Welcome..! Join us to Develop your Humanity
நரிந்தர் சிங்: நோபல் பரிசுக்குத் தகுதியுள்ள, ஆனால் கவனிக்கப்படத் தவறிய நபர்; இந்த அறியப்படாத விஞ்ஞானிதான் ஃபைபர் ஒளியியலின் தந்தை!
பல இந்தியர்களுக்கு அறியப்படாத பெயர் டாக்டர் நரிந்தர் சிங் கபானி. ஆனால் 1950ல் ஃபைபர் ஒளியியலில், இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பால்தான், இன்று நாம், அதிவேக தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவ செயல் முறைகளான எண்டோஸ்கோபி மற்றும் லேசர் அறுவை சிகிச்சை போன்ற முறைகளை அனுபவித்து வருகின்றோம். 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசின் ஒரு பகுதியானது, திரு. சார்லஸ் குயன் காவு-க்கு ஃபைபர் ஒளியியலில் தடையில்லா பணிக்கு வழங்கப் பட்டது, ஆனால் கபானியின் கண்டுபிடிப்பை கவனிக்காமல், அவருக்கு வழங்கியதைக் கண்டு அறிவியல் வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் மிகவும் குழப்பம் அடைந்தார்கள். ஆனால் நோபல் குழு தன்னுடைய வெளியீட்டில் கபானியின் பணியை அங்கீகரித்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நோபல் குழு தன்னுடைய அறிவிப்பில், விருது வென்ற திரு.சார்லஸ் குயன் காவு 1966ல் ஃபைபர் ஒளியியலைக் கண்டுபிடித்தை ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டிருந்தது. அவர் ஒளியியல் இழை மூலம், ஒளியினை நீண்ட தூரம் எவ்வாறு அனுப்ப முடியும் என்பதைக் கணக்கிட்டார். அதன் காரணமாக அதிதூய்மையான கண்ணாடி இழைகள் 1970ல் தயாரிக்கப்பட்டது. ஆனால் உண்மை யாதெனில், பாரதத்தில் பிறந்த நரிந்தர் சிங் கபானி அனைவராலும் ஃபைபர் ஒளியியலின் தந்தை என்று கருதப்பட்டவர். அவர் 1950களில் லண்டன் இம்பீரியல் அறிவியல் கல்லூரியில், தன்னுடைய முனைவர் பணியின்போது, ஒளியானது வளைந்த கண்ணாடியிழை மூலம் எவ்வாறு ஊடுருவி செல்லும் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார். தனது முடிவினை 1954ல் நேச்சர் (Nature) என்ற பத்திரிகையிலும் வெளியிட்டார்.
கபானி தன்னுடைய பெயர் விடுபட்டது கண்டு கலங்கவில்லை. 1999ல் இந்தியா டுடே-விற்கு அளித்த பேட்டியில் கபானி, தனது உணர்வினை வெளிப்படுத்தினார். “இதை என்னவென்று கூறுவீர்கள்? எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரே, டாக்டர் காவு தனது ஆராய்ச்சியைத் துவங்கினார். பல போட்டிகளையும் எதிர்கொண்டுள்ளார். இது சுவீடிஷ் அகாடமியின் முடிவுக்கு உட்பட்டது. அவர்கள் எவ்வித வரைகூறுகளை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தார்களோ அதை பின்பற்றினார்கள்” என்றார்.
ஆனால் ஃபைபர் ஒளியியலைக் கண்டுபிடித்தவர் கபானியே என்று, மஸாசுஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின், வால் ஆஃப் இன்வென்ஷன்ஸ் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 1999ல் ஃபார்சூன் பத்திரிக்கை 20ம் நூற்றாண்டினை மாற்றி அமைத்த, அறியப்படாத 7 ஹீரோக்களில் கபானியை ஒருவராக அறிவித்தது.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் பிறந்த கபானி, பள்ளிக் கல்வியை டெஹ்ராடூனில் தொடர்ந்தார். அங்குதான் அவருடைய எதிர்கால ஃபைபர் ஒளியியல் பணிக்கான வித்து ஊன்றப்பட்டது. கபானியின் ஆசிரியர் ஒரு முறை, ஒளி எப்போதும் நேர்கோட்டிலேயே பயணிக்கும் என்று கூறினார். இது இளம் கபானியை சிந்திக்க வைத்தது. இந்த கருத்து தவறானது என நிரூபிக்க எண்ணினார். பட்டப் படிப்பினை ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முடித்து, சிறிது காலம் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த பின்னர், ஒளியியலில் முனைவர் பட்டம் பெற இம்பீரியல் அறிவியல் கல்லூரிக்குச் சென்றார்.
