Welcome..! Join us to Develop your Humanity
பாரம்பரிய சங்கீத கிராமம்
பஞ்சாபில் உள்ள இந்த குக்கிராமத்தில், நாம்தாரி சீக்கியர்களின் பணியால், அனைத்துக் குழந்தைகளும், கடந்த நூறு வருடங்களாக, பாரம்பரிய இசை பயின்று வருகிறார்கள்.
பஞ்சாபில் உள்ள லுதியானா மாவட்டத்தில் இருக்கும் அமைதியான கிராமம் பைனி சாஹிப் என்பது. இங்கு உள்ள எல்லா வீட்டிலிருந்தும் பாரம்பரிய சங்கீத மெட்டுக்கள் கேட்பது வழக்கமான ஒன்று. இந்த தனித்துவம் வாய்ந்த கிராமத்தில் ஒரு ரகசியம் உண்டு. பைனி சாஹிப் கிராமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாரத பாரம்பரிய சங்கீதத்தின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. முறையான பாரம்பரிய சங்கீத கல்வியில் ஆர்வம் குறைந்து வரும் இத்தருணத்தில், இந்த அமைதியான கிராமம், நம் தேசத்திற்கு ஒரு உயரிய உதாரணமாகத் திகழ்கிறது.
பைனி சாஹிப் கிராமத்தில், சங்கீதம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே எப்பொழுதும் இருந்திருக்கிறது. அங்கு வாழ்பவர்கள் குடியானவராகவோ, வங்கி நிர்வாகத்தினராகவோ, கடைக்காரராகவோ அல்லது வீட்டிலேயே வசிப்பவராகவோ இருந்தாலும், ஒரு ராகத்தின் பெயரையோ, பாரம்பரிய வித்வான்களின் பெயரையோ, கண்ணிமைக்காமல் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். ஒவ்வொரு நாளும், தங்கள் பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் மற்றும் விளையாட்டுப் பயிற்சியை முடித்தவுடன் பைனி சாஹிப் கிராமத்தின் குழந்தைகள், தங்கள் இசை வாத்தியங்களை எடுத்துக்கொண்டு சங்கீதம் கற்றுக்கொடுக்கப்படும் அறைக்கு ஓடுவர். அங்கு, பல்வந்த் சிங் நாம்தாரி, அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக காத்திருப்பார். அவர் ஒரு வாய்ப்பாட்டு வித்தகர். அக்குழந்தைகளுக்கு சங்கீதம் பற்றிய ஞானம் மற்றும் வாத்யங்களை வாசிக்கும் முறை பற்றி மட்டும் கற்றுக்கொடுக்காமல், சங்கீதத்திற்கும் பிரபஞ்சத்தின் சந்தத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றியும், சில ராகங்களை ஏன் சந்தியா காலத்தில் மட்டும் பாடவேண்டும் என்பது பற்றியும், மழையில் நடனமிடும் மயிலின் நாட்டியம் எவ்வாறு மனித சந்ததியினருக்கு சங்கீதத்தின் மேல் உத்வேகம் அளிக்கிறது என்பது பற்றியும் எடுத்துரைப்பார்.
பைனி சாஹிப் கிராமத்தில் கற்றுக்கொடுக்கப்படும் பாரம்பரிய சங்கீதம், பக்தியில் தோய்ந்து தனித்துவம் பெற்று விளங்குவதைக் காணலாம். பாரத பாரம்பரிய சங்கீதத்தின் பல நுணுக்கங்களை உள்ளடக்கி, அந்த சங்கீதமும் அதன் வாத்தியங்களும் (ஸரிந்தா, டாவுஸ், தில்ருபா, ஜோடி பகாவாஜ், மற்றும் ரபாப்), நாம்தாரியர்களின் நுட்பத்திறன் ஆகும். நாம்தாரிகள் என்பவர், பத்தாவது குரு கோவிந்திற்கு பிறகும், வாழும் குருக்களின் வம்சம் இருப்பதாக நம்பும், சீக்கிய சமுதாயத்தினராவர்.
சங்கீதம் ஒருவரை சிறந்த மனிதராக்குகிறது என நம்பும் நாம்தாரியர்கள், 19-ம் நூற்றாண்டில் பைனி சாஹிப் கிராமத்தினை தங்கள் ஆன்மீக மையமாகக் கொண்டனர். இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. பாரதத்தின் சுதந்திர இயக்க போராட்டத்தின் போது பல சீக்கியர்கள் உயிர்த்தியாகம் செய்தது பைனி சாஹிப் கிராமத்தில் தான்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, நாம்தாரி ஆன்மீகத் தலைவர், சத்குரு ப்ரதாப் சிங், கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பாரம்பரிய சங்கீதம் பயில கற்றுக்கொடுக்கும் வழக்கத்தைத் துவங்கி வைத்தார். சங்கீதத்தின் வலிமையில் ஆன்மா பரிணாம வளர்ச்சி அடையும் என்று ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த அவர் கூறிய வார்த்தைகள் மகத்தானவை. 'சங்கீதத்தின் நறுமணம் ஒவ்வொரு குழந்தையையும் தொட வேண்டும் என்பது எனது விருப்பம்,' என்பது தான் அந்த வார்த்தைகள்.
1959-இல் அவர் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சத்குரு ஜக்ஜித் சிங் பொறுப்பேற்று, இந்த அழகான பாரம்பரியம் தொடர வழி செய்தார். தேர்ந்த பாடகர் மற்றும் தில்ருபா வாசிக்கும் திறமை கொண்ட சத்குரு ஜக்ஜித் சிங், தந்தையின் சங்கீத வேட்கையை மரபுரிமையாகப் பெற்றிருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் பைனி சாஹிப் கிராமம், பாரம்பரிய சங்கீதத்தையும், பழம்பெரும் பாரம்பரிய இசை வாத்தியங்களையும், போற்றிப் பேணி பாதுகாத்து வளர்ந்தது.
