Welcome..! Join us to Develop your Humanity
நூறு கரங்களில் பெற்று - ஆயிரம் கரங்களால் கொடு' என்ற பொன்மொழிக்கேற்ப உள்ளது இவர்களின் வாழ்க்கை!
மதுரையை சேர்ந்த தம்பதியர் - தனது வாழ்நாள் சேமிப்புகளைப் பயன்படுத்தி, வீதிகளில் வசித்துவந்த 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு வாழ்வளித்துள்னர் !
பொதுவாக நாம் காணும் எந்த ஒரு தம்பதியரும் பணி ஓய்வுபெற்ற தங்கள் நேரத்தையும், சேமிப்பையும் உல்லாசப்பயணத்திலோ; தீர்த்தயாதிரையிலோ; அல்லது குடும்பத்தினருடனோ செலவு செய்ய திட்டமிடுவர். மாறாக, மதுரை - திருநகரைச் சேர்ந்த திருமதி. R ஜலஜா மற்றும் திரு. K ஜனார்த்தனன் தம்பதி, தமது பணி ஓய்விற்குப் பின் ஒரு பெரும் நோக்கத்தை அவர்கள் மனதில் கொண்டார்கள், அது சுயநோக்காக இல்லாமல் சமுகநோக்காக இருந்ததே அதன் விசேஷம்!
திருமதி. ஜலஜாவும், திரு. ஜனார்த்தனனும் சமூக சேவையில் தங்களது பரஸ்பர ஆர்வத்தை வளர்த்துக் கொண்டனர், ஆனாலும், தொண்ணூறுகளின் முற்பகுதி வரை அவர்களால் தங்கள் ஆர்வத்தை செயல்படுத்த இயலவில்லை. ஏழை எளியோர் மற்றும் வீடற்ற மக்களின் நிலைகண்டு மிகவும் பரிதாபப் பட்டு அவர்களை கவனித்துப் பாதுகாக்கும் உணர்வால் உந்தப்பட்டனர். குறிப்பாக - முதியோர் படும் அவல நிலையே இவ்விருவரையும் மிகவும் பாதித்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உணவு தேவைக்காக பிச்சை எடுக்கும் பத்து முதியவர்களாவது அவர்கள் கதவுகளைத் தட்டுவார்கள்; அவர்களுக்காக ஒரு முதியோர் இல்லத்தைத் திறக்க விரும்பினர். இதற்காக அவர்கள் தங்களது சொந்த வீட்டிலேயே 10-15 நபர்களுக்கு இடமளித்து, அவர்களுக்கு உணவளித்து பராமரிப்பதற்கும் நிதி சாத்தியம் இருப்பதையும் உணர்ந்தார்கள்.
"…நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்கு போனால், எங்கள் இந்த நோக்கம், இக்காரணத்திற்கான அர்ப்பணிப்பு கடினமாக இருந்திருக்கும்! எனவே, எங்களில் யாரேனும் ஒருவர் விருப்ப ஓய்வு (voluntary retirement) பெறுவது என்று முடிவெடுத்தோம். ஆக எனது மனைவி ஜலஜா அத்தகுதியை எட்டியதும் அவர் அம்முடிவை எடுத்தார் . அது தொட்டு, மாத வருமானதில் 25 சதவீதத்தை தனியே ஒதுக்கி வைத்துவிட்டு, எங்களுக்கான சொந்த வீட்டுச்செலவுக்கு பயன்படுத்த முடிவு செய்தோம்” என்று புன்னகையுடன் ஜனார்த்தனன் கூறுகிறார்.
ஆக, திருமதி. ஜலஜா - சுங்க மற்றும் மத்திய கலால் துறையில் 20 ஆண்டுகள் தன் சேவையை நிறைவு செய்த பிறகு, அவரின் கனவான ‘முதியோர் பராமரிப்பினை’ மனதில் கொண்டு அவர் 1994 ஆம் ஆண்டு பணி விருப்ப ஓய்வு பெற்றார். அந்நேரம் திரு. ஜனார்தனன் BSNLல் ‘தொலைத்தொடர்பு உதவி இயக்குனராக பணியில் இருந்தார்.
தொடர்ந்து - அங்கு வசிக்கும் முடியவர்களின் வசதியையும் மனதில் கொண்டு, தங்களது இரண்டு மாடி வீட்டின் முதல் தளத்தில் குடியேறிய இத்தம்பதியினர், தங்களின் ‘முதியோர் இல்லத்தை’ தரை தளத்தில் இயக்க முடிவு செய்தனர் - 600 சதுர அடி பரப்பளவில்; எளிதில் அவர்கள் 8 முதல் 10 நபர்களை தங்க வைக்க முடியும் என்று கண்டறிந்தனர்; வரவேற்பறையிலும், படுக்கையறையிலும் 4-5 கட்டில்கள் இருந்தன; அவர்களிடம் இரண்டு குளியலறைகள் - பிரதான படுக்கையறையில் ஒன்றும் மற்றும் வெளியே ஒன்றும் இருந்தது. திருமதி. ஜலஜா தம்மிருவருக்குமான தினசரி உணவைத் தயாரிக்க, இத்தம்பதியர் இருவரும் நிறைவான, மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்துவந்தனர்.
