Welcome..! Join us to Develop your Humanity
‘நூறு கரங்களில் பெற்று, ஆயிரம் கரங்களால் கொடு'
மன்னெம் ஸ்ரீதர் ரெட்டி – நூற்றுக் கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கிட தனது ஊதியத்தில் 40 சதவீதத்தை செலவிடும் ஒரு அரசு ஊழியர்
இந்த உன்னதமான வியத்தகு பரம்பரை சொத்தானது, மாவோயிஸ்ட்களால் 1998ல் கொல்லப்பட்ட அவரது தந்தையாரால் ஸ்ரீதர் ரெட்டியிடம் விட்டுச் செல்லப்பட்டது.
தெலுங்கானா மாநில அரசில் நிதித் துறையில், முதுநிலைக் கணக்காளராக பணிபுரியும் ஒரு சாதாரண அரசு ஊழியரான மன்னெம் ஸ்ரீதர் ரெட்டியியை அறிந்து கொள்வோம். அவர் தனது ஊதியத்தில் 40% தொகையை, பள்ளிகளைத் தத்தெடுப்பது, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பது, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் பயண்பாட்டை எதிர்த்த போராட்டம் போன்ற விஷயங்களுக்காகச் செலவிடுகிறார்.
இந்த சமூக நலப் பணிகளுக்கான செலவுகள் அவருடைய வருமான வரம்பைக் கடந்து இருந்தாலும், கடுமையான பணம் மற்றும் பொருள் தேவை வரும் சமயங்களில், தனது உள்ளூர் தொடர்புகள் மற்றும் ‘மன மிரியாலகுடா’ (Mana Miryalaguda) என்ற முகநூல் பக்கங்களினால் இணைக்கப்பட்ட நண்பர்களின் உதவியால், அவற்றை சமாளிக்கிறார்.
ஸ்ரீதருடைய சொந்த ஊரான மிரியாலகுடா என்பது ஒரு காலத்தில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நலகோண்டா மாவட்டத்தில் உள்ளது. 2009ம் ஆண்டு தனது ஊரைச் சார்ந்த பலருடன், அவர் அந்த மேற்கண்ட முகநூல் பக்கத்தைத் துவங்கினார். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலையை மேம்படுத்துதல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல், அத்துடன் ஆடம்பர உலகின் அநாகரிகங்களிலிருந்து அவர்களைக் காத்தல், இவையே ஸ்ரீதருடைய நோக்கங்களாக இருந்தன. அவருடைய நகரத்தைச் சேர்ந்த பலர், தங்கள் சொந்த வாழ்வின் மேம்பாட்டைத் தேடி, மேற்கத்திய தேசங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களையும் தொடர்பு கொண்ட ஸ்ரீதர், தான் மேற்கொண்டுள்ள பணியினைப் பற்றி எடுத்து சொன்னார். தற்போது 23,000 உறுப்பினர்கள் கொண்டுள்ளதாகக் கூறும் அவர்களுடைய குழுவில் சமுதாய பிரச்சினைகள், பெரிதும் அறியப்படாத முயற்சிகளின் வெற்றிகள், மிரியாலகுடா மற்றும் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான பல்வேறு செயல் திட்டங்கள் என விவாதங்கள் தொடர்கின்றன.
ஒப்பந்ததாரராக இருந்த ஸ்ரீதருடைய தந்தையார், 1998ம் ஆண்டு அக்டோபர் 17 அன்று, தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், யதாகிரிகுட்டா காவல் நிலையத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க செல்லும் வழியில் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொடூரமான இந்த கொலை தவறுதலான ஆள்மாறாட்டத்தில் நடந்துவிட்டது. அவரை அவர்கள் அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக நினைத்துவிட்டனர். ஸ்ரீதருடைய வாழ்வும் ஒரு தலைகீழ் திருப்பத்தை அடைந்தது. கொலைக்கு இழப்பீடாக அப்போதைய ஆந்திரபிரதேச அரசாங்கம், ஸ்ரீதருக்கு மாநில நிதித்துறையில் ஹைதராபாத்தில் இளநிலை உதவியாளராக வேலை கொடுத்தது.
“நான் அப்போது இளங்கலை கணினி அறிவியல் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று மேற்படிப்பு படிக்கவேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது. எனது தந்தை காலமானவுடன், எனது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் துன்புற்றது. இந்த சூழ்நிலைதான் என்னை அந்த இளநிலை உதவியாளர் பணியில் 1999 ஜூன் 24 அன்று அமர்த்தியது” என்கிறார் ஸ்ரீதர்.
“என் வாழ்வில் அது ஒரு கடினமான காலகட்டம். ஆனால் 1999 ஆகஸ்ட் மாதத்தில், எனது தந்தையாருக்குப் பழக்கமான ஒரு அரசு பள்ளி ஆசிரியர் வந்து, எடுலாகுடெம் என்கிற என்னுடைய தந்தையின் பூர்வீக கிராமத்திலிருந்த அரசு பள்ளிக்கு என்னை அழைத்தபோதுதான் எல்லாமே மாறியது” என்றார் அவர்.
