Welcome..! Join us to Develop your Humanity
அபிஷேக் ரே
இந்தி திரைப்பட இசை அமைப்பாளராக தான் சேமித்த பணத்தில் ஒரு மலைப்பகுதியை வாங்கி, அதில் வனவிலங்கு சரணாலயத்தையே அமைத்தவர்.
2014 ல் இசை அமைப்பாளர் அபிஷேக் ரே தனது சொந்தமான வனப்பகுதியில் நடந்து சென்றபோது குறுக்கே ஒரு பெண் புலியை கண்டவுடன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார்.அந்த இரவு நேரத்தில் நிலவொளியில், புல்வெளியில் புலி படுத்து கிடந்தது. புலியை நோக்கி அவர் நடக்க, முதலில் அவரை சந்தேகமாக பார்த்த புலி, பிறகு தரையில் பதட்டமின்றி படுத்துக் கொண்டது. அதை பல பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார் ரே.அரை மணி நேரத்திற்கு பிறகு அது சாவகாசமாக குப்புறப்படுத்து கொண்டது. மற்ற காட்டு விலங்குகள் போல, இரவு நேரத்தில் மனிதர்களை பார்த்தவுடன் மிரட்சி அடையாமல் இருந்தது, அந்தப் புலி மனிதர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும் என்று அவர் குறிப்பிடுகிறார் .
அந்த தருணத்தில்தான் திரு.ரே அவர்களுக்கு ஒரு மலைப்பகுதியை வாங்கி அதை வனவிலங்கு சரணாலயமாக உருவாக்கிய தன் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததை உணர்ந்தார் .இந்த நிகழ்ச்சி, தன் வாழ்வில் ஏற்படக்கூடிய எந்த ஒரு இடர்பாடுகளையும் சந்திக்கக்கூடிய சக்தியையும், நம்பிக்கையையும் கொடுத்ததாக கூறுகிறார் ரே.
பாலிவுட் என்கிற ஹிந்தி திரைப்படத் துறையில்" பான் சிங் தோமர்","சாகிப் பிவி ஆர் கேங்க்ஸ்டர்" மற்றும் "வெல்கம் பேக்" போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர் தான் அபிஷேக் ரே. அவர் கார்பெட் தேசிய பூங்காவின் அருகில் சீதா பானி வனவிலங்கு சரணாலயம் என்பதை நடத்தி வருகிறார். அவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர், பாதுகாவலர் மற்றும் புலிகளை கண்காணிப்பதில் பயிற்சி பெற்றவர்.
சிறுவனாக இருக்கும்போது மிருக காட்சிசாலைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கும் என்று ரே கூறினார். அந்த மிருகங்கள் தங்களுடைய வாழுமிடத்திற்கு சென்று சுதந்திரமாக சுற்றித்திரியும் காட்சியை பார்க்க வேண்டும் என்ற கனவுடனே ரே வளர்ந்தார்.
வனவிலங்குகளை ஆங்கிலத்தில் wildlife ( வைல்ட் லைப் )எனக் கூறுவதே ஒரு மிகப் பெரிய சதி வேலை என்கிறார் ரே. படித்த அறிவு பெற்ற ஒரு சிலர் இயற்கையாக வாழக்கூடிய உயிரினங்களை கட்டுப்படுத்த அல்லது பணிய வைக்க முயற்சித்து தோல்வியுறும்போது ஒட்டுமொத்தமாக அவைகளை "காட்டு" விலங்குகள் என கூறி விடுகிறார்கள் என விளக்குகிறார் ரே.இந்த பூமியிலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தி கொள்ள மனிதர்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமை உண்டு எனவும் மற்ற காட்டு விலங்குகளை எல்லாம் ஏதோ ஒரு சிறு தீவில் அல்லது மிருகக்காட்சிசாலையில் அடைத்து விட வேண்டும் என எண்ணுகிறார்கள். இந்த தவறான கண்ணோட்டத்தை தான் மனிதகுலவளர்ச்சி என்றும் மனிதனை மேம்பட்டவன் என்றும் கூறுகிறார்கள்.
