளத்தாக்கின் பழங்கற்கால ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர் 1949 முதல் 1996 வரை ஆண்டுதோறும் வரலாற்று சிறப்புமிக்க பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவர் தன்னுடைய வாழ்நாளில் 47 வருடங்கள் தொடர்ச்சியாக நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை அகழ்வாராட்சி செய்தல் அதனை பாதுகாத்தல் விளக்கிக் கூறுதல் மற்றும் மக்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளில் ஓய்வின்றி ஈடுபட்டார். மே மாதம் 1996 ஏற்பட்ட ஒரு விபத்திற்கு பின்பு அவர் தன்னுடைய களப்பணிகளை குறைத்துக்கொண்டார். இருப்பினும் தொடர்ச்சியாக கருத்தரங்குகள் மற்றும் குழுக்களில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தார். நேஷனல் ஜியாகிராஃபிக் சொசைட்டியின் உதவி ஆசிரியையான செல்வி டீ லாஃப்டின் தன்னுடைய “பண்டைய உலகத்தின் மர்மங்கள்” என்ற கட்டுரையில் “திரு எஸ் ஆர் ராவ் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் ஹரப்பன் முடிச்சுகளை அறிவதிலையே செலவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திரு ராவ் அவர்கள் சங்கரதாஸ் என்பவரிடம் டில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள புராதான கட்டிடங்களை பாதுகாப்பது மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை கற்றுத்தேர்ந்தார். பின்னர் பரோடா கலாபவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-ல் பேராசிரியர் பாக்யாவிடம் வரைதல் மற்றும் (சர்வே) கணக்குகளை கற்றுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் டாக்டர். ஏ.எஸ். காற்றேவிடம் கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் நாணயவியலை கற்றுக்கொண்டார். திரு ராவினுடைய பெரும்பணி குஜராத்தில் உள்ள ரங்கபூர்-ன் 1953 ஆம் ஆண்டு மறு அகழ்வாய்வு பணியை மேற்கொண்டபோது துவங்கியது. அது பிற்காலத்திய ஹரப்பன் கலாச்சாரத்தின் ஆய்வாகும். அந்த ஆய்வு ஒருபெரும் கலாச்சார தொடர்ச்சியை கண்டறிந்ததாகவும் குஜராத் ஹரப்பான் அகழ்வாராய்ச்சின் ஒரு குறியீடாகவும் அமைந்தது. அந்த ஆராய்ச்சி ஹரப்பான் கலாச்சாரம் திடீரென மாயமாக மறைந்து போனது என்ற சர் மார்டிமர் வீலரின் கருதுகோளினை முறியடிப்பதாக அமைந்தது.
ரங்கபூர் அகழ்வாய்வானது ஹரப்பான் கலாச்சாரம் காணாமல் போனதாக கருதப்பட்ட காலத்திலிருந்து மேலும் 300 வருடங்கள் தொடர்ந்து இருந்து வந்ததை நிரூபித்தது. அடுத்ததாக அவர் மேற்கொண்ட லோத்தல் பகுதி ஆராய்ச்சி பெருமளவிலான ஆதாரங்களை வெளிக்கொணர்வதாக அமைந்தது. ஆராய்ச்சிக்கு உட்பட்ட அந்த இடம் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவை விட சிறிதாக இருந்தாலும் பல அரிய ஆதாரங்களை நமக்கு தந்தது. குறிப்பாக மெசபடோமியா மற்றும் வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் வாணிபம் குறித்து பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. இப்பகுதி குறித்து 7 காலங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டு இரண்டு தொகுப்புகளில் புத்தகமாகும் பல விரிவான அறிக்கைகளாகவும் இந்திய தொல்லியல்துறை வெளியிட்டுள்ளது. அவர் குஜராத் மாநிலம் முழுவதும் ஆராய்ச்சி மேற்கொண்டு ஏறக்குறைய 40 இடங்களில் ஹரப்பா கலாச்சார பகுதிகளை கண்டுபிடித்துள்ளார். சிந்து சமவெளியின் எழுத்துக்களை அவர் ஆராய்ச்சி செய்து அவை சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமாக இருக்கலாமென்று முடிவுக்கு வருகிறார். பல சமகாலத்திய தகவல்கள் அங்கு வேத கலாச்சாரம் இருந்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவது இங்கு கவனிக்கத்தக்கது. மொழி ரீதியாகவும் அகழ்வாராய்ச்சி முடிவுகளின் ரீதியாகவும் சிந்து சமவெளி நாகரிகமும் ரிக் வேத கால நாகரிகமும் ஒன்றுதான் என்று முதல் முதலாக ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்தவர்களின் இவரும் ஒருவர்.
