Welcome..! Join us to Develop your Humanity
ராகேஷ் கத்ரி – சிட்டுக் குருவிகளின் வாழ்வைக் காக்க தனது வேலையைத் துறந்தவர்
பாரதத்தில் காடுகள் தொடர்ந்து அழிக்கப் படுவதால், ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியை நாம் இழந்து வருகிறோம். வனப் பகுதிகளே விலங்குகளின் ஜீவாதார வசிப்பிடங்களாகும். வனங்கள் துடைத்தெறியப் படும்போது விலங்குகள் தங்கள் வசிப்பிடங்ளை இழக்கின்றன. அத்துடன் மறுபக்கம் நகரமயமாக்கலால் பெரும்பான்மையான பறவைகளின் வாழ்க்கையே வெற்றிடமாகி உள்ளது. ஒரு காலத்தில் நமது மனதிலும், இல்லங்களிலும் இந்த பறவைகள் கூடு கட்டி வாழ இடம் ஒதுக்கியிருந்தோம். இன்று அந்த பறவைகள் வந்துவிடாதவாறு வலைகளையும், வேலிகளையும்தான் பார்க்கிறோம். சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மிகவும் பாதிக்கப் பட்டது சிட்டுக் குருவிகள்தான்.
சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதற்காக, ராகேஷ் கத்ரி ஊடகத் துறையில் தான் செய்து வந்த வேலையை 2008ம் ஆண்டு உதறிவிட்டார். டில்லியில் சிட்டுக் குருவிகளுக்காக செயற்கையான கூடுகளை அமைக்கும் பணியினைத் துவங்கினார். இது வரை அவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கூடுகளைக் கட்டியுள்ளார். ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 கிலோ அளவு தானியங்களை வாங்கி அந்த சிட்டுக் குருவிகளுக்கு அளிக்கிறார்.
இந்தப் பணியைத் துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 57 வயதான ராகேஷ் Eco Roots Foundation என்ற தனது NGO-ஐ தனது மனைவி மோனிகா கபூர் மற்றும் மகன் அனிமேஷ்-உடன் துவங்கினார். இதன் மூலம் பறவைகளுக்குக் கூடுகளை அமைப்பதில், இளைஞர்கள் மத்தியில் கார்யஷாலாக்கள் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
இதுவரை ராகேஷ் அவர்கள், பள்ளிகள், பெருநிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களிலும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான கார்யஷாலாக்கள் நடத்தியுள்ளார். மூன்று மணிநேரம் நடக்கும் அனைத்து வயதினருக்குமான அந்த கார்யஷாலாவில், மேலும் அதிகமான கூடுகளை அமைப்பது பற்றி திட்டமிடப்படும். சிட்டுக்குருவிகள் ஏன் மற்றும் எவ்வாறு அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன என்ற கேள்விகளுடன் தனது கார்யஷாலாவை அவர் ஆரம்பிப்பார்.
“நவீன கால வீடுகள் கட்டப் படும் விதத்தில் சிட்டுக் குருவிகளுக்கு இடம் இல்லை. நாம் குருவிகள் ஏற்படுத்தும் தொல்லைகளை சகித்துக் கொள்ள மறுக்கிறோம். முற்காலத்தில் நம் நாட்டில் வீடுகளின் மேற்கூறைகளில் உலர்த்தும் தானியங்களை உண்பதற்காக சிட்டுக் குருவிகள் வரும். ஆனால் தற்காலத்தில், எல்லாமே பாக்கட்டுகளில் அடைக்கப்பட்டு வருவதும், சிட்டுக் குருவிகள் மறைந்ததற்கு ஒரு காரணம்” என்கிறார் ராகேஷ்.
நம்முடைய சுற்றுச் சூழல் அமைப்பில் சிட்டுக் குருவிகள் எவ்விதம் பங்காற்றுகின்றன என்பதை சான்றுகளுடன் புரிய வைக்கிறார்.
“சிட்டுக் குருவிகள் சிறிய பூச்சிகளை உணவாகக் கொண்டு, தாவரங்களைப் பூச்சிகளிலிருந்து காக்கின்றன. கழிவுப் பொருட்களான பஞ்சு, தாள்கள், உலர்ந்து விழுந்த இலைகள் மற்றும் சுள்ளிகளைக் கொண்டு அழகாகத் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றி சிட்டுக் குருவிகள் வாழ்ந்தால் அது ஆரோக்கியமான வீடு என்று கொள்ளலாம்” என்கிறார் ராகேஷ்.
மேற்கண்ட விஷயங்களைத் தனது கார்யஷாலாவில் கலந்து கொண்டவர்கள் உணர்ந்ததும், அவர் சிட்டுக் குருவிகளுக்கான சரியான கூடுகளைக் கட்டும் முறையை மூங்கில் குச்சிகள், புல், கயிறுகள் மற்றும் சாக்குத் துணிகளைப் பயன்படுத்தி செய்து காண்பிக்கிறார்.
சிலர் திரு ராகேஷ் அவர்களைப் பைத்தியம் என்றும், நேரத்தை இதுபோன்ற காரியங்களில் வீணாக்க வேண்டாம் என்றும் கூறி, அவருடைய ஊக்கத்தைத் தடுக்க நினைத்தாலும், அவர் தளரவில்லை. அவருடைய முழு குடும்பத்தின் ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது.
ராகேஷ் தனது பகுதியில் உலவி வரும் வேளையில், சிட்டுக் குருவிகள் இயற்கையாக பறக்கும் இடங்களை அறிந்து, அங்குள்ள மரங்களில் தான் தயாரித்துள்ள செயற்கையான கூடுகளைக் கட்டி வைப்பார். ஏராளமான கூடுகளில் சிட்டுக் குருவிகளைக் காணும் பலர், தங்கள் பகுதியிலும் அதுபோல் அமைத்துத் தரவேண்டி அழைப்பது வழக்கமானது. ஆயிரக்கணக்கான செயற்கைக் கூடுகளை நாடு முழுவதும் அவர் விற்றுள்ளார். தற்போது ராகேஷ், குழந்தைகள் அவர்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் “நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள்” (Do It Yourself Kit) கிட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். நம் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளையும் சென்றடைவது அவரது லட்சியம்.
சிட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த தன்னிகரற்ற முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக, திரு ராகேஷ், லண்டனிலுள்ள House of Commons-இடமிருந்து 2008ம் ஆண்டுக்கான இன்டர்நேஷனல் க்ரீன் ஆப்பிள் அவார்ட் உள்பட பல பாராட்டுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். கையால் தயாரிக்கும் கூடுகளுக்கான கார்யஷாலாவை அதிகமான எண்ணிக்கையில் நடத்தியமைக்காக, 2019ம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
நம்முடைய இந்த அவசரமயமான வாழ்க்கையில், அமைதியில் உழன்று கொண்டிருக்கும் பல பொதுவான பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அந்த பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவையே. திரு ராகேஷ் போன்றவர்கள் கூக்குரல் கொடுத்த பின்னர்தான், நாம் கண்களைத் திறந்து பார்த்து, பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொள்கிறோம். தற்போது பிரச்சினைகளை ஒப்புக் கொள்வதற்கான நேரமல்ல, அவைகளை எதிர்கொண்டு தீர்ப்பதற்கான தருணம் இது. இதை உணர்ந்து சுற்றுச் சூழல் அமைப்பைப் பாதுகாப்போம்.