Welcome..! Join us to Develop your Humanity
முப்பது ஆண்டுகளாக நாகபுரியில் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்குக் கல்வி புகட்டிய மாமனிதர் – ராம்பாவு இங்கோல்
“என்னை ஒரு மனிதப் பிறவியாக ஏற்றுக் கொண்ட ராம்பாவு இங்கோலுக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் என்னை மீட்டு, சமுதாயத்தில் ஒரு கண்ணியமான, மதிப்பான இடத்தில் மறுவாழ்வு அமைத்துக் கொடுத்துள்ளார். அவர் மட்டும் இல்லாதிருந்தால், எனது தாயைப் போன்றதொரு, மனிதத் தன்மையற்ற அவமானங்களைத்தான் நானும் அடைந்திருப்பேன்” என்கிறார் சீமா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). சீமா ஒரு பாலியல் தொழிலாளியான ஒரு தாயின் மகள். தற்போது தனது வயது இருபதுகளில், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையுடன், ஆசிரியராகப் பணியில் ஈடுபட்டிருக்கும் சீமா, இவை அனைத்தும் ராம்பாவு இங்கோல் அவர்களின் தளராத பணிகளாலேயே சாத்தியமாயிற்று.
ராம்பாவு அவர்கள் 1990களில், சீமாவுக்கு 11 வயதாகும்போது, நாகபுரியில் பாலியல் தொழிக்குப் பெயர் பெற்ற கங்கா-யமுனா பகுதியிலிருந்து, சீமாவுடன் மேலும் நான்கு பெண்குழந்தைகளையும் சேர்த்து மீட்டு வந்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் சமூக ஆர்வலர் ஸ்ரீ ராம்பாவு அவர்கள், நாகபுரி நகரத்தில் ஏராளமான பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
1980களில் ராம்பாவு இங்கோல் அவர்கள், பாலியல் தொழிலுக்கு எதிரான இயக்கத்தில் கலந்து கொண்டபோதுதான் நம் நாட்டில் பாலியல் தொழிலின் இருண்ட பக்கங்களை எதிர்கொண்டார்.
“நான் ஆரம்பத்தில் பாலியல் தொழிலாளர்களைப் பற்றி, ஒருதலைப் பட்சமான, மனிதாபிமானமற்ற ஒரு அபிப்பிராயத்தைத்தான் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் வெட்கமில்லாத, சந்தர்ப்பவாத, ஒழுக்கமில்லாத ஈனப் பிறவிகள் என்றே நான் அறிந்திருந்தேன். விபச்சார விடுதிகளை சென்று பார்த்தபோது, அங்கு மனச்சோர்வை அளிக்கும் மன ஒப்புதலும் மரியாதையும் இல்லாத ஒரு இருண்ட உலகை நான் பார்க்க நேர்ந்தது” என்கிறார் ஸ்ரீ ராம்பாவு இங்கோல். பாலியல் தொழிலாளிகளிடம் பேசிப்பார்த்த பின்னரே, அவர்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியான முறைகேடுகள், பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள், வன்புணர்வு மற்றும் காவல் துறையின் கொடுமைகள் போன்ற மன்னிக்க முடியாத செயல்களையும் அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். ரவுடிகள், காமத்தரகர்கள், காவல்துறையினர் மற்றும் வாடிக்கையாளர்களின் அரக்கத்தனமான சுரண்டல் அனைத்தும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள பெண்கள், உயிரற்ற போகப் பொருட்களாகவே கருதப்படுகிறார்கள்.
இந்த கசப்பான உண்மைகளை ஸ்ரீ இங்கோல் அவர்கள், மனதால் ஜீரணித்துக் கொண்டபோது, அவரது கவனம் அந்த பாலியல் தொழிலாளிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் மீது சென்றது. அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், விரும்பி ஏற்றுக் கொள்ளப் படாதவர்களாகத்தான் இருந்தார்கள். 18 வயதானவுடன் அவர்களில் பெண்குழந்தைகள், அந்த கங்கா-யமுனா பகுதியின் வழக்கப்படி, தங்கள் தாயின் வழியில் பாலியல் தொழிலிலேயே தள்ளப் பட்டார்கள். அதற்கிடையில் ஆண்குழந்தைகளோ தங்கள் சொந்தத் தாய் மற்றும் சகோதரிகளின் தொழிலுக்குக் காமத்தரகர்களாகத்தான் மாறுகிறார்கள்.
ஸ்ரீ இங்கோல் அவர்களின் முதற் பணியானது, அந்த பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்குக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் துவங்கியது. ஆனால் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் என்ற கறையைப் போக்குவது எவ்வளவு கடினம் என்பதையும் அவர் உணர்ந்தார்.
“எந்தத் தாயும் தனது குழந்தைகளை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பண வசதியோ, சூழ்நிலையோ அங்கு இருப்பதில்லை. இந்த களங்கத்தைத் துடைக்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்தக் குழந்தைகளின் மறுவாழ்வுப் பணியில் ஈடுபடுவது எனத் தீர்மானித்தேன்” என்கிறார் ஸ்ரீ இங்கோல்.
