Welcome..! Join us to Develop your Humanity
போபாட் - பிச்சைக்காரன் - தினம் ஒரு கோப்பை தேநீர் - கோபுரமாக வளர்ந்த கதை.
வெறுப்பு, கொடுமை, பேராசை மண்டிக்கிடக்கும் மனம்படைத்த ஒரு சில மனிதர்கள் வாழும் இம்மண்ணில் மனிதநேயத்துடன் வாழ்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை.
வழக்கமாக நாம் ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாவது கொடுத்து அதற்காக அவன் பணம் திருப்பிக் கொடுத்தால் என்ன செய்வோம்? சிலர் அவரிடம் வேண்டாம் என்று சொல்லலாம். சிலர் அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இந்த சம்பவத்தில் பிச்சைக்காரனிடம் இருந்து பணம் பெற்றவரும் மனிதநேயம் மாளவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார். மௌனி பாபா என்பவர் குஜராத்தில் புஜ்ஜில் (Bhuj) உள்ள பிஹாரி லால் மகாதேவ் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு இக் கோயிலுக்கு போபாட் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட பிச்சைகாரன் சிறிது நேரம் இளைப்பாற வந்தான். அப்போது அர்ச்சகர் தேநீர் வழங்கினார். பதிலுக்கு போபாட் பணம் கொடுத்தான். அர்ச்சகருக்கு பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. பல செல்வந்தர்கள் கோயிலுக்கு பணம், இனிப்புகள் மற்றும் நகைகளை வழங்க வருவதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் பிச்சைக்காரன் பணம் கேட்டு, அதைக் கொடுக்காமல் போனவர்களையும் பார்த்திருக்கிறார். கோவில் வளாகத்தில் இப்படி ஒரு செயல் நடந்து அவர் பார்த்ததேயில்லை. ஒரு பிச்சைகாரன் தான் பெற்ற பிச்சைக்கு சன்மானம் கொடுப்பது, இது முதன்முறையாக அவருக்கு தோன்றியது.
நாட்கள் செல்லச் செல்ல போபாட் தினமும் கோவிலுக்கு வருவதும், அவருக்கு அர்ச்சகர் தேநீர் கொடுப்பதும், பதிலுக்கு போபாட் பணம் கொடுப்பதும் வழக்கமாயும், வாடிக்கையுமாய் ஆனது. அவர் மனநலம் பாதித்ததால், அவர் கொடுத்த நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் மௌனி பாபா அதை ஒருபோதும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் போபாட் கொடுத்த பணத்தை தனி கணக்காக பராமரிக்கத் தொடங்கினார். இதே கதை 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தது. எப்போதும் பிச்சைக்காரனின் மொழி மௌனம் தான்.
இந்த நிகழ்வை அர்ச்சகர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு செய்தியாக கீழ் கண்டவாறு பதிவிட்டார்.
இங்கே 1973 முதல் தினமும் போபாட் என்ற பிச்சைகாரன் கோவிலுக்கு வருகிறார். சுவாமி தரிசனத்துக்குப் பின் அவருக்கு நாங்கள் தேனீர் அளிப்போம். மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தேநீருக்கு பணம் கொடுக்க மறந்து போகவில்லை. அவரது பங்களிப்பு தற்போது ரூ 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
சிறு துளி பெரு வெள்ளமாக மாறியுள்ளது போல் அவரது பணம் கணிசமான தொகையாக மாறியது. நல்ல உள்ளம் கொண்ட மௌனிபாபா ஒரு சபூத்ரா - புறாக் கோபுரம் கட்ட முடிவு செய்தார். சபூத்ரா என்பது குஜராத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் கட்டமைப்பாகும். ஒரு கோபுரத்தின் மேலே எண்கோண அல்லது ஐங்கோண வடிவ மாடங்களுடன் மேலே அடைக்கப்பட்டு பறவைகள் கூடு கட்டக்கூடிய பல துளைகளுடன் காணப்படும் ஒரு கட்டடம்.
"போபாட்டின் பெயரை சபூத்ராவில் அதன் நன்கொடையாளராக பொறிப்பதன் மூலம் நிரந்தரமாக வைத்து இருக்க முடிவு செய்தோம்" என்று மௌனி பாபா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்திருந்தார்.
சாதாரணமாக ஊரை சுற்றி வந்து, டோபி தாலன் பகுதியில் உள்ள ராஜாங்க நினைவு மண்டபங்களில் நேரத்தைக் கழிப்பது போபாட்டின் வழக்கம். சமீபத்தில் யாரோ தயாள மனம் படைத்தவர்கள் டாக்டர் சஞ்சீவ் உபாத்யாயவின் மூலம், அவனுக்கு பார்வை குறைபாடு நீக்க, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
தனக்குப் பணம் கொடுக்கும் யாரையும் போபாட் மறப்பதில்லை என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். வாய் திறந்து பேச முடியாவிட்டாலும், அவர்களை அடையாளம் கண்டு கிரீச்சிடும் சத்தத்தை எழுப்பி பதிலளிக்கிறான்.
சமுதாயத்தின் மறதியில் மங்கி மறைந்து போயிருக்கவேண்டிய போபாட் என்ற அந்த பிச்சைக்காரன், கனிந்த மனம் படைத்த, நேர்மையான உள்ளம் கொண்ட மெளனி பாபா என்கிற அந்த அர்ச்சகரால் இன்று நினைவில் நிற்கிறான்.