திரு ராவ் அவர்கள் இந்திய தொல்லியல் துறையிலிருந்து 1980-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு கோவாவிலுள்ள தேசிய கடல்சார்வியல் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு 1981 ஆம் ஆண்டு கடல் அகழ்வாராய்ச்சிகான சிறு குழுவை உருவாக்கினார். அவர் “இந்திய கடல் அகழ்வாராய்ச்சியின் தந்தை” எனப் போற்றப்படுகிறார். அவர் லோத்தல் பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அவருக்கு கடல் அகழ்வாராய்ச்சி குறித்த சிந்தனை பலமாக இருந்தது. மேலும் பாரதத்தில் 5000 ஆண்டுகளுக்கும் மேலான கடல் வாணிபம் நடைபெற்று வந்தது என்று அவர் திண்ணமாக நம்பினார். அதனால் பல கப்பல்கள் உடைந்து கடலுக்கடியில் இருக்கக்கூடும் என்றும் அவற்றை ஆராய்ச்சி செய்தல் மூலம் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் நம்பினார். அதனால் கடல் அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சிபெற்ற சிறு குழு ஒன்றை உருவாக்கினார். அவர்கள் அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சி பெற்று கடலுக்குள் சென்று ஆராய்ச்சி செய்யும் திறனுடையவராக இருந்தனர். குறிப்பாக பி.குடிகார், திரு.சுந்தரேஷ், திரு.சிலா திரிபாதி, திரு.A.S.கௌர், நீருக்குள் புகைப்படம் எடுக்கும் திரு.எஸ்.என்.பந்தோடக்கர் ஆகியோர் இதில் பெரும் பங்காற்றினர். துவாரகை, பூம்புகார், சோமநாதபுரம் மற்றும் லட்சத்தீவுகளில் கடல் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார்.
ஸ்ரீ கிருஷ்ணரால் நிர்மாணிக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கிய துவாரகை நகரை, கடலுக்குள் இருந்து 1980ம் ஆண்டு கண்டுபிடித்தார். விஞ்ஞானபூர்வமான கடலுக்கடியிலான ஆராய்ச்சிகளை இவர் 1981 முதல் 1995 வரை மேற்கொண்டார், இது அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கியது. இதன் மூலம் ஹரப்பா கலாச்சாரத்திற்கு பிந்தைய புதிர்களுக்கு விடை கண்டு பிடித்ததோடு இதிகாசங்களையும் உறுதிப்படுத்தி, புராணங்களையும் வரலாற்றின் உண்மை வரம்பிற்குள் கொண்டுவந்தார். ராவ் அவர்கள் இந்தியாவில் கடல் அகழ்வாராய்ச்சி படிப்பை ஒரு துறையாக உருவாக்கினார், கடல் அகழ்வாராய்ச்சி கழகத்தை தோற்றுவித்தார், அதன் மூலம் ஆண்டுதோறும் அகில உலக கடல் அகழ்வாராய்ச்சி கருத்தரங்கை நடத்துகிறார், நீருக்கு அடியில் கலாச்சார பாரம்பரியம் குறித்த அகில உலக குழு கூட்டமும் (ICOMOS) இதில் அடங்கும்.
ராவ் அவர்கள் திருப்பதியில், முதல் சிந்து சமவெளி எழுத்துக்கள் கலை கண்காட்சி கூடத்திற்கு ஏற்பாடு செய்தார். லோத்தல், ஐஹோல், பட்டடக்கல், படாமி மற்றும் கீழடியில் கலை அருங்காட்சியகத்தை உருவாக்கினார். தர்மசாலா அறக்கட்டளை பாதுகாத்து வந்த கிராமிய அரும் பொருட்களை புனர்நிர்மாணம் செய்து கொடுத்தார்.
திரு ராவ் அவர்களுக்கு பல பட்டங்களும் சிறப்புகளும் வழங்கப்பட்டன. அவற்றுள் ஜவகர்லால் நேரு பெல்லோ அவார்டு (1977-78), கடல் அகழ்வாராய்ச்சியில் தனிநபருக்கான பிரெண்ட்ஷிப் டிரஸ்ட் இன்டர்நேஷனல் அவார்டு(1991), F.I.E பவுண்டேஷன் நேஷனல் அவார்டு பார் எக்சல்லேன்ஸ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான விருது(1989) போன்றவையாகும். அவர் இந்திய அகழ்வாராய்ச்சி குறித்து நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் கட்டுரைகளும் ஆங்கிலம் இந்தி மற்றும் கன்னடத்தில் வெளியிட்டுள்ளார். வரக்கூடிய பல பத்தாண்டுகளுக்கு, பல அறிஞர்களும் மாணவர்களும் பெரிதும் பயன்பெறும் வகையில் அவருடைய பங்களிப்பு அமைந்துள்ளது இவர் ஜனவரி மூன்றாம் தேதி 2013 ஆம் ஆண்டு காலமானார்.