Welcome..! Join us to Develop your Humanity
ஸ்ரீ எஸ்.என்.ராமதேசிகன் - "தமிழும் சமஸ்கிருதமும் இந்திய கலாச்சாரதத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு மொழிகள்" என்று உரக்க அறிவித்தவர்.
ஸ்ரீ ராமதேசிகன் அவர்கள் தமிழ் சமஸ்கிருதம் இரு மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவர். "தமிழும் சமஸ்கிருதமும் இந்திய கலாச்சாரதத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு மொழிகள்" என்று அதிகாரபூர்வமாக அறிவித்தவர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள பிரபலமான பாரம்பரியப் படைப்புகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்ப்பு செய்து அதன்மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மொழிகளுக்கிடையே ஆன ஒருமைப்பாட்டிற்கும் இவர் அயராது பணியாற்றினார். ஸ்ரீராமதேசிகன் அவர்கள் மத்திய, மாநில அரசாங்கத்தில் 60 ஆண்டுகளாக தமிழ் சமஸ்கிருத மொழிகளில் ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர், கல்லூரி முதல்வர், பத்திரிக்கை ஆசிரியர், வெளியீட்டாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். இரு மொழிகளிலும் இவரது சிறப்பான படைப்புகள் மூலம் வரலாற்றில் சாதனை படைத்தார்.
இவர் பெற்ற விருதுகள் எண்ணற்றவை. அதில் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு துறையில் ஒரு விசேஷ அங்கீகாரத்துடன் கொடுக்கப்பட்டதாகும். இவர் திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்ததன் மூலம் 1983ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு M.G.ராமச்சந்திரன் அவர்கள் மிகவும் மகிழ்ந்து இவரிடம் சமஸ்கிருதத்திலுள்ள ஆயுர்வேத நூல்களை தமிழக மக்கள் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக மொழிபெயர்க்கும் பணியைக் கொடுத்தார். அது மட்டுமல்ல, 'இந்திய மருந்துகள் மற்றும் ஹோமியோபதி' துறையில் சிறப்பு அதிகாரியாக இவரை நியமித்தார். 13 ஆண்டு காலம் இந்தப் பொறுப்பை திறம்பட நிர்வகித்தார் ஸ்ரீ ராமதேசிகன் அவர்கள்.
இவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த அஷ்டாங்க சங்கிரஹம், சரக ஸம்ஹிதை மற்றும் சுஷ்ருத ஸம்ஹிதை - இவை 6400 பக்கங்களில் 25,000 ஸ்லோகங்கள் கொண்டவை. இப்புஸ்தகம் ஆயுர்வேத கல்லூரியில் பாடநூலாக ஏற்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான மொழியாக்கத் தொகுப்பில் பல்வேறு ஆயுர்வேத வைத்திய செயல்முறைகள், மூலிகைகளின் ரசாயணப் பகுப்பு, அறுவை சிகிச்சைக்கான கருவிகள், வரைபடங்கள், மூலிகைச்செடிகளின் புகைப்படங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.
இவரது அரும் பணியைப் பாராட்டி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் 'ஆயுர்வேத பாரதி' என்ற விருதை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் இவருக்கு 'அபிநவ சுஷ்ருத விஷ்ருத' என்னும்பட்டத்தை வழங்கியது.