“ஆராமபத்திலெல்லாம் எனது மனைவிதான் முதியவர்களுக்கு உணவைத் தயாரிப்பாள், காலம் செல்லச் செல்ல, முதியவர்களின் உடல்நலம் மேம்பட்டதால், அவர்கள் ஜலஜாவிற்கு சமையலறை வேலைகளில் உதவத் தொடங்கினர். இல்லத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் நுகர்வு குறித்து நாங்கள் உணர்ந்திருந்ததால், சமைக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் அறிவோம் – ஆகவே சமையலறை எல்லா நேரங்களிலும் ஆக்கிரமிக்கப்படவில்லை” என்று ஜனார்தனன் விளக்குகிறார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில், அவர்களது வீடு - நகரத்தில் வீடற்ற மற்றும் தாழ்த்தப்பட்ட பல பெரியவர்களுக்கு ஒரு கண்ணியமான புகலிடமாக மாறியிருந்தது. அம்முதியவர்களுக்கு இத்தம்பதியர் பராமரிப்பாளர்களாக மட்டுமல்லாமல், மகன்-மாகளாகவும் மாறியிருந்தார்கள்! 1998 ஆம் ஆண்டில், அவர்களது வீட்டை ஒட்டிய ஒரு வீடு, காலியாகி விற்பனைக்கு வந்தபோது அதிர்ஷ்டம் அவர்களின் கதவைத் தட்டியது. தங்கள் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களுடன், உரிமையாளர்களுக்கு தங்கள் நோக்கத்தை விளக்கி அந்த ஒற்றை மாடி குடியிருப்பை வாங்கினர். தங்களது EPF மற்றும் சொந்த சேமிப்பிலிருந்து திரட்டிய நிதியைப் பயன்படுத்தி, அவர்கள் அவ்வீட்டை ரூ. 3.5 லட்சத்திற்கு வாங்கினர். இந்த ஏற்பாட்டால், அவர்கள் இன்னும் அதிகமானவர்களுக்கு இடமளிக்க முடிந்தது.
"2000 ஆமது ஆண்டு வாக்கில், நாங்கள் 16 முதியவர்களை எங்களது பராமரிப்பில் வைத்திருந்தோம்-இரு வீடுகளிலும் தலா எட்டெட்டு முதியவர்கள் இருந்தனர். இருப்பினும், இரு வீடுகளுக்கும் ஒரே ஒரு சமையலறை மட்டுமே இருந்தது. ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதால், அதை நிர்வகிப்பதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு – சாதம், சாம்பார் / ரசம், இரண்டு வகையான காய்கறி மற்றும் மோர் ஆகியவற்றை பரிமாறுவோம். இதற்க்காக , நாங்கள் ஒரு சமையல்காரரையும் நியமித்திருந்தோம். சமையலுக்கு ஆள் கிடைக்காத சந்தர்ப்பங்களில், எங்கள் முதியோர் இல்லத்திலுள்ளவர்களை தவிக்கவிட்டு விடாமல் இருக்க நாங்களே சமைப்போம்!” என்று ஜனார்தனன் கூறுகிறார்.
முதுமக்கள் எண்ணிக்கை கூடியதால், தனியாக திருமதி. ஜலஜாவால் அவர்களை நிர்வகிப்பது பெரும்பாலும் கடினமாக இருந்தது, கூடவே திரு. ஜனார்த்தனனின் வேலை நேரமும் மிகவும் மாறிமாறி இருந்திருந்தது. இருவருடைய தொய்வில்லாத ஆர்வத்தின் காரணமாக, அவரும் தனது மனைவிக்கு தோள் கொடுக்க முடிவு செய்தார். அவ்வாறே, தாமும் 2000 ஆம் ஆண்டில், விருப்ப ஓய்வு பெரும் மனநிலைக்கு வந்தார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால் – திருமதி ஜலஜா மற்றும் திரு. ஜனார்தனன், தங்களின் இச்சேவைக்காக யாரிடமும் கையேந்தவில்லை என்பது தான்! உணவு முதற்கொண்டு வீட்டுப் பொருட்கள் வரை அனைத்தையும் அவர்கள் வருமானம் மற்றும் சேமிப்பு மூலம் மட்டுமே நிர்வகித்தனர். ஆடம்பரமாக வாழ போதுமான ஓய்வூதியம் பெற்ற போதிலும், அவர்கள் ஏழை எளிய முதியோர்களுக்கு சேவை செய்வதற்காகவே மிகவும் சாமானிய வாழ்க்கையை நடத்தினார்கள்.
