Welcome..! Join us to Develop your Humanity
திவானி ராம் – 36 ஆண்டுகளாக வெள்ளம் நிரம்பிய சிற்றாறுகளைக் கடக்க உதவியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றியவர்
49 வயதான திவானி ராம் ஒரு விவசாயி. இவர் ஒவ்வொரு ஆண்டிலும் மழைப் பருவத்தின் இரண்டு மாதங்களை, உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளம் புரண்டோடும் சிற்றாறுகளை கடப்பதற்கு மக்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பயணிகள் குழுவினர், உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தின் பங்கபானி பகுதியில் பயணம் செய்ய விரும்பினர். ஆனால் பலத்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள கிராமங்களை இணைக்கும் முக்கியமான பாலம் ஓடையில் வந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
அவர்களுக்கு உதவக்கூடிய ஒரே நபர் யமராஜ்தான் என கிராமத்தினர் கூறினார்கள். அதைக் கேட்ட குழுவினர், ஹிந்து புராணங்களில் யமராஜ் மரணத்தின் கடவுள் என்று வியந்தாலும், அவரை அணுகினர். அந்த யமராஜ் வேறு யாருமல்ல. நமது திவானி ராம்தான். அவர் சிறுவனாக பள்ளிக்குச் செல்லும்போது எருமை மீது ஏறியமர்ந்து சென்றதால் அவருக்கு அந்த புனைப்பெயர் கிடைத்துவிட்டது.
அப்போது நேரம் இரவாகிவிட்டதால் மறுநாள் அதிகாலை அவர்களது பயணத்தைத் துவங்க உதவுவதாக உறுதியளித்தார். ஆனால் அந்த பயணிகள் தங்குவதற்கு சரியான இடம் கிடைக்காததால், அவர் அவர்களை அருகிலிருந்த அரசு பள்ளியில் போர்வை மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து தங்க வைத்தார்.
மறுநாள் காலை அவர், தான் வாக்களித்தபடியே, அவர்கள் ஒவ்வோருவரையும் தனது தோளில் சுமந்தபடி, இடுப்பளவு ஆழமான தண்ணீரில் சுமந்து சென்று அக்கரையில் விட்டு, நல்ல சாலை வழியாக அனுப்பி வைத்தார். அவருடைய மனப்பூர்வமான உதவியால் மகிழந்து போன அந்த பயணிகள் அவருக்க ரூ 8000 பணமாகக் கொடுத்தனர்.
“எங்களைப் போன்ற ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளையில் ரூ 8000 சம்பாதிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் நான் செய்த உதவி அவர்கள் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்திருந்தது. அந்த குழுவினர் இங்குள்ள கோவில்களைத் தரிசிப்பதற்காக, வேறொரு மாநிலத்திலிருந்து பயணித்து வந்திருந்தனர். அவர்களுக்கு உத்தரகண்ட் மாநிலத்தின் விருந்தோம்பலைக் காட்டுவதற்காக, என்னாலானதை நான் செய்தேன்”, என்கிறார் திவானி.
முறையான பாலம் இல்லாததால், அருகாமையில் உள்ள முன்சியாரி, பங்கபானி மற்றும் தர்ச்சுலா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்படுவது என்பது வாடிக்கை. சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வது என்பது கிராம மக்களுக்கு கடினமான காரியமாகவிடுகிறது. இங்குதான் நமது 49 வயதான விவசாயியின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
“கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு, மூன்று தலைமுறைகளாக நாங்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிளைக் கடப்பதற்கு உதவுகிறோம். எனக்கு 14 வயதானபோது, எனது தந்தையார் ஆழமான நீரில் வெள்ளத்தில் நடந்து கடப்பதற்குக் கற்றுக் கொடுத்தார். அதிலிருந்து அந்தப் பணியை ஒவ்வொரு பருவத்திலும் நான் செய்து வருகிறேன். தற்போது எனது மகனும் என்னுடன் சேர்ந்துள்ளார்”, என்கிறார் அவர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியைக் கடப்பது என்பது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பணியாக பார்ப்பதற்குத் தோன்றலாம். ஆனால் வழுக்கிவிடாமல் இன்னொரு மனித உயிருக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு கடப்பது என்பது தேர்ச்சி பெறவேண்டிய ஒரு திறமை.
