Welcome..! Join us to Develop your Humanity
அல்லாடி ராமகிருஷ்ணன் – விஞ்ஞானத்தை குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்த அறிவியல் மேதை
1947 முதல் கல்வி சார் துறைகளில் பல அடிப்படை கருத்தாக்கங்களை வழங்கி வந்தவர் அல்லாடி ராமகிருஷ்ணன். அவர் "மேத்ஸயன்ஸ்" (MAT SCIENCE) என்கிற ஒரு கணித அறிவியல் நிறுவனத்தை ஏற்படுத்தியதின் மூலம் அமைதியற்ற அறிவியல் உலகை மேம்படுத்தவும், முடிவற்ற கணித உலகின் புதிர்களை ஆராய்வதற்கும் ,அதி ஆற்றல் இயற்பியல் கோட்பாடுகளையும் ஆராய்வதற்காக தனது வாழ்க்கையையே முழுவதுமாக அர்ப்பணித்தவர்.
டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணன் 22 ஆண்டுகளாக சென்னையில் மேத்ஸயன்ஸ் நிறுவனத்தின் (MATSCIENCE) இயக்குனராக பணியாற்றிய வேளையில், புதுமையான சிந்தனைகளுக்கும் யோசனைகளுக்கு எப்போதும் பதிலளிக்கும் ஒரு சூழலை உருவாக்கினார். அந்தப் பல்கலைக்கழகம் புகழ்பெற்ற விஞ்ஞானி நீல்ஸ் போரின் வருகையால் புத்துணர்வடைந்தது. அது மட்டுமின்றி அல்லாடி ராமகிருஷ்ணனின் "ஏகாம்ர நிவாஸ்" என்னும் மாமரத்து வீடு இந்த விஞ்ஞானியை உபசரித்த பெருமையையும் பெற்றது.
பேராசிரியர் ராமகிருஷ்ணன் இயற்பியலில் இளங்கலை பட்டம் முடித்தார். ஆனால் அவர் சட்டம் பயில்வதற்கான தேர்வுகளை எழுத முடிவெடுத்து ஹிந்து சட்டத்தில் தங்கப்பதக்கமும் பெற்றார். இருப்பினும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் சொற்பொழிவுகளை கேட்டபின், அவர் விஞ்ஞானத்திற்கு திரும்பி மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார். பின்னர் 1962 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவார்த்த இயற்பியலை கற்பித்தார். மேலும் அவர் இந்திய அறிவியல் கழகத்தில் ஃபெல்லோஷிப் உறுப்பினராக ஆனார்.
பொதுவாக பிஎச்டி படிப்பை ஒருவர் முடிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்வார்கள், ஆனால் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஒரு முக்கியமான தீர்க்கப்படாத ஆய்வினை வெறும் ஆறு மாதங்களில் தீர்த்து இரண்டு ஆண்டுகளில் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றார். 1962 இல் மான்செஸ்டரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி அவர் சென்னையில் கணித அறிவியல் மையத்தை (MATSCIENCE) நிறுவினார். நோபல் பரிசு பெற்ற எஸ். சந்திரசேகர் இம்மையத்தை தொடங்கி வைத்ததில் இருந்து, இந்திய அளவில் கணித ஆராய்ச்சிக்கான முதன்மை நிறுவனமாக இது உள்ளது.
இயற்பியலின் சீரற்ற செயல்முறைகள், தொடக்க துகள் இயற்பியல், மேட்ரிக்ஸ் இயற்கணிதம் மற்றும் சிறப்பு சார்பியல் கோட்பாடு போன்ற தலைப்புகளில் முன்னணி ஆய்வறிக்கைகளில் 150 க்கும் மேற்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் அறிவியல் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளிலுள்ள முன்னணி ஆய்வு மையங்களில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவு அளிப்பதற்கு அழைக்கப்பட்டார்.
டாக்டர் ராமகிருஷ்ணனின் கருத்து படி இங்குள்ள விஞ்ஞானிகள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதும், மற்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் பரஸ்பர அறிவுப் பகிர்தலுடன் இருப்பதும் இந்திய அறிவியல் துறையை பெரிதும் மேம்படுத்தும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும். டாக்டர் ராமகிருஷ்ணன் புதுமையான படைப்புகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். ஏற்கனவே உள்ள படைப்புகளை மாற்றி அமைத்து அதில் ஆய்வு மேற்கொள்வதை காட்டிலும் புதுமையான தன்மையை கொண்ட படைப்புகள் மீது அவர் ஆர்வம் செலுத்தினார். இதுவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு வருவதற்கான முக்கியமான இரு காரணங்களில் ஒன்றாகும். மற்றொன்று போதுமான தொழில்நுட்பங்கள் இருந்தும் அடிப்படை ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்தது.
