Welcome..! Join us to Develop your Humanity
T.M.காளியண்ணன் - 2000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பள்ளிகளை நிறுவி அவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி போதித்தவர்.
1942-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த வேளையில் நமது தாய்த்திருநாடு ஒரு தீவிர சமூக-பொருளாதார நெருக்கடியின் கீழ் தள்ளப்பட்டிருந்தது. ஒரு புறம் அண்ணல் காந்தியடிகள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கு அழைப்பு விட்டிருந்தார். இந்த நேரத்தில், தமிழகத்தில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த (அப்போது சேலம் மாவட்டம்) 21 வயதே நிரம்பிய இளைஞர் ஒருவர் லயோலா கல்லூரியின் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக, மெட்ராஸில் நடைபெற்ற மாணவர் புரட்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அந்த மனிதரின் பெயர் தான் T.M.காளியண்ணன். சுதந்திர பாரதத்தின் அரசியலமைப்பு சட்டத்தில் கையொப்பமிட்டவர்களில் அவரும் ஒருவர். அந்த அரசியல் அமைப்பு சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் - T.M.காளியண்ணண்.
ஜனவரி 10, 2020 அன்று காளியண்ணன் அவர்கள் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைப்பதையொட்டி 'தி பெட்டர் இந்தியா' (The Better India) அன்னாரது குடும்பத்தை தொடர்புகொண்டு அவரது எழுச்சியூட்டும் கதையை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது பேரன் திரு.செந்தில் அவர்கள் தனது அய்யாவின் தேசபக்தியுடன் தலைமைப்பண்பும் மனிதநேயமும் நிரம்பிய வாழ்க்கை பாதையில் நம்மை சிறிது நேரம் அழைத்துச்சென்றார்.
காளியண்ணன் 1921 ஜனவரி 10 ஆம் தேதி அக்கரைப்பட்டி கிராமத்தில் பிறந்தார். பின்னர் அவரை குமாரமங்கலம் ஜமீன்தார் குடும்பத்தினர் தத்தெடுத்து, சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கஸ்தூரிபட்டியின் பிரம்மாண்ட தோட்டத்தின் சட்ட வாரிசாக முடிசூட்டப்பட்டார். திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த அவர், பின்னர், மெட்ராஸில் உள்ள லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். கல்லூரிக் கல்வியை முடித்த பின்னர், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சேர்ந்த காளியண்ணன், தமிழக மக்களிடையே காந்திய கொள்கைகளை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
1943 இல் காளியண்ணன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து வெளிநாட்டு தூதராக நியமிக்கப்பட்டார். பின்னர் சுதந்திர இந்திய அரசியலமைப்பு சபையில் டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் இருக்கை காலியாக இருந்தபோது, திரு. கே.காமராஜ் அவர்கள் காளியண்ணனின் பெயரை முன்மொழிந்தார். விரைவிலேயே காளியண்ணன் அவர்கள் தனது 27 வயதில் அரசியலமைப்பு சபையின் இளைய உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராசிபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார் காளியண்ணன். அடுத்த இருபதாண்டுகளில், அவர் திருச்செங்கோட்டிலிருந்தும் இரண்டு முறை போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் வெற்றி வாகை சூடினார்.
"1952 ஆம் ஆண்டில், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, காளியண்ணன் அய்யா முழு மனதுடன் அந்த சட்டத்தை வரவேற்று, வறுமையில் வாடிய ஏழை எளியோருக்கு உதவுவதற்காக தனது பரம்பரைத் தோட்டத்தின் 1000 ஏக்கர் பகுதியை தியாகம் செய்தார்" என்று செந்தில் புன்முறுவலுடன் கூறுகிறார்.
1954 ஆம் ஆண்டில், காளியண்ணன் அவர்கள் சேலத்தின் ஜில்லா வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தற்போதைய தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் பகுதி. அவர் பொறுப்பேற்றபோது, சேலம் கல்வியறிவு, வறுமை, வேலையின்மை மற்றும் அதிக குற்ற விகிதங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. ஐந்து அல்லது ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆடு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் வாழ்வாதாரம் பெற பெற்றோர்களால் சம்பாதிக்க அனுப்பப்படுவார்கள். ஒரு பொதுப் பள்ளிக்கூடம் என்பது அக்காலகட்டத்தில் அத்தி பூத்தாற்போல ஒரு அபூர்வமாகவே இருந்தது.
“கல்வியால் மட்டுமே தனது மக்களின் நிலையை உயர்த்த முடியும் என்பதை காளியண்ணன் அய்யா அறிந்திருந்தார். எனவே, அவர் தயாரித்திருந்த வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல்களில் கல்வியறிவு என்பது முதலிடத்தில் இருந்தது” என்கிறார் செந்தில். 1954 மற்றும் 1957 க்கு இடையில், காளியண்ணன் அய்யா சேலத்தின் மூலைமுடுக்கெங்கும் விரிவாக சுற்றுப்பயணம் செய்தார். அவர் அடியெடுத்து வைத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியை அமைத்தார்.
"அவரும் அவரது அதிகாரிகள் குழுவும் கிராமங்களை பார்வையிட செல்லும்போது தங்களுடன் உடன் ஒரு தட்டச்சுப்பொறியையம் கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு குக்கிராமத்திலும், ஒரு அரசாங்கப் பள்ளியை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை அவர் உடனடியாக வெளியிடுவார். ஒரு சமூகப் பகுதியிலோ அல்லது திறந்த வெளியிலோ அவர் கிராமவாசிகளுடன் உரையாடுவார்; அவர்களின் கல்வித் தகுதிகளைப் பற்றி அறிந்துகொள்வார்; மேலும் கிராமத்தில் உள்ள பள்ளிப் படிப்பை முடித்தவர்களுள் மூன்று முதல் நான்கு ஆசிரியர்களை தன்னிச்சையாக நியமிப்பார்”.
