Welcome..! Join us to Develop your Humanity
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இயற்கை விவசாய பண்ணைப் பள்ளியை நிர்வகிப்பதற்காக நகர வாழ்க்கையை விடுத்து வந்த ஒரு தம்பதியின் கதை இது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவுகளிலும் 7 மணியளவில், 'மாணவர் கடல் ஆமை பாதுகாப்பு வலையத்'தின் (Students Sea Turtle Conservation Network - SSTCN) தொண்டர்கள் ஒன்று கூடி நீலாங்கரை கடற்கரையிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெசன்ட் நகர் கடற்கரை வரை நடக்கிறார்கள். இந்த 'கடல் ஆமை பாதுகாப்பு வலையத்'தில் பெரும்பாலும் மாணவர்களே இருக்கிறார்கள். இந்த அமைப்பு 1987 முதல் அழிந்துவரும் இனமான 'ரிட்லி ஆமைகள்' பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையின் கடற்கரைகளில் செயல்பட்டு வருகிறது..
இந்த 'ஆமை நடைபயணத்'தில் பங்கெடுக்கும் பெரும்பாலான தொண்டர்களிடையே 'அருண் அண்ணா' என்ற பெயர் மிகவும் பிரபலமானது. இந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான அருண் வெங்கட்டராமன் கடந்த சில வருடங்களில் நூற்றுக்கணக்கான நடை பயணங்களை செயல்படுத்தி உள்ளார்.
பொறியாளராக இருந்து சுற்றுப்புற மேம்பாட்டு ஆர்வலராக செயல்படுகின்ற இவர், 'காட்டு வழி' (அதாவது Forest Way) என்னும் இயற்கை பாதுகாப்பு தன்னார்வ அமைப்பிலும் 'மருதம் பண்ணைப் பள்ளி' என்ற ஒரு பள்ளியிலும் துணை நிறுவனராக இருக்கிறார். 11 வருடங்களுக்கு முன்பு, 2009 ஆம் ஆண்டு, அருண் அவர்களும் அவருடைய மனைவி பூர்ணிமா அவர்களும் மருதம் என்னும் அமைப்பை தொடங்குவதற்காக சென்னை நகரத்தை விட்டு திருவண்ணாமலைக்குக் குடி பெயர்ந்தனர். தகுதி வாய்ந்த பொறியாளராக இருந்தும் ஆசிரியர் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக B.A. மற்றும் B.Ed படிப்புகளைப் படித்தார். சென்னையில் உள்ள கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பள்ளியில் சுற்றுப்புற சூழல் சம்மந்தமான கல்வியை பயிற்றுவித்தார். இவருடைய மனைவி திருமதி பூர்ணிமா அவர்களும் தியாசபிகல் சொசைட்டி நடத்துகின்ற ஆல்காட் (Olcott) மெமோரியல் பள்ளியில் வேலை பார்த்து வந்தார்
அந்த சமயத்தில் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக இங்கிலாந்திலிருந்து திருவண்ணாமலைக்கு கோவிந்தா-லீலா தம்பதியினர் வந்திருந்தனர். அவர்களோடு தொடர்பு ஏற்பட்ட சமயத்தில் அருண் தம்பதியினருக்கு, நிலையான வாழ்க்கைக்குத் தேவையான ஒருங்கிணைந்த ஒரு மாற்றுப் பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோவிந்தா-லீலா தம்பதியினர் மரங்கள் வளர்ப்பதற்காகவும் காடுகளை பாதுகாப்பதற்காகவும் தங்களது திட்டமான 'காட்டு வழி' (அதாவது Forest Way) என்கிற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கும், நன்கொடையாக பெறப்பட்ட நிலத்தில் மருதம் என்ற ஒரு பண்ணைப் பள்ளி தொடங்குவதற்கும் அருண் தம்பதியினரின் உதவியை நாடினர்.
அவர்களுடைய முதல் சவாலானது
பாறைகள் நிறைந்த, குறைவான மரங்களை உடைய அந்த இடத்தை எவ்வாறு பண்படுத்தி அதனைப் பசுமை பிரதேசமாக மாற்றுவது என்பதுதான். மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள தொண்டர்களைக் கொண்டு எண்ணற்ற மரங்களை நட்டார். அதோடு, ஏற்கனவே உள்ள மரங்களையும் காட்டுத் தீயில் இருந்து பாதுகாத்தார். தூசுப்படலம் நிறைந்த அந்த மண்ணில் மெல்ல மெல்ல தாவரங்கள் வளரத் தொடங்கின. அடுத்து இயற்கைப் பண்ணையுடன் கூடிய பள்ளியையும், இளஞ்செடிக் கன்றுகள் பண்ணையையும், கைகளால் தயாரிக்கப்பட்ட சாதனங்களுடன் கூடிய ஒரு விளையாட்டு மைதானத்தையும் நிறுவினார். 2009 ஆம் ஆண்டு அந்த பள்ளி 'திருவண்ணாமலை கற்றல் மையம்' என்ற பெயரில் 20 மாணவர்களுடன் செயல்படத் துவங்கியது. ஆரம்பத்தில், ஆறு அல்லது ஏழு ஆசிரியர்களுடன் செயல்பட்டது. இரண்டு குடும்பங்களும் அங்கே தங்கியிருந்தனர்.
