Welcome..! Join us to Develop your Humanity
48 வருடங்களாக ராஜஸ்தானில் ஏழை எளியோரை முன்னேற்றம் காணச் செய்த அயராத உழைப்பாளிப் பெண் - ஆலிஸ் கர்க் (Alice Garg)
திருமதி. ஆலிஸ் கர்க் (Alice Garg) சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தால் உந்தப்பட்டு சேவைப் பணியில் இறங்கினார். திருமதி. கர்க் 1972 ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட நான்கு குழந்தைகளை தனது வீட்டில் வைத்து பராமரித்து, அவர்களுக்கு உணர்வு ரீதியான மற்றும் மனவியல் ரீதியான முழு பாதுகாப்பையும் கொடுத்ததன் மூலம் சமூக சேவையில் இறங்கினார்.
இவர் 1972ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினம் அன்று பால் ரஷ்மி சொசைட்டி (Bal Rashmi Society) என்னும் சேவை அமைப்பைத் தொடங்கினார். "குழந்தைகளைக் காப்போம், தலைமுறையைக் காப்போம்" என்பதைக் குறிக்கோளாக அமைத்துக் கொண்டார். முதலில் நான்கு குழந்தைகளுடன் ஆரம்பித்த இவரது ஆதரவு இல்லமானது மெதுவாக வளர்ந்து 183 குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு புகலிடம் தரும் அன்பு இல்லமாக மாறியது. இதில், கைவிடப்பட்ட மற்றும் அனாதை குழந்தைகள் எவ்விதமான இனம் அல்லது சமய வேறுபாடு இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
திருமதி கர்க் அவர்கள் தனது இருபதாம் வயதுகளிலிருந்தே பல்வேறு சமுதாயப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். பெண்கள் விழிப்புணர்வு, தற்சார்பு, கல்வியறிவு, மனநலம் மற்றும் சட்ட ஆலோசனை, வரதட்சணை ஒழிப்பு, சிசுக்கொலை தடுப்பு, மக்கள் தொகை கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, வாழ்விடங்கள் பாதுகாப்பு, தொழிற்கல்வி ஆகிய விஷயங்களைப் பற்றி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், பில்வாரா, டோங்க், ஸவாய் மாதேப்பூர் ஆகிய இடங்களில் இவர் களப்பணி ஆற்றி உள்ளார்.
இவர் தொடங்கிய பால் ரஷ்மி சொசைட்டி (Bal Rashmi Society) மூலம் ஜெய்ப்பூர் நகரம் உட்பட ராஜஸ்தானில் உள்ள 280 ஊர்களில் 3000 குழந்தைகள், சிறார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். இவர் மேலும் 5 வயதிற்கு உட்பட்ட, கைவிடப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக கில்காரி (Kilkari) என்கிற இல்லத்தையும் தொடங்கியுள்ளார். மிகச் சிறு குழந்தைகளுக்கு தாய் தந்தையின் அரவணைப்பு வேண்டி, அவர்களைத் தக்க சட்ட வழிமுறைகளோடு குழந்தைகள் இல்லாத இந்தியத் தம்பதிகளுக்கு தத்து கொடுத்து விடவும் ஏற்பாடு செய்கிறார்.
இவர் நிராச்ரித் பால் க்ருஹ் (Nirashrit Bal Gruh) எனும் மற்றுமொரு இல்லத்தையும் நடத்தி வருகிறார். இந்த அன்பு இல்லத்தில் கைவிடப்பட்ட பெண்மணிகளின் குழந்தைகளுக்கும், ‘குற்றப்பரம்பரை’ என்று அழைக்கப்படும், சான்சிஸ் (Saansis) என்ற சமுதாயத்தின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அடைக்கலம் தருகிறார். இவருடைய சேவை அமைப்புகள் நன்கொடையாளர்களின் உதவியால் நடந்துவருகின்றன. நன்கொடைகள் மூலம் குழந்தைகளுக்கு முழுமையான மற்றும் ஊட்டச் சத்து மிகுந்த உணவு, தேவையான துணி மணிகள், நல்ல கல்வி, உடல் நல மேம்பாடு ஆகியவை கிடைப்பதை இவர் உறுதிப்படுத்துகிறார். இது தவிர, இவரது சேவை அமைப்பானது ஏழை எளிய மக்களின் சிறார்களுக்காக 5 பள்ளிகளையும், 3 பால்வாடிகளையும் நடத்தி வருகிறது.
இவரது சேவை பணிகள் இதோடு நிற்கவில்லை. இவரது தொடர்பில் உள்ள ஊர்களுக்கு சுழற்சி முறையில் நடமாடும் நூலகங்களையும் இவர் இயக்கி வருகிறார். இதோடு கூட, தேசிய போலியோ சொட்டு மருந்து இயக்கத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளாக பாசி (Bassi) தாலுகாவில், 108 கிராமங்களில் ஊரக உடல் நலச் சேவை மூலம் பெரிய அளவில் தடுப்பூசி போடும் இயக்கத்தையும் இவர் நடத்தியுள்ளார். இவரது பால் ரஷ்மி சொசைட்டியானது குழந்தைத் திருமணங்களை தடுத்தல், பெண்கள் விழிப்புணர்வு மற்றும் ஆதரவு இயக்கங்களை நடத்துதல், தொழிற் பயிற்சி வழங்குதல், ஏழ்மையான பின்தங்கிய கிராமப்புற பெண்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களை அளித்து, தொழில் தொடங்க உதவிடும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தல் ஆகிய அளப்பரிய சேவைகளை செய்து வருகிறது.
திருமதி கர்க் அவர்களின் நேரடி மேற்பார்வையில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவியும், இலவச சட்ட உதவியும் வழங்கப்படுகிறது. வளரிளம் பெண்களுக்கு மக்கள் தொகைக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் இவர் நடத்துகிறார். இது மட்டுமின்றி ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை, புத்தகப்பை, புத்தகங்கள், எழுது பொருட்கள், பணம் ஆகியவற்றையும் இவரது அமைப்பு ஏற்பாடு செய்து தருகிறது. விதவைகளுக்கும், துன்பத்தில் உள்ள பெண்களுக்கும் வழிகாட்டியாக மாதர் சங்கங்கள் அமைத்தும் இவர் உதவி செய்து வருகிறார். மேலும் ஜெய்ப்பூரில் உள்ள குடிசை வாழ் மக்களின் வசிப்பிட உரிமைகளுக்காக போராடக் கூடிய ஆலோசனைகளையும் இவரது அமைப்பு வழங்கி வருகிறது.
இவரது சேவை அமைப்பானது, ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி, குற்றப்பரம்பரை சமூகமாக கருதப்படும் சான்ஸி (Saansi) என்கிற அரைகுறை நாடோடி சமுதாயத்தை பொது நீரோட்டத்தோடு இணைப்பதற்கு பலவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது போலவே, துப்புரவுத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக திருமதி. கர்கின் 20 ஆண்டுகால சேவையும் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
இவ்விதம் சமுதாயத்தின் சீர்கேடுகளை களைந்திடவும், குழந்தைகளை பாதுகாத்திடவும், பெண்களின் சுய சார்பினை அதிகப்படுத்தவும், திருமதி. ஆலிஸ் கர்கின் 48 ஆண்டு கால உழைப்பானது ஈடு இணையற்றதாக விளங்குகிறது. இவரது வாழ்க்கையைப் படிக்கும் மற்றவர்களுக்கும் இது மாபெரும் முன்னுதாரணமாகவும், தூண்டுதலாகவும் விளங்கும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.