Welcome..! Join us to Develop your Humanity
முத்து முருகன்-அரை ஏக்கர் நிலத்தில் பசியுடன் வரும் பறவைகளுக்காகவே சிறுதானியங்களைப் பயிரிடும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி
நம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு, விளை நிலங்களில் பறவைகளின் நடமாட்டம் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது . ஆனால் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து முருகன் பறவைகளை அவ்விதம் கருதவில்லை.
62 வயதான இயற்கை விவசாயியான முத்து முருகன், தன் நிலத்தில் பயிரிடுவதை பறவைகளுடன் உற்சாகமாக பங்கிட்டுக் கொள்கிறார். இதற்காக தனது நான்கு ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை பறவைகளுக்காக சோளம், தினை போன்ற சிறுதானிய பயிர் வகைகளை பயிரிடுவதற்காகவே பயன்படுத்துகிறார்.
"இதன் முக்கியமான எண்ணம் என்னவென்றால் இயற்கைச் சூழலில்,, காடுகள் சூழ்ந்த இடங்களில் பயிர்களை வளர்ப்பது போலாகும். காட்டில் எவரும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில்லை மற்றும் பறவைகளின் வாழ்விடத்தில் வாழ விடாமலும் தடுப்பதில்லை. அதனால் நாம் ஏன் அவற்றைத் தடுக்க வேண்டும்?" என முருகன் கேட்கிறார்.
மேலும் பூச்சிகளை ரசாயன பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிப்பதன் வாயிலாக பறவைகளுக்கு உணவு கிடைப்பது தடைபடுகிறது", என முருகன் விவரித்தார்.
முருகன் 90-களில் இருந்தே பறவைகளுக்கு உதவி வருகிறார் . அவர் பறவைகளுக்கு ஏற்ற விதைகளை தன் வயல் வெளியின் நாற்புறங்களிலும் தூவி வளர்ப்பார்.. எனினும், இந்த வருடத் துவக்கத்தில் இருந்து, ஒவ்வொரு ஏக்கரின் கால் பாக நிலத்திலும் தினை மற்றும் சோளத்தை பயிரிட முடிவு செய்தார்.
"காலப்போக்கில், பல விவசாயிகள் பணப் பயிர்களை பயிரிட ஆரம்பித்ததனர், இதனால் எங்கள் கிராமத்திற்கு பறவைகளின் வரத்து குறைய ஆரம்பித்தது. சில மாதங்களுக்கு முன்பு, சில விவசாயிகள் பறவைகளின் மேல் கல் எறிவதை நான் பார்த்தேன். அந்த நிகழ்வே பறவைகளுக்காக நான் தினை போன்ற சிறுதானியங்களை பயிரிட வேண்டும் என்ற எண்ணத்திற்கு உந்துதலாக அமைந்தது . இந்த நோக்கத்திற்காக நான் மூன்றாயிரம் ரூபாய் முதலீடு செய்தேன்,"என்று அவர் கூறினார்.
"இதன் முடிவு மிகவும் குறிப்பிடத்தக் அளவில் அமைந்தது. முனியா போன்ற பறவைகள், மயில்கள் மற்றும் கிளிகள் அடிக்கடி வரும் விருந்தினர்களாகிவிட்டன. இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக கண்ணுக்கு விருந்தாக இருக்கும். இக்கட்டான நேரங்களில், ஓய்வில்லாமல் மனிதர்கள் பின் செல்வதனால் நாம் பல நேரங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளைப் பற்றி மறந்து விடுவோம். ஆனால் சிறிதளவேனும் பறவைகளுக்காக என்னால் ஏதோ செய்ய முடிகிறது என்று நினைத்து நானே மகிழ்ச்சி அடைவேன்", என முருகன் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக, முருகனின் நண்பரும், வனவிலங்கு ஒளிப்பதிவுக் கலைஞருமான வருண் அழகர் தன் தொழில் சார்ந்த ஒரு வேலைக்காக முருகனின் பண்ணைக்கு வருகை தந்தபோது, அங்குள்ள இத்தகைய இயற்கைச் சூழலில் அமைந்த காட்சிகளைக் கண்டு அவர் மிகவும் வியப்படைந்தார்.
"முருகன் தனது நேரம், முயற்சி மற்றும் தனது பெருவாரியான சேமிப்புகளை இயற்கை வரலாறு காக்கப்பட வேண்டும் என்பதற்காக அர்ப்பணித்துள்ளார்.. அவருடைய கோட்பாட்டின் படி விலங்குகளோ, பறவைகளோ எதுவும் மறையவில்லை, அவை நம்மால் இடம் பெயர்ந்துள்ளன. ஒவ்வொரு விவசாயியும் தன் நிலத்தில் இருந்து சிறு பங்கு நிலத்தை பறவைகளுக்காக அர்ப்பணித்தால், பறவைகள் அடர்த்தியான வயல் பரப்பளவில் பயிர்களை சூறையாடுவதை தடுக்க முடியும்", என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருண் அழகர் குறிப்பிட்டுள்ளார்.
பறவைகளுக்கு இணக்கமாக விவசாயம் செய்தல்
முருகன் தனது நிலத்தைச் சுற்றி உயிரோட்டமுள்ள வேலியாக, உயரமான முள் நிறைந்த கள்ளிச் செடிகள், காட்டாமணக்கு போன்ற அடர்ந்த செடிகளை வளர்ப்பதில் அந்தப் பகுதியில் பெயர் பெற்றவர். மரபுசார்ந்து அமைக்கப்பட்ட இந்த வேலிகளின் இலைகள் செடிகளுக்கு இயற்கை உரமாக அமையும் என்றும், மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இயற்கை வாழ்விடமாக அமையும் என்றும் அவர் எண்ணினார். மேலும் அந்த உயிரோட்டமான வேலியில் பறவைகள் இடும் கழிவுகள் அந்த மண்ணிற்கு மேலும் வளம் சேர்க்கிறது.
மேலும், சில விவசாயிகளிடம் இதுபோன்ற உயிரோட்டமான வேலிகள் இல்லை என்றால் அவர்கள் தங்கள் நிலத்திலுள்ள பலபகுதிகளில் பறவைகளுக்கான உணவுச் செடிகளை வளர்க்கலாம். இது பறவைகள் ஒரே இடத்தில் கூடி செடிகளை அழிப்பதை தடுக்கும் என அவர் நினைக்கிறார்.
"இதுபோன்று பறவைகளுக்காக உணவு தானியங்களை வளர்ப்பது அனைத்து விவசாயிகளாலும் செய்ய முடியாது . ஆனால் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க பறவைகளை நம்மால் பெரும் பங்கு ஆற்ற வைக்க முடியும். இதை நாம் மறத்தல் கூடாது", எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
முருகனின் எளிமையான முயற்சிகள் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது அவ்வளவு சிரமமானது இல்லை என்று நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.