Welcome..! Join us to Develop your Humanity
ஹேமலதா திவாரி- Hemlatha Tiwari - பிச்சைக்காரர்களை தொழில்முறை பாடகர்களாக மாற்றியவர்-மேலும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ரூ. 35 ஆயிரம்வரை பொருளீட்ட வைத்திருப்பவர்!
உள்ளூர் பயணியர் தொடர்வண்டிகளில் பிச்சைக்காரர்கள் பலர் வண்டிகளிலோ அல்லது நடைமேடையிலோ பாட்டு பாடி பிச்சை எடுப்பதை பார்க்கும் அனுபவம் நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும். தினமும் ரயில் வண்டியில் பயணம் செய்யும் பலருக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக அமைந்துவிடும். ஆனால் 28 வயது ஹேமலதா திவாரியோ மாறுபட்ட சிந்தனை உடையவர். அவள் வெறுமனே அவர்களின் பாடல்களை ரசித்து விட்டு அவர்களுக்கு தர்மம் செய்வதோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் அந்த பிச்சைக்காரர்களுக்கு கௌரவமானதோர் வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்க விரும்பினார்.அவர் சில பிச்சைக்காரப் பாடகர்களை ஒன்றிணைத்து ஸ்வராதார் என்னும் குழுவை ஆரம்பித்தார்.
அவருடனான உரையாடலில், அவர் இவ்விதம் செயல்பட்டதற்கான காரணங்களையும், இதனால் சமுதாயத்தில் உண்டான தாக்கம் குறித்தும், மேலும் அவர் இதனை எப்படி எடுத்துச் செல்லப் போகிறார் என்பது குறித்தும் அவர் விளக்கினார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பாக ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹேமலதா மும்பையில் ஒரு பயணியர் ரயிலில் பயணிக்க நேரிட்டது. அவர் தான் இறங்கவேண்டிய நிலையம் வந்தவுடன் இறங்கினார்.அங்கு அவர் இரண்டு பிச்சைக்காரர்கள் தங்களது பாடல்களால் பயணிகளை வரவேற்பதை கண்டார்."அவர்கள் இருவரும் மிகவும் நன்றாக பாடிக்கொண்டிருந்தனர்,அவர்களின் பாடலில் மெய்மறந்து நான் அங்கேயே சிறிது நேரம் நின்று விட்டேன்",என தனது அனுபவத்தை நினைவுகூர்ந்தார் ஹேமலதா.
அந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவர் தான் விரும்பிய அந்த மாலை நேர இசை நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தார்.. அந்த இசை நிகழ்ச்சியில் உள்ள பாடகர்களின் பாடல்களில் முழுகிய அவருக்கு திடீரென ஒரு எண்ணமும் தோன்றியது."நான் மேடையில் பாடிக்கொண்டிருந்த கலைஞர்களை பார்த்தேன், அவர்கள் அணிந்திருந்த உடைகளை பார்த்தேன், அவர்களை சுற்றி உள்ள இசை வாத்தியங்களையும் பார்த்தேன். எனக்கு ரெயில் நிலையத்தில் கண்ட அந்த இரு பாடகர்கள் பற்றிய எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு சிறிய ஊக்கம் மற்றும் உதவி இருந்தால் அவர்களாலும் ரசிகர்கள் முன் தங்கள் திறமையை மேலும் சிறப்பாக அரங்கேற்ற முடியும்", என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
. இந்த எண்ணம் அவருக்கு 2010ஆம் ஆண்டு தோன்றியது, ஆனால் தனது தொலைநோக்கு பார்வை உள்ள சிந்தனைக்கு ஆதரவு அளிக்கும் மனிதர்களை இணைத்து, தன் புது எண்ணத்தை நிறைவேற்றும் பாடகர்களை ஒன்றிணைக்க அவருக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதனால், ஸ்வராதார் என்னும் குழு 2012 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.
'"எனக்கு எப்படியேனும் ரயில்நிலையங்களில் பாடும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு நல்ல மற்றும் கண்ணியமான வாய்ப்பபை அமைத்து தர வேண்டும் என்று நான் முனைப்பாக இருந்தேன்", எனக் கூறினார்.
ஸ்வராதாரின் வேலை என்ன?
இந்த அமைப்பை ஆரம்பிக்கும் நோக்கம் என்னவென்றால், பிச்சை எடுக்கும் கலைஞர்களுக்கு நல்ல மறுவாழ்வு அமைத்து தருவதே ஆகும். ஹேமலதா கூறுகையில்,"எங்களிடம் சேரும் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நன்றாக உருவாக்கி, அவர்களை மேடையில் நன்றாக பாட வைப்பதே ஆகும்".
