Welcome..! Join us to Develop your Humanity
இந்திய வானவியலின் இழந்த பெருமையை மீட்க 30 ஆண்டுகால இடைவிடாத உழைப்பின் அடையாளம் - எம்.கே. வைனு பாப்பு (M.K. Vainu Bappu)
நிர்மலமான இரவு வானில் நவரத்தினங்களை வாரி இறைத்தது போல் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் விண்மீன்களை குழந்தைகளும், சிறுவர்களும் மிகுந்த ஆர்வத்தோடும் வியப்போடும் பார்ப்பது உண்டு. அதே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் வெகு சிலரே அத்தகைய வியப்பையும் ஆர்வத்தையும் தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான மக்களே அவ் வியப்பைத் தாண்டி வானவியலில் புதைந்திருக்கும் மர்மங்கள் பற்றி அறிய முற்படுகின்றனர். இந்த சாதனைச் சரித்திரம் அவ்விதம் வானவியலின் ஆழங்களை அறிய முற்பட்ட மணலி கல்லெட் வைனு பாப்பு (Manali Kallat Vainu Bappy)எ ன்பவர் உடையதாகும். இவரே "இந்திய நவீன வானவியலின் தந்தை" என்று அறியப்படுகிறார்.
வைனு பாப்பு அவர்கள் 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாள் ஹைதராபாத்தில் உள்ள நிஜாமியா வானியல் நிலையத்தின் மூத்த வானவியலாளரின் மகனாகப் பிறந்தார். இவர் முதலில் செயின்ட் ஆன்ஸ் ஆங்கில பள்ளியிலும் பிறகு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். மேல்நிலைப் படிப்பிற்கு பின் 1946-ஆம் ஆண்டு நிஜாம் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பையும் பிறகு மூன்று வருடங்கள் கழித்து இயற்பியலில் முதுகலை பட்டப் படிப்பையும் முடித்தார். கல்வியில் மிகவும் சிறந்து விளங்கிய வைனு பாப்பு , வாதிடுதல், விளையாட்டு போன்ற கல்விசார் நிகழ்ச்சிகளிலும் மிக ஆர்வமுடன் பங்கேற்றார். இருந்தபோதும் மிக இளவயதில் இருந்தே அவருக்கு மிகவும் பிடித்தமான வானவியலில் தான் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பட்டப் படிப்பின் போதே மிகவும் தீவிரமான தொழில் முறை சாராத வானவெளி உற்று நோக்குபவராக விளங்கிய வைனு, பல புதிய விண்மீன்களை கண்டறிந்த ஆராய்ச்சிகளை அறிக்கைகளாக வெளியிட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த பின் கல்வி உதவித்தொகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே வைனு பாப்பு ஒரு புதிய வால் நட்சத்திரத்தினைக் கண்டுபிடித்தார். இந்த வால்நட்சத்திரம், இதனைக் கண்டுபிடித்தவர்களான வைனு பாப்பு, மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய பார்ட் பாக் (Bart Bok) மற்றும், கார்டன் நியூ கர்க் (Gordon Newkirk) ஆகிய மூன்று பெயர்களையும் இணைத்து பாப்பு - பாக் -நியூ கர்க் வால்நட்சத்திரம் என்றே பெயரிடப்பட்டது . இதுவரை வால் நட்சத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்களில் இவர் ஒருவர் மட்டுமே இந்தியராவர்.