1993ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அவர்கள் இவர் இலக்கியத்திற்கும் அதைச் சார்ந்த துறையிலும் ஆற்றிய அரும் பணியைப் பாராட்டி 'கலைமாமணி' என்னும் விருதை வழங்கினார். இவரது பாண்டித்யத்தையும் திறமையையும் வெளிப்படுத்துமாறு இவர் படைத்த இன்னொரு மாபெரும் படைப்பு உள்ளது. சமஸ்கிருத மூலத்தில் 6000 ஸ்லோகங்களுடன் கூடிய 'பரத நாட்டிய சாஸ்த்திரம்' என்னும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். நாட்டியம் பயில்வோருக்கும் நாட்டியக் கலையில் ஈடுபாடு கொண்டோருக்கும் இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. பரத நாட்டியக் கலைக்கு அறிவியல்பூர்வமான விளக்க நூல் வேண்டுமென வலியுறுத்தப்பட்டபோது தமிழக அரசு இப்புத்தகத்தை வெளியிட்டு அத் தேவையைப் பூர்த்தி செய்தது. இப் புஸ்தகம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவை மட்டுமின்றி, ஸ்ரீராமதேசிகன் அவர்கள் சமஸ்கிருதத்தில் 'தேசிக மணி சதகம்', கிருஷ்ண கதா சங்ரஹம்' ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறள், நாலடியார், பாரதியாரின் படைப்புகள், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், ஔவையாரின் நீதி நூட்கள், திருப்பாவை இவைகளையும் தமிழிலிருந்து சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த மொழி உச்சரிப்பு, பேசிய விதங்களை நவீன காலத்திய மக்கள் புரிந்து கொள்ளும்படி, பாவனை மாறாமல் மொழி பெயர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஸ்ரீராமதேசிகன் இதனை சாதித்தவர்.
மிகச்சரியான பொருத்தமான மொழிபெயர்ப்பு என்பது ஒரு அற்புதம்தான். பல மொழிபெயர்ப்பாளர்கள் இதில் தேர்ச்சி காண்பதில்லை. ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு எவ்வித சிரமுமின்றி சென்று வருவார். அதேசமயம் தமிழிலிலுள்ள அழகை அப்படியே சமஸ்கிருதத்திலும் கொண்டு வருவார். கம்ப ராமாயணத்தில் பாலகாண்டம் பகுதியை சமஸ்கிருதத்தில் வெளியிடும்போது, திரு சி.ராஜகோபாலாச்சாரியர் இவரைப் பாராட்டிப் பேசியதொடு, இதுவரை சமஸ்கிருதத்திலிருந்துதான் பல நூட்கள் தமிழுக்கு வந்துள்ளன. ஆனால், இப்போது தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு புனித யாத்திரை தொடங்கிவிட்டது என்று புகழ்ந்தார். இவரது படைப்புகள் மூலமே தமிழ் மொழியின் பெருமையையும் புகழையும் வடநாட்டவரும் அறியும்படி ஆனது. குறிப்பாக காசி, மதுரா பகுதிகளில் இருக்கும் சமஸ்கிருதப் பண்டிதர்களின் மத்தியில் தமிழின் புகழ் எடுத்துச் சொல்லப்பட்டது. ஸ்ரீராமதேசிகனாரின் இந்த அரும் சேவை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுதல்களைப் பெற்றது.
இவர் தமிழிலும் புதிய படைப்புகளைக் கொடுத்துள்ளார். நடுநிலை தவறாத இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வரைந்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர்கள், பல மாநில முதலமைச்சர்கள் இவரைப் பாராட்டி கௌரவித்துள்ளனர்.
இலக்கியத்துறையைப் பொறுத்தவரை இவர் எண்ணற்ற வழிகளில் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். இவர் திருப்பதியில் கேந்த்ரீய வித்யா பீடத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியபோது சமஸ்கிருதம் தமிழ் இரு மொழிகளையும் ஒப்புநோக்கி 1000 பக்கங்கள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார். வேதகாலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும், சங்க காலம் தொட்டு நவீனகாலம் வரையிலும் தமிழ் சமஸ்கிருத மொழிகளையும், இதன் இலக்கியங்களையும் ஒப்புநோக்கி இரண்டிலும் உள்ள சமநிலைகளையும், ஒற்றுமைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஆதிகாலம் தொட்டு நிலவும் இணைப்பை விவரிப்பதில் அவருக்கிருந்த அதீத ஆர்வம் அவர் மிகக் கவனமாக ஆராய்ந்து எழுதி முன்னணி செய்தித்தாள்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டது.
கம்பர், வால்மீகி, துளசிதாஸர் இம்மூவரை ஒப்புநோக்கி ஸ்ரீராமதேசிகன் அவர்கள் ஒரு மாபெரும் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளப்படுத்துவதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த ஸ்ரீராமதேசிகன் அவர்கள் 2015ஆம் ஆண்டு தனது 95வது வயதில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.