சத்குரு ஜக்ஜித் சிங் பாரதத்தின் இசை மேதைகளுடன் தொடர்பு கொண்டு, பைனி
சாஹிப் கிராம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வழி செய்தார். ஒரு முறை கிர்பால் சிங் என்னும், கிராமத்தில் வசிக்கும் சிறுவனை, தன்னுடன் அழைத்துச் சென்று, ஷெனாய் வாசிக்கும் பார் போற்றும் உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களை சந்தித்தார். முதலில் எரிச்சலான அம்மேதை, அவர்கள் சங்கீதத்தின் மேல் கொண்டிருக்கும் பக்தியைக் கண்டு நெகிழ்ந்து, கிர்பால் சிங் தார்-ஷெனாய் வாசிக்க கற்றுக்கொடுக்க இசைந்தார். தார்-ஷெனாய் ஓர் அரிய இசைக்கருவி. அதன் கூம்பு வடிவத்திலிருக்கும் ஊதுகுழல், ஷெனாய் போலவே ஒலிக்கும்.
தனது பயிற்சிக்குப் பிறகு, கிர்பால் சிங் தன் கிராமம் திரும்பினார். அங்கு வங்கி மேலாளராக பொருப்பேற்றதுடன் இல்லாமல், கிராமத்தின் குழந்தைகளுக்கு அக்கலையை கற்றும் கொடுத்தார். பல வருடங்கள் தன்னுடைய திறனை மேம்படுத்தியதனால், கிர்பால் சிங் இன்று உலகத்தில் பிரசித்தி பெற்ற தார்-ஷெனாய் வாசிப்பவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
அது போன்று, சத்குரு ஜக்ஜித் சிங் தபேலா வாத்திய வித்தகர் கிஷன் மஹராஜ் அவர்களை மற்றுமொரு சிறுவனுக்கு கற்றுக்கொடுக்கும்படி விழைந்தார். அவர்தான் இன்று பிரசித்தி பெற்ற தபேலா மற்றும் ஜோடி பகாவஜ் (புராதன பாரம்பரிய பேரிகை) வாத்தியக்காரர், சுக்விந்தர் சிங். அவரும் தான் கற்ற கலையை மற்ற சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
அந்த கிராமத்திலிருந்து பல மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் புகழ் சேர்த்து வருகிறார்கள். ரபாப் வாசிக்கும் ஹர்ஜிந்தர் சிங், தில்ருபா நிபுணர் தேவிந்தர் சிங் மற்றும் பலர் ஆவர். ஸிதார் மீட்டுபவரும், சிறந்த பாடகரும் ஆகிய ஹர்பஜன் சிங், பைனி சாஹிப் கிராமத்திலிருந்து சென்று, உஸ்தாத் அம்ஜத் அலி கான் அவர்களிடம் பயின்று, தன் கிராமத்தில் மூன்று தலைமுறையினருக்கும் வெளிநாட்டவருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய பணியாக, பைனி சாஹிப் கிராமத்தில் உள்ள சிறார்களுக்கு கற்றுக்கொடுப்பதே தலையாயதாக கொண்டாலும், சத்குரு ஜக்ஜித் சிங் அவர்கள் தேசத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வரும் ஆர்வலர்களுக்கு உதவுவதில் தயங்குவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, 1973-ல் தில்லியில் ஒரு முறை ராஜன் மற்றும் சாஜன் மிஸ்ரா சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு அவர்களின் திறமையை பாராட்டி, அவர்கள் வேலையை விட்டுவிட்டு சங்கீதத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்பதாக இருந்தால், தான் உதவுவதாகக் கூறினார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மக்கள் நேசிக்கும் பாடகர் ராஜன் மிஸ்ரா கூறுகையில், 'மறு நாளே என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். கற்றுத்தருவதற்காகவும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவும் பைனி சாஹிப் சென்று வருகிறோம்.' பைனி சாஹிப் கிராமத்தின் வலுவான சங்கீத சூழல், பல சங்கீத வித்வான்களை அங்கு வரச் செய்திருக்கிறது. ஸிதார் மீட்டும் விற்பன்னர் விலாயத் கான் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருகிறார். பிரசித்திபெற்ற சிவகுமார் ஸர்மா தான் உபயோகிக்கும் சந்தூர் கருவிகளை இந்த கிராமத்திலிருந்து தான் வரவழைக்கிறார்.
புகழ் பெற்ற தபேலா விற்பன்னர்கள் உஸ்தாத் அல்லாஹ் ரக்கா மற்றும் பண்டிதர் யோகேஷ் ஸாம்சி, பல நாட்கள் பைனி சாஹிப் கிராமத்தில் தங்கியிருக்கின்றனர். அவர்களுடைய தொடர்பினால் திறமையான சிறார்களுக்கு இந்த வித்வான்களிடமிருந்து கற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் தங்கி இந்த வித்வான்களின் அரங்கத்தில் பயில்வதற்கு வசதியாக, பைனி சாஹிப் கிராம சிறுவர்களுக்கு கட்டணமில்லா தங்கும் விடுதி அமைக்கப்பெற்று இருக்கிறது. இதனால் பயனுற்ற பல சிறுவர்கள் சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெறுவதற்காக கல்வி பயிலுகிறார்கள்.