1952 இல் இவர் தனது பி.எச்டி படிப்பை நிறைவு செய்து கார்னகி ஃபெல்லோஷிப் பெற்று அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பாலமோர் வானியல் ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார் . இங்குதான் மிகவும் சக்தி வாய்ந்த 200 அங்குல அளவுள்ள தொலை நோக்கி அமைந்துள்ளது. இங்கு இவர் காலின் வில்சன் என்கிற மற்றொரு ஆராய்ச்சியாளரோடு இணைந்து சில குறிப்பிட்ட விண்மீன்களின் ஒளிக்கும், அதனுடைய நிறமாலையின் பண்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக விண்மீன்களின் ஒளி அளவை வைத்து அவைகளின் தொலைவை நிர்ணயிக்கும் பாப்பு - வில்சன் விளைவு என்கிற அரிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இவருடைய ஃபெல்லோஷிப் ஆராய்ச்சிகளை முடித்த போது இவருக்கு ஐரோப்பா, இவர் படித்த அமெரிக்க பல்கலைக்கழகமான ஹார்வர்ட் உள்பட பல புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பிற்கான அழைப்புகள் வந்தன. இருந்த போதும் இவர் தனது தாயகமான இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலை சிறந்த வானவியல் அறிஞரான ஆரியபட்டா விலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சவாய் ஜெய்சிங் வரை நமது நாடு ஒரு புகழ்பெற்ற வானவியல் பாரம்பரியத்தை கொண்டிருந்தது என்பதை வைனு பாப்பு நன்றாக அறிந்திருந்தார். இத்தனை பழம்பெருமை கொண்டிருந்தும், வைனு வானவியல் படிக்க வேண்டும் என்று விரும்பிய போது இங்கு அதை கற்றுத்தர எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஏற்பாடு எதுவும் இல்லை. இது மட்டுமின்றி மேல் நாட்டவர்கள் பெரிய பெரிய தொலைநோக்கிகளை நிறுவி வானவியலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டிக்கொண்டிருந்த போது, நமது நாட்டிலோ நிலைமை முற்றிலும் தலைகீழாக இருந்தது. இவற்றையெல்லாம் முற்றிலும் மாற்றி அமைக்க வைனு தீர்மானித்தார். மேற்கத்திய உலகம் அவருக்கு மிகவும் செல்வாக்கான பதவிகளை வழங்க முன்வந்த போதும் ,அவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவர் தாயகம் திரும்பினார். இத்தனைக்கும் அவருக்கு இங்கே என்ன வேலை கிடைக்கும் என்பதெல்லாம் நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தது. இவருடைய கனவெல்லாம் நமது பழம்பெருமை பெற்ற பாரத நாட்டை மீண்டும் உலக வானவியல் வரைபடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற தணியாத ஆவல் மட்டுமே ஆகும்.
இவர் 1953-இல் தாயகம் திரும்பினார். உடனடியாக இவரது சீரிய முயற்சியால் உத்தரப்பிரதேச மாநில வானியல் ஆராய்ச்சி நிலையமானது நைனிடாலில் உருவாக்கப்பட்டது. 1960-இல் இவர் நைனிடாலில் இருந்து தமிழகத்திலுள்ள கொடைக்கானலில் அமைந்துள்ள வானியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்க இங்கே வந்தார். கொடைக்கானலில் இருந்த உபகரணங்களை நவீன கருவிகளாக மாற்றம் பெறச் செய்ததால் இன்றும் இது மிகவும் செயல்பாடு கொண்ட வானியல் நிலையமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இருந்தபோதும் கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையம் விண்மீன்களை ஆராய்வதற்கு அவ்வளவு ஏற்ற இடமாக இல்லாததால் அதற்கான ஒரு பொருத்தமான இடத்தை வைனு தேடத் தொடங்கினார் . இவருடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ,ஆலங்காயத்திற்கு அருகிலுள்ள ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவு உள்ள காடுகள் சூழ்ந்த பகுதியான காவலூர் என்கிற இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
காவலூரில் 1967-ல் 38 சென்டி மீட்டர் அளவுள்ள தொலைநோக்கி ஒன்று நிறுவப்பட்டு விண்மீன்களை ஆராயும் பணி ஆர்வத்துடன் தொடங்கப்பட்டது .வெளிநாட்டு மாதிரிகளை ஒப்பு நோக்கினால் இது மிகவும் சிறிய அளவிலான கருவிதான், இருந்தபோதிலும் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. இதன் பிறகு வைனு தனது மேலதிகாரிகளை வற்புறுத்தி கார்ல் ஜெயிஸ் என்கிற ஜெர்மானியர் இடமிருந்து 102 சென்டி மீட்டர் அளவுள்ள தொலைநோக்கியை வாங்கி அதை அங்கே நிறுவினார்.