பள்ளியைச் சென்றடைந்த பின்னர்தான் ஒரு உண்மை ஸ்ரீதருக்குத் தெரிய வந்தது. அவருடைய தந்தையார் பள்ளியில் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 நிகழ்ச்சிகளுக்கு உதவி வந்ததையும் மற்றும் பின்தங்கிய சில மாணவர்களின் செலவுகளை ஏற்று வந்ததையும் அவர் அறிந்து கொண்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
“அப்போதுதான் நான் என் தந்தையின் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வது என முடிவெடுத்தேன்” என்கிறார் ஸ்ரீதர். ஆரம்பத்தில் 1999 ஆகஸ்ட் 15 அன்று நளகோண்டா மாவட்டத்தில் உள்ள, தனது தந்தை தத்தெடுத்திருந்த அந்த எடலாகுடெம் கிராமத்தின் அரசு பள்ளிக்கு கொஞ்ச புத்தகங்களும், குழந்தைகள் ஓவியம் வரைவதற்கான வர்ணபூச்சு சாதனங்களும் வாங்கிக் கொடுத்தார். அந்த பள்ளியில் மாணவர்கள் அமருவதற்கு பெஞ்ச், டெஸ்க் ஏதும் இல்லாததை அறிந்து வருந்திய அவர், சில விளையாட்டு சாதனங்களுடன், தனது சேமிப்பில் இருந்து 90,000 ரூபாயையும் கொடுத்தார்.
அடுத்து அருகிலிருந்த முகுந்தாபுரம் கிராமத்திலிருந்த அரசு பள்ளியில் வெள்ளையடித்து வர்ணம் பூசியதுடன், அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வழி செய்தார். இது மிரியலகுடா நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலிருந்தது. அங்கு தனது பணியைத் துவங்கிய அவர் மொத்தம் 34 பள்ளிகளை தத்தெடுத்துக் கொண்டார். குழந்தைகளுக்குப் புத்தகப் பைகள், புத்தகங்கள், உணவுப் பொருட்கள், ப்ரொஜெக்டர், கல்வி உதவி பொருட்கள், வர்ணப்பூச்சு சாதனங்கள், இருக்கைகள், மின் விசிறிகள், கழிவறைகள், விளையாட்டு கருவிகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு அம்சங்கள் என அனைத்துக்கும் உதவினார்.
பத்தாண்டுகள் இந்தப் பணிகளை செய்த பின்னர், தான் மட்டுமே தனியாக தொடர்வது சவாலானது என உணர்ந்தார். மிரியலகுடா நகரவாசிகளையும், அங்கிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களையும் அணுகும் யோசனை உதயமானது. 2009ல், தனது நண்பர்கள், உறவினர்கள், வெளிநாட்டில் வாழ்பவர்கள் என இவர்களைக் கொண்டு, “மன மிரியலகுடா” என்ற முகநூல் குழுவைத் துவக்கினார்.
“இன்று எங்கள் சொந்த ஊரைச் சார்ந்தவர்கள் 23,000 பேர் எங்கள் குழுவில் உள்ளனர்” என்று பெருமையுடன் கூறுகிறார் ஸ்ரீதர். முகநூல் நண்பர்கள் குழுவின் மூலமாகவும் அவரது தொடர்புகளின் மூலமாகவும், மிரியலகுடா நகரத்தில் மட்டுமல்லாமல், அருகாமையிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நேர்மறையான நல்ல பல மாற்றங்கள் தோன்றியுள்ளன.
தனது இரண்டு சொந்த குழந்தைகளுடன், ஸ்ரீதர் பின்தங்கிய பின்னணியிலுள்ள கௌசிக், சங்கர் என்ற இரண்டு மாணவர்களின் கல்விக்கும் ஆதரவளித்துள்ளார். அவர்கள் இருவரும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களின் மகன்கள் ஆவர். தற்போது இருவரும் உள்ளூரில் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்கள்.
ஒரு குடும்பத் தலைவனாகவும், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருந்து கொண்டு, இந்த பரோபகார பணிகளையெல்லாம் ஸ்ரீதரால் எவ்வாறு செய்ய முடிகிறது? நல்ல காலமாக அவரது மனைவி ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் மென்பொருள் பொறியாளராகப் பணி செய்கிறார். சைக்கிளிலேயே தனது பணிக்குச் செல்லும் அவர், அதன் மூலம் மாதம் ரூ5000 பெட்ரோல் செலவை மிச்சப் படுத்திவிடுகிறார்.
எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யத் திட்டம் வைத்திருக்கிறார் இந்த தெலுங்கானா மனிதர்? “இன்னும் அதிகமான பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும். அவைகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ வேண்டும். என்னுடைய நகரம் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக ஆக வேண்டும். வயதால் மூத்தோருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை அருகாமையிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும்” என்கிறார் ஸ்ரீதர்.