Welcome..! Join us to Develop your Humanity
நாகாலாந்தின் காந்தி - நட்வர் தாக்கர் – அமைதியைக் கொண்டு வந்த ஒரு தியாகக் காவியம்
சுதந்திரத்திற்குப் பிறகு நமது நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள் பலர். அவர்களில் ஒருவர் நட்வர்பாய் என பலரால் அன்போடு அழைக்கப்பட்ட நட்வர் தாக்கர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர், காந்தியவாதியும் சிறந்த சமுதாய சீர்திருத்தவாதியும் ஆன காகா காலேல்கர் என்பவரிடம் ஊக்கம் பெற்றார். 1950இல் நாகாலாந்து சென்றடைந்தார். மோக்கோசங் மாவட்டத்தில் சுசுயிம்லாங் எனும் கிராமத்தில் காந்தி ஆசிரமம் ஒன்றை அமைத்தார். இதன் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் வேலை வாய்ப்பினையும் உருவாக்கித் தந்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற நட்வர்பாய், தனது உயிரையும் துச்சமாக மதித்து, பாரத ராணுவத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த நாகர்களுடன் ஒரு இணைப்புப் பாலமாக விளங்கினார். அப்போது வெறும் இருபத்து மூன்றே வயதான அவரை, நாகாலாந்து பகுதியில் சேவை செய்ய, பாரதிய அந்திம் ஜாதி சேவக் சங்கம் (BAJSS) என்ற பழங்குடி மக்களுக்கான சேவை அமைப்பு அனுப்பியது. அக்காலகட்டத்தில் நாகாலாந்து பகுதி அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1963 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானது.
இந்த சமயத்தில் BAJSS அமைப்பின் பணி இரண்டு விதமானது. நாகாலாந்தின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் மனதில் பிரிவினைவாத எண்ணம் தோன்றாமல் செய்தது மட்டுமல்லாமல், நாகாலாந்து என்பது பாரத நாட்டின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என்ற எண்ணத்தையும் அவர்கள் விதைத்தார்கள். முதலில் அவர்கள் தொலை தூரத்தில் இருந்த, ஆனால் நாகா பிரிவினை தேசிய எண்ணத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த, நாகா மலைப் பகுதியைத் தங்கள் பணிக்களமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, நாகாலாந்து ஒரு தனி தேசியம் என்ற பிரிவினைவாத குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. 1929இல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் முன்பு, "நாகாலாந்து ஒரு தனிநாடு" என்ற கோரிக்கையை முன்வைத்தனர். சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்கள் முன்னர், நாகா தேசிய கவுன்சில்(NNC) என்ற அமைப்பினர் நேரு, காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இதே தனிநாடு கோரிக்கையை வைத்தனர். நேரு பிராந்திய சுயாட்சியை ஏற்றுக் கொண்டாலும், சுதந்திர நாகாலாந்து என்பதை நிராகரித்தார். காந்திஜியோ அவர்களை பாரதத்துடன் சேருமாறும், அதற்காக அவர்கள் கட்டாயப் படுத்தப்படமாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார். ஆனால் 1955 முதல் ஜாப்பு ஃபிஸோ என்பவர் தலைமையில், தனி நாடு கோரி பிரிவினைவாதிகள், ஆயுதமேந்தி பல்வேறு தாக்குதல்களை, தொல்லைகளை பல ஆண்டுகளாக கொடுத்த வண்ணம் இருந்தனர்.
