Welcome..! Join us to Develop your Humanity
Abdul Salam - Biography in Tamil
"இது உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு ஐயா" - தனது இந்திய குருவிற்கு பாகிஸ்தானின் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்றவரின் சமர்ப்பணம்.
1979-இல் பாகிஸ்தானிய விஞ்ஞானி அப்துஸ் சலாம் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார். துகள் இயற்பியலில் அவர் ஆற்றிய அரிய பணி தான், ‘கடவுள் துகள்’ என்றழைக்கப் படும் ‘ஹிக்ஸ் போஸானின்’ கண்டுபிடிப்பிற்கு அடிக்கல்லாக அமைந்தது.
இது போன்ற அரிய சாதனை, சலாமின் சொந்த நாட்டில் இன்றும் போற்றப்பட்டிருக்க வேண்டும் தானே? ஆனால், அவர் விருது பெற்று நாற்பது வருடங்களுக்குப் பிறகும், இன்றும் வெகுவாக நினைவு கூரப்படுவதில்லை. இதற்குக் காரணம், பாகிஸ்தானின் நிர்வாகத்தால் பழிக்கப்பெற்ற இஸ்லாமிய உட்பிரிவாகிய அகமதியா வகுப்பினைச் சார்ந்தவர் அவர் என்பதே.
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் "ஸலாம் - நோபல் பரிசு பெற்ற முதல் ****"” என்னும் தலைப்பில் வெளிவந்த ஆவணப்படம் அனைவரும் பார்க்க வேண்டியதாகும். அதன் உள்ளே அமையப்பெற்ற, சிந்திக்க வைக்கக்கூடிய, ஒரு நிகழ்வு பற்றி பதிவிட்டாக வேண்டும்.
டிசம்பர் 1979-இல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸலாம் அவர்கள், லாகூரின் ஸனாதன தர்ம கல்லூரியில், தனக்குக் கணிதம் பயில்வித்த பேராசிரியர் அநிலேந்திர கங்குலியின் விலாசத்தைப் பகிருமாரு, இந்திய அரசாங்கத்திற்கு விருப்பத்தினை தெரிவித்தார். 1947ல் இந்தியா இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டபோது, பேராசிரியர் பாரதத்திற்கு குடிபெயர்ந்திருந்தார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1981 ஜனவரி 19-ல் தன்னுடைய பேராசிரியரைச் சந்திக்க, தெற்கு கல்கத்தாவில் உள்ள அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தார் ஸலாம். தன்னுடைய பேராசிரியரைக் காண வேண்டி அவர் ஏன் விழைந்தார்? தனக்குக் கணிதத்தில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியவர் அப்பேராசிரியர் தான் என்று டாக்டர் ஸலாம் அவர்கள் நம்பியதே அதற்குக் காரணம்.
"டாக்டர் ஸலாம் அவர்கள் சென்ற போது, அவருடை ஆசிரியர் சோர்ந்து காணப்பட்டு, எழ வலுவில்லாமல், வரவேற்கக்கூட இயலாமல் படுத்திருந்தார். டாக்டர் ஸலாம் அவர்கள், தான் பெற்ற நோபல் பதக்கத்தினை எடுத்து, 'திரு அநிலேந்திர கங்குலி அவர்களே! இந்தப் பதக்கம் உங்களது கற்பிக்கும் ஆற்றலாலும், அதனால் நீங்கள் என்னுள் கணிதத்தின் மேல் விளைவித்த பெரும் தாக்கத்தாலும்தான் விளைந்தது,' என்று கூறித் தன் ஆசிரியரின் கழுத்தில் அணிவித்தார்," என்று, முஸ்லிம் டைம்ஸ் என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், ந்யூயார்க் நகரத்தில் மருத்துவராகப் பணிபுரியும் ஜியா எச் ஷா என்பவர் ஒரு பதிவில் கூறுகிறார்.
நெட்ப்ளிக்ஸில் அவரது மகன் ௯றியுள்ளதாவது - 'அவர், தான் பெற்ற பதக்கத்தை தன்னுடைய ஆசிரியரிடம் எடுத்துச் சென்றார். அவரது ஆசிரியர், வருடங்கள் பல கடந்ததால், வயதில் முதியவர் ஆகியிருந்தார். படுத்திருந்தவரால் எழுந்திருக்க இயலவில்லை. என்னுடைய தந்தை நோபல் பதக்கத்தினை அவருடைய குருவின் கைகளில் அணிவிப்பதை புகைப்படத்தில் காணலாம். மேலும் அவரை நோக்கி 'இந்தப் பதக்கம் உங்களுடையது ஐயா; என்னுடையது அல்ல.' என்றார்.'
மதம் மற்றும் நாடு என்னும் குறுகிய எல்லைக்குள் இல்லாமல், அதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆசிரியருக்கு கொடுக்கப்படும் ஈடு இணையற்ற சமர்ப்பணமாகும். இந்த நிகழ்வு, இத்துடன் நிறவடையவில்லை. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பாரத பத்திரிகையாளர் சனோபர் பாத்மா பதிவிடுகையில், 1981-ல் கல்கத்தா பல்கலைக்கழகம், டாக்டர் ஸலாம் அவர்களுக்கு தேவப்ரசாத் சர்வாதிகாரி பெயரில் தங்கப்பதக்கத்தை, அவரின் சாதனைகளின் அடிப்படையில், கௌரவிக்க முடிவெடுத்தது. டாக்டர் ஸலாம் அவர்கள் அதை ஏற்க மறுத்து, அந்த விருது தன்னுடைய ஆசானையே சாரும் என்று கூறிவிட்டார்.
அவர் மேலும் அப்பதிவினில், 'கல்கத்தா பல்கலைக்கழகம் நோய்வாய்ப் பட்டிருந்த பேராசிரியர் அநிலேந்திரரின் வீட்டிலேயே, 1981-இல், அவருக்கு விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. டாக்டர் ஸலாம் அவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய மதிப்பிற்குரிய ஆசான் விருது பெறுவதைக் கண்டுற்றார். சில தினங்களில், 1982-இல் பேராசிரியர் அநிலேந்திரர் இயற்கை எய்தினார்.'
இந்த நிகழ்வு பாரதத்தின் குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காணலாம். டாக்டர் ஸலாம் அவர்களுக்கு இந்த கௌரவம் அவர் நாட்டில், ஒருசில மாணவர்களைத் தவிர மற்றவர்களால் அளிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இருப்பினும், வரலாறு காரணமாகத் தன் ஆசிரியர் வேறு ஒரு நாட்டில் இருந்தாலும், அவருக்கு நன்றி செலுத்தும் உயரிய பண்பு, இயற்பியல் விஞ்ஞானி டாக்டர் ஸலாம் அவர்களின் வலிமைக்கும் பணிவுக்கும் நற்சான்றாகும். தன்னுடைய மதக் கோட்பாட்டிற்கும் தேசத்திற்கும் எவ்வாறு பக்தி செலுத்தினாரோ அதே அளவு அவர் தன்னுடைய அறிவியல் சார்ந்தவற்றிற்கும் செலுத்தினார் என்பதை இதனால் நாம் அறிவோம்.