Welcome..! Join us to Develop your Humanity
தனது வாழ்வில் 60 ஆண்டுகள் செலவிட்டு குப்பைகளை கலைக்கூடமாக மாற்றிய ஒரு ஒப்பற்ற கலைஞன் நிக்சந்த் (NEK CHAND).
இந்திய நகரமான சண்டிகரின் எல்லையில் உள்ள ஒரு வனத்தில், ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இரவில், ரகசியமாக தன்னுடைய சிற்ப பூங்காவை அமைக்க உழைத்து வந்த ஒரு சுய கலைஞன் நிக்சந்த். மின்னும் கடவுள் சிலைகளையும், புராண உயிர் இனங்களையும், மிக துல்லியமாகவும், அழகாகவும் வடிவமைத்தார்.
இன்று இந்தியாவில், தாஜ்மகாலிற்கு அடுத்தபடியாக அதிகமாக அறியப்பட்ட சுற்றுலா தலமாக, இந்த சிற்ப பூங்கா உருமாறியுள்ளது. இந்த சிற்ப பூங்காவானது 25 ஏக்கர் நிலப்பரப்பில், 2000 சிலைகளுக்கு மேல் கொண்டுள்ளது. இதில் வியக்கும் சிற்பங்களும், அழகிய மாட மாளிகைகளும், எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளும், இயற்கையான வீடு, முற்றம் மற்றும் உயர்ந்த நீர்வீழ்ச்சியும் உள்ளது.
1924ல் பஞ்சாப்பின் வடபகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு ஏழை விவசாயியின் மகனானப் பிறந்தார் நிக்சந்த் சயினி. பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட அவர், விவசாய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஓய்வு நேரங்களில் களிமண்ணால், தான் செய்த சிலையின் கை விரல்களுக்கு உடைந்த வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்து ரசித்தார்.
1947 ல் பாரதம், இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட போது, நிக்சந்த் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தற்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட, தன்னுடைய சொந்த ஊரைவிட்டு, தனது குடும்பத்துடன் 1950ல் சண்டிகரில் அவர் குடியேற நேரிட்டது. அப்பொழுது சண்டிகரை புது தலைநகரமாக மாற்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கட்டிட வல்லுநரான ‘லி கார்புசர்’ ( Le Corbusier) நியமிக்கப்பட்டார்.
நிக்சந்திற்கு சாலை ஆய்வாளர் வேலை கிடைத்தது. தெருவெங்கிலும் நகரத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக எங்கும் குப்பைகளும், உடைந்த பாத்திரங்களும், வாகன பாகங்களும், சேலைகளும் மற்றும் இதர பொருட்களும் பரவிக் கிடந்தன. இதனை கண்டு, இதனால் ஈர்க்கப்பட்டு, இவைகளை சேகரித்து, தினமும் தனது பணி முடிந்த பிறகு, மாலை 5 மணிக்கு மேல், தன்னுடைய மிதிவண்டியில் இவைகளை எடுத்துக் கொண்டு, நகர எல்லையில் உள்ள வனத்திற்கு செல்வார்.
அங்கே, தன்னுடைய 20 ஆண்டுகால கடின உழைப்பால், இந்த எழில் மிகு சிற்ப பூங்காவை வடிவமைத்தார். தனது சொந்தக் கரங்களாலேயே வனத்தில் ஒரு பகுதியை சுத்தப் படுத்தினார். அந்த இடத்துக்கு சென்று வர சரியான சாலைகள்௯ட இருக்கவில்லை. யாரும் எந்தக் காரியத்துக்காகவும் அங்கு வருவதுமில்லை.
பலரும் குப்பை என ஒதுக்கக்௯டிய பொருட்களைப் பயன்படுத்தி, அவர் தெய்வ மூர்த்திகளைச் செய்தார். குரங்குக் ௯ட்டங்கள், பலவண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட நடனமாடும் மனிதர்கள், சந்திரனைப் போல பிரகாசிக்கும் முகங்களுடன் சிலைகள் அனைத்தும் வனத்தினுள் வளரலாயின. அவைகளைச் சுற்றி அருவிகள், அழகான பாதைகள் மற்றும் பாறைகளால் உருவாக்கப் பட்ட சிறுசிறு கோவில்களை உருவாக்கினார். அவரது சொந்த கிராமத்தின் இயற்கையான சூழ்நிலையையும், விலங்குகள் மற்றும் மரங்களுடன் தோற்றுவித்தார்.