அந்நாட்களில் கொடைக்கானல் மற்றும் காவலூர் வானியல் நிலையங்கள் மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வந்தன . ஆகையால் ஒவ்வொரு ஆராய்ச்சி அல்லது கருவிகளின் செலவுக்கும் புது தில்லியில் உள்ள தலைமையகத்தின் ஒப்புதலுக்காக காத்து கிடக்க நேரிட்டது. இந்தியாவில் வானியல் ஆராய்ச்சிகள் ஒரு ஆரோக்கியமான முறையில் மேம்பட வேண்டும் எனில் வானியல் அமைப்புக்கள், சுயமாக நிதி அதிகாரம் கொண்ட ஒரு இயக்குனரின் மேலாண்மையின் கீழ் இயங்க வேண்டியதின் அவசியத்தை வைனு உணர்ந்தார்.
அப்போதைய விஞ்ஞானிகளின் துணையோடு வைனு பாப்பு அரசாங்கத்தை இணங்க வைத்து 1971 ஏப்ரல் 1 ஆம் நாள் இந்திய வானியற்பியல் நிறுவனத்தை ஏற்படுத்தினார். கொடைக்கானல் மற்றும் காவலூர் வானியல் மையங்கள் அதன் உறுப்புகளாகத் திகழ்ந்தன. இந்திய வானியல் ஆராய்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். பெங்களூரை தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவன இயக்குனராக வைனு பாப்பு பொறுப்பேற்றார் . இதன் மூலம் வானியல், வானியற்பியல் மற்றும் அது தொடர்பான அத்தனை ஆராய்ச்சிப் பணிகளுக்குமான ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாகி இன்று இந்திய வானியற்பியல் நிறுவனம் ( Indian Institute of Astrophysics-llA) வைனு பாப்புவின் தீர்க்க தரிசனத்திற்கு சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தை உருவாக்கிய உடன் வைனு 234 சென்டி மீட்டர் அளவு கொண்ட தொலைநோக்கியை நிறுவுவதற்கான திட்டத்தை முன்மொழிந்தார். இதனை நிறுவிட ஆகும் செலவுகளை குறைக்க, கூடிய மட்டிலும் இதில் இந்தியப் பொருட்களையே வைத்து உருவாக்கிடவும் தீர்மானித்தார். இத்திட்டத்தினை வான் இயற்பியல் நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டு அதை இந்தியா முழுவதற்குமான வானியல் ஆராய்ச்சிகளுக்கான ஏற்பாடாக செய்ய முன்வந்தது. இவ்விதம் நிறுவனத்தை கட்டியெழுப்பும் வேலையில் முனைப்பாக இருந்த அதே நேரத்தில் வைனு தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து கொண்டே இருந்தார். இவர் வுல்ப் - ராயட் விண்மீன்களைப் பற்றியும், விண்மீன்களின் ஒளிப்படலத்தில் வெளிப்படும் கால்சிய உமிழ்வுகளைப் பற்றியும் செய்த ஆராய்ச்சிகளால், வைனு பாப்பு இவற்றில் சிறந்த அறிவு, பெற்றவராக விளங்கினார்.
