Welcome..! Join us to Develop your Humanity
மிதலால் சிந்தி - 87 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகளாக நடைபாதையில் வாழ்ந்துகொண்டு 600 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத உடல்களின் இறுதிச் சடங்குகளைச் செய்தவர்.
அகமதாபாத் நகரில் சுயநலமின்மைக்கும் சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக மிதலால் என்பவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாத உடல்களுக்கு இறுதி சடங்கு செய்து வருகிறார். இதுபோன்று இதுவரை 600க்கும் மேற்பட்ட உடல்களுக்கு இறுதி சடங்கு செய்து மரியாதை செய்துள்ளார்.
நாம் எல்லோரும் செய்ய தயங்கும் இந்த மிகச்சிறந்த செயலை, இவர் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார் என்பது ஆச்சரியமான உண்மை.
1967 இல் இவரது இந்த செயலைப் பார்த்து வியந்துபோன, காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஜீவன்லால் கோர் என்பவர், இவருக்கு தங்குவதற்கு வீடு கொடுத்து, இவருடன் இணைந்து பணியாற்றவும் தொடங்கியுள்ளார். பின்பு மிதலால் கூறுகையில், தன்மீது ஏற்பட்ட அளவுகடந்த ஈர்ப்பினால் ஜீவன்லால் கோர், தனது சொத்துக்களை எல்லாம் இவர் பெயரில் மாற்றி விட்டாராம். ஆனால் இது போன்ற சொத்து சுகத்தில் நாட்டம் இல்லாத மிதலால், கோரின் குடும்பத்திற்கே சொத்துக்களை மாற்றி விட்டதாக கூறியுள்ளார். பின்னர் கோர் இறந்த பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
மிதலால் தன் வாழ்க்கை பற்றி கூறுகையில்:
"பிரிவினையின் போது நான் எனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானிலிருந்து பம்பாய்க்கு வந்தேன். அப்போது எனக்கு வெறும் 15 வயது. வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், இவ்வளவு பெரிய நகரத்தில் பிழைப்பதற்கும் நான் பல வேலைகளைச் செய்தேன். பின்னர் 1957 ஆம் ஆண்டில், நான் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்து எனது சேமிப்பிலிருந்து ஒரு சிறு தொழிலை தொடங்கினேன். நான் மணிநகர் பகுதியில் பழங்களை விற்பனை செய்தேன்."
“எனக்கு நியால்தாஸ் சிந்தி என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு காய்கறி விற்பனையாளர். நாங்கள் இருவரும் மதிய உணவு மற்றும் இரவு உணவை ஒன்றாக உட்கொண்டோம், மேலும் நடைபாதையில் ஒன்றாக தூங்குவோம். இவை இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்தது. ஒரு காலை பொழுதில் நான் அவரை எழுப்பச் சென்றேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதை உணர எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு, குடும்பமோ நண்பர்களோ அவருக்கு இல்லை. எனவே நான் முக்யாவுக்கு (காய்கறி சந்தையின் தலைவர்) சென்று உதவி கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது எனது வேலை இல்லை என்று கூறினார். அவரது உடலை தகனம் செய்யும் பொறுப்பை ஏற்க யாரும் தயாராக இல்லை. எனவே நான் அவரது இறுதி சடங்குகளை செய்ய முடிவு செய்தேன், நான் அவரை காலிகோ மில் அருகே தகனம் செய்தேன்.”
“எனது நண்பரின் இத்தகைய திடீர் மரணம், இந்த நகரத்தில் எண்ணற்ற எண்ணிக்கையிலான மக்கள், தினமும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் இறுதி சடங்குகளைச் செய்ய யாரும் இல்லை என்பதையும் எனக்கு உணர்த்தியது. அன்றிலிருந்து நான் எனது தொழிலை முடக்கி, இந்தச் செயல்பாட்டைத் தொடங்கினேன். நான் இந்த சமூக செவையை 60 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறேன். உரிமை கோரப்படாத 600 க்கும் மேற்பட்ட இறந்த உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளேன். இறந்த உடல் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். அது ஒரு இந்து, முஸ்லீம், சமண, கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது, அது மனிதநேயம். நான் வேறு எந்த மதத்தையும் நம்பவில்லை”.
