Welcome..! Join us to Develop your Humanity
நமது அன்பிற்குரியவரை இழந்ததால் எற்படும் வலி சில சமயம் மனிதரை இவ்வுலகை இன்னும் சிறந்ததாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கத் தூண்டுகிறது. ஒரு வீட்டின் முதுகெலும்பு பெண்களே ஆவர், முக்கியமாக தாய்மார்கள். தற்காலத்தில் தாய்மார்களால் இவ்வுலகில் செய்ய முடியாத செயல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அவர்கள் வீட்டை பார்த்து கொள்வார்கள், வெளியே சென்று வேலை செய்து சம்பாதிப்பார்கள்; இல்லை மொத்த உலகையே மாற்றுவார்கள். சுபாஷிணி மிஸ்த்ரியை மனித குலத்தின் கலங்கரை விளக்காக கருதலாம்.
காய்கறி விற்பது மற்றும் வீட்டு வேலை செய்வதை தொழிலாக கொண்ட சுபாஷிணி மிஸ்த்ரி என்னும் ஒரு ஈடுஇணையற்ற தாய் தனது வாழ்நாள் சேமிப்பை வைத்து ஒரு மருத்துவமனையையே கட்டியுள்ளார். உடல் உழைப்பு பணம் சம்பாதிர்பதற்கான சிறந்த வழி என்று இருப்பினும் அதன் மூலம் தனது நான்கு குழந்தைகளை வளர்த்து ஒரு நல்ல வேலையில் அமர வைத்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உதவ ஒரு மருத்துவமனை ஒன்றையும் இவர் கட்டியுள்ளார்.
மிஸ்த்ரி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். அவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவருக்கு இருபது வயது இருக்கும் போது அவர் நான்கு குழந்தைக்குகளுக்குத் தாய். அவரது கணவன் ஒரு ஏழை கூலி தொழிலாளி. சுபாஷிணி மிஸ்த்ரிக்கு இருபத்து மூன்று வயது இருக்கும் போதே அவருடைய கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு காரணம் அங்கு இருந்த அரசு மருத்துவமணையில் போதுமான மருத்துவ வசதி இல்லாததே. அவரின் நான்கு குழந்தைகளையும் வளர்க்கும் சுமையை இவர் தனியாக சுமக்க வேண்டி இருந்தது. அவர் வாழ்வில் சந்தித்த இழப்பின் வலி அவரை பல அப்பாவி மக்களின் உயிர்களை காப்பதற்காக ஒரு நவீன மருத்துவமனையை உருவாக்கத் தூண்டியது.
இதை பற்றி அவர் கூறும்போது தனது கணவர் இறந்தது முதலில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் அதன் பிறகு தனது நான்கு குழந்தைகளுக்கு தான்தான் சோறு போட வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் ஒரு நல்ல வேலையில் அமர்வதற்கான முறையான கல்வியும் அவரிடம் இல்லை. ஆதலால் தனது குழந்தைகளை வளர்பதற்காகவும் அவர்கள் எதிர்காலத்தை காப்பதற்காகவும் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தார். அவர் தனது வருமானத்தை வைத்து நான்கு குழந்தைகளையும் பராமரிக்க முடியாததால் இரண்டு குழந்தைகளை காப்பகத்தில் விடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
"எனது கணவர் இறந்த அதே ஊரில் ஏழை எளிய மக்களுக்காக ஒரு மருத்துவமனையை நான் கட்டுவேன் என்று சபதம் எடுத்தேன். ஏனெனில் எனது கணவருக்கு வந்த நிலைமை மற்ற யாருக்கும் வர கூடாது" என்று அவர் கூறினார்.
அவரது சாத்தியப்படாத கனவை பார்த்து மக்கள் சிரித்தனர். ஆனால் சுபாஷிணி சாதாரணப் பெண் அல்ல. . அடுத்த இருபது வருடங்கள் அவர் வீட்டு வேலை செய்பவராகவும், கூலி தொழிலாளியாகவும், காய்கறி விற்பனையாளராகவும் உழைத்தார். அவர் வருமானத்தின் பெரும்பகுதியை தனது கனவு மருத்துவமனைக்காக சேமித்தார் மீதி பகுதியை தனது நான்கு குழந்தைகளை வளர்க்க செலவிட்டார்.
