Welcome..! Join us to Develop your Humanity
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்- தனது முழு வாழ்க்கையையும் பழமையான நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாட்டிய முறைகளைப் பற்றிய ஆராய்ச்சி, தொகுத்தல், மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்பதிவு செய்தல் பணிக்காகவே அர்ப்பணித்தவர்
நாட்டுப்புறப்பாடலானது இசையின் தூய்மையான வடிவமாக கூறப்படுகிறது. நாட்டுப்புற இசை வடிவம் ஒரு மொழியைப் போன்று தொன்மையானது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து தோன்றியதும், வாய்மொழியாகவும், செவி வழியாகவும் எண்ணற்ற தலைமுறைகளைத் தாண்டியும் அவைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தனது பல்லாண்டு கால தொடர் முயற்சிகளின் விளைவாக நாட்டுப்புறக் கலைஞராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் பேராசிரியர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் நாட்டுப்புற கலைகளின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அதனுடைய மரபுகளை தற்கால கலையின் முக்கிய நீரோட்டத்தோடு இணைத்திடும் இத்தகைய மாபெரும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். மேலும் நாட்டுப்புற கலைகளைச் சூழ்ந்துள்ள தேவையற்ற மூடநம்பிக்கைகளை களைவதிலும், பல்லாண்டு காலமாக தொடர்ந்து வந்ததன் விளைவாக ஏற்பட்ட பிறழ்வுகளிலிருந்து நாட்டுபுற கலையின் தொன்மையான பண்பாட்டை மீட்டெடுப்பதில் அவர் வெற்றி அடைந்து உள்ளார்.
பேராசிரியர் விஜயலட்சுமி தனது கணவர் நவநீதகிருஷ்ணனுடன் ஒருங்கிணைந்து பாரதத்தின் தொன்மையான பக்தி இயக்கத்தின் சாதுக்களை பற்றியும், அதன் பண்பாட்டைப் பற்றியும் உயர்ந்த கருத்துக்களை வெகுஜன ரீதியில் பரப்பும் மிக முக்கியமான பணியை மேற்கொண்டார்கள் சமீபகாலத்தில் பல சர்ச்சைகளுக்கு இடையில்,ஊடகங்களில் அடிக்கடி பேசப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார்தான் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் மிக முக்கியமான ஆய்வுக் கருத்தாகும். இவர் தனது சொந்த முயற்சியின் மூலமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசை ஒலி வடிவங்களை ஒலிப்பதிவு பேழைகள் வெளியிட்டு அதன்மூலம் கட்டுக்குள் சிக்கியிருக்கும் நாட்டுப்புற கலை வடிவங்களை விடுவித்துக் கொண்டு வருவதில் ஒரு முக்கியமான பங்காற்றியுள்ளார். இவருக்கு 2018 ஆம் ஆண்டில் நமது நாட்டின் கௌரவம் மிக்க பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதன் மூலம் இவர் பல ஆண்டுகள் நாட்டுப்புற கலைகளுக்கு ஆற்றிய அரும் சேவைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1946 இல் மதுரையில் பிறந்த பேராசிரியர் விஜயலட்சுமி அவர்கள் தனது சிறு வயதிலேயே இசையின் பால் ஈர்க்கப்பட்டு பள்ளி பருவத்தில் தையல் வகுப்பிற்கு பதிலாக இசை பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து படித்தார். அவருடைய தாயார் மற்றும் பாட்டியின் இசைத் திறமை இவர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் கோயில்களில் பாடப்படும் இசை வடிவங்களும் இவரது மனதை தொட்டது. பேராசிரியர் விஜயலட்சுமியும் அவருடைய கணவர் நவநீதகிருஷ்ணனும், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பல தொழில் நிபுணர்கள் உருவாகிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் இவர்கள் இருவரும் தமிழ் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுக்கு புத்துயிர் ஊட்டும் ஒரு தவ மயமான வாழ்விற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் வாழ்வில் நாட்டுப்புற கலை வடிவங்களை காப்பாற்றி மீட்பதற்கான மிகக் கடினமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டும், அவைகளை தொகுத்தும், அவைகளுக்கு புத்துயிர் ஊட்டியும்., தேவையான ஆவணப் பதிவுகளை ஏற்படுத்தியும் அழிவின் விளிம்பில் இருந்த கலை வடிவங்களை மீட்டெடுத்து தமிழ்ச் சமுதாயத்திற்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்கள். பேராசிரியர் விஜயலட்சுமி அவர்கள் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் நாட்டுப்புற கலைகள் மற்றும் பண்பாட்டு பிரிவில் பணியாற்றினார்.