இவர் 90க்கும் மேற்பட்ட அறிவியல் பூர்வமான ஏடுகளை வெளியிட்டுள்ளார். சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளி வட்டத்தை ஆராய்ச்சி செய்திட சூரிய கிரகணம் நிகழும் போதெல்லாம் அவர் அதன் பாதையில் பயணம் செய்துள்ளார். இத்தகைய செயற்கரிய கண்டுபிடிப்புகளுக்காக இவரை இந்திய விருதுகளும், வெளிநாட்டு விருதுகளும் அலங்கரித்தன. 1981ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல 1979 - ல் இருந்து 1982 வரையிலான காலத்தில் இவர் சர்வதேச வானியல் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய நாட்டின் ஒவ்வொரு வானியல் அறிஞரையும் பெருமிதம் கொள்ள வைத்தது.
1982 ஆகஸ்ட் 23-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள பாட்ரா (Patra) என்கிற நகரத்தில் சர்வதேச வானியல் கூட்டமைப்பின் பதினெட்டாவது பொதுக்குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இதன் தலைவராக விளங்கிய வைனு இக்கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்தி மாநாட்டை துவக்கி வைக்க வேண்டும். ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. கிரீஸ் மாநாட்டுக்கு போவதற்கு இடையில் ஜெர்மனி நாட்டில் மியூனிச் நகரில் இறங்கி பின் பயணத்தை தொடரவேண்டும் . மியூனிச் நகரில் இறங்கியபோது பாப்புவிற்கு கடுமையான இதய வலி- ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மியூனிச் மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இந்த தடங்கல் இல்லாமல் இருந்திருந்தால், தனது தாய் நாட்டில் காவலூர் திட்டத்தை நிறைவு செய்து, சர்வதேச மாநாட்டின் 19 ஆவது கூட்டம் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிப்பதாக மனதில் நினைத்து இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து இரு நாட்களுக்குப் பிறகு வேறு சில சிக்கல்கள் ஏற்பட்டதால் 1982 ஆகஸ்ட் 19-ஆம் நாள் வைனு பாப்பு மண்ணுலகை விட்டு அவர் சதா சர்வகாலமும் மனத்தில் கொண்டிருந்த விண்ணுலகில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு கிளம்பிச் சென்றார். அப்போது அவருக்கு 55 வயது தான். அவருடைய விருப்பப்படி அவரது உடல் பெங்களூருக்கு எடுத்துவரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அவரது அஸ்தி காவேரி நதியில் கரைக்கப்பட்டது. பெங்களூர், கொடைக்கானல் மற்றும் காவலூரில் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்களின் மனம் துக்கத்தில் மூழ்கினாலும் அவர்களின் வழிகாட்டியான வைனு பாப்புவின் கனவை நனவாக்கிட தலைப்பட்டனர்.
காவலூரில் 2.34 மீட்டர் அளவு கொண்ட விண்மீன் நோக்கு தொலைநோக்கியை அமைப்பதற்கான பணியில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். 1986 ஜனவரி 6ஆம் நாள் புதிய தொலைநோக்கியை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டிற்கு அர்ப்பணித்தார். காவலூர் வானியல் ஆராய்ச்சி நிலையத்திற்கும் புதிய தொலைநோக்கிக்கும் வைனு பாப்புவின் பெயர் சூட்டப்பட்டது. வைனு விரும்பியபடியே அடுத்த சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெற்ற போது வானில் வலம்வரும் ஒரு குறுங்கோளான 2596 என்பதற்கு வைனுபாப்புவின் பெயர் சூட்டப்பட்டது.
இத்தகைய அயராத முயற்சிகளால் நமது நாட்டிலும் வானியல் ஆய்வானது மகோன்னதமாக வளர்ந்துள்ளது. தொலை நோக்கி ஆடிகள் மூலம் வானியல் ஆராய்ச்சி மட்டுமின்றி மின்காந்த அலைகளான அகச்சிவப்பு கதிர்கள் முதல் காமா கதிர் வரையிலான ஆராய்ச்சிகளும் நன்கு விரிவடைந்து உள்ளன. இவை அனைத்தும் எம்.கே. வைனு பாப்பு என்கிற ஒற்றை மனிதனின் அர்ப்பணிப்பிற்கும், தீர்க்க தரிசனத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.