"ஒரு இறந்த உடல் மீட்கப்படும் போதெல்லாம், நான் முதலில் செய்வது இறந்த நபரின் மதத்தைக் குறிக்கும் அடையாளம் அல்லது சின்னத்தைத் தேடுவதுதான். நான் அவர்களின் மதத்தைப் பற்றி அறிந்த பிறகு, அதற்கேற்ப சடங்குகளை செய்கிறேன். இறந்த நபர் இந்து என்றால், நான் அவரது உடலை வி.எஸ். தகனத்திற்கு எடுத்து செல்கிறேன். அவர் ஒரு முஸ்லீம் என்றால், நான் அவரது உடலை ஜமல்பூருக்கு எடுத்து செல்கிறேன். அவர் கிறிஸ்தவராக இருந்தால், கல்லறையில் அடக்கம் செய்கிறேன். நான் அவர்களது உடலை மிதி ரிக்ஷாவில் தான் இழுத்து, தகனத்திற்கு எடுத்து செல்கிறேன். அவர்களது குடும்பம் தொடர்பான எந்தவொரு தகவலையும், அவர்களின் மொபைல் அல்லது பணப்பையில் இருந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், வழக்கமாக அவர்களுடைய குடும்பங்கள், அந்த நபரை அறியாதது போல் செயல்படுகின்றன. மேலும் அவர்களின் இறுதி சடங்குகளை செய்ய மறுக்கின்றன”.
"சமுதாயத்தைப் பொறுத்தவரை, இது உரிமை கோரப்படாத இறந்த உடலாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு வயதான பெண்மணி என்றால், அவள் என் அம்மாவைப் போன்றவள், அவன் ஒரு சிறுவன் என்றால் அவன் என் மகனைப் போன்றவன், அது ஒரு நடுத்தர வயதுப் பெண் என்றால், அவள் என் தங்கை போன்றவள். என் சொந்த தந்தையின் கடைசி சடங்குகளை என்னால் செய்ய முடியவில்லை, ஆனால் அதைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரை இறந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் என் குடும்பம் தான். ”
“எனக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் சாலையோர துரித உணவு விடுதியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஒரு வீடு இருக்கிறது, ஆனால் நான் அவர்களுடன் தங்குவதில்லை. நான் நடைபாதையில் தான் வசிக்கிறேன். ஏனென்றால் எனக்குத் தேவையான போதெல்லாம் மக்கள் எப்போதும் என்னைக் கண்டுபிடிக்கும் ஒரே இடம் இதுதான். எனது மூதாதையர் சொத்தில் நான் எந்தப் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் நான் ஒருபோதும் பொருள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டியதில்லை. எனக்கு தேவைப்படுவது எனது மிதி ரிக்ஷா மட்டுமே. ”
“எந்தவொரு நபரின் இறுதி சடங்குகளையும் செய்ய இன்று சுமார் 1500 ரூபாய் செலவாகிறது. எல்லிஸ் பாலம் அருகே உள்ள நடைபாதையில் தினை வகைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தான் எல்லா செலவுகளையும் நான் செய்து வருகிறேன். ”
"எனக்கு 87 வயதாகிறது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதையில் தான் வாழ்ந்து வருகிறேன். நம்பினால் நம்புங்கள் வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்துள்ளதோ அதை வைத்து திருப்தி அடைகிறேன் . இந்த அழகான செயலைச் செய்ய தான் நான் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். உரிமை கோரப்படாத சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம் இந்த நகரம் என்னை நினைவில் கொள்கிறது, அதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்."