இதற்கிடையில், அவர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் கட்டுவதற்கும், தங்கள் வீட்டில் இருந்த வயதான முதியவர்களை மாற்றுவதற்கும் மதுரை - வெளிச்சேரியில் 27 சென்ட் நிலத்தை வாங்கினர். இருப்பினும், ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களுடைய உடல்நலக் குறைவுகளையும் அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. 2002ல் திரு. ஜனார்தனன் Irido -Corneal Endothelial அல்லது ICE நோய் அறிகுறியால் அவரது இருகண்களில் ஒன்று முழு பார்வையையும் இழந்தது, அதே சமயம் மற்றொன்றில் - பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.
“இல்லத்தை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தும் நாங்கள் மிகவும் ஆர்வமாக ஆரம்பித்ததை இப்படி திடீரென்று முடிவுக்கு கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை - பல உயிர்கள் எங்களை நம்பி இருந்தன! அம்முதியவர்களை பொறுத்தவரை - என்றாவது ஒரு நாள் அவர்கள் இல்லத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்று எண்ணுவது போல உணர்ந்தேன். எனவே, படிப்படியாக, எங்கள் இல்லவாசிகளில் பெரும்பாலோரை வேறு வீடுகளுக்கு மாற்ற உதவினோம்.” என்கிறார்.
இருவரின் வயது மற்றும் திரு. ஜனார்த்தனனின் பார்வை குறைவு காரணமாக, தம்பதியினர் அந்த 27 செனட் நிலத்தில் சொந்தமாக ஒரு முதியோர் இல்லத்தை கட்டுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தனர். ஆகினும், அவர்கள் சேவை மனப்பான்மையும், தாராள மனப்பான்மையும் மிகுந்து இருந்ததால், 2016 ஆம் ஆண்டில், அவர்கள் ஐஸ்வர்யம் அறக்கட்டளை மற்றும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சிகிச்சையளிக்கும் இளம் மருத்துவர்கள் குழுவைக் சந்தித்தபோது, அவர்களது 27 சென்ட் நிலத்தை இலவசமாக ஒரு நிரந்தர நலவாழ்வு மையம் அமைக்க அவர்களுக்கு வழங்கினர். இங்கும் கூட, திரு. ஜனார்த்தனனும் திருமதி. ஜலஜாவும் அந்த நலவாழ்வு மையம் சார்பாக நிலத்திற்கான பதிவுக் கட்டணங்களை செலுத்தியதோடல்லாமல், அந்நல்வாழ்வு மையம் கட்டுவதற்கு தாராளமான தொகையையும் நன்கொடையாக வழங்கினர், அதே நேரத்தில், அவர்களது உறவினர்களையும் நண்பர்களையும் கூட நன்கொடை வழங்கும்படி ஊக்குவித்தனர். இவ்வாறாக 2017 இல் நேத்ராவதி - வலி, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு மையம் பிறந்தது. மேலும் இத்தம்பதியர் இருவரும் துவக்க விழாவில் பொருத்தமான, மரியாதைக்குரிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். ‘நேத்ராவதி கேர்’ இன்று 50 படுக்கைகளைக் கொண்டுள்ளது மற்றும் 42 நோயாளிகளுக்கு எந்த கட்டணமும் இன்றி சேவை செய்கிறது. இந்நோயாளிகளில் பலர் தங்கள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு படுத்தபடுக்கையில் இருக்கும் வயதானவர்கள், முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய், பக்கவாதம் மற்றும் எலும்பு முறிவுகள் உள்ளவர்களும் உண்டு.
வயதானவர்களை அந்திம காலகட்டத்தில் பரிவுடன் கவனித்துக்கொண்டு, அவர்களின் நல்வாழ்வுக்காகன அடித்தளத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் திரு. ஜனார்த்தனன் மற்றும் திருமதி. ஜலஜாவின் சமூக சேவை மீதான ஆர்வம் உண்மையிலேயே போற்றத்தக்கது. தங்களது 74 மற்றும் 67 வயதில், அவர்கள் இரக்கம் - தர்மத்தின் அடையாளங்களாக, நம் சமூகத்தின் உண்மையான "கவனம்பெறாத சாதனையாளர்களாக" (unsung heroes) உள்ளனர். இவர்களின் இந்த தன்னலம் கருதாத தொண்டுப் பணி நிச்சயம் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.