இவ்வாறாக, அவரால் மூன்று ஆண்டுகளில் 2000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமாக இயங்கும் பள்ளிகளை நிறுவ முடிந்தது. அதன் விளைவாக ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் கல்வி பயின்றனர். சேலம் மாவட்டத்தில் அவர் செய்த மாபெரும் கல்விப் புரட்சியானது சிறப்பு வாய்ந்த பல அரசியல்வாதிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்ற பிரபலங்களை உருவாக்கியது.
காளியண்ணனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள அதே திருச்செங்கோடு நகரில் தான் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலும் உள்ளது. ஆணும் பெண்ணும் சமம் எனும் சாராம்சத்தை விளக்கும் அர்தநாரியிடம் உந்தப்பட்ட காளியண்ணன் தனது மாநிலத்தில் பாலின சமத்துவத்தை ஊக்கமூட்டி வளரச்செய்தார். இவரின் இந்த செய்கையை விளக்குவதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அந்த காலகட்டத்தில் ஒரு பெண் தனது வீட்டை விட்டு வெளியே வருவது என்பது தவறு எனும் கண்ணோட்டம் பரவலாக காணப்பட்ட விஷயம். அதை துடைத்தெறிய காளியண்ணன் அவர்கள் அவ்வையார் கல்வி நிலையம் எனும் பள்ளியை சிறுமிகளுக்காக பிரத்யேகமாக அமைத்து, அதன் கட்டுமானத்திற்காக தனது நிலத்திலிருந்து இலவசமாக ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கினார். இந்த பள்ளி தற்போது திருச்செங்கோடு வாசிகளிடையே அவ்வூரின் பெருமைக்கு அடையாளமாக இன்றும் உள்ளது. காளியண்ணன் அய்யா அத்தோடு நில்லாமல், பெண்கள் உயர்கல்வியும் பெற வேண்டும் என ஊக்குவித்து, சேலம் முழுவதும் பல மகளிர் கல்லூரிகளை அமைத்தார். அவற்றுள் மதிப்புமிக்க ஒரு கல்வி நிறுவனம் தான் - ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி. அதற்காக அவர் சொந்த நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார். சேலத்தில் 200 க்கும் மேற்பட்ட பொது நூலகங்களையும் திறந்து, தமிழகத்தில் மொபைல் நூலகங்கள் என்ற ஒரு புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினார்.
“கொல்லி மலை பகுதியை சமவெளிப் பகுதிகளுடன் இணைக்கும் 40 கி.மீ நீளமுள்ள சாலையை நிர்மாணிக்க காரண கர்த்தாவாய் விளங்கியவர் அவர்தான். அதற்கு முன்னர், கொல்லி மலைகளின் பழங்குடி சமூகங்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வசதிகள் கிடைக்கவில்லை. இப்பகுதியை மேம்படுத்துவதற்கு அவர் தான் முழுமுதற் காரணம்” என்கிறார் மேகராஜ்.
செந்தில் தொடர்கிறார், “அய்யா தான் காவிரி ஆற்றின் மேல் 'பள்ளிபாளையம் பாலத்தை' அமைத்து சிறிய ஜவுளி நகரமான பள்ளிபாளையத்தை, வளர்ந்து வரும் நகரமான ஈரோட்டுடன் இணைத்தார். இன்று, ஈரோடு ஒரு ஜவுளி மாவட்டமாக வளர்ந்துள்ளது. இதற்கு காரணமான இந்த இணைக்கும் பாலத்திற்கு நன்றி".
இன்றும் கூட தமிழ்நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தின் செழிப்பான அடையாளமான 'கிராம மண்டி' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். புகழ்பெற்ற சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், சங்ககிரியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலை மற்றும், பள்ளிபாளையத்தின் பேப்பர் மில்ஸ் - இவை அனைத்தும் காளியண்ணனின் படைப்புகளே! அந்த காலத்திலேயே 10,000 க்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு அமர்த்தின அந்த தொழிற்சாலைகள்.
காளியண்ணனின் பதவிக்காலத்தில், திருச்செங்கோடு நகரம் மிகச் சிறந்த 'நகரத் திட்டம்' ஒன்றை செயல்படுத்தியது. 300 க்கும் மேற்பட்ட வீடற்றோருக்காக வீடுகள் கட்ட அவர் தனது தோட்டத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கினார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, அவரது ஆட்சியின் போது, குடியிருப்பு பகுதிகளில் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நூற்றுக்கணக்கான கிளைகள் அமைக்கப்பட்டன. அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காளியண்ணன் அய்யா இந்தியன் வங்கியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
வறியவர்களை மேம்படுத்துவதற்காக வீடுகள், இலவச சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக திருமண மண்டபங்கள் எனப் பல உதவிகளுக்காக அவர் தனது மூதாதையர் தோட்டத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கினார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் கூற்றுக்கு அகராதியாய் விளங்கும் அய்யா காளியண்ணன் மக்கள் சேவையுடன் சேர்த்து மகேசன் சேவையும் செவ்வனே செய்துள்ளார். ஆன்மீகத்தின்பால் கொண்ட விருப்பத்தினால் அவர், அப்பகுதியில் பல கோயில்களைக் கட்டியுள்ளார்.
இவ்வாறு தனது தனி வாழ்விலும், பொது வாழ்விலும் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தவர்களுள் அய்யா காளியண்ணன் போற்றோர் மிக மிக அரிதிலும் அரிதான ஒரு சிலரே யாவர்.