அசாமின் ஜோர்ஹட்டிலிருந்து சுசுயிம்லாங் கிராமத்துக்குச் சென்ற தனது முதல் பயணத்தின்போதே நட்வர்பாய், தனது வருங்கால மனைவியான லென்டினா என்ற நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை சந்தித்தார். அந்தப் பெண் கவுகாத்தியில் கஸ்தூரிபா காந்தி ஆசிரமத்தில் சேவை செய்து வந்தார். விடுமுறையை கழிக்க நாகாலாந்து வந்திருந்தார். நாகாலாந்து வந்து ஆறு மாதமே ஆன நிலையில் அவர் லென்டினாவை மணம் செய்துகொள்ளத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். பாரத அரசாங்கத்துக்கு எதிராக நாகர்கள் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில், லென்டினாவின் குடும்பத்தினர் அவரது விருப்பத்தை ஏற்க மறுத்துவிட்டனர். எனினும் அவர்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தால், ஜோர்ஹட் நகருக்குச் சென்று, நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ச்சியாக “இந்திய உளவாளி” என்று பிரிவினைவாதிகளால், குற்றம் சாட்டப்பட்டுவந்த நட்வர்பாயின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருந்து கொண்டேயிருந்தது. அவர்கள் கிராம மக்களை நட்வர்பாயை பாதுகாக்க வேண்டாம் என்றும், அவரை நாகாலாந்தை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்தனர். அவையெல்லாம் அவரது பணியைத் தடுக்க முடிவில்லை. 1955ல் நாகாலாந்து காந்தி ஆசிரமத்தை நிர்மாணித்துத் தனது பணிகளைத் தொடர்ந்தார்.
காந்தி ஆசிரமம், சுற்றியுள்ள கிராமங்களில் இயல்பான முறையில் அமைதியைக் கொண்டுவரும் பணிகளை ஆரம்பித்தது. ஒரு தினசரி மருத்துவ சேவை மையத்தைத் துவக்கி, தனது பணியை ஆரம்பத்தார். பள்ளிப் பருவத்தில் ஸ்கவுட் பயிற்சியில் கற்றுக் கொண்ட விஷயங்கள் அவருக்கு உதவின. இரண்டாவதாக அருகிலுள்ள நடுநிலைப் பள்ளியில், தினசரி இரண்டு மணி நேரம் ஹிந்தி வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார். இவையே அவரது ஆரம்ப காலப் பணிகள். நாகா கிறிஸ்தவ மிசனரிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் கண்களில், நட்வர்பாய் ஒரு சந்தேகத்துக்குரிய நபராகவே தோன்றினார்.
பின்னர் சுயதொழில் மூலம் கிராமத்தினர் முன்னேற தேனீ வளர்த்தல், தச்சு தொழில் மையம், செக்கு எண்ணெய் தயாரிப்பு, வெல்லம் தயாரித்தல் மற்றும் பயோகாஸ் தயாரிப்பு ஆகியவற்றையும் துவக்கினார். காதி தயாரிப்புகளை விற்க கடைகளையும் ஆரம்பித்தார்.
நட்வர்பாய் நாகாலாந்து மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டார். காந்தியவாதியாக இருந்தபோதிலும் அந்தப்பகுதியில் பன்றி இறைச்சியுடன் அரிசி பீர் கலந்து சாப்பிடுவது என்ற பழக்கத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அவரது முயற்சியால் 2016ல் அந்த சுசுயிம்லாங் கிராமத்தில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபார்மேஷன் டெக்னாலஜி – ன் விரிவாக்கப் பிரிவு துவக்கப்பட்டது.
அவரது அயராத தேசிய வளர்ச்சி பணியை பொறுக்காத தீவிரவாத கும்பல் ஒன்று, பணம் கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. 1994ல் கௌகாத்திக்குத் தனது வசிப்பிடத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. மீண்டும் 2014ல் சுசுயிம்லாங் கிராமத்திற்குத் திரும்பிய அவர் தனது இறுதி நாட்களை அங்குதான் கழித்தார். நாகாலாந்து பகுதியின் வளர்ச்சிக்கு உதவிய அவரை பாராட்டி 1999ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2018 ல் இறைவனடி சேர்ந்தார்.
பல தடைகளை தாண்டி நாகலாந்து பழங்குடி மக்களிடையே வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை உருவாக்கி சேவையாற்றிய அவர் "நாகாலாந்து காந்தி" என்றே போற்றப்படுகிறார்.