Welcome..! Join us to Develop your Humanity
அறிவுக் கொடையும் பொருட் கொடையும் அள்ளி வழங்கிய இயல் -வேதியியல் விஞ்ஞானி
‘நூறு கைகளால் பெற்று ஆயிரம் கைகளால் விநியோகிக்கவும்’ என்ற பழமொழிக்கான முன்மாதிரியான நீல் ரத்தன் தார் (Nil Ratan Dhar) – இயல் வேதியியல் நிபுணர்
பேராசிரியர் நீல் ரத்தன் தார் (Nil Ratan Dhar) (1892–1986) இந்திய அறிவியலின் அறியப்படாத சாதனையாளர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவருடைய வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் அதிக அளவில் எழுதப்பட்டதும் இல்லை. இவர் ஒரு வேதியலாளர் மற்றும் மண் அறிவியல் நிபுணராக இருந்தார். மண்ணானது வளிமண்டல நைட்ரஜனின் வெப்ப மற்றும் ஒளிச்சேர்க்கை-வேதியியல் முறையில் தன்னை சரிசெய்து கொள்ளும் செயல்முறையை அவர் கண்டுபிடித்தார். இந்தியாவில் நவீன அறிவியலைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான இவர், இந்தியாவின் இயல் வேதியியலின் நிறுவனர் என்று கருதப்பட்டார். இந்தியாவில் விவசாய ஆராய்ச்சியின் முன்னோடியாக இவர் இருந்தார்.
நீல் ரத்தன் தார் (Nil Ratan Dhar), 1892 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி ஜெசோர் எனப்படும் தற்போதய பங்களாதேஷில், வழக்கறிஞரான பிரசன்னா குமார் தார் மற்றும் நிரோட் மோகினி தார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1897 இல் தனது ஐந்து வயதில், அவர் மாவட்ட அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் எப்போதும் தனது வகுப்பில் முதலிடம் வகித்து வந்தார். 1907 ஆம் ஆண்டில், தனது பதினைந்தாவது வயதில், கல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில், முதல் பிரிவில் தனிச்சிறப்பு பெற்று தேர்ச்சி பெற்றார், மேலும் கல்வி உதவித்தொகையாக இரண்டு வருடங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 21 பைசாவை பெற்றார்.
1907 இல் நீல் ரத்தன் தார், ஜெசோரை விட்டு வெளியேறி புகழ்பெற்ற ரிப்பன் கல்லூரியில் (Rippon College) சேர்ந்தார். அவர் இயற்பியல் மற்றும் வேதியியல் இரண்டிலும் அதிக ஆர்வம் காட்டினார் மற்றும் செயல்முறை ஆராய்ச்சிக்காக ஒரு சிறிய ஆய்வகத்தை ஏற்பாடு செய்தார். ஜூலை 1911 இல், இவர் கல்கத்தாவின் ப்ரசிடென்சி கல்லூரியில் வேதியல் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து அத்துடன் இயல் வேதியியலில் ஆராய்ச்சிப்படிப்பையும் இணைந்து மேற்கொண்டார். ஜூன் 1917 இல், இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார், அதன் பிறகு இவர் பாரிஸில் உள்ள, சார்போன் அறிவியல் பீடத்தில் பயின்று மாநில அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றார்.
