Welcome..! Join us to Develop your Humanity
உயிரோடு இருப்பவர், இறந்தவர் என அனைவருக்குமான 24 x 7 தன்னலமற்ற சேவையில் சரப்ஜித் சிங் (Sarabjeet Singh).
சிம்லாவை தனது களமாகக் கொண்டு உயிரோடு இருப்பவர்களுக்கும், மரித்தவர்களுக்கும் தேவையான ஆறுதலையும் ,உதவியையும் தரும் பொறுப்பை தன்னலமற்று மேற்கொண்டிருக்கும் மனித நல ஆர்வலர் சரப்ஜித் சிங்கின் பணியை சுய ஆர்வம் என்பதா? சமய நெறி சார்ந்த சேவை என்பதா?
சிம்லாவில் உள்ள புற்று நோய் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச கேன்டீன் சேவையையும் , இறுதி சடங்கிற்கான இலவச அமரர் ஊர்தி சேவையையும் சரப்ஜித் சிங் ஒருசேர செய்து வருகிறார். இதுமட்டுமின்றி ரத்ததான முகாமினையும் இவர் அடிக்கடி நடத்தி வருகிறார். நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் அன்பான சேவையை, அவர்களின் வாழ்க்கையின் இறுதிவரை செய்யும் தனது தன்னார்வ அமைப்பிற்கு இறைவனின் அருளாசி (Almighty's Blessings) என்கிற பெயரை அவர் வைத்துள்ளார். கேட்பாரற்ற நோயாளிகளின் இறந்த உடலுக்கு தகுந்த மரியாதைகளோடு இறுதிச்சடங்கு செய்திடவும் இவர் உதவிகரமாக இருக்கிறார்.
ஒருவருக்கு 40 வயதாகும் போது அவர் தன்னுடைய குடும்பத்தின் பாட்டினையே பட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, சரப்ஜித் சிங் தன்னையும் கடந்து, மனித சமுதாயத்தில் உள்ள ஒரு மிகப்பெரும் குடும்பத்திற்கு சேவையாற்றிய முன்வந்தார்.
முதன் முதலில் அவருக்கு சிம்லாவில் உள்ள மருத்துவமனைகளில் யாரும் ரத்தம் கிடைக்காமல் இறக்கக் கூடாது என்பதில் ஒரு உறுதி பிறந்தது. இதனால் அவர் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தன்னார்வ ரத்ததான முகாம்களை நடத்த ஆரம்பித்தார். கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிம்லாவில் அவர் நடத்திய ரத்ததான முகாம்கள் காரணமாக 30 ஆயிரம் யூனிட் ரத்தத்தை சிம்லாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கிடைக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக வசதியற்ற நிலையில் அல்லது அனாதைகளாக உயிரிழப்போரின் இறுதி ஊர்வலத்திற்கு இலவசமாக அமரர் ஊர்தி சேவையையும் இவர் இரவு பகல் பாராமல் செய்து வருகிறார். அவரிடம் வண்டி இருந்து விட்டால் நடு இரவானாலும் இறுதிச்சடங்கு யாத்திரைக்கு முடியாது என்று சொன்னதே கிடையாது. மருத்துவமனைகளில் , கேட்பாரற்ற நிலையில் உள்ள, அழுகிப்போன, சிதைந்து போன உடல்களுக்கும் கூட இவர் அருவருப்பின்றி இறுதிச்சடங்கு செய்வித்துள்ளார். இவரது அமரர் ஊர்தி வாகனத்தின் மீது "அனைவரும் கண்தானம் செய்யுங்கள்; எனது தாயாரும் அவ்வாறே செய்தார்" என்று உறுப்பு தான விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.
2014ஆம் வருடம் கடவுளின் அருள் ஆசி என்கிற தன்னார்வ தொண்டு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் சிம்லா புற்றுநோய் மருத்துவமனை களில் உள்ள ஏழை நோயாளி களுக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கும் இலவச உணவு வழங்கிட கேன்டீன் சேவையை தொடங்கி உள்ளார். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், தொலை தூரங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்துள்ள நோயாளிகள் பலர் மருந்து வாங்கவே முடியாத நிலையில் உள்ளபோது, உணவிற்கு அவர்களால் என்ன செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. இதனை உணர்ந்த சிங் இலவச உணவு கேன்டீனை ஏற்படுத்தினார். முதலில் காலையில் சூடான தேநீரும், பிஸ்கட்டும் வழங்கிட முடிவு செய்தார். பிறகு சூப் , தாலியா என்கிற தானிய கஞ்சி, பருப்பு சோறு ஆகியவற்றை நாள்தோறும் நோயாளிகளுக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கும் வழங்கிட அவர் ஏற்பாடுகளைச் செய்தார்.
2016 இல் இவரது தன்னார்வ அமைப்பானது, புற்றுநோய் மருத்துவமனையைத் தவிர சிம்லாவிலேயே பெரியதான கமலா நேரு மருத்துவமனையிலும் தனது இலவச கேன்டீன் சேவையை விரிவு படுத்தியது. இரண்டு மருத்துவமனைகளிலும், உணவு வழங்குவதற்கு முன்பாக ,கடவுளின் அருளாசி என்கிற தன்னார்வ அமைப்பின் தொண்டர்கள் நோயாளிகள் விரைந்து பூரண நலம் பெற பிரார்த்தனை செய்துவிட்டு உணவினை வழங்கத் தொடங்குவார்கள். இதைத்தான் நாம் அர்ப்பணிப்பு பூர்வமான சேவை என்று கூறுகிறோம்.
