Welcome..! Join us to Develop your Humanity
ஐந்தாயிரம் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படச் செய்த புதுமை விரும்பி - கன்வல் சிங் சவுகான் ( Kanwal Singh Chauhan).
விவசாய முறைகளில் புதுமைகளையும் , ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் செய்பவர்களுக்கு கன்வல் சிங் சவுகான் என்னும் விவசாயி ஊக்க சக்தியாக விளங்கி வருகிறார். இவர் ஹரியானாவில், சோனிப்பட் அருகில் உள்ள அடேர்னா என்கிற இடத்தில் வசிக்கிறார். இவர் தனது படைப்புகளுக்காக பெருமைமிகு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை சிறிய ரக மக்காச்சோள வகையான பேபிகார்ன் (Baby Corn) அவ்வளவு எளிதாக எல்லா இடத்திலும் கிடைக்காது. ஆனால் தற்போது இவை எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும், தெருவோரக் கடைகளிலும் , உணவகங்களிலும், வீடுகளிலும் எளிதாகக் கிடைக்கிறது.
உலக அளவில் தாய்லாந்தில் தான் இந்த வகை சிறிய ரக மக்காச்சோளம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு நம் நாட்டில் இறக்குமதியாகி வந்தது .ஆனால் 1990 களின் இறுதிப்பகுதியில் கன்வல் சிங் செய்த புதுமை முயற்சியால், இது தற்போது நமது நாட்டிலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
சிங் தனது பதினைந்தாம் வயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் 1997 இல் தான் அவருக்கு இந்த சிறிய ரக மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் எந்தவிதமான சிறிய ரக மக்காச்சோளமும் எங்குமே பயிரிடப்படவில்லை. தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இதன் விலை கிலோவிற்கு ரூபாய் நான்காயிரம் என்று இருந்தது. இந்நிலையை மாற்ற எண்ணி சிங் தனது நிலத்தில் சிறிய ரக மக்காச்சோளத்தை பயிரிட விரும்பிய போது இவரது கிராம மக்கள் இவரை குறை கூறினார்கள். இது நெல் அல்லது கோதுமைப் பயிரைப் போல லாபகரமாக இருக்காது என்று அறிவுரை கூறினார்கள்.
நெல் அல்லது கோதுமைப் பயிர் வருடத்திற்கு ஒருமுறைதான் அறுவடைக்கு வரும் என்கிற நிலையில் இந்த சிறிய ரக மக்காச்சோளத்தை வருடத்திற்கு மூன்று முறை அறுவடை செய்ய முடியும் என்கிற நிலையில், கன்வல் சிங்கின் இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றது.
சிங்கின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியானது அக்கம்பக்கத்தில் பிறவி பிறகு அவருடைய முழு கிராமமும் இந்த சிறிய ரக மக்காச்சோளத்துக்கு மாறிவிட்டது. தற்போது சோனேபட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் இந்த சிறிய ரக மக்காச்சோளத்தை பயிரிடுவதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறார்கள்.
இந்த வகை மக்காச்சோளத்தை பயிரிடுவது ஒருபுறம் என்றால் இதற்கான லாபகரமான சந்தையை உருவாக்குவது முக்கியமான விஷயமாகும். இதையும் சவுகான் சாதித்துக் காட்டினார்.
ஆரம்பத்தில் கிலோ ரூபாய் 70 க்கு விற்பனை செய்துவந்த நிலையில் மக்காச்சோளத்தின் விளைச்சல் பெருகியதால் நிலையாக கிலோவிற்கு ரூபாய் 60 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயமான விலை கிடைக்க வழிவகை பிறந்தது . உள்ளூர் மண்டியில் விற்றாலும் ,உணவுத் தொழிற்சாலைகளுக்கு விற்றாலும் இந்த நிர்ணயம் பின்பற்றப்பட்டது.
சிறிய ரக மக்காச்சோளத்தோடு கூட காளான் வளர்ப்பு , இனிப்பு மக்காச்சோளம், தக்காளி மற்றும் வழக்கமான தானிய வகைகளையும் சவுகான் விளைவித்து வருகிறார்.