அவருடைய பிஎச்டி படிப்பின்போது, 1954ல் இம்பீரியல் கல்லூரியில், ஒளியியல் இழை கற்றைகளின் மூலம் நிழற்படங்களை அனுப்பிக் காட்டினார்.
“ஆனால் நான் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் படிக்கச் சென்று என் ஆய்வறிக்கையை தயாரிக்கும்போது, எனது ஆலோசகர் டாக்டர் ஆப்கின்ஸ், முப்பட்டைக் கண்ணாடிகளுக்குப் பதிலாக, உருளைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதனால் நான் மெல்லிய கண்ணாடி இழை கற்றைகளைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதனை எளிதில் வளைக்க முடியும். தொடக்கத்தில் மனிதனின் உடலின் உட்புறங்களைக் காண்பதற்கு, மருத்துவ உபகரணங்களில் உபயோகப் படுத்தும் நோக்கத்தில், என் ஆர்வம் இருந்தது. ஆனால் ஒளியியல் இழைகளின் பல வகையான சாத்தியங்கள் 1955 வரை எனக்கு விளங்கவில்லை. அப்போதுதான் ஒளி இழையியல் அதாவது Fiber Optics என்ற வார்த்தையையே நான் உருவாக்கினேன்” என்று திரு கபானி நினைவு கூர்ந்தார். 1960ல் சயின்டிஃபிக் அமெரிக்கன் என்ற புகழ்பெற்ற இதழில் ஒளி-இழையியல் என்ற பதத்தை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார். இவையனைத்தும் சார்லஸ் குயன் காவு, இந்த துறையில் நுழயும் முன்னரே நிகழ்ந்தவை.
அவர் இம்பீரியல் கல்லூரியில் படிப்பை முடிப்பதற்கு முன்னரே, ராயல் சொசைட்டி அவருக்கு, ஒளி-இழையியலில் மேலும் ஆராய்ச்சி செய்ய உதவித் தொகை வழங்கியது. “நான் கண்ணாடி இழைகளை சீரமைத்து, அவைகளின் வழியே, ஒளி மற்றும் பிம்பங்களை ஊடுறுவச் செய்ய முடியும் என்பதனைக் கண்டறிய சுமார் ஒன்றரை வருடங்கள் பணிபுரிந்தேன்’ என்று ஒரு நேர்காணலில் கபானி குறிப்பிட்டிருந்தார்.
கபானியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அவருடைய ஆசிரியர் ஹெரால்டு ஆப்கின்ஸ், அவரை ஒளியியலிலும் பிஎச்டி செய்ய ஊக்குவித்தார். ஆனால் 1955ல் பிஎச்டி படிப்பு முடிந்தவுடன் பாரதத்துக்குத் திரும்பி வந்து, தனது சொந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என எண்ணினார்.
ஆனால் 1954ம் ஆண்டு, இத்தாலியில் நடந்த அறிவியல் மாநாட்டில், ஒளி-இழையியல் தொடர்பான தன்னுடைய முதல் வெளியீட்டை செய்யும்போது, அமெரிக்க பேராசிரியர் ஒருவரை கபானி சந்தித்தார். அந்த சந்திப்பு அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது. ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி-யில் சேர்ந்து, ஒளி-இழையியல் தொடர்பான தன்னுடைய ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். லேசர், உயிர் மருத்துவக் கருவிகள், சூரியசக்தி ஆகியவற்றில் பல தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் கண்டுபிடித்து உருவாக்கினார்.
“ஒரு வருடகாலத்தில் நான் வேறொரு வேலையில் சேர்ந்தேன். அந்த வேலை என்னை ஒரு தொழில்முனைவோனாக ஆக்கியது. ஆனால் பாரதத்தில் தொழில் துவக்குவதற்குப் பதிலாக, பலோ-ஆல்டோ-வில் (சிலிகான் வேலி) என் முதல் தொழிற்சாலையை 1960ல் நான் துவக்கினேன். 1967ல் அதை ஒரு பொது நிறுவனமாக ஆக்கினேன்” என்றார் கபானி.
தற்போது 90 வயது நிரம்பியிருக்கும் கபானி, 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். சீக் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இது அமெரிக்காவில் சீக்கிய சமூகம் மற்றும் ஏனைய சமூகத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.