அறுபத்து ஐந்து வயதான சுபாஷினி தனது வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்தி தனது கணவரின் சொந்த ஊரில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் சமுதாயத்தை தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டார் அவர்களும் தங்களால் முடிந்ததை செய்தனர். அவரது மகன் அஜய் தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஐம்பதாயிரம் திரட்டினார். தாய் மற்றும் மகன்களின் கடின உழைப்பு இறுதியில் பயனை நல்கியது.
1996 இல் ஒரு அறை கொண்ட சிகிச்சையகம் உருவானது, இதுவே வருங்கால மருத்துவமனையின் துவக்கமாக அமைந்தது. பக்கத்துக்கு கிராமங்களில் இருந்து மூன்று மருத்துவர்களை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க சம்மதிக்க வைத்தார். நோயாளிகள் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர், சுபாஷிணியின் புகழ் அங்கு எல்லா வீட்டிற்கும் பரவியது. "இன்னும் நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. நான் எனது மருத்துவமனையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவேண்டும் மேலும் அனுபவம் நிறைந்த மருத்துவர்களை பணியமர்த்தும் நிலைமைக்கு வரவேண்டும். ஒருநாள் இதை இருபத்திநான்கு மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் " என்று பெருமையுடன் கூறினார்.
1995 இல் இந்த மருத்துவமனைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்பு மக்களுக்காக திறக்கப்பட்டது. இன்று நாற்பத்தி ஐந்து படுக்கை கொண்ட இந்த மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களும், சிறந்த மருத்துவ உபகரணங்களும் உள்ளன. பெரிய அறுவை சிகிச்சைகள் ரூபாய் ஐயாயிரத்திற்கு குறைவாகவும், சிறிய நோய்களுக்கு பத்து ரூபாய்க்கும் குறைவாகவும் இங்கு சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது அவர் இரண்டு மருத்துவமனை நடத்தி வருகிறார் ஒன்று அவரது ஊரான நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸகாலியில் உள்ளது மற்றொன்று சுந்தர்பன்ஸில் உள்ளது.
அவரது மற்றொரு கனவு தனது ஒரு மகனை மருத்துவராக்க வேண்டும் என்பது. அந்தக் கனவும் நிறைவேறி சுபாஷிணி மிஸ்த்ரியின் இளைய மகன் தற்போது மருத்துவராக உள்ளார். அவர் தனது தாய் உருவாக்கிய மனிதநேய மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியிடம் அவர் “யாருக்கும் மருத்துவ கவனிப்பு மறுக்கப்படக்கூடாது " என்று கூறினார். இந்த அடிப்படை கருத்துக்களுடன் அவர் தனது மருத்துவமனையில் ரூபாய் ஐயாயிரத்திற்கு குறைவாக பெரிய அறுவை சிகிச்சைகளையும் ரூபாய் பத்திற்கு குறைவாக சிறிய நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார். சுந்தர்பனில் இன்னொரு மருத்துவமனையை ஆரம்பித்து உள்ளார்.
பணிவிற்கும் பெருந்தன்மைக்கும் உருவமாக விளங்கும் இவர் "காட்பிரே பிலிப்ஸ் ப்ரவேரி" விருதை மனத்திட்பத்திற்கான (Mind of Steel ) பிரிவில் 2009 இல் பெற்றார். மேலும் ஏழைகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்காக அவரது அசாதாரமான பங்கை அங்கீகரித்து இந்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதினை 2018 இல் வழங்கியது. அவர் விருதை பெறும்போது எளிமையாக சாதாரண செருப்பு அணிந்ந்திருந்தார்.
"என்னை இந்திய அரசு அங்கீகரித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அனால் எனது விருப்பம் யாருக்கும் மருத்துவ கவனிப்பு கிடைக்காமல் போகக்கூடாது என்பதுதான். எனக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றவர்களையும் சமுதாயத்திற்காக உழைக்க தூண்டும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
வாழ்வின் துன்பமான தருணத்தில்கூட அந்த துயரம் மற்றவருக்கு வரக்கூடாது என்று எண்ணி அதை தனது உழைப்பாலும், தியாகத்தாலும் சாத்தியமாக்கிய சுபாஷிணி மிஸ்த்ரி நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார்.