வனப்பகுதிகளை மனிதன் தன் வசம் ஆக்கிக் கொண்டால் விரைவில் வன விலங்குகள் அழிந்து போகும் என்பதை உணர்ந்தார் ரே.தன்னுடைய சேமிப்பு பணம் முழுவதையும் கொடுத்து ஒரு நிலத்தை வாங்கி அதில் வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதை பார்க்க முடிவு செய்தார் .அதாவது காடுகள் என்ற பூர்வீக சொத்தை அதன் உரிமையாளர்களான வனவிலங்குகளிடமே ஒப்படைக்க முடிவு செய்தார்.
இயற்கையிலேயே அவருக்கு புலிகளின் மீது உள்ள ஆர்வத்தினால் ரண்தாம்போர் தேசிய பூங்காவில் பணிபுரிந்த டாக்டர் ஜீ.வி. ரெட்டி அவர்களிடத்தில் இருந்து புலிகளின் அசைவுகள், பார்வை மற்றும் சப்தங்களின் அர்த்தங்களை சுலபமாக கற்றுக் கொள்ள முடிந்தது. " காடுகளை பற்றி அறிந்துகொள்ள முனைப்புடன் உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொண்டால் போதும் ,அது ஒரு திறந்த புத்தகம் போல உங்களுக்கு பல்வேறு துப்புகளை அது தரும். அந்த துப்புகளை புரிந்துகொண்டால் காட்டில் வாழும் உயிரினங்களின் பல ரகசியங்களும் ,புதிரான வாழ்க்கை முறைகளும் நமக்குப் புலப்படும்" என்று உற்சாகமாக கூறுகிறார் ரே.
நமது நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புலிகளின் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலராக கலந்து கொள்வதை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார். காடுகளுக்கு சென்று புலிகளை கண்காணித்து அவற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் மிகுந்த பொறுமையும், மனம் லயித்து செய்யும் பாங்கும்,கூர்மையான ஐந்து புலன்களும்,சகிப்புத்தன்மையும் அவசியம்"என்கிறார் ரே.
கார்பெட் வனப்பகுதியில் ஒருமுறை மலையேற்ற பயிற்சியின் போது ஒரு பெரிய மலையை ரே கவனித்தார். அந்த மலையை சுற்றியுள்ள கிராமத்தினர் அதன் மரங்களை வெட்டியும் மற்ற வளங்களையும் எடுத்துக் கொண்டதால் அந்த மலையே பொட்டல்காடாக உயிர் துடிப்பு இல்லாமல் காணப்பட்டது. சால்மரக்காடுகள் சூழ்ந்து இருக்க, ஒரு குன்றின் நடுவே நீரோடையோடு அந்த மலையை பார்த்தவுடன், இது தான் தனது கணவுத்திட்டத்திற்கான இடம் என தோன்றியது. மான்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகளும் வந்து செல்கிற அந்த மலை ரேவுக்காகவே காத்திருந்தது போலும்.
இந்தி திரைப்படத்துறையில் 5 வெற்றிப்படங்களை கொடுத்து ,விருதுகளையும் பெற்று பிரபலமடைந்தார் ரே.ஏற்கனவே திட்டமிட்டபடி, தான் ஈட்டிய வருமானத்தில் சரணாலயத்திற்கான இடத்தை வாங்கி விட்டார் .டில்லி, மும்பை பகுதிகளில் ஆடம்பர சொகுசு வீடு வாங்குவது என்பது நல்ல பாதுகாப்பான முதலீடு. வழக்கமாக மற்றவர்கள் செய்வதை தவிர்த்து நான் காடுகளில் செய்த முதலீட்டை எனது நண்பர்களும், குடும்பத்தினரும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர்.
இடத்தை வாங்கிய உடனே, அதில் ஒரு நீர் நிலையை உருவாக்கினார். அது இரும்பை ஈர்க்கும் காந்தம் போல வனவிலங்குகளை தாகம் தீர்க்க,தன்னை நோக்கி ஈர்த்தது.மேலும் இயற்கை வழியில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி, வருடம் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தார்.களை எடுக்கபட்டு அங்கு பசுமையான புல் தரை அமைக்க விதைகள் விதைக்கப்பட்டன. ஒரு பகுதி பரந்த புல்வெளி ஆகவும் மற்ற பகுதிகளில் ஆலமரம், அத்திமரம், நாவல் மரம் மற்றும் காட்டு மாமரங்கள் போன்ற உள்ளூர் மரக்கன்றுகளை நட்டார். ஒரு காலத்தில் மரங்கள் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பல் நிறைந்து இருந்த மண் தற்போது பசுமையான மரங்கள் நிறைந்த பகுதியாக மாற,வனவிலங்குகளும் அந்த மலையை நோக்கி வரத் தொடங்கின.