தனது பணி ஓய்விற்குப் பிறகு இக்கலை தம்பதியினர் நாடு முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் செய்து நாட்டுப்புற கலைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் கலை ஆர்வலர்களையும், புதியவர்களையும் ஒருங்கே ஈர்த்துள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக 1980களில் அவர்கள் அகில இந்திய வானொலி வாயிலாக வழங்கிய நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளும், ஒரு முன்னணி ஆங்கில தினசரிக்கு அவர்கள் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் நாட்டுப்புற கலைகளுக்குக் கிடைத்த ஊக்கமும், ஆதரவும் ஆகும்..
இவர்களைப் பொறுத்தவரை இவர்களால் முடிந்த மட்டிலும் எத்தனையோ கலை வடிவங்களையும், பாடல்களையும், இசைத்தொகுப்புகளையும் மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காக அவற்றை சரியான முறையில் ஆவணப் பதிவு செய்து, அந்த அறிவுச் செல்வத்தை உலகம் முழுவதும் பரப்புவதுதான் தங்களின் வாழ்நாள் குறிக்கோளாகக் கருதி செயல்பட்டனர். அவர்களுடைய பணியும், ஆய்வும் சமுதாயத்திற்கான அவர்களுடைய பங்களிப்பாக கருதினர்.
நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி கூறும் பொழுது அவைகள் பெரும்பாலும் உலகத்தினுடைய இயற்கை சார்ந்த பல்வேறு விதமான நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன. இயற்கையின் நிகழ்வுகள், பருவகாலங்கள், பிறப்பு, திருமணம், திருவிழாக்கள், இறப்பு , இயற்கை வழிபாடு ஆகியவற்றை அவை மையமாகக் கொண்டிருக்கும். நாட்டுப்புற பாடல்கள் மேலோட்டமாக ஒரு சாதாரண கருத்தை வெளிப்படுத்தினாலும் அவைகள் ஆழ்ந்த ஆன்மீக செய்திகளை வெளிப்படுத்துவதையும் நாம் உணரவேண்டும். உதாரணத்திற்கு நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்கிற சித்தர் பாடலானது மேம்போக்காக பார்க்கும் பொழுது ஒரு ஆண்டியையும், அவன் குயவனிடம் இருந்து பெற்ற பானையையும், அதை அவன் தனது அஜாக்கிரதையால் கூத்தாடி போட்டு உடைத்த சம்பவத்தையும் சொல்வதாக இருந்தாலும், ஆழ்ந்து நோக்கும் பொழுது ஒரு மனித ஆன்மாவை ஆண்டியாக சித்தரித்து, அவன் குயவனான இறைவன் இடமிருந்து பெற்ற உடலை பானையாகவும் காண்பித்து , அவனுடைய வாழ்க்கை கேளிக்கைகளை நடனத்திற்கு ஒப்பிட்டு அதன் காரணமாக கிடைத்தற்கரிய அவனது வாழ்க்கையை கீழே போட்டு உடைத்து நாசம் ஆக்கிவிடுகிறான் என்பதுதான் அதன் பொருளாக அமைகிறது.
இவ்விதமாக ஒவ்வொரு நாட்டுப்புற பாடலுக்கும் அல்லது நாட்டியத்திற்கும் ஒரு உள்ளார்ந்த வெளிப்பாடு இருக்கிறது. பல்வேறு வேலைகளில் ஈடுபடும் ஒரு சாமானிய மனிதன் அவனுடைய அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் அவனுக்கு கிடைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வடிகாலாக இந்த நாட்டுப்புறப் பாடல்களும் , கலை வடிவங்களும் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கலை வடிவங்கள் அந்த சாமானிய மனிதனை பரம்பொருளோடு இணைக்கும் ஒரு சாதனமாகவும் விளங்குகிறது. பழமையான கிராமிய பாடல்களும், நாட்டுப்புற கலைகளும் வெறும் பொழுதுபோக்கிற்காகவோ, உணர்ச்சி வெளிப்பாட்டிற்காகவோ அல்லது தற்காலிக மன சந்தோஷத்திற்காகவோ மட்டுமின்றி ஆன்மீகத் தேடலை நிறைவு செய்யும் ஒரு வழியாகவும் அமைந்திருக்கின்றன.