“நான் ஒவ்வொன்றாக அந்த சிற்பங்களை உருவாக்க உருவாக்க, அவை என்னை மிகவும் ஆனந்தப்படுத்தின” என்றார் நிக்சந்த். கழிவுகளிலும் கற்களிலும் உறையும் உயிரோட்டத்தை அவர் கண்டு அவற்றில் மாய பதுமைகளைப் படைத்தார். “நான் தேவ தேவியருக்கான ஒரு நகரத்தையே உருவாக்கினேன். அந்தப் பாறைகளில் அவர்கள் அனைவரையும் ஜீவனுடன் நீங்கள் காணலாம்” என்றார் அவர்.
1975-ல் நகரை விரிவுபடுத்தும் நோக்குடன் நிக்சந்தின் சிற்ப பூங்காவை அகற்ற, சண்டிகர் நகர நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், சிற்ப பூங்காவின் பிரமிப்பூட்டும் அழகையும், சோலை வளத்தையும், மேலும் பெருகிவரும் மக்கள் ஆதரவையும் கண்ட நகர நிர்வாகம் தனது முடிவை கைவிட்டது. 1976ல் இந்த சிற்ப பூங்காவை சண்டிகர் மாநகர நிர்வாகமே, முறையாக திறந்து வைத்தது. நிக்சந்த் அவர்கள் சாலை ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, முழுநேரமும் சிற்ப பூங்காவை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபடுமாறும், மேலும் அதற்காக 50ற்கும் மேற்ப்பட்ட பணியாளர்களையும் அவருக்கு அளித்து மாநகர நிர்வாகம் பணித்தது. அதே ஆண்டில் மக்களின் பார்வைக்காக இந்த சிற்ப பூங்கா திறக்கப்பட்டது. நிக்சந்த் தனது படைப்புகளைக் காணவரும் பார்வையாளர்களுக்கு எல்லாவற்றையும் ஆர்வத்துடன் சுற்றிக் காண்பித்தார்.
1982-ல் நிக்சந்த் அவர்களின் படைப்பை சிறப்பிக்கும் விதமாக தபால்தலை வெளியிடப்பட்டது. 1984-ல் நிக்சந்த் அவர்களின் கலைச் சேவையை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து கௌரவித்தது. பாரிஸ் மற்றும் பெர்லின் நகரங்களில் நிக்சந்த் அவர்களின் அற்புதமான படைப்புகளை காட்சிபடுத்த அழைக்கப் பட்டார். 1986ல் வாஷிங்டன் நகரில் 6 மாதம் தங்கி, தேசிய குழந்தைகள் அருங்காட்சியகத்தில் சிற்ப கூடத்தை அமைத்தார்.
நிக்சந்தும் அவரது குழுவும், அவர் 2015ல், தன்னுடைய 90 ஆவது வயதில் இறக்கும் வரை, இந்த சிற்பப் பூங்காவினை மேம்படுத்தும் பணியிலேயே, தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஒரு தனிமனிதனின் கனவை பறைசாற்றும் இந்த சிற்ப பூங்காவானது, இன்று நிக்சந்த் அறக்கட்டளையால் பாதுகாக்கப் படுகிறது. நிக்சந்த் அவர்கள், லிகார்புசர் ( Le Corbusier) அவர்களின் ஆசையான புதிய தலைநகரை உருவாக்க, மரங்களை அகற்றி மாட மாளிகைகளை அமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக பயனற்ற பழைய பொருட்களை கொண்டு, அனைத்தையும் படைத்தாக அவர் நம்பிய கடவுள்களுக்கு, இயற்கையான சிற்ப பூங்காவினை வடிவமைத்தார்.