Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் பாலு சங்கரன் - தொழுநோயாளிகள் மற்றும் போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்காக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக பணிபுரிந்து எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியவர்
உருவத்தில் குள்ளமானவராக இருந்தாலும் தனது செயல்களால் உயர்ந்து நிற்கும் டாக்டர் பாலு சங்கரன் , இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் உடலளவில் பாதிக்கப்பட்ட பல ஏழை, எளியோர் தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவராக விளங்கினார்.
டாக்டர் பாலு சங்கரன் 1926ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். 1948ம் வருடம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது மூன்று தொழில்முறை தேர்வுகளிலும் அவர் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் அவர் MBBS பட்டம் பெற்றபோது 13 தங்கப் பதக்கங்கள் மற்றும் 17 பரிசுகள் பெற்று மிகச் சிறந்த மாணவராக திகழ்ந்தார். இன்றளவும் இவரது இச்சாதனை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கான மேல்படிப்பை முடித்தார், மேலும் எலும்பியல் மருத்துவத்தில் FRCS (கனடா) பட்டமும் பெற்ற முதல் இந்தியரும் இவர் ஆவார். ஜான் சார்லி மற்றும் டேவிட் லியோட் உடன் இங்கிலாந்தில் ஒரு வருடம் பணி புரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தாய்நாட்டின் மீது அவருக்குள்ள அன்பு அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது, அவர் 1956 இல் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை உதவி பேராசிரியராக சேர்ந்தார். 1963 முதல் 1967 வரை இணைப் பேராசிரியராக பணியாற்றினார்.
அவரது காலை வகுப்புகள் மிகவும் பிரபலம். போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்திலும் புது தில்லியில் உள்ள அவரது வீட்டில் விடியற்காலை 4:30 மணிக்கு நடைபெற்ற அதிகாலை வகுப்புகளுக்கு எந்த ஒரு சலனமும் இல்லாமல் மகிழ்ச்சியாக முதுகலை பட்டதாரிகள் சென்று பயின்றனர். அவர்களுக்கு அதிகாலை நேரம் எல்லாம் ஒரு பொருட்டல்ல, டாக்டர் சங்கரனின் வகுப்பு அவ்வளவு மதிப்புமிக்கது.
அவருக்கு 1961-63 ஆம் ஆண்டில் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் அடிப்படை ஆராய்ச்சி பணிகள் செய்வதற்கான வாய்ப்பு கிட்டியது. பின்னர் 1966 ஆம் வருடம் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் எலும்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராக 1970 வரை பணியாற்றினார்.
அதன் பிறகு அவர் 1978 வரை மத்திய எலும்பியல் நிறுவனத்தின் இயக்குனரானார். அவர் சுகாதாரத் துறையின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். பிப்ரவரி, 1981 ஆம் வருடம் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்துக்கு இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1987 வரை பணியாற்றினார்.
பின்னர் அவர் இந்தியாவின் மறுவாழ்வு அமைப்பின் தலைவரானார் (1992-1994). அதே நேரத்தில் 1972 ஆம் ஆண்டில் கான்பூரில் செயற்கை மூட்டு உற்பத்தி மையம் மேலும் புவனேஸ்வர் அருகில் தேசிய மறுவாழ்வு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நிறுவினார். 1981 வரை அதன் தலைவராகவும் இருந்தார். அவர் மியான்மரில் தொழுநோய் புனரமைப்பு அறுவை சிகிச்சையில் WHO இன் ஆலோசகராகவும் இருந்தார்.
எலும்புப்புரை (osteoporosis) நோய் குறித்த அவரது அடிப்படை ஆராய்ச்சிப் பணிகள் சிகாகோ 1961 இல் தொடங்கியது. அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை & சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மறுவாழ்வுக்கான தொழில்நுட்ப முறைக்கான ஆராய்ச்சி திட்டங்களின் முதன்மை ஆய்வாளராக இருந்தார். இந்தத் திட்டம் வளரும் நாடுகளுக்கு ஏற்ற எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக உதவியது.
தொழுநோயாளிகள் மற்றும் போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கான புனரமைப்பு அறுவை சிகிச்சையில் அவர் செய்த பணிகள் எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை மேம்பட்டதாக மாற்றின. வங்காளதேச போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆதரவாகவும் மறுவாழ்வுக்காக பணியாற்றியதற்காகவும் 1972 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. அவர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் 2007 ஆண்டு வரை பணியாற்றினார்.
இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருது, அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகள், ஆராய்ச்சி கட்டுரைகள், சொற்பொழிவுகள், எலும்புப்புரை மற்றும் போலியோ தாக்கத்தினால் ஏற்பட்ட பக்கவாதம் குறித்த அவரது படைப்புகள், ALIMCO நிர்வாக இயக்குனராக, மறுவாழ்வுக்காக அவரது முயற்சிகள் உட்பட அவர் பெற்ற விருதுகள் மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் 17 மையங்கள் அமைத்திருப்பது இவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும்.
அவரது பணி ஓய்வுக்குப் பிறகு அவரிடம் எந்த ஒரு பொருள் சேமிப்போ, சொத்துகளோ எதுவும் இல்லை, ஆனால் உலகம் முழுவதும் அவரது மாணவர்கள் அவரது கனவை நிறைவேற்றுவதற்கான பணியினை முழு திறமையுடன் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவரது நோயாளி பட்டியலில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி. கிரி, ஜாகிர் உசேன், ஆர். வெங்கட்ராமன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் இருந்தனர். இருந்தபோதிலும் டாக்டர் சங்கரன் ஏழைகளின் மருத்துவராக திகழ்ந்தார். ஏழ்மையானவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை ஆற்றினார்.
அவரது கடைசி காலத்தில் நினைவாற்றல் குன்றிய போதிலும் கற்பித்தல் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தனது மாணவர்கள் 65 பேர் உலகளவில் பேராசிரியர்கள் என்று சொல்லிக்கொள்வதில் அவர் எப்போதும் பெருமிதம் கொண்டார். அவர் ஓர் மருத்துவ ஆசிரியராக இருந்தார், மேலும் அவரது வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவர் கற்பித்து கொண்டிருந்தார்.
ஆனால், நினைவாற்றல் குறைந்து வந்த சூழ்நிலையில் சென்னையில் தனது மாணவர்களிடம் இருந்து அவர் விலகி இருந்தார். திடீரென அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் சுயநினைவை இழந்து கொண்டிருந்த போதிலும் கூட என்னை வகுப்புக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். மாணவர்கள் எங்கே? ஆம், மாணவர்கள் எங்கே என்று வினவினார்.
டாக்டர் பாலு சங்கரன் 20 ஜூன் 2012 அன்று காலை 10.30 மணிக்கு தனது கற்பித்தல் பணியை முடித்து கொண்டு இயற்கையோடு இரண்டறக் கலந்தார்.