Welcome..! Join us to Develop your Humanity
சம்ஸ்கிருத இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் இந்த சமூகத்தினர் அவர்களுடைய பாரம்பரியமான வள்ளல் தன்மைக்கும், கல்வி நிலையங்களை உருவாக்கியதிற்கும், செழுமையான கலாச்சார பாரம்பரிய பின்னணிக்கும், உலகமெங்கும் புகழ் பெற்றுள்ள அவர்களுடைய புதுமை நிறைந்த சமையற்கலை நுணுக்கங்களுக்கும் மிகவும் பெயர் பெற்றவர்கள் ஆவார்கள்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்று சொன்னதுமே கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கியவரும், கலைகளின் புரவலரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனருமான ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார் அவர்களும், நூற்பாலை செல்வந்தரும், கொடை வள்ளலும், கல்வியாளரும், முன்னாள் பேங்க் ஆப் மதுராவின் நிறுவனருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் அவர்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனரும், கல்வியாளருமான எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் அவர்களும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுவனரான வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களும்தான் நமது நினைவிற்கு வருவார்கள். இத்தகைய சாதனை மனிதர்கள் செட்டி நாட்டு மண்ணின் வரலாற்றில் வியாபார மேன்மைக்காகவும், தொலைநோக்கிற்காகவும், ஈடு இணையற்ற கல்விப் பணிகளுக்காகவும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர்களாக உள்ளனர்.
இத்தகைய மாமனிதர்களின் வரிசையில் தனது தனித்தன்மை வாய்ந்த கட்டுரைகளினால் தன்னுடைய பெயரை பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்க அளவில், தமிழ் மொழிக்கு அளப்பரிய சேவை செய்தவரும், தனது கூர்மையான உரை வீச்சால் மாபெரும் வாசகர் வட்டத்தை வசப்படுத்தி வைத்திருந்தவரும், அனைத்திற்கும் மேலாக சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களை அதன் சுவை குன்றாது தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான, மகாமகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் தனக்கென்று அழியாப் புகழையும் தனி இடத்தையும் பெற்று விளங்குகிறார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பிறகு, பெருமைக்குரிய மகாமகோபாத்தியாய விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் அறிஞராக இவர் விளங்குகிறார்.
சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பு செய்த அளப்பரிய சேவையை எத்தனையோ அறிஞர்கள் செய்திருக்கலாம். ஆனால் இவை பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பு செய்ததாகவே அமைந்துள்ளது. ஒரு சில மொழிபெயர்ப்புகளே தமிழில் செய்யப்பட்டுள்ளன. இவ்விதம் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கிய வடிவங்களுக்காக பண்டிதமணி ஒரு சிறப்பிடத்தைப் பெற காரணம் என்னவெனில், இலக்கியரீதியாக அவருக்கென்று மிகப்பெரிய பின்புலம் இல்லாது இருப்பினும், அவர் தனக்கென்று ஒரு வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு, அதில் அவர் சிறந்து விளங்கியதே ஆகும். அவருடைய முன்னோடிகள் வணிகம், வங்கித் துறை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய போதிலும் பண்டிதமணி தனது முன்னோர்களின் அத்தகைய பரிச்சயமான துறைகளை விடுத்து, தனக்கென்று இலக்கியத் துறையத் தேர்ந்தெடுத்து அதில் பெயரும் புகழும் பெற்றார். இத்தகைய சாதனைகளை செய்திட அவர் எந்த புகழ்பெற்ற பள்ளியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்தவர் அல்ல. இவரது முறையான கல்வி கற்றல் என்று பார்த்தால் அவருடைய சொந்த ஊரில் அமைந்திருந்த ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அவருடைய சிறு வயதில், வெறும் ஏழு மாதங்கள் கல்வி பயின்றது மட்டுமே ஆகும். இவருக்கு மொழிகளில் இருந்த ஈடுபட்டாலும், புலமையினாலும், அன்னை சரஸ்வதியின் அருளாலும் மிகவும் சிக்கலான மொழிப்பாட நுணுக்கங்களையும் எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். இயல்பிலேயே அவருக்கிருந்த கல்விப்புலமையின் திறமையால் கண்ணில் பட்ட புத்தகங்களையெல்லாம் வாசித்தும், கற்றறிந்த புலவர்களுடன் பழகியும், தன்னுடைய மேதா விலாசத்தை மென்மேலும் வளர்த்துக் கொண்டார். இவருக்கு சிறுவயதிலேயே போலியோ நோய் தாக்கியதால் ஏற்பட்ட உடல் ஊனத்தையும் பொருட்படுத்தாமல், கற்றறிந்த அறிஞர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், நீண்ட தூரம் பயணித்து அவர்களோடு கலந்து பழகி தன்னுடைய கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். இதன் மூலம் கல்வியறிவு மீது இவருக்கு இருந்த ஆர்வமானது நன்றாக புலப்படுகிறது. இவர் எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் வாயில் படியையும் படிப்பிற்காக மிதித்தது இல்லை என்றாலும் இவருடைய புலமைக்கும், அறிவாற்றலுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக, இவருடைய அறுபதாம் வயதில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரை தமிழ்த்துறைத் தலைவராக நியமித்தது, இவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.
அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில், தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள மகிபாலன்பட்டி என்கிற சிறிய ஊரில் முத்துக்கருப்பன் செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதியினருக்கு 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் பண்டிதமணி மகனாக பிறந்தார். இவர் பிறந்த ஊரானது, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடிய சங்ககாலப் புலவர், ஜோதிடக்கலை வல்லுனருமான கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊராகவும் கருதப்படுவதால் அதை பூங்குன்றநாடு என்றும் கூறுவதுண்டு.
பண்டிதமணி பல்வேறு தனித்தன்மையான இலக்கியப் படைப்புகளையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். இவைகளுள் தலையாய இடத்தைப் பிடிப்பது இவர் திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்கு எழுதிய சரளமான உரைகளாகும். செய்யுள் வடிவில் இருக்கும் திருவாசகத்திற்கு, உரைநடை வடிவிலான, இணையான இலக்கியப் படைப்பு அப்போதைய நாட்களில் பண்டிதமணியின் உரையை தவிர வேறு ஏதும் இல்லை. ஆனால் இத்தகைய மிகப் பெரும் பணியை அவரால் அவருடைய முதுமைக் காலத்தில் தான் செய்ய முடிந்தது. ஆகையால் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர அவரால் முழுஉரைநடையினையும் உருவாக்கித் தர முடியாமற் போனது. இவர் திருவாசகத்தின் மூன்று பகுதிகளுக்கு எழுதிய விளக்கம் ஒப்புயர்வற்று விளங்குகிறது. அப்பகுதியின் உரை கதிர்மணி விளக்கம் என்றே அழைக்கப்படுகிறது.
பண்டிதமணி பல்வேறு மொழிபெயர்ப்புப் பணிகளை அற்புதமாக செய்து முடித்துள்ளார். வேற்று மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யும் போது மற்றவர்களின் பண்பாட்டைப் பற்றிய நமது கண்ணோட்டமும் அறிவும் விசாலமடைகிறது என்று அவர் கருதினார். இவ்விதம் மொழிபெயர்ப்பு செய்வதால் வாசகர்கள், இலக்கிய ஆளுமைகளையும், உன்னதமான படைப்புகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
பண்டிதமணி அவர்கள், சாணக்கியர் எனப்படும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். சுத்ரகரின் மருச்சகடிகா- இதை தமிழில் மண்ணியல் சிறுதேர் என்றாக்கினார். சுக்கிராச்சாரியாரின் அனுசாசனம் என்பது சுக்கிர நீதி என்று சுருக்கப்பட்ட வடிவமாக மொழிபெயர்ப்பு ஆனது. சமஸ்கிருத நாடகமான உதயண சரித்திரம், பவபூதியால் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மாலதி மாதவம், வித்யநாதரால் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பிரதாப ருத்ர யசோ பூஷண” என்கிற செய்யுட் பாடலான “பிரதாப ருத்ரீயம்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவைகளுள் பிரதாப ருத்ரீயம் மற்றும் மாலதி மாதவத்தை தவிர ஏனைய படைப்புகள் அச்சேறி விட்டன. இவை இரண்டு மட்டும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளன. இவை ஏன் அச்சிடப்பட வில்லை என்று அறிந்தவர் யாரும் இல்லை.
பண்டிதமணியின் பிரதாப ருத்ரீயம் என்கிற நூலின் கையெழுத்துப் பிரதியையும் இணையதளத்தில் கிடைக்கும் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்பு நோக்கும் போது ஒரு குறிப்பிட்ட அத்தியாயம் பண்டிதமணியால் மொழிபெயர்க்கப் படாமலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விதம் விடுபட்ட பகுதியானது இசையைப் பற்றியும் அதன் நுணுக்கங்களை பற்றியும் உள்ளதால் இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்யலாம் என்கிற நோக்கில் அதை அப்படியே விட்டு வைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்க்கையானது 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாளன்று முடிவிற்கு வந்தது. அவர் இயற்கை எய்தினார்.