Welcome..! Join us to Develop your Humanity
ஒரு பயந்த சுபாவமுள்ள இளம் திருநங்கையாக இருந்தவர், ஒருதிறமையான பரதநாட்டியக் கலைஞராக ஆன- நர்த்தகி நடராஜ்
தனது இளம்பருவத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயந்த ஒரு திருநங்கை குழந்தையாக இருந்தவர், பிறகு ஒரு திறமையான பரத நாட்டியக் கலைஞராக மாறி 2019ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப் படுகிற பட்டியலில் இடம்பெறும் வகையில் வளர்ச்சி பெற்றவர்தான் நர்த்தகி நடராஜ்.
சிறுவனான நடராஜ் தனக்கு ஏற்பட்ட ஆண் தன்மையற்ற நடத்தையினால் மற்றவர்களால் கேலி செய்யப்படுவோமோ என்று அஞ்சி, பகல் நேரங்களில் நெரிசல் மிகுந்த மதுரை தெருக்களில் அவர் வெளியே வருவதை தவிர்த்தார்.
ராத்திரி நேரத்தில் மதுரையே தூங்கிய பிறகு அவரும் அவரது நண்பரும் இருள் சூழ்ந்த ரயில்வே பாதையிலோ அல்லது ஆள் அரவமற்ற சாலைகளிலோ, யாருக்கும் தென்படாத வகையில், வெகுதூரத்தில் இருந்து கேட்கும் டூரிங் டாக்கிஸ் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். . இப்படியே தொடரந்து 20 வருடங்களாக பெற்ற நடனப் பயிற்சியின் காரணமாக , திருநங்கையான நடராஜ் ஒரு திறமையான பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நடராஜ் ஆனார். அவரது நண்பர் சக்தியும் ஒரு நடன கலைஞர், எப்போதும் துன்பத்திலும், இன்பத்திலும் அவருக்குத் துணையாக இருப்பவர்.
"எனக்கு ஒரு மகிழ்ச்சியான குழந்தைப்பருவம் என்பது இருந்தது கிடையாது. எனக்கு 11 வயதாக இருந்தபோது நான் வீட்டில் இருந்து துரத்தப்பட்டேன். அப்போது பல சில்லரை வேலைகளைச் செய்து ஒருவேளை உணவுக்காக கூட போராடினேன். எப்படியோ பள்ளிப் படிப்பை நன்றாக முடிக்க முடிந்தது.என்னுடைய நடனத்தின் மீதான ஆசைகளை மெருகேற்றி அதனை நன்கு கற்றுக்கொள்ள என்னுடைய 15 வயதில் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும் ஒரு குருவைத் தேடினேன்" என்று நர்த்தகி நினைவு கூர்ந்தார். அவரது தேடல் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது. பரதநாட்டியத்தின் தந்தை எனக் கருதப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம் மற்றும் வடிவேலு ஆகிய நால்வரின் வம்சாவழியான கிட்டப்பா பிள்ளையை தஞ்சாவூரில் நர்த்தகி சந்தித்தார். அவர்கள் நால்வரே பரதநாட்டியத்தில் உள்ள அடவுகள் மற்றும் அபிநயங்களில் உள்ள நுணுக்கங்களை வகுத்தவர்கள்.
"நான் தட்டிய கதவுகள் இவ்வளவு பெரிய மரியாதைக்குரிய இடமாக இருக்கும் என்பதை நான் உணரவில்லை. மதுரையில் நான் கண்டு களித்த டூரிங் டாக்கீஸ் திரைகளில் நான் பெரிதும் பாராட்டிய திரைப்பட நடிகை வைஜெயந்தி மாலாவோடு ஹேமமாலினி மற்றும் யாமினி கிருஷ்ணமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு கிட்டப்பா பிள்ளை தான் குரு என்பதனை நான் பிறகு தான் அறிந்தேன். நானும் சக்தியும் ஆரம்பத்தில் வைஜயந்தி மாலாவின நடன நுணுக்கங்களைத்தான் பின்பற்றினோம், திரையில் தோன்றும் அவரையே எங்களது மானசீக குருவாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம்" என்கிறார் இப்போது பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நர்த்தகி. விருது அறிவிப்பிற்குப் பின்னர் அவர் தனது வெளிநாட்டுப் பயணங்களை மாற்றி அமைப்பதில் தீவிரம் காட்டினார். நார்வே, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அடுத்து வரவிருந்த மாதங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சி அனைத்துமே அவரது தனிச் சிறப்பை வெளிப்படுத்தும் தனித் திறன் நடன நிகழ்ச்சிகளே ஆகும்.
கிட்டப்பா பிள்ளையிடம் 15 வருடகாலம் கடுமையான பயிற்சிக்கு பிறகு நர்த்தகி பாரம்பரியமிக்க தஞ்சாவூர் பாவன பரம்பரையின் நாயகி ஆனார். "குழு நடன நிகழ்ச்சி ஒரு போதும் தனி பரதநாட்டியத்தின் கலையுடன் பொருந்தாததோடு பாரம்பரிய பாணிகள் மற்றும் சம்பிரதாயங்களை நீர்த்துப்போக செய்தன என்பதுபோல நான் எப்போதும் உணர்ந்தேன்”, என நர்த்தகி குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் அவரே சங்கக் கவிதைகள், பக்தி இலக்கியங்கள் மற்றும் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் பாரதியின் சமகால பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த தொகுப்பை வழங்கினார்.