2009 ஆம் ஆண்டு வாக்கில் இந்த சிறிய ரக மக்காச்சோளத்தின் விளைச்சலுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக, மூன்று வருடங்கள் வரை தாக்குப் பிடிக்கும், பதப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை கேன்களில் அடைத்து விற்கும் பணியில் இவர் ஈடுபட்டார். இந்த முயற்சியில் வெற்றி கண்ட இந்த எளிமையான விவசாயி, தற்போது பதப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை கேன்களில் அடைத்து, அவற்றை இங்கிலாந்து வரை ஏற்றுமதி செய்து வருகிறார்.
சவுகான் தனது அயராத முயற்சியால் அறுவடை காலங்களில் அவர் நாள்தோறும் 5 லிருந்து 10 டன் வரையிலான சிறிய ரக மக்காச் சோளத்தை அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உள்ளார். இதோடு கூட இரண்டு டன்கள் வரை பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்ட மக்காச் சோளமும், 1.5 டன் அளவில் இயற்கையான சிறிய ரக மக்காச்சோளமும் சோனேபட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆரம்பத்தில் இவருக்கு வருடத்தில் ஒரு சில லட்சங்களே வியாபாரம் ஆகி வந்த நிலையில், தற்போது கேன்களில் அடைக்கப்பட்ட தயாரிப்புகளும், இயற்கையான மக்காச்சோள ஏற்றுமதியும் சேர்ந்து வருடத்திற்கு 18 முதல் 20 கோடிகள் வரை வியாபாரம் ஆகிறது.
இவருடைய பகுதிகளில் சவுகான், கூட்டுப்பண்ணை முறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் கால்நடை வளர்ப்பும், பயிர் உற்பத்தியும் ஒன்றையொன்று சார்ந்து, நீடித்த செயல்முறைகளுக்கு வழிவகுக்கிறது.
இவ்விதமான கூட்டுப்பண்ணை வழிமுறைகள் என்னவென்றால், முதலாவதாக, நிலத்தில் அறுவடை ஆகும் பயிரின் அனைத்து உற்பத்தி பொருட்களும் வீணாகாமல் பயன்படுத்தப்படவேண்டும். உதாரணத்திற்கு , அறுவடைக்குப்பின் சோளத்தட்டுகளும், காளான்களின் மிச்சம் மீதிகளும் இயற்கை எரு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் இயற்கை எரு உருவாக்கப்படுகின்றது. நிலத்திலிருந்தும், பண்ணையிலிருந்தும் கிடைக்கும் எந்த பொருளும் வீணாவதில்லை. இதுவே கூட்டுப் பண்ணை வழிமுறையாகும்.
இத்தகைய விவசாய விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சந்தையின் வெற்றிப் பின்னணியில் இந்த எளிமையான விவசாயின் உறுதியான எண்ணமும், புதுமையை புகுத்தும் நம்பிக்கையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இவருடைய முயற்சியால் காலம் காலமாக நெல் மற்றும் கோதுமை மட்டுமே பயிரிட்டு வந்தவர்கள், மாற்றுப்பயிர் முறைகளுக்கு மாறியது மட்டுமின்றி மிகவும் லாபம் ஈட்டும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டுள்ளனர் . இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கன்வல் சிங்கின், பதப்படுத்தப்பட்ட சோளத்தை கேன்களில் அடைக்கும் தொழிலகத்தில் மட்டும் 200 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
சிங்கின் கூற்றுப்படி எதிர்கால இளைய சமுதாயத்திற்கு விவசாயத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது. ரசாயன பொருட்களின் தீமைகள் பற்றிய அறிவும், விழிப்புணர்வும் அதிகமாகி, அதன் விளைவாக, இந்தியாவின் உணவு உற்பத்தி திறன் மேம்பட்டு, இந்தியா தனது தொடர்ச்சியான முயற்சியால் உலகத்தின் உணவுக் கூடையாக விரைவில் மாறும் என்று கன்வல் சிங் சவுகான் உறுதியாக நம்புகிறார்.