Welcome..! Join us to Develop your Humanity
சிக்னலில் பிச்சை எடுத்தவர்களுக்கு மறுவாழ்வு என்னும் பச்சை விளக்கு!
ஸ்வாதி போந்தியா-ஆயிