Welcome..! Join us to Develop your Humanity
மீனாட்சி குருக்கள்-கேரள மாநிலத்தின் பழமையான தற்காப்புக் கலை பெண் நிபுணர்-60 ஆண்டுகளாகத் தொடரும் மரபு
தனது பதுங்கி நிற்கும் தோரணை, நிகரில்லா உற்று நோக்கல், மற்றவர்களை தோற்கடிக்கும் முகபாவம், தனது வலது கையில் ஏந்தியிருக்கும் கூரிய வாளும், தனது இடக் கையில் வைத்திருக்கும் கேடயமும், எப்பேர்ப்பட்ட பகைவரும் அஞ்ச வைக்கும். இந்த காட்சியை பார்க்கும் போது ஒரு கோபமான புலி பாய தயாராக இருக்கிறதோ என்று சொல்லத் தோன்றும்.
ஆனால் இந்தப் புலியோ சேலையை உடையாக அணிந்த புலி, தனது எழுபதாவது வயதிலும் சண்டை வளையத்தில் புலியாகவும் அதற்கு வெளியே அமைதியான பெண்மணியாக காட்சியளிக்கிறார். அவர்தான் கேரளத்தைச் சேர்ந்த மீனாட்சி குருக்கள். கேரளத்தைச் சேர்ந்த தற்காப்பு கலையான களரிப்பயட்டு என்னும் களரி இவரது ஏழாவது வயதில் தன் தந்தையால் இவருக்கு ஒரு செயல்முறைக் காட்சி மூலம் அறிமுகமானது.
இவருக்கு பத்மஸ்ரீ விருது பற்றிய அழைப்பு வந்த பொழுது,"என்னால் அதை நம்பவே இயலவில்லை, எனக்கு ஏதோ பொய் அழைப்பு வந்திருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது, அந்த விருது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது"என கூறினார்.
மீனாட்சி குருக்கள் அம்மாதான் நம் பாரதத்தில் களரி பயிற்றுவிக்கும் பழமையான பெண் ஆசிரியர்களில் ஒருவர். கேரளத்தில் இவ்வாறு தற்காப்புக்கலை ஆசானை குருக்கள் என்றே அழைக்கின்றனர்.
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடகரா என்னும் சிற்றூரில் இவர் பிறந்தார். 2017 ஆம் ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்களில், "பிரபலமாகாத சாதனையாளர்கள்" என்னும் பிரிவில் பத்ம விருது இவருக்கு கச்சிதமாக பொருந்தியது.
பழைய சீனப் படங்களில் வரும் சாமுராய் பயிற்சி மையம் போன்ற சூழலில் அமைந்திருக்கும் இவரது பயிற்சி மையத்தில் இவர் தன்னடக்கத்துடனும், இன்முகத்துடனும் அனைவருக்கும் 'நமஸ்தே' கூறி வரவேற்றார். தனது பழைய நினைவுகள் பற்றி அவர் கூறும்போது ,"எனது ஏழாவது வயதில் என் தந்தை களரியை ஒரு செயல்முறைக் காட்சி மூலம் அறிமுகப்படுத்தியதற்கு பின் அதுவே எனது வாழ்க்கையாக மாறியது, சுதந்திரத்திற்கு பல நாள் முன்பு இந்த நிகழ்வு நடந்தது, மேலும் எனது தந்தைக்கு நானும், என் தங்கையும் இந்த கலையை கற்றுத் தேறுவோம் என நம்பிக்கை இருந்தது" என தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
மீனாட்சி குருக்களின் 27 வயது பேரனான ஜிதின் ஜெயன், அவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட பின் சென்னையில் உள்ள தன் வேலையை விட்டுவிட்டு தனது பாட்டிக்கு நேர்காணல் போன்ற விஷயங்களில் உதவி செய்ய வந்துவிட்டார். மேலும் அவரைப் பார்க்க பல பேர் வர ஆரம்பித்ததால் அவர் தனது பாட்டிக்கு உதவியாக இருந்தார். ஜிதின் கூறுகையில்,"அவருக்கு களரி மேல் இருந்த அளவற்ற ஆர்வத்தால் ராகவன் மாஸ்டர் என்பவரிடம் களரி கற்க ஆரம்பித்தார். மேலும் அவரையே திருமணமும் செய்து கொண்டார்"என்று கூறினார்.
