Welcome..! Join us to Develop your Humanity
தேசத்திற்கு சேவை ஆற்ற வேண்டி 16 வருடங்கள் மரணத்துடன் போராடிய வீரர் கேப்டன் வருண் சிங்.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கர்ணாவில் உள்ள புதிய மார்கோஸ் பிரிவு தளத்திற்கு, 2016-ல் கேப்டன் வருண் சிங் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவே தேசம் முழுவதிலும் உள்ள கடற்படை அதிரடி வீரர்களின், ஒரே மார்கோஸ் பிரிவு தளமாகும். 1987-ல் பிப்ரவரியில் உருவாக்கப்பட்ட மார்கோஸ் படைப் பிரிவானது, இந்திய கடல்சார் சிறப்புப் படைப் பிரிவாகும். போர் முறையின் மூன்று பரிமாணங்களான, கடல், வான் மற்றும் நிலத்தில் இயங்கக்கூடிய சிறப்பு பயிற்சி பெறுவதே இதன் சிறப்பம்சமாகும்.
ஆனால், பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, கேப்டன் வருண் சிங் அவர்கள் அனேகமாக இறந்துவிட்டார் என்றே நினைக்கப்பட்டார். அவர் தனது மன உறுதியை இழந்து விடவில்லை . ஒரு தனி மனிதன் தன்னுடைய மோசமான காயங்களையும் மீறி, மன உறுதியுடன் போராடி, அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டார். மீண்டும் இந்திய கடற்படையின் புதியதான ஒரு தளத்திற்கு, மீண்டும் தலைமை அதிகாரியாக ஆனார் என்பதை இந்த உண்மைச் சம்பவம் எடுத்துரைக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, கடற்படையின் கடல்சார் அதிரடிப்படை பிரிவிற்கு, லெப்டினன்ட். வருண் சிங் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார். 2000- ஆவது வருடத்தில் மே மாதம் மூன்றாம் நாள் ஒரு சிறப்புப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு, லெப்டினன்ட். வருண் சிங்கும் அவரது குழுவும் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது புடுசாய் (putushai) என்கிற கிராமத்தில் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் மறைந்திருப்பதால், அவ்விடத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த, ராஜஸ்தான் ரைபிள்ஸ் (RR) படைப் பிரிவோடு சேர்ந்து கொள்ளுமாறு, அவர்களுக்கு உத்தரவு வந்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் பயங்கரவாதிகள் உள்ள கட்டடத்தை சிறப்பு படையினர் சுற்றிவளைத்தனர். ஆனால் அவர்களை நெருங்க முடியாதபடி, பயங்கரவாதிகள் கடுமையாக துப்பாக்கி சூடு நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், கட்டடத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அந்த பயங்கரவாதிகள் அருகில் உள்ள ஒரு மறைவிடத்திற்கு ரகசியமாக ஓடி ஒளிய முற்பட்டனர். அப்போது, விரைந்து அதிரடியாக செயல்பட்ட லெப்டினன்ட். வருண் சிங், தன்னுடைய படைப்பிரிவின் சகாவான V.S. ராவத்துடன், ஒரு சிறு ராணுவப்படை பிரிவை தலைமையேற்று அழைத்துக் கொண்டு, பதுங்கி ஓடும் பயங்கரவாதிகளை இடைமறிக்க விரைந்தார்.
அருகாமையில் உள்ள பதுங்குமிடத்திற்கு தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு, மிக அருகாமையில் சென்று வீரத்துடன் லெப்டினன்ட் வருண் சிங் ஒருவனை சுட்டுக் கொன்று, மற்றொருவனை காயப்படுத்தி வீழ்த்தினார். ஆனால் அதற்குள் அவரது மார்பிலும் கையிலும் மோசமான அளவில் குண்டுக் காயங்கள் ஏற்பட்டு விட்டது. காயமடைந்தாலும் தளர்ந்து விடாமல், தனது வீரர்களை வழி நடத்திக் கொண்டே அவர் முன்னேறிச் சென்றார். இத்தகைய தீரமான நடவடிக்கையால் அல் பதர் (Al Badr) என்னும் அந்நிய நாட்டின் பயங்கரவாதிகள் நால்வர் அதே இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவ்விதமாக பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் லெப்டினன்ட் வருண் சிங் தனது துணிச்சலான நடவடிக்கை, மனத்தின் உடனடி செயல்நிலை, எழுச்சியூட்டும் தலைமை பண்பு, முரட்டு தைரியம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்தினார்.
