Welcome..! Join us to Develop your Humanity
10 மில்லியன் மரங்களை நட்டு பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தாரிபள்ளி ராமையா (Daripalli Ramaiah)
மரங்களின் விதைகளை நடுவதன் மூலம் பசுமையை மீட்டெடுக்கும் அசாதாரண பணியில் 73 வயதாகும் ராமையா தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.
அவர் செல்லும் இடங்களில் எங்காவது காலியான நிலப்பகுதியை பார்த்து விட்டால், உடனே அவர் தனது சட்டைப்பையில் வைத்து உள்ள மரங்களின் விதைகளை அங்கே நட்டு விடுவார் . இவ்விதமாக அவர் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இந்த அறியப்படாத மனிதரையும் , அவரது வேலை முறையையும் பற்றி நாம் விரிவாகக் காண்போம்.
இந்த பூமியை தாயகமாகக் கருகும் அனைத்து உயிரினங்களிலும் மனிதனே மேம்பட்டவன் ஆக விளங்குகிறான். மனிதன் தன் அறிவாற்றலாலும், சிந்தனா சக்தியாலும், நினைப்பதை முடிக்கும் ஆற்றலாலும் சிறந்து விளங்குகிறான். இயற்கை மனிதன் மீது தனது முழு ஆசிகளையும் அளித்து அவனை செயல்திறன் மிக்கவனாக மாற்றியுள்ளது. ஆகவே மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் .நாம் இயற்கையை பாதுகாப்பதன் மூலம், கடவுளின் கொடைகளை பாதுகாப்பதன் மூலம், நமது வருங்கால சமுதாயத்திற்கு உதவி செய்தவர்கள் ஆவோம். தெலுங்கானா மாநிலத்தில், கம்மம் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டுள்ள தாரிபள்ளி ராமையா இவ்விதமான திடமான நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.
இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை . ஆனால் மக்கள் இவரை தெலுங்கில் செட்டு ராமையா ( Chettu Ramaiah) , அதாவது மரங்களின் மனிதர் என்று அழைக்கிறார்கள்.
ராமையா தனது பணியை மிகவும் நேசிக்கிறார். இவர் இவ்விதம் விதைகளை சேகரிப்பதை தனது தாயிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளார். வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான சில விதைகளை அவரது தாய் சேமித்து வைத்த போது அது ராமையாவின் மனதில் ஆழப் பதிந்தது . ராமையாவைப் பொறுத்தவரை, விதைகளை பரிணாம வளர்ச்சியின் ரகசியம் என்கிறார். விதைகள் மழைக்காலத்தில் மண்ணில் நடப்படுவதால் அது தனது உயிர் ஆற்றலை வெளிப்படுத்தி புதிய உயிராக மாறுவது, கடவுளே இயற்கையின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் என அவர் நினைக்கிறார்.
ஒரு சிறு செடியாக முளைக்கும் ஒரு மரம் தன்னைச் சுற்றிலும் ஏற்படும் பல மாற்றங்களையும் இடையூறுகளையும் தாண்டி, அதனைத் துன்புறுத்திய மக்களுக்கே பயன் தரும் விதமாக, மிகப் பெரும் மரமாக உருவாகிறது. ஒரு மரமானது, தான் மட்டும் உருவானதோடு திருப்தியடையாமல், தன்னைச் சுற்றிலும் அதனுடைய விதைகளை பரவவிட்டு, தனது அடுத்த தலைமுறையையும் அது உலகின் நன்மைக்காக உருவாக்குகிறது என்று ராமையா நம்புகிறார்.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ராமையாவை எப்போதும் சைக்கிளில் ஊரை வலம் வருபவராகவே பார்த்திருக்கிறார்கள் .அவரது சைக்கிளில் எப்போதும் மரக்கன்றுகளும், அவரது பைகளில் மரத்தின் விதைகளும் தயாராக இருக்கும். பல மைல் தூரம் பயணம் செய்து, தரிசான நிலப்பகுதிகளில் மரக்கன்றுகளையும், விதைகளையும் நடுவதே அவரது அயராது வேலையாக இருந்தது. இவ்விதம் அவர் நட்ட மரங்கள் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கும் என மக்கள் கூறுகிறார்கள். இவ்விதம் இவர் ஊரைச் சுற்றி வரும்போது இவருடைய கழுத்தில், ஒரு அட்டையில், ஒரு அறிவிப்பு வாசகம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் "விருக்க்ஷோ ரக்ஷதி ரக்ஷிதஹ", அதாவது மரங்களை நாம் காப்பாற்றினால் அவை நம்மைக் காப்பாற்றும் என்று எழுதப்பட்டிருக்கும்.