இவர் இந்திய தேசிய அறிவியல் நிறுவனம், தேசிய அறிவியல் அகாடமி, லண்டன் ராயல் இயற்பியல் நிறுவனம், இந்திய வேதியியலாளர் நிறுவனம் ஆகியவற்றில் ஆராய்ச்சி உறுப்பினரான ஃபெல்லோஷிப் அந்தஸ்து பெற்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
நீல் ரத்தன் தார் பல ஐரோப்பிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் விரிவுரையாளராக இருந்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள லண்டன், கேம்பிரிட்ஜ், எடின்பர்க் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை வழங்க அழைக்கப்பட்டார். இதேபோல, பிரான்சின் சோர்போன், துலூஸ் மற்றும் பியாரிட்ஸ் பல்கலைக்கழகங்களில்; யூகோஸ்லாவியாவின் ஓபதியா பல்கலைக்கழகத்தில்; ருமேனியாவின் புக்கரெஸ்ட் பல்கலைக்கழகத்தில்; ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் மற்றும் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், டஹ்லெமின் பெர்லின் இயல்-வேதியியல் மற்றும் மின் வேதியியல் நிறுவனத்தில் கூட விரிவுரைகளை வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் வெவ்வேறு ஐரோப்பிய ஆய்வகங்களில் பணியாற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மற்றும் இவர் தனது ஆராய்ச்சிகள் குறித்த விரிவுரைகளை வழங்க 1931 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா சென்றார். 1953, 1954 இல், இவர் தனது மனைவியுடன் சென்று சுவீடனின் உப்சாலா வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒளிச்சேர்க்கை வேதியியலில் மண்ணில் நைட்ரஜன் நிர்ணயிக்கும் முறையை நிரூபிக்க 10 மாதங்கள் செலவிட்டார்.. கார மண்ணில் வெல்லப்பாகு, காரத் தன்மை கொண்ட மண் (alkali Soil) மற்றும் பிற கரிமப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் காரக் தன்மை கொண்ட மண்ணை மேம்படுத்துவதற்கான ஒரு எளிய முறையை இவர் பரிந்துரைத்தார். எனினும் இவர் தனது முக்கிய பதவியாக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கனிம வேதியியல் பேராசிரியராகவே இருந்தார்.
இவர் ஆச்சார்யா ஜகதீஸ் சந்திரபோஸ் மற்றும் ஆச்சார்யா பிரஃபுல்ல சந்திர ரே ஆகியோரின் மாணவராக இருந்தார. அந்த வகையில் அவர் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்திய விஞ்ஞானிகளின் இரண்டாம் தலைமுறையில் ஒருவர். இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஆச்சார்யா பிரஃபுல்ல சந்திர ரேயின் நெருங்கிய மாணவர்களில் ஒருவராக இருந்தார். இவருக்கும் ரேவுக்கும் இருந்த பிணைப்பு ரசாயனப் பிணைப்பைப் போலவே நுட்பமானவை. மாலையில் தனது மைதான நடைப்பயணங்களில் ரே இவரையும் உடன் கூட்டிச்செல்லுமளவிற்கு அவர்களிடையே நெருக்கம் நிலவியது.
இவர் தனது முதல் ஆராய்ச்சிப் பயிற்சியை ரேயிடமிருந்து பெற்றார். இது மட்டுமின்றி இவர்களுக்கு இடையே ஒரு முன்மாதிரியான ‘குரு-சிஷ்யா’ உறவு இருந்தது. முதுகலை பட்டப்படிப்பு மாணவராக இருந்தபோதே, இவர் ரேயின் ஆய்வகத்தில் பணிபுரிந்து அவருடன் இணைந்து அரை டஜன் ஆவணங்களை வெளியிட்டார்.
இவரின் வாழ்க்கை அறிவியலுக்கான முழுமையான அர்ப்பணிப்பின் வாழ்க்கை. இவர் தனது இலட்சிய ஆசிரியர்களான ரே மற்றும் போஸைப் போலவே, அனைவரின் நலனுக்காகவும் அறிவியலைப் பயின்றார். இவரது வாழ்க்கையில் ரகசியங்கள், காப்புரிமைகள் அல்லது ராயல்டிகளுக்கு இடமில்லை. அறிவியலால் மட்டுமே ஒரு நாட்டை வளமாக்க முடியும் என்று இவர் நம்பினார். " நான் நம்புவது என்னவென்றால் நம் தேசத்தின் முன்னேற்றம், அடிப்படையில் விஞ்ஞானம் மற்றும் அதன் பயன்பாடுகளைப் பொறுத்தது. இந்த நற்செய்தியை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பேசிவந்துள்ளேன். இந்திய விஞ்ஞானிகள் அறிவியலுடன் கலந்த கடின உழைப்பு, மிகுந்த துணிச்சல், பக்தி மற்றும் தியாகத்தின் மூலமாக தேசிய புனர் நிர்மாணம் செய்வதைப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று அவர் கூறினார்.