வருணோடு களம் புகுந்த அவரது சகா நடந்து முடிந்த அதிரடியை பார்த்து திகைத்தார். நான்கு தீவிரவாதிகளை வீழ்த்தி, கடுமையாக காயம்பட்ட நிலையில் இருந்த லெப்டினன்ட் வருணை, உடனடியாக ஸ்ரீநகரில் ராணுவ தளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் எடுத்துக் கொண்டு விரைந்தார். அவரை உடனடியாக சோதித்த மருத்துவர்கள் வருணின் உடலின் வலது பகுதியில் கையெறி குண்டின் 75 உலோகக் கூர் முனைச் சிதறல்கள் பதிந்து உள்ளன என்பதைக் கண்டறிந்தனர் . மேலும் அவரது வலது கை மிகவும் சிதைந்து போயிருந்தது. அவரது தோள்ப்பட்டையில் இருந்து முழங்கை வரையிலான கை எலும்பு சுக்கு நூறாக சிதறி இருந்தது. உலோகக் கூர்முனைச் சிதறல் ஒன்று வருணின் இதயத்தையும் துளைத்திருந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால் லெப்டினன்ட். வருண் சாவின் விளிம்பில் இருந்தார்.
வருணைக் காப்பாற்றும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தபோதும் மருத்துவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதயத்தில் பதிந்திருந்த ஒரு கூர்முனைத் துகள் அகற்றப்பட்டது. நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது . இடது இடுப்பு எலும்பில் இருந்து ஒரு பகுதி எடுக்கப்பட்டு வலது கையில் நொறுங்கிப்போன எலும்புகளுக்கு பதிலாக வைக்கப்பட்டது. இவ்விதம் பல முறை அறுவை சிகிச்சை செய்த போதிலும், வருணின் உடம்பில் பதிந்திருந்த அனைத்து துகள்களையும் நீக்க முடியவில்லை. தற்போதும் வருண் சிங்கின் மார்பிலும், வலது கையிலும் குண்டுகளின் நுண்ணிய 75 சிதறல்கள் அப்படியேதான் உள்ளன.
கடுமையான உடல் வலியையும் தாங்கிக் கொண்டு, அனைத்து விதமான பாதகங்களையும் பொருட்படுத்தாமல், வருண் சிங் தான் உயிர் வாழ்வதற்குத் தேவையான மன உறுதியோடு இருந்தார். அவரது வலது கையானது, ஒரு வருட காலத்திற்கும் மேலாக செயல்படாத நிலையில் இருந்தது. அவர் இரண்டு வருடங்களை மருத்துவமனையிலேயே கழித்தார். அவர் மன உறுதியோடு தனது காயங்களையும் உடல்நிலையையும் எதிர்த்துப் போராடியதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இத்தனை மன உறுதி கொண்டிருந்த லெப்டினன்ட் வருண் சிங்கும் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவரது 3 வயதுப் பெண் குழந்தை, அவர் ஓரளவு குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக அழைத்து வரப்பட்ட போது, தனது குழந்தையைக் கண்டு வருண் உணர்ச்சி வயப்பட்டு உருகினார்.
இவரைப் பார்த்த இவரது சிறு பெண் குழந்தை, “தாரா (Dhara) சமையல் எண்ணெய்” விளம்பரத்தில் வரும் "எனது அப்பாதான் வலிமையானவர்" என்கிற விளம்பரப் பாடலைப் பாடியபோது, வருண் சிங்கால் அவரது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"ஓர் அதிரடிப்படை வீரர் ஆவதுதான் என்னுடைய சிறு வயது முதலான கனவு" என்றும், "நான் போட்டுக்கொள்ள விரும்பியதெல்லாம் ராணுவ சீருடை ஒன்றையே" என்றும் வருண் கூறுகிறார். வருண் சிங் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக வேண்டும் என்பதற்காகவே பிறந்தவர் போலத் தோன்றுகிறது. இவரது தந்தையோ கடற்படையில் பணி புரிந்தார். வருண் பிறந்த போது அவரது ஜாதக அமைப்பின்படி அவருக்கு நீரால் மரணம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட போது விதியையே எதிர்கொள்ளும் விதமாக அவரது தந்தை, தண்ணீர் மற்றும் வானுலக பெருங்கடலைக் குறிக்கும் வருணன் என்கிற தேவனின் பெயரையே, தனது மகனுக்கு வைத்து அழகு பார்த்தார். அது மட்டுமின்றி தனது மகனையும் ஒரு கடற்படை வீரனாகவே உருவாக்கி தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.
2001-இல் லெப்டினன்ட் வருண் சிங்கிற்கு, அவரது வீர தீர சாகசத்திற்கான ராணுவத்தின் சௌரிய சக்கர விருது வழங்கப்பட்டது. இவரது மருத்துவமனை வாசம் முடிந்து உடல்நலம் தேறிய பின், கடற்படையில் மீண்டும் இணைந்து இன்றளவும் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் வீரத்தை அங்கீகரிக்கும் விதமாக, 2016ம் ஆண்டு இவர் ஐ. என். எஸ் கர்ணா என்கிற கடற்படை தளத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கேப்டன் வருண் சிங்காக, சேவையாற்றி வருகிறார்.