ஆராய்ச்சியும் கற்பித்தலும் ஒருசேர அமைய வேண்டும் என்பது அவருடைய ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும். ஜூலை 1989 இல் "தி ஹிந்து" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் ஆராய்ச்சியின் தரம் குறைந்து வருவதை பற்றி மிகவும் கவலைப்பட்டார். சார் சி.வி. ராமன் மற்றும் சீனிவாச ராமானுஜம் போன்றோர் வகுத்துக்கொடுத்த நெறிமுறைகளின்படி இங்கு ஆராய்ச்சிகள் நடக்காததைக் கண்டு வருந்தினார். “அமெரிக்காவில் ஆராய்ச்சியும் கற்பித்தலும் ஒரு சேர இருப்பது” போல் இங்கு இல்லை என்பதை மேற்கோள் காட்டினார்.
திறமை வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் வெளிநாடு செல்ல விரும்பாத சூழலை இந்தியாவில் உருவாக்குவதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளை இங்கேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். சுய கெளரவமும் சக அறிவியலாளர்களின் அரவணைப்புமே தகுந்த அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று அவர் கூறினார். "நம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற வேண்டும் என்கிற காய்ச்சலால் பாதிக்கப்படாவிட்டால் நம்மால் சிறந்த பங்களிப்பு கொடுக்க இயலாது" என்பதனை ஒருமுறை அவர் பதிவிட்டார்.
டாக்டர் ராமகிருஷ்ணன் அறிவியலும் கலையும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்று மனதார நம்பினார். அவர் கர்நாடக இசையில் கணித கட்டமைப்புகளை கண்டறிந்து அதன் நுட்பங்களை வெளிப்படுத்திய பாராட்டுக்குரியவர். 2006 இல் "தி ஹிந்து" பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் "கர்நாடக இசை தொழில்நுட்பரீதியாக துல்லியமானது மட்டுமின்றி மனிதனின் ஆன்ம நிலையை உயர்த்தி இறை உணர்வைப் பெற வைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது" என்று எடுத்துரைத்தார்.
அயராத ஆசிரியரும் , கண்டுபிடிப்பாளருமான ராமகிருஷ்ணன் சிறப்பு சார்பியல் தன்மைக்கு கழி அணுகுமுறை (rod approach) என்று அழைத்ததை முன்னோடியாகக் கொண்டு மேம்பட்ட பாடத்திட்டத்தை பள்ளி பாடப் புத்தகங்களில் கொண்டு வர முயன்றார். எளிமையான மற்றும் அன்றாட வாழ்வியல் கருத்துக்களுடன் உயர்நிலை மாணவர்களுக்கு இயற்பியலின் அழகான உலகத்தை அறிமுகப்படுத்துவதாக பல முயற்சிகளை பேராசிரியர் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார்.
இந்த கணித அறிவியல் நிறுவனத்தை வளர்த்து எடுத்த அவரது இடையறாத ஆர்வத்தை அவரது ஆரம்பகால மாணவர்களில் ஒருவரான டாக்டர் கே. சீனிவாசராவ் தெளிவாக நினைவு கூர்ந்தார். அவர் 1962 இல் பிரசிடென்சி கல்லூரியில் ஒரே அறையை தனது நிறுவனத்தின் வளாகமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியதில் இருந்து . தற்போது, அவரது அயராத உழைப்பு மற்றும் அணுசக்தித் துறையின் தாராளமான மானியங்கள் காரணமாக அவருடைய கணித அறிவியல் (MATSCIENCE ) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களையும், உலகின் தலைசிறந்த கணித நூலகத்தையும் பெற்று முன்னணி நிறுவனமாக விளங்குகிறது என்று அந்த முன்னாள் மாணவர் கூறுகிறார்.
பேராசிரியர் ராமகிருஷ்ணனின் மேதமை புகழ்பெற்றதாகும். அவரின் பல சொற்பொழிவுகள் அவரது மாணவர்களிடையே வியப்பினை ஏற்படுத்தியது, மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் மேற்கோளுடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை விளக்கினார். அவர் எப்போதும் ஓர் தாராள மனப்பான்மை கொண்ட, விசாலமான நோக்கு கொண்ட ஆசிரியராகவே இருந்தார்.
2008 ஆம் ஆண்டில் புளோரிடாவின் கெய்ன்ஸ் வில்லி என்கிற இடத்தில் அல்லாடி ராமகிருஷ்ணன் தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.