“சில சமயங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களின் சக்தி அதிகமாயிருக்கும்போது மரங்களே வேரோடு பெயர்த்தெறியப் படும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுவர்கள். ஒரு முறை நான் ஒரு பெண்மணிக்கு உதவி செய்யப்போய் இரண்டுபேருமே நிலைதடுமாறி விழுந்தோம். அவருடைய சில உடமைகள் நீரில் மூழ்கிவிட்டன. ஆனால் ஓடையைப் பற்றிய என்னுடைய அறிவு மற்றும் விழிப்புணர்வு காரணமாக அவரை நான் காப்பாற்ற முடிந்தது”, என்று அவர் நினைவுகூர்ந்தார்.
திவானியின் முன்மாதிரியான பணியினைப் பாராட்டும் விதமாக கிராம மக்கள் அவரை, 2015-2019ம் காலகட்டத்தில் சிலிங் கிராமத்தின் கிராம பிரதான் (கிராமத் தலைவர்) என்று தேர்ந்தெடுத்தனர். அந்தப் பதவியை வகித்தபோதும் அவர் தொடர்ந்து மக்களுக்கு உதவி வந்தார்.
திவானி பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளத்தைக் கடந்து அழைத்துச் சென்றாலும் தனது உதவியை இலவசமாகவே வழங்க விரும்புவதாகக் கூறுகிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் தங்கள் நல்லெண்ணத்தால் பணம் வழங்க முற்படுகிறார்கள். “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் உதவியே தேசத்துக்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை என்று தந்தையார் நம்பினார். அவருடைய வார்த்தைகள் எனது மனதில் இன்றுவரை பதிந்துவிட்டன அத்துடன் அவற்றை என்னுடைய குழந்தைகளுக்கும் உணர்த்தியுள்ளேன்.
தனது வேலைக்குப் பணத்தை ஏற்றுக்கொள்வதில் திவானி தயங்கவில்லை என்றாலும், அவர் மகிழ்ச்சியுடன் பணம் வாங்குவதைத் தவிர்த்து விடும் தருணங்களும் உண்டு. “இங்கு பாதுகாப்புப் பணிக்காக இரண்டு ராணுவ வீரர்கள் அனுப்பப் படுவதுண்டு. மழைக் காலங்களில் அவர்கள் வெள்ளத்தைக் கடப்பதற்கு உதவுவேன். அவர்களிடம் பணம் பெறுவது தவறு. அவர்களும் எனது சேவைக்காக இனிப்புகளை வழங்குவார்கள்” என்கிறார் அவர்.
திவானி தனது வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வரும் அதே வேளையில், ஜாலிகர் ஆற்றின் மீது பாலம் கட்டி முடிக்கப்படும் தருவாயில், அவர் தனது ஆற்றைத் தாண்டும் பணியை நிறுத்தவேண்டி வரும்.
தர்ச்சுலா பகுதியின் சப்டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் அனில்குமார் சுக்லா, “நாங்கள் இந்த பகுதியில் ஏற்கனவே பல சிறு பாலங்களுக்கான பணிகளை முடித்துவிட்டோம். இரண்டு பெரிய பாலங்கள் கட்டுமானத்தில் உள்ளன. எனவே வெள்ளத்தினால் வரும் இந்த பிரச்சினை விரைவில் நிர்வாகத்தால் தீர்க்கப்பட்டுவிடும்” என்று கூறுகிறார்.
அதுவரை திவானி தனது மகிழ்ச்சியையும் அன்பையும் தொடரலாம்.