ஜப்பானில் தனது சமீபத்திய நிகழ்ச்சியில் தேவாரத்தில் இருந்து அப்பரின் திருத்தாண்டகத்தில் வரும் ஆன்ம விடுதலையைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சியை அவர் வழங்கினார். "ஆறு வரி கவிதைகளை நான் 45 நிமிட நடனத் தொகுப்புகளாக வழங்கினேன். நடனத்தை இலக்கியமாக மாற்றுவது ஓர் அழகான செயல்முறையாகும், ஏனெனில் நடனத்தின் மொழி அனைத்தும் முன்மாதிரியான வெளிப்பாடுகளை கொண்டது”, என நர்த்தகி கருதுகிறார்.
நடன இலக்கியங்களைப் பற்றி பேசுகையில் நர்த்தகி சிலப்பதிகாரத்தை முன்மாதிரியாகக் கொள்கிறார். “இது ஒரு பரந்த இசை நாடகம் மற்றும் நடன நூலகமாக திகழ்கிறது” என்று அவர் கூறுகிறார். “மேடையில் ஆடும் பொழுது சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றான நடனக்கலைஞர் மாதவி போன்றே என்னை நான் கற்பனை செய்கிறேன். இலக்கியம் மற்றும் நடனத்தில் அவளது நிபுணத்துவம் அளப்பரியது, அவள்தான் என் உத்வேகம். சில நேரங்களில் என் ரசிகர்கள் கூட எனது நடிப்பை பாராட்டும் பொழுது என்னை மாதவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள், அது எனக்கு மிகுந்த பெருமிதத்தை தருகிறது.” என அவர் கூறுகிறார்.
பல மொழிகளில் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளுக்கு நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் நர்த்தகி, தனது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் எப்பொழுதும் உறுதியாக உள்ளார். "கடந்த மாதத்தில் நான் அமிர்தசரஸில் ஒரு நடன நிகழ்ச்சிக்காக பஞ்சாபி நாட்டுப்புற கதைகள் மற்றும் உன்னதமான இலக்கியங்கள் குறித்து நிகழ்ச்சிக்கு முன்னமேயே ஆராய்ச்சி செய்து அதன் ஆழங்களை புரிந்து கொண்டேன். . பின்னர் பஞ்சாபியில் கதைகள் மற்றும் கவிதைகளை மையமாக வைத்து எனது நிகழ்ச்சியை உருவாக்கினேன். . அதேபோல் நான் ஆந்திராவில் தெலுங்கு கீர்த்தனைகளையும், புவனேஸ்வரில் ஒரியா கவிதைகளையும் நிகழ்ச்சியாக வழங்குகிறேன். . இருப்பினும் எனது தாய் மொழியை மதிக்கும் அடையாளமாக எனது அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒரு தமிழ் பாடல் அடிப்படையில் அமைந்த ஒரு நிகழ்ச்சியாவது அதில் கண்டிப்பாக இடம் பெறும்" ,என்று அவர் கூறினார்.
"இச்சமூகம் என்னதான் எனது மாற்று பாலினத்தை பற்றிய எண்ணத்தை என் மீது திணித்துக் கொண்டிருந்தாலும் நான் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. 80 மற்றும் 90களில் நானும் சக்தியும் மதுரையில் எங்கள் அடையாளங்களை பற்றி வெளிப்படையாகவே கூறி நாங்கள் மாற்று பாலினத்தவராக வெளியே வந்தோம். மேலும் நாங்கள் பரதநாட்டிய கலைஞர்களாக வளரும்போது எங்களுக்கு சில நல்ல மனிதர்களும் உதவியாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார். "எனது முதல் நடன வகுப்பை நாமனூர் ஜெயராமன் மற்றும் மதுரை T.G. ஜெயராமன் நடத்தினர், அவர்கள் திருநங்கைகளுக்கு போதிய மரியாதையுடன் கற்றுக்கொடுக்கும் மனிதர்களாக இருந்தனர். அதேபோல் அபராஜிதா என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான K S பரத் மற்றும் அவரது தாயார் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலமாக எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவரே நான் இந்த உயரத்தை எட்டுவதற்குக் காரணமானவர்" , என்று நர்த்தகி நன்றியுடன் தெரிவித்தார்.
"இருப்பினும் நான் ஒரு பொழுதும் எனது பாலின குறைபாட்டை கொண்டு எவரிடமும் அனுதாபத்தை தேடியதில்லை. அதை என் வாழ்க்கையை நடத்திச் செல்ல ஒரு கருவியாக அமைத்துக் கொள்ளவும் பயன்படுத்தவில்லை. பத்மஸ்ரீ விருது கூட நடன கலைஞராக எனது நிபுணத்துவதிற்காக வழங்கப்பட்டதே தவிர திருநங்கை என்ற காரணத்தினால் அல்ல" என அவர் தன்னம்பிக்கையுடன் உரைக்கிறார். "வெள்ளியம்பலம் அறக்கட்டளை" என்னும் அமைப்பை நடத்தும் நர்த்தகி, அதன் மூலம் நடனத்தில் ஆர்வம் உள்ள நடன கலைஞர்களுக்கு பெரிய சாதனைகளைப் புரிய பயிற்சி அளிக்கிறார்.
"நான் பரதநாட்டியத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளேன் அவர்களில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளில் நடனப் பள்ளிகளை அமைத்துள்ளனர். எனது அறக்கட்டளையின் வருமானத்தில் சுமார் 85 சதவிகிதத்தை திருநங்கைகளின் மேம்பாட்டிற்காகவே ஒதுக்கி செலவு செய்கிறேன்" , என நர்த்தகி நடராஜ் பெருமையோடு சொல்கிறார்.
அனைத்தும் சரியாக இருந்தும் விதியை நொந்து கொள்ளும் மனிதர்களிடையே நர்த்தகி நடராஜ் போன்றவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான்.