இன்று 600க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளும், பலவகையான வன விலங்குகளும் மனிதர்களின் தொல்லையின்றி நிம்மதியான சூழ்நிலையில் உள்ளன .புலிகள், சிறுத்தைகள் மற்றும் கருப்பு கரடிகள் நிறைய உள்ளன. ஆயிரம் மீட்டர் உயரத்தில் சாலிமரக்காடுகள் மற்றும் கருவாலி மரக்காடுகளை நோக்கி இமயமலை மற்றும் சமவெளி பறவைகள் வந்து செல்கின்றன. இவை தவிர கழுதைப்புலி, நீர் நாய் மற்றும் புனுகு பூனைகளை அவ்வப்போது காணமுடியும்.
புலிகளை பார்வையிட, வசதியான இடங்களில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் உள்ளன. உத்தரகண்ட் பகுதியின் குமானி கட்டிடங்கள் போன்று கற்களை கொண்டு எளிமையாக கட்டப்பட்டிருக்கும் .அங்கு நமது பாரம்பரிய உணவும் , இமாலயா மினரல் வாட்டர் மட்டுமே கிடைக்கும். இதைத் தவிர வேறு எந்த வசதியும் கிடையாது .இது போன்ற வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகளின் தேவைகள்தான் முக்கியத்துவம் பெறுகிறதே அன்றி மனிதர்களுடையது அல்ல !
"இங்கு வருபவர்கள் இங்குள்ள சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தே ஆக வேண்டும் .மிகவும் பிரகாசமான விளக்குகள், சத்தமான இசை, தொலைக்காட்சி, தொலைபேசிகள் மற்றும் காய்ந்த மரச்சுள்ளிகளைப் போட்டு அதற்கு தீ வைத்து மகிழ்வது போன்றவைகள் இங்கு செய்யவே கூடாது." இங்குள்ள கிராம மக்களிடம் பேசும்போது சுற்றுச்சூழல் அமைப்பை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். "நிறைய கிராம மக்களுக்கு வனவிலங்கு என்றால் தொல்லையாகவும்,சிலருக்கு வெறும் உணவாகவும் மட்டுமே தெரிகிறது .காட்டுப்பன்றி, குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்றால் நமக்கு சரியான அளவில் புலிகளும் ,சிறுத்தைகளும் காட்டுக்குள்ளே தேவை என அவர்களுக்கு புரிய வைக்கிறேன். எனவே இந்த புலிகள் விவசாய நிலங்களை மறைமுகமாக பாதுகாக்கிறது என்றே சொல்லலாம்"
சில நாட்கள் இசை அமைப்பாளராகவும், சில நாட்கள் வனவிலங்கு பாதுகாவலராகவும் செயல்படுகிறார் ரே.இதில் ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்க இயலாது .மேலும் இந்த இரண்டுமே ஒன்றின் மேல் ஒன்று சார்ந்துள்ளது." திரைப்படத்துறையில் உள்ள மலிவான போட்டி பொறாமையில் சிக்கி, மனம் நொந்து இருக்கும் போது, இந்த இயற்கை காடுகள் தான் என்னை மீட்டு எடுத்து சுத்தப்படுத்தியது" என்கிறார் ரே.மேலும் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் என்கிற முறையில் வனப்பாதுகாப்பு என்ற செய்தியை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கூறுவது சுலபமாக உள்ளது.
வனவிலங்குகள் நமது நாடு உயிரோட்டத்துடன் இருக்க உதவும். சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்பட்ட இந்த சரணாலயத்தினால் சுற்றுலா வாய்ப்புகள் அதிகரிக்கும், சுத்தமான காற்று ,சுத்தமான நீர், மழை மற்றும் வளமான மண்ணும் நமக்கு கிடைக்கும் என்கிறார் ரே.
"இன்றைக்கு வனவிலங்குகளை பாதுகாத்தால், நாளைய பாரதம் பாதுகாப்பாக இருக்கும்" என்கிறார். செவிக்கு பாடல்களையும், புவிக்கு காடுகளையும் அமைத்துக்கொடுத்த அபிஷேக் ரே அவர்கள்.