தனது வாழ்நாள் முழுவதும் விஞ்ஞானத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள மற்றவர்களை அவர் ஊக்குவித்தார். ஒரு மாணவராக இருந்தபோதும், விஞ்ஞான ஆய்வுக்கு, குறிப்பாக வேதியியலுக்கு செல்ல மாணவர்களை ஊக்குவித்தார். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகள் தங்கள் நலனை தியாகம் செய்ய வேண்டும் என்று இவர் கருதினார். அத்தகைய ஆக்கபூர்வமான அறிவியலால் மனிதர்களுகளின் துயரம் துடைத்தெறியப்படும் என்று அவர் நம்பினார்.
கௌதம புத்தர், அசோகர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காந்திஜி ஆகியோர், பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் முன்னேற்றத்திற்காக, தியாகம் மற்றும் அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகளை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என்றார். அதேபோல இவர் வாழ்க்கையில் சொன்னதை 100% கடைபிடித்தார்.
இவரது வாழ்க்கை மனநிறைவு மற்றும் எளிமை கொண்டதாக இருந்தது. இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், சில காலம் பிரதமருக்கு அறிவியல் ஆலோசகராகவும் இருந்தபோதிலும்கூட, இவர் தனக்கென்று ஒரே ஒரு கோட் மட்டுமே வைத்திருந்தார். இவர் புதுடில்லிக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு சிறிய பெட்டி மற்றும் ஒரு சிறிய பையுடன் சாதாரண ஆடைகள் மட்டுமே எடுத்துக் கொண்டு பயணம் செய்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் ஒரு சூட்கேஸைக் கூட உடன் எடுத்துச் சென்றதில்லை. இவரை அழைத்துச்செல்ல புது தில்லி ரயில்நிலையத்திற்கு வரும் பிரதம மந்திரியின் அலுவக உதவியாளர்கள் இவரின் சாமான்களாக ஒரு சிறிய பெட்டியையும், ஒரு பையையும் மட்டுமே கண்டு ஆச்சரியப்படுவார்கள். இவரிடம் செல்வாக்கு இருந்த போதிலும், தனது வீட்டில் தனது வாழ்நாள் முழுவதும் ஏ.சி.யை பொருத்திக்கொள்ளவில்லை. இவரது தேவைகள் குறைவாக இருந்ததால், இவர் பெற்ற பணத்தை மிச்சப்படுத்தி பல ஏழை மாணவர்களுக்கு படிப்பை முடிக்க உதவினார்.
அது மட்டுமல்லாமல், தனது குரு ஆச்சார்யா பிரஃபுல்ல சந்திர ரேயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இவர் தனது கடின உழைப்பின் பெரும்பகுதியை இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியின் முன்னேற்றத்துக்காகவும், பரோபகார நோக்கங்களுக்காகவும் நன்கொடையாக வழங்கினார். ஒரு மதிப்பீட்டின்படி இவர் ரூ .27 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். மேக்னாத் சாஹா தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட அலகாபாத்தில் அமைந்த தேசிய அறிவியல் அகாடமிக்கு கட்டடம் கட்ட இவர் தனது நிலத்தை பரிசளித்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேளாண் வேதியியலில் ஆச்சார்யா பி. சி. ரே பேராசிரியப் பணியிடம் உருவாக்க அவர் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வபாரதி நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகையை அவர் நன்கொடையாக வழங்கினார், மேலும் விவசாய ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக நன்கொடை நிதியை உருவாக்கி அதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஃபெல்லோஷிப் வழங்கப்பட உதவினார். இவர் செவிலியர் விடுதிகளை கட்டுவதற்காக, சித்தரஞ்சன் சேவா சதனுக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இவர் பார்லோகஞ்ச் (முசோரி) இல் இருந்த தனது இல்லத்தை ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
“சத ஹஸ்தே சங்கிரா, சஹஸ்ர ஹஸ்தே சமஹரா, ” நூறு கைகளால் பெற்று ஆயிரம் கைகளுக்கு விநியோகிக்கவும் என்ற பழமொழிக்கான முன்மாதிரியானவர்களில் இவரும் ஒருவராக நீல் ரத்தன் தார் (Nil Ratan Dhar) திகழ்ந்தார்.