மேலும் தொண்டர்கள் ஒரு சமூகமாக சேரத் தொடங்கியவுடன் மிக எளிமையாக, சுற்றுப்புற சூழலுக்கு உகந்தபடி நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டி வந்தது. அதனால், செலவு குறைந்த சில வசதிகள் சேர்க்கப்பட்டன. 2011ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு 'மருதம் பண்ணைப் பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2012ஆம் ஆண்டு இந்தப் பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துவதற்காக முறையான அங்கீகாரத்தை ஆரம்ப கல்வித் துறையின் மூலம் பெற்றது.
மருதம் பண்ணைப் பள்ளியில் அடிப்படைக் கொள்கையான அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையின் காரணமாக பல்வேறு பின்னணி கொண்ட மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் திருவண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்தாலும் வெகுதூரத்தில் நகரத்தில் இருக்கும் மாணவர்களும், சில வெளிநாட்டு மாணவர்களும் கூட பயில்கிறார்கள். இந்தப் பள்ளி, கற்றலில் குறைபாடுகள் உள்ள மாணவர்களையும் வரவேற்பதுடன் அவர்களால் கொடுக்க முடிந்த அளவு கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மீதமுள்ளவை நன்கொடையாளர்கள் மூலமாக சமாளிக்கிறது.
'மருதம்' மாற்றுக் கல்வி முறையைப் பின்பற்றுவதால் அது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அவர்களுடைய இயல்பான வேகத்தில் கற்றுக்கொள்வதற்கு உதவிகரமாகவும் இருக்கிறது. இந்தக் குறிக்கோளுடன், பாடங்கள் இருமொழி பாடத்திட்டத்துடனும், வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் இருக்கிறது. மாணர்களுக்கு பொதுவான பாடங்களுடன், தொடர்பு செய்யும் திறமையும், செயல்முறை அறிவும் கொடுக்கப்படுகின்றன. குழந்தைகளை நேரடியாக இயற்கையுடனும் அவர்களைச் சுற்றி இருக்கின்ற சமூகத்துடனும் இணைக்கின்ற ஒரு கல்வித்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் அதனை தொடர்ச்சியாக மேம்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. உதாரணமாக மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அவர்களுக்கு பிடித்த முறையில் மண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் சமைத்தல் மூலம் கணிதம் போதிக்ப்பபடுகிறது. பண்ணை விவசாயம், தையல், தோட்டக்கலை, தொழு உரம் தயாரித்தல், மரவேலை செய்தல், சமையல் கலை முதலிய கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் அருகில் இருக்கும் அருணாச்சல மலையின் மேல் ஏறி அமைதியான காலை நேரத்தை இயற்கையுடன் செலவிடுகின்றனர். மலையிலிருந்து திரும்பி வரும்போது இயற்கை உரப் பண்ணைகளில் நேரத்தை செலவிடுவதோடு அந்தக் கலையையும் கற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் திரைப்பட நாள். வருடத்திற்கு ஒருமுறையாவது மாணவர்கள் சேர்ந்து வந்து தங்களது திரையரங்க தயாரிப்பை செயல்படுத்தி காட்டுகிறார்கள்.
அருண் அவர்களின் வழிகாட்டுதலின்படி குழந்தைகளும் 'ஆமைகள் பாதுகாப்பு நடைபயணம்' மேற்கொள்கின்றனர் அத்துடன் அவர்கள் அருகிலுள்ள ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடி மக்களுடன் பேசுகிறார்கள். மேலும் மழைக்காடுகளை பற்றி அறிந்துகொள்ள கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளுக்கும் விஜயம் செய்கிறார்கள்.
மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டுமா என்பதை அவர்களே தீர்மானிப்பதும் அப்படி எழுத வேண்டுமென்றால் எந்த முறை தேர்வினை (CBSE/State Board) எழுத வேண்டும் என்பதும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதும் நமது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. மருதம் அமைப்பானது தனது உணவுத் தேவைகளில் 85 சதவீதத்தை தனது இயற்கை உர பண்ணைகளின் மூலமே பெறுகிறது. இதில் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள், காய்கறிகள் அனைத்தும் அடங்கும். அங்கு உள்ள குடும்பங்கள் அதிகாலையில் எழுந்து அங்குள்ள பண்ணையையும், காய்கறி தோட்டங்களையும் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களும் செடிகளுக்கு மேலே போர்வை விரிப்பு இடுதல், நெற்கதிர்களை போர் அடித்தல் முதலிய பண்ணை வேலைகளில் ஈடுபடுகின்றனர். பண்ணையில் இருக்கும் ஏழு பசுக்கள் மூலம் கிடைக்கும் சாணம் சிறுநீர் மூலம் இயற்கை உரமும் இயற்கை எரிவாயுவும் தயாரிக்கப்படுகின்றன. அந்தப் பசுக்களுடன் நான்கு நாய்களும் இரண்டு பூனைகளும் எண்ணற்ற பறவைகளும் வசித்து வருகின்றன. நிலையான வாழ்க்கையை அரவணைத்துச் செல்கின்ற மருதம் இன்று 5 குடும்பங்கள் 23 ஆசிரியர்கள் 70 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள அனைவரும் அதனை மனதார நேசிக்கிறார்கள். இந்தியாவின் அடுத்த தலைமுறையினர் தனது தினசரி வாழ்க்கையயை இயற்கையோடு இணைந்ததாக மாற்றுவதற்கு இது போன்ற ஊக்கங்கள் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம்.