இவற்றைத் தவிர சிம்லாவில் சஞ்சவுலி, டோடூ , கசும்பாடி, லக்கர் பஜார், லோயர் பஜார் ஆகிய இடங்களில் ஐந்து சப்பாத்தி வங்கிகளை இவர் நடத்தி வருகிறார். அந்தந்த இடங்களில் உள்ள தன்னார்வ குடும்பங்கள் ஒவ்வொன்றும் பத்து சப்பாத்திகளை தயார் செய்து அந்த வங்கியில் கொடுப்பார்கள் .இவற்றைச் சேகரித்து தேவையான நோயாளிகளுக்கும் ,சக மனிதர்களுக்கும் கிடைக்கச் செய்யுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குறிப்பிடத்தக்க உணவு ஏற்பாடுகளினால் ,ஏற்கனவே நொந்து போயுள்ள நோயாளிகள் நிம்மதிப் பெருமூச்சுடன், வயிறார உணவு கிடைக்கும் கொடுப்பினையை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்.
சரப்ஜித் சிங் சிம்லாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை சந்தித்து, வாரத்தில் ஒரு நாள், ஒரே ஒரு அதிகப்படியான ரொட்டியை கொண்டு வந்து தருமாறு வேண்டுகோள் விடுக்கிறார். இதன் மூலம் சேகரிக்கப்படும் ரொட்டிகளும் தேவைப்படும் நோயாளிகளுக்கு போய் சேர்கின்றன. இந்த ஏற்பாட்டின் மூலம் மாணவர் மற்றும் பெற்றோரின் மகத்தான ஒத்துழைப்போடு 40 பள்ளிகளிலிருந்து வாரத்திற்கு 25 ஆயிரம் ரொட்டிகள் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன .சரப்ஜித்சிங்கின் வண்டிகள் பள்ளிகள் தோறும் சென்று சேகரித்து வரும் ரொட்டிகளை அதற்கென உள்ள பிரத்தியேகமான சூடு காக்கும் இயந்திரங்களில் வைப்பதால் ,அவை நாள் முழுவதும் மென்மையாகவும், ருசியாகவும் இருக்கின்றன.
தற்போது இவற்றையெல்லாம் தாண்டி சரப்ஜித் சிங்கின் பணி விரிவடைந்து கொண்டே வருகிறது. நோயாளிகளுக்கும் ,அவர்களுடைய உதவியாளர்களுக்கான தங்குமிடங்களை கட்டுவதற்காக இவர் திட்டமிட்டு வருகிறார். தன்னுடைய சொந்த குடும்பத்தின் தேவைகளுக்காக சொந்தமாக ஒரு காலணி விற்பனை நிலையத்தை இவர் நடத்தி வருகிறார். இவரது மனிதாபிமான சேவைகளுக்கு இவரது குடும்பம் முழு ஒத்துழைப்பு நல்குவதால் இவரால் இத்தனை பணிகளையும் ஆற்ற முடிகிறது என பெருமையுடன் சிங் கூறுகிறார்.
மலைவாசஸ்தலமாக இருப்பதால், குளிர்காலம் வந்துவிட்டாலே சிம்லாவில் நடுக்கும் குளிர் வாட்டி எடுத்து விடும். ஆகையால் அப்போது, மக்கள் உபயோகப்படுத்திய சாதாரண ஆடைகள் மற்றும் கம்பளி ஆடைகளை நன்கொடையாக பெறும் சேகரிப்பு இயக்கத்தை இவர் நடத்துவார். இவ்வாறு பெறப்படும் ஆடைகள் வீதியோர தொழிலாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் வினியோகிக்கப்படும். இதன் மூலம் ,இவர் தனது சிறு குடும்பத்தையும் தாண்டி சிம்லா முழுவதையுமே தனது பெரிய குடும்பமாகக் கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
நாட்டு மக்களுக்கு இவர் என்ன செய்தியை கூற விரும்புகிறார் என்றால், எந்த புகழ்பெற்ற கோவிலிலும் வழிபாடு செய்தும் கிடைக்காத மன திருப்தியும், மன மகிழ்ச்சியும், மனநிறைவும் இவ்விதம் ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் கண்டிப்பாகப் பெற முடியும் என்பதே ஆகும். மேலும் சமய சார்புள்ள அமைப்புகளுக்கு நன்கொடை கொடுப்பது மட்டுமே போதாது என்றும், மருத்துவமனைகளில் , தெரு ஓரங்களில் உள்ள ஏழை எளியவர்களும் பயனுறும் வகையில் பல உதவிகளை அவர்கள் வரை கொண்டு சேர்ப்பதே முக்கியமான சேவை என்றும் தீர்மானமாக கூறுகின்றார். இதனால், மக்கள் சேவையின் மூலமே மகேசனை மகிழ்விக்க முடியும் என்பது இவருடைய அனுபவபூர்வமான உண்மையாக இருக்கிறது.
ஒரு தனி மனிதன் தன் வாழ்வில் ஊக்கம் பெற்றால் எவற்றையெல்லாம் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு , சரப்ஜித் சிங் என்கிற இந்த ஒற்றை மனிதரின் வாழ்க்கையே தெள்ளத் தெளிவான சான்றாகும்.