Welcome..! Join us to Develop your Humanity
ஒன்பது தலைமுறை குச்சிபுடி நடனத்துக்கு அர்ப்பணம்
வேம்பட்டி சின்ன சத்தியம் - ஒன்பது தலைமுறைகளாக அவருடைய முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையை குச்சிபுடிக்கு அற்பணித்து நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களை பயிற்றுவித்தவர்கள்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கரையோரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள குச்சிபுடி கிராமத்திலிருந்து, சர்வ தேச அரங்கிற்கு குச்சிபுடி கலையினை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு, குச்சிபுடி கலைவித்தகராகிய வேம்பட்டி சின்ன சத்தியத்தையே சேரும். ஒன்பது தலைமுறைகளாக அவருடைய முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையை குச்சிபுடிக்கு அற்பணித்தார்கள். அவ்வழியே அந்த பாரம்பரியத்தை அவரும் பின்பற்றினார்.
அக்டோபர் 25ம் தேதி, 1929- இல் பிறந்த வேம்பட்டி சின்ன சத்தியம், கலை வல்லுநர் வேதாந்தம் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி அவர்களிடம் மாணவராகப் பயின்று, அவருடைய புதுமை படைப்புகளை ஆறாவது வயதிலேயே, தனதாக்கிக் கொண்டார். தன்னுடைய பதினெட்டாம் வயதில் சென்னையில் குடியேறி, 1963-இல் குச்சிபுடி கலையரங்கத்தை உருவாக்கினார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குச்சிபுடி கிராமத்தில் இருந்து சென்னை வந்தது, அவருடைய நாட்டிய பயணத்தின் ஆரம்பம் என கொள்ளலாம். அவருடைய மகன் வேம்பட்டி ரவிஷங்கர் கூறுகையில், 'தன்னுடைய தமக்கையிடமிருந்து இரண்டு ரூபாய் பெற்று, நடைபயணமாக, தன் கிராமத்திலிருந்து தமிழ்நாட்டின் எல்லையை அடுத்த நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கூடூர் இரயில் நிலையத்திற்கு, வந்ததாக எனது தந்தையார் கூறுவார்கள்.'
பாரம்பரிய நாட்டியக்கலையின் கோட்டையாக விளங்கிய சென்னையில்தான், கலையை கற்க வேண்டும் என்ற வேட்கை நெடும் தொலைவிலிருந்து அவரை இங்கு கொணர்ந்து சேர்த்தது. நாநூறு கிலோமீட்டர் நடைபயணமாக வந்ததன் களைப்பு அவரை ரயில் நிலையத்தில் கண்ணயரச் செய்தது. அங்கு வந்த இரயில் பயணச்சீட்டுப் பரிசோதகர், அவர் நிலை கண்டு, அவரை எழுப்பி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உண்ண உணவும் சிறிது பணமும் கொடுத்தார். 'என் தந்தையார் அந்த பணத்தினை உபயோகித்து சென்னைக்குப் பயணித்தார்,' என்று கூறுகிறார் திரு ரவிஷங்கர் அவர்கள்.
பாரதத்திலும் அயல் நாடுகளிலும், மூவாயிரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். 180 தனி நாட்டியங்களை இயற்றினார். 17 நாட்டிய நாடகங்களை உருவாக்கினார். 'க்ருஷ்ண பாரிஜாதம்' மற்றும் 'க்ஷீரசாகர மதனம்' ஆகிய, அவருடைய முதல் பாலே நடனங்களிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. நடன நிகழ்ச்சிகள் மற்றும் நடன அமைப்புக்கு கூடவே, அவருடைய நேரம் குச்சிபுடி மீது ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தருவதில் கழிந்தது. இன்று புகழ் பெற்ற முன்னணிக் கலைஞர்கள் பலர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள். உதாரணமாக புரந்தரேஸ்வரி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஷோபா நாயுடு, நடிகைகள் மஞ்சு பார்கவி, ஹேம மாலினி மற்றும் பலர் ஆவர். அவருடன் நடிகை மஞ்சு பார்கவியின் அறிமுகம் அவர் பிறந்த நாளிலிருந்தே இருந்து வருகிறது. 'என்னுடைய பெற்றோர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். என்னை அவர் மருத்துவமனையில் பார்க்க வந்திருந்தார். என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே அவரிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஓவ்வொரு பாடமும் நினைவிலிருந்து அகலாது,' என்று அவர் நினைவுகூர்ந்தார். அவருடைய குரு மிகவும் எளிமையானவர் என்றும், 'ஆனால், நடனம் கற்றுக் கொடுக்கையிலே மிகவும் கண்டிப்பானவர். நடனப் பயிற்சியில் மிகவும் கண்டிப்பாக இருப்பதில் கவனம் செலுத்துவார். இன்று குச்சிபுடி பிரபலமாக இருப்பதற்கு முழுமுதற் காரணம் அவருடை முயற்சி தான்,' என்றும் கூறினார்.
குச்சிபுடி கலைஞர் மற்றும் வேம்பட்டி சின்ன சத்தியத்தின் சிஷ்யையுமான உமா முரளிக்ருஷ்ணா கூறுகையில், தன்னுடைய கருத்துப்படி குச்சிபுடி என்றாலே அது அவர்தான் என்றார். 'அவருடைய நடன வடிவமைப்பு ஈர்க்கவைக்கும். ஒரு குருவாக அவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தவர். இந்த கலைக்கு பெரிய அளவில் மறுவடிவம் கொடுத்தவர். நாட்டுப்புற கலைவடிவமாக கொள்ளப்பட்ட கலைக்கு, பாரம்பரிய உருவம் அவரால் தான் கிட்டியது,' என்று கருத்து தெரிவித்தார்.
வேம்பட்டி சின்ன சத்தியம் பல சிகரங்கள் தொட்டவர். மிகவும் அதிகமான நாட்டிய நிகழ்வுகள் நடத்தியதற்கு, கின்னெஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். குச்சிபுடிக்கு புத்துயிரூட்டி, பரதநாட்டியம், கதக் மற்றும் கதகளியின் வரிசையில் இடம் பெறச் செய்தவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைக்கல்லூரிகள், பரதம் மற்றும் குச்சிபுடி பயிலவும் அவருடைய மாணாக்கர்களால் துவங்கப்பட்டன.
வேம்பட்டி சின்ன சத்தியம் பல சாதனைகள் படைத்தார். விருதுகளும் பட்டங்களும் பல பெற்றார். பத்ம பூஷன் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதுகளும் இதில் அடங்கும். அந்த கலைவிற்பன்னரின் எண்ணற்ற மாணாக்கர்களில் ஒருவரான எலிநோரா லெவான்ஸ்கயே, ஆனந்த தாண்டவா என்ற இந்திய நாட்டியப்பள்ளியை, மாஸ்கோவில் துவங்கினார். பெரும்பாலும் 1970-கள் வரை, ஆடவர்கள் மட்டுமே கொண்ட நாட்டியத்தை, பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க நாட்டியப்பள்ளி ஆரம்பித்து பாரம்பரிய நடனத்தில் ஒரு மாபெறும் புரட்சியை செய்தவர் வேம்பட்டி சின்ன சத்தியத்தியம் தான். அன்னார் 2012-ம் ஆண்டில், தன்னுடைய 82-ம் வயதில், இயற்கை எய்தினார்.