அந்தக் குழந்தைகளை இருளிலிருந்து மீட்க, “அம்ரபலி உத்கர்ஷ சங்கம்” (AUS) என்ற பெயரில் அவர் ஆரம்பித்த பணியானது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. துவக்கத்தில் ஸ்ரீ இங்கோலின் பெற்றோர்கள், அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். அங்கீகாரமில்லாத அந்த மக்களுக்காக பணி செய்த அவரை, சமுதாயம் புறக்கணிக்கத் தலைப்பட்டது. அவரது சரக்குப் போக்குவரத்துத் தொழிலும், பல வாடிக்கையாளர்களின் புறக்கணிப்பால் நலிவுற்றது. புறக்கணிக்கப்பட்ட அந்த மக்களுடன் பழகியதால் அவர் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானார்.
அந்த தடைகளையெல்லாம் பொருட்படுத்தாத அவர், எட்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர், 1992ல் தனது AUS நிறுவனத்தை பதிவு செய்தார். ஆரம்பத்தில் நான்கு குழந்தைகளுக்கு உணவு, வசிப்பிடம், ஆரோக்கியம் மற்றும் கல்விக்கு ஏற்பாடு செய்து, தன் பணியைத் துவக்கினார்.
அதிர்ஷ்டவசமாக அவர் விபச்சார பகுதிகளிலிருந்து குழந்தைகளை மீட்கும்போது, அந்த பாலியல் தொழிலாளிகளிடமிருந்து எதிர்ப்பேதும் வரவில்லை. உண்மையில் அவர்கள் ஸ்ரீ இங்கோலுடன் சேர்ந்து, மகழ்ச்சியுடன் நீதிமன்றத்துக்கு வந்து, அந்த குழந்தைகளின் சட்டபூர்வமான மீட்புக்கு உதவினார்கள்.
துவக்கத்தில் இங்கோல் அந்த குழந்தைகளைத் தனது வீட்டிலேயே தங்க வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் நாகபுரி நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் குடி மாற்றிப் போக வேண்டியதாயிற்று. 2007ல் அவர், தங்குமிடத்துடன் ௯டிய பள்ளி ஒன்றை சொந்தமாகக் கட்டும் வரை களங்கமும், கேலியும் அவர்களைத் துரத்தியதால், அவர் ஏழு முறை தன்னுடைய வசிப்பிடத்தை மாற்ற வேண்டியிருந்தது. இருந்தாலும் இங்கோலுக்கும், குழந்தைகளுக்கும் காலம் இருண்டதாகவே மட்டும் இருக்கவில்லை.
2005ம் ஆண்டு ஒரு உள்ளூர் மராத்தி பத்திரிகையில் அவருடைய மகத்தான முயற்சிகள் பற்றிய விபரங்கள் வெளியானதுதான் திருப்புமுனையாக அமைந்தது. அவரது பணியின் மேன்மையை அறிந்த, அதே துறையில் பணியாற்றும் பல அமைப்புகள் கைகோர்க்க முன்வந்தன. அதற்குப் பின் வந்த ஆதரவும், பாராட்டுகளும், அந்த குழந்தைகளுக்கு, முறையான நல்ல கல்வி அளிக்கும் பணியில், இங்கோலுக்கு நம்பிக்கை அளித்து ஊக்கமூட்டின. ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி உதயமானது.
2007ல் நவீன் தேசாய் என்ற கொடையாளர் அளித்த ஐந்து ஏக்கர் நிலத்தில், நாகபுரியின் புறநகர் பகுதியில் அவருடைய பெயரிலேயே உறைவிடப் பள்ளி கட்டப்பட்டது. தற்போது அந்தப் பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதுவரை 239 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களின் பள்ளி படிப்பு முடிந்ததும், அவர்கள் விரும்பிய கல்லூரி படிப்புக்காகவும் ஸ்ரீ இங்கோல் உதவுகிறார்.
“என்னுடைய குழந்தைகள் பலர் ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளார்கள்” என்று மிகுந்த பெருமிதத்துடன் ௯றுகிறார் இங்கோல்.
ஸ்ரீ இங்கோல் அவர்களின் இந்த 30 வருட சாதனைப் பயணமானது, உத்வேகமளிப்பதாகவும், மனதிற்கு இதமாகவும் உள்ளது. ஆனாலும் எல்லா வெற்றிப் புன்னகைகளுக்கும் பின்னால், இங்கோல் மட்டுமே அனுபவித்த எண்ணிலடங்கா போராட்டங்களும் உள்ளன. கைவிடப் பட்ட மக்களை உயர்த்துவதற்காகத் தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் அனைத்தையும் கைவிடக்௯டியவரை அவரைப்போல் காண்பதரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் தேவை அபரிதமான வலிமை, இரக்கம், தைரியம் மற்றும் மனஉறுதி என்பனவே. ஸ்ரீ ராம்பாவு இங்கோல் இவை அனைத்தையும் பெற்றவராய் இருந்தார்.