ஒரு வேலையைச் செய்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டே பழகிப்போன சுயநலமான இந்த உலகில், இவர் செய்யும் வேலையால் இவருக்கு என்ன கிடைத்தது என்று யாரோ ஒருவர் இவரை கேட்க ,ராமையாவோ மிகவும் தெளிவாக, இவரால் நடப்பட்ட மரங்கள் செழித்து வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது தனக்கு மனத் திருப்தியையும், மன நிறைவையும் , அலாதியான மகிழ்ச்சியையும் , அமைதியையும் கொடுப்பதாகக் கூறினார்.
ராமையாவின் இந்த வாழ்க்கையால் ஒருவர் நற்காரியங்கள் செய்ய பணக்காரனாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை இவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. சைக்கிளை மிதித்துக் கொண்டு , ஒரு கையால் சைக்கிளை பிடித்துக் கொண்டு , மறு கையால் செல்லும் வழி தோறும் விதைகளை தூவிக் கொண்டே செல்வது தான் இவரது பசுமை பயணத்தின் முக்கியமான செயல்பாடு ஆகும். கடவுளைத் தொழும் போதோ அல்லது மரங்களை நடும் போதோ நமக்கு பதிலாக இன்னொருவர் அதைச் செய்ய முடியாது. இதன் முழுப்பலனையும் பெற இவற்றை நாமே தான் செய்ய வேண்டும் என்பது இவரது திடமான நம்பிக்கை.
கம்மம் மாவட்டத்தில் உள்ள பெல்லகுடா பாலத்தின் அடியில் உள்ள கால்வாயின் இரு கரைகளிலும் நான்கு கிலோமீட்டர் நீளத்துக்கு மரங்களை நட இவர் பல விதமான உள்ளூர் மர விதைகளையே சேகரித்துப் பயன்படுத்தினார். ஒரு சிறு காலியான இடத்தைக் கூட விடாமல் இவர் நட்ட மரங்கள் தற்போது பிரம்மாண்டமாக வளர்ந்து இவருக்கு பணிவுடன் வந்தனம் செய்கின்றன.
இதோடு இவருடைய வேலை நிற்கவில்லை. இவர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு புத்தகத்திலும் மரங்களைப் பற்றிய தகவல்களை திரட்டினார். உள்ளூர் நூலக வளாகம், கோயில் வளாகம் ஆகியவற்றில் மரங்களை நட்டு பராமரித்தார். இங்குள்ள ஒவ்வொரு மரத்தின் வரலாறும் அவருக்குத் தெரியும். அங்குள்ள உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரை எவ்விதம் அழைத்து வந்து இங்குள்ள மரங்களை நட வைத்தார் என்பதை பெருமையுடன் அங்குள்ள மக்களுக்கு அவர் எடுத்துக் கூறுவார். இவர் வசிக்கும் இடத்திற்கு எந்த பெரிய அதிகாரி அல்லது முக்கிய நபர் வந்தாலும் அவர்களை மரம் நடச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் . அதோடு மட்டுமின்றி கிராமத்தில் உள்ள சுவர்களில் மரம் நடுவதைப் பற்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெலுங்கில் பல விழிப்புணர்வு வாசகங்களையும் இவர் எழுதி வைத்துள்ளார்.
இவருடைய நிலத்தில் நன்றாக வளர்ந்து முற்றிய நிலையில் இருக்கும் செம்மரங்களை வெட்டி விற்பனைக்கு தருமாறு இவருடைய உறவினர் இவரைக் கேட்டபோதும் ராமையா ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த மரங்களின் விதைகளை சேகரிக்கவும், அவற்றை எதிர்கால வளர்ச்சிக்காக பயன்படுத்தவுமே இந்த மரங்களை வளர்க்கிறேன் என்று அவர் கூறிவிட்டார். அவருக்கு மரங்களை வணிகரீதியாக வெட்டுவது என்பதில் உடன்பாடில்லை.
கோயிலில் கடவுளின் சிலைக்கு முன்பாக வணங்கிவிட்டு, மரங்களை வெட்டும் யாரையும் ராமையா மதிப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை கடவுளும், இயற்கையும் ஒன்றேயாகும்.
உலகில் பல பேர் ஊதியத்திற்காக தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ராமையாவோ எந்த விதமான ஊதியமும் இன்றியே அவருக்கு பிடித்தமான மரம் நடும் வேலையைச் செய்து வருகிறார். மரங்களை வளர்ப்பதில் நம்மால் இன்னொரு ராமையாவை பார்த்திட முடியாது. இவர் தனது அர்ப்பணிப்பிற்கும், பணிவிற்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயற்கையை பாதுகாப்பதிலும், காடுகளை வளர்ப்பதிலுமான அவருடைய பங்கு பணியைப் பாராட்டி இந்திய அரசு 2017-ல் தாரிபள்ளி ராமைய்யாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அவருடைய பசுமைப் பயணம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.