ஸ்வராதார் குழுவினர் பல விநாயகர் சதுர்த்தி விழா மன்றங்கள், பொது விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பார்கள். மேலும் அவர்களுக்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அழைப்புகள் வரும்.
இந்த முயற்சியினால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கு நல்ல கெளரவமும் , சமுதாய அங்கீகாரமும் கிடைக்க உதவியது. இதுவரை பிச்சைக்காரர்கள் என்று கூறப்பட்ட கலைஞர்களுக்கு இப்பொழுது இந்த அமைப்பு மூலமாக தக்க சமூக அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஸ்வராதார் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
"நேர்மையாக கூற வேண்டுமென்றால், நாங்கள் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, நாங்கள் இத்தகைய நலிவுற்றோரின் வீடு வீடாகச் சென்று கலைஞர்களை எங்களிடம் சேர அழைப்போம், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எங்கள் அழைப்பை ஏற்க மாட்டார்கள். அந்த நிலைமையில் இருந்து இப்பொழுது எங்களிடம் 500 கலைஞர்கள் உள்ளனர், இது எங்களுக்கு பெரிய வளர்ச்சியாகும்." என்று ஹேமலதா பெருமிதத்துடன் கூறுகிறார்.
ஸ்வராதார் இந்நாள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது, மேலும் இவர்களைக் குறித்த ரசிகர்களின் கண்ணோட்டமும் வெகுவாக மாறியுள்ளதாக ஹேமலதா நினைக்கின்றார்.
“"நான் பிச்சைகாரர்களுடன் இணைந்து பணியாற்றுவது நன்றாக அமையாது என்று பலரும் ஆரம்பத்தில் கூறினர். ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எங்களைத் தேடி வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது இந்தக் கலைஞர்களுக்கு தங்களுக்கென தனி அடையாளமும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் ஏற்பட்டுள்ளது.."
இசை தரும் சுயசார்பும் தன்னிறைவும் :
கண்பார்வையற்ற 36 வயதான சேத்தன் பாட்டீல், மனம் உடைந்து போய் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தருவாயில் இருந்தார். அந்நேரத்தில் ஸ்வராதார் இவருடைய வாழ்க்கையையே மாற்றியது. ஹேமலதா கூறுகையில்,"அவரது குடும்பம் அவரை தனிமையில் விட்டது மேலும் அவர் செல்ல எந்த இடமும் இல்லை. மேலும் அவர் ரயில்வே காவலர்களிடமும் பயங்கரமாக அடிவாங்கும் நிலையும் ஏற்பட்டது. அவர் இப்பொழுது எங்கள் அமைப்பில் பல முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறார், மேலும் அவர் எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார உதவி (sponsorship) அளிப்பவர்களை தொடர்பு கொள்ளும் பொறுப்பிலும் இருக்கிறார்."என ஹேமலதா கூறினார்.
ஒரு சாதாரண இசை நிகழ்ச்சிக்கு 3 கலைஞர்கள்,ஏனைய இசை வாத்தியங்கள் மற்றும் இதர அமைப்புகள் சேர்த்து சுமாராக 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை ஒரு குழுவிற்கு செலவாகும்."எங்களுக்கு உதவி செய்ய எங்களிடம் CSR பங்காளர்களும் உள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல் எங்களது நிகழ்வுகளும் அமையும்.", என ஹேமலதா கூறினார்.
அமிதாப்பச்சனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்வராதார் பாடகர்கள் மிகவும் சிலிர்ப்படைந்தனர். மேலும் அமிதாப் பச்சனும் அவர்களது திறமைகளைக் கண்டு வெகுவாக கவரப்பட்டார்.
ஹேமலதா தற்போது டெல்லியில் உள்ளார், மேலும் அவர் இதேபோன்ற திட்டத்தை தலைநகரான டெல்லியிலும் செயல்படுத்த வேலைகள் செய்து வருகிறார்.
"நான் இப்படிப்பட்ட மக்களை பீடித்திருக்கும் நோயை தீர்க்க விரும்புகிறேன். ஒரு கலைஞன் எப்போதும் ஒரு கலைஞனே ஆவான், அவன் எங்கிருந்து வருகிறான் என்பதற்கு எந்த அடிப்படையும் தேவைப்படக்கூடாது ."
ஹேமலதா ஒரு ஆழமான சிந்தனையை நம்மிடம் விதைத்திருக்கிறார் அது என்னவென்றால், "நீ மாற்றத்திற்கான காரணமாக வேண்டுமென்றால் அதற்காக நீ தினந்தோறும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். சமுதாய வேலை என்பது வார இறுதி நாட்களில் செய்யும் ஒரு குறிப்பிட்ட வேலையாக மட்டும் அமையக்கூடாது." என்பதே ஆகும்.