இதனால் இவருக்கு 17 வயது முதலே கேரள தற்காப்பு கலைகளுடன் நெருக்கமான தொடர்பு உண்டாயிற்று. மேலும் இவர் தனது கணவர் மற்றும் குருவான ராகவன் உடன் சேர்ந்து 'கடத்தாண்டன் களரி சங்கம்' என்னும் பயிற்சிக்கூடம் சிறப்பாக செயல்பட உதவிகள் புரிந்தார்.அந்த இடத்தை சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்கள் சூழ்ந்திருக்கும். மிகவும் ரம்மியமான இடம்.களரி பயிற்சி மாதங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரை அவர் சுமார் 150 பேருக்கு களரி பயிற்சிகள் அளிப்பார்.6 வயது முதல் 30 வயது வரையிலான ஆண் பெண் இருபாலரும் வட கேரள களரி பயிற்சி மேற்கொள்வர். அங்கு அவர்களுக்கு காற்றிலே சுழலுதல், குதித்தல், பதுங்கி நிற்றல், வாள் பயிற்சி, உருமி பயிற்சி போன்றவை கற்றுத் தரப்படும். இங்கே ஆண், பெண் மற்றும் ஜாதிப் பாகுபாடு கிடையாது. ஆண்களுக்கு சமமான அளவு பெண்களும் இங்கு களரி பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பயிற்சிகள் முடிந்த பின் மாணவர்கள் தங்களால் முடிந்த குருதக்ஷிணை ஸமர்ப்பணம் செய்வார்கள்.
மீனாட்சி அம்மா தனது 79 வயதிலும், காலையில் 4 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, தனது பூஜைகளை முடித்துவிட்டு, தனது குடும்பத்திற்காக சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். நேரம் செல்ல செல்ல உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொண்டு மாணவர்கள் வடகரா என்னும் ஊரில் உள்ள மீனாட்சி அம்மாவின் வீட்டுத் தோட்டத்திற்கு வருவார்கள். மீனாட்சி அம்மாவும் அவர்கள் அனைவரையும் வரவேற்பார். அனைவரும் ஒவ்வொன்றாக வந்த பிறகு அனைவரும் பூஜை செய்த பிறகு பயிற்சிகள் தொடங்கும்.மீனாட்சி அம்மா அனைவரது பயிற்சிகளையும் பார்ப்பார் தவறுகள் இருந்தால் அதை திருத்துவார்.
இவ்வாறாக காலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் செல்லும். இந்த வகுப்புகள் முடிந்த பிறகு அவர் நோயுற்றவர்களுக்கு 'வர்ம சிகிச்சை' அளிப்பார். இதன் பிறகு தனது இயல்பான வீட்டு வேலைகளில் ஈடுபடுவார். மாலை வேளை வந்தவுடன்40-50 குழந்தைகள் இவரிடம் பயிற்சி எடுக்க வருவார்கள். தனது மகன் மற்றும் சீடர்கள் உதவியுடன் பயிற்சி அளிப்பார். ஏனைய நேரங்களில் அவர் பல களரி பயிற்சி பள்ளிகளுக்கு சென்று வருவார் மற்றும் பல பொது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவார். 2017 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு பின் இவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அவர் தனது சிறு வயதில் பயிற்சி எடுக்க ஆரம்பிக்கும் பொழுது,பெண் குழந்தைகள் பயிற்சி பெறும் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர் தனது தந்தையின் ஆதரவால், அவர் வயது வந்த பிறகும் தனது பயிற்சிகளை தொடர்ந்தார்.1940-50 காலகட்டங்களில் வயதுவந்த பெண்பிள்ளைகள் இம்மாதிரியான பயிற்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது இல்லை. மேலும் மீனாட்சி அம்மாவும் கூட தனது திருமணத்திற்குப் பின்பு மூடப்பட்ட கதவுகளுக்கு பின்பே பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் மாணவர்களுக்கு மசாஜ் செய்வது, பெண் மாணவர்களைப் பார்த்துக் கொள்வது,மாஸ்டர் இல்லாத சமயத்தில் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவரது கணவர் இறந்த பிறகே களரி நிலையத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு பொதுவாக அனைவருக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
50 வருடங்கள் திரைக்குப்பின் இருந்துவிட்டு தன் கணவர் இறந்தபின், தன் கணவர் போல அனைவருக்கும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் கற்றுக் கொடுத்தார்.
அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காத சமயத்தில், அவர் செயல்முறைக் காட்சிகளில் களரி பயிற்சி மேற்கொள்வார். அவர் தனது இந்த வயதான காலகட்டத்திலும் தனது பழைய சீடரான சஜிலுடன் 60க்கும் மேற்பட்ட களரி செயலாக்கங்களை செய்வார். அவரது பழைய சீடர்கள் இதுபோன்று பல களரி பயிற்சி நிலையங்களை தொடங்கினர். மீனாட்சி அம்மாவின் மொத்த குடும்ப உறுப்பினர்களும், அவரது மகன்,மகள் மற்றும் பேரன்,பேத்திகளும் இந்த கலையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். மேலும் இந்த கலையை காப்பாற்ற வழிவகை செய்துள்ளனர்.
யாராக இருந்தாலும் 79 வயதில் வாழ்க்கையின் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு பேரன் பேத்திகளுடன் நேரத்தை செலவிட விரும்புவர். ஆனால் இந்த மீனாட்சி குருக்கள் அவர்கள் தனது வயதைப் பொருட்படுத்தாமல் இன்றளவும் கையில் வாள் ஏந்தி களரி கற்பித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்.