இந்த அளப்பரிய உண்மையை எளிய நாட்டுப்புற மனிதர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மகரிஷி ரமணருடைய அல்லது சுவாமி விவேகானந்தருடைய தத்துவங்களை படிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை . அந்த மகான்களைப் போலவே அந்த சாமானிய மனிதர்களும் தங்களை அறியாமலேயே தாங்கள் செய்யும் வேலையின் மூலமாக கர்ம யோகத்தில் ஈடுபட்டும், தங்களுடைய கலை வடிவங்கள் மூலமாக பக்தி யோகத்தில் ஈடுபட்டும் ஆத்ம சுத்தியை பெற்றனர். ஆக, ஒருவன் தனது இயல்பான பணியை முழு மனதுடன் செய்யும் பொழுது ஏற்படும் அளப்பரிய ஆனந்தமே நாட்டுப்புற கலைகளின் அடிநாதமாக விளங்குகின்றது.
மேலும் இக் கலை வடிவங்களோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ளும் ஒரு மனிதன் பாடல் மூலமாகவும் ,ஆடல் மூலமாகவும், எந்தவித தயக்கமும் இன்றி தனது அகங்காரத்தை கைவிட்டு, ஒரு மேன்மையான மனநிலையில் அனைவரிடமும் சரிசமமாக பழகி, ஒரு கர்மயோகியைப் போல் இந்த உலகத்தின் உண்மையான உணர்வினை பெறுவதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடாக அமைகிறது. இத்தகைய எளிமையான கிராம மக்களை பொறுத்தவரை இந்த நாட்டுப்புற இசை வடிவங்களும், நாட்டியங்களும் ஓர் ஆன்மீக அனுபவத்தை தருவதாகவும், ஒரு தெய்வீகப் பாதையில் அவர்களை இட்டுச் செல்வதாகவும் அமைந்திருப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாகும்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் அளப்பரிய பயன்களை அளிக்கிறது. பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் போது பாடக்கூடிய ஒரு சில சிறப்பான பாடல்கள் மூலம் பசுக்கள் மிகுந்த இயல்பான நிலையில், ஓய்வான மன நிலையில் எளிதாக பாலைக் கறப்பதற்கு அனுமதிக்கின்றன. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களுக்கு தெரிந்த ஒரு மனநல மருத்துவர், அத்தகைய பாடல்களை பதிவிறக்கம் செய்து அவருடைய நோயாளிகள் அதைக் கேட்குமாறு செய்ததன் மூலமாக, அவருடைய நோயாளிகளின் மன இறுக்கமும், அழுத்தமும் வெகுவாகக் குறைந்தது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்.
ஒரு இல்லத்தரசி தனது வீட்டு வாயிலில் விடியற்காலையில் ஒரு பாடலை பாடியவாறே போடக்கூடிய ஒரு கோலத்தின் மூலமாக தனது வீட்டில் உள்ள அனைவருடைய நலத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக அது அமைந்துள்ளது. அழகியல் ரீதியாக வீட்டின் முன்பாக அழகான கோலங்களைப் போடுவதும், வீட்டிலுள்ளோர் நலம் பெற சில பாடல்களைப் பாடுவதும் மனோதத்துவ ரீதியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விதம் கோலம் போடும் போது பாடல் பாடும் வழக்கம் ஜப்பானிய மக்களின் வசந்த கால செட்சுபன் திருவிழாவின் நடப்புகளை நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது . அந்நேரத்தில் ஜப்பானிய மக்கள் சோயாபீன்காய்களை வாயிலுக்கு வெளியே வீசி எறிந்து "தீமை விலகட்டும், அதிர்ஷ்டம் சேரட்டும்" என்று கூறுவதன் மூலம் ஒரு மனோரீதியான தாக்கத்தை பெறுகிறார்கள். நமது நாட்டின் இத்தகைய பாரம்பரிய கலை வடிவங்களும், பண்பாட்டு நிகழ்வுகளும் உலகத்தின் பல்வேறு நாகரிகங்களோடு ஒத்துப் போகிறது என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் பேராசிரியர் விஜயலட்சுமி வெளிக் கொணர்ந்து உள்ளார். எகிப்தியர்கள், ஹீப்ரூக்கள், ரோமானியர்கள், கிரேக்கர்கள், சீன நாட்டினர், ஜப்பானியர்கள், பாபிலோனியர்கள் ஆகியோருடைய நாட்டுப்புற இசை வடிவங்களும், நாட்டியங்களும் தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளோடு மிகவும் ஒத்துப் போவதை அவர் கண்டுள்ளார். அவருடைய ஆராய்ச்சியின் படி சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட சப்தகன்னியர் அல்லது ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடு தமிழகத்தில் பல கிராமங்களில் இன்றும் காணப்படுகிறது. இதற்கிடையே உள்ள தொடர்பினை இது நிரூபிப்பதாக அமைந்திருக்கிறது.
இதேபோல ராமாயணக் கதைகளின் பல்வேறு நாட்டுப்புற வடிவங்கள் நாடு பூராவிலும் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களிலும் , பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களாக இன்றும் பாடப்பட்டு வருவது நமது அகில பாரத தொடர்பையும், பண்பாட்டின் ஒருமைப்பாட்டையும் நிரூபிக்கிறது. திருநெல்வேலிக்கு அருகிலுள்ள குரங்கணி என்னும் ஊரில் முத்துமாலை அம்மன் என்கிற ஒரு கோயிலானது ராமாயணத்தின் சீதையோடு தொடர்புடையதாக இருக்கிறது. சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் வைத்து கடத்திச் செல்லும் போது, அந்த குறிப்பிட்ட இடத்தில் சீதை வீசி எறிந்த முத்துமாலை விழுந்ததாகவும், அதுவே அந்த முத்துமாலை அம்மன் கோவிலாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தமிழில் கம்பராமாயணத்தை எழுதிய கம்பர் நாட்டுப்புற இசை வடிவத்தில் ஈர்க்கப்பட்டு, அவருடைய பல செய்யுள்களை நாட்டுப்புற மெட்டில் வருமாறு அமைத்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
டாக்டர் விஜயலட்சுமி அவர்களின் பலவிதமான பொது நிகழ்ச்சிகளில், காஞ்சி காமகோடி பீடத்தில் அவர் நிகழ்த்திய ராமாயணத்தின் நாட்டுப்புற வடிவம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் . அந்நிகழ்ச்சியில் அவருடைய ஆராய்ச்சிகளின் பயனாக முழு ராமாயணத்தையும் 14 வரிகளில் ஒரு தாலாட்டுப் பாடலாக அவரது குரலிலேயே பாடிய போது, அந்த தாலாட்டை கேட்டவர்களுக்கு உடனடியாக ஒரு முழு ஓய்வும், மன அமைதியும் கிடைத்ததை பார்வையாளர்கள் உணர்ந்தார்கள். அந்த அளவிற்கு நாட்டுப்புற கலை வடிவத்தின் தாக்கமானது இருக்கிறது என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
ஒரு தனிப்பட்ட நபரின் ஆன்ம உணர்விற்கும், பிரபஞ்ச ரீதியாக இயங்கும் இறை சக்திக்கும் இடைப்பட்ட தொடர்பினை உருவாக்குவதே நாட்டுப்புற கலைகளின் நோக்கம் என்று இவர் அறுதியிட்டுக் கூறுகிறார். இந்தப் பாடல்களில் உபயோகப்படுத்தப்படும் எழுத்துக்கள் கூட ஆழ்ந்த ஆன்மீக உள்ளர்த்தம் கொண்டதாக விளங்குவதை அவர் விவரிக்கிறார். தென்னிந்திய நாட்டுப்புற கலை வடிவங்களில் எதை எடுத்தாலும் அது "தானானே" என்கிற தொடக்கத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. அதன் உண்மையான பொருள் தான்-நான்-ஆனேனே, அதாவது எல்லையற்ற பரம்பொருள் என்னுள் இருக்கும் ஜீவான்மாவாக விளங்குகிறது, அஹம் பிரம்மாஸ்மி என்கிற மிகப் பெரும் தத்துவத்தை உணர்த்தும் இந்து தர்ம கோட்பாட்டையே இது வெளிப்படுத்துகிறது. என்று டாக்டர் விஜயலட்சுமி அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
இக்கலைத் தம்பதியினர் 56 நூல்களை எழுதியும், பல நூற்றுக்கணக்கான இசை வடிவங்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டும் அளப்பரிய சேவையை செய்துள்ளார்கள். பேராசிரியர். டாக்டர். திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய பணிக்கான அங்கீகாரமாக குறிப்பிடும் ஒரு சம்பவத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1980களில் அவரை ஊக்குவித்து பரிசு அளிக்கும் விதமாக ஒரு வெற்று காசோலையை அனுப்பியிருக்கிறார். திருமதி விஜயலட்சுமி அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி இருந்தாலும் , முதல்வரின் இந்த செய்கை ஆனது இவருடைய கலைத் திறமைக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாகவும், அத்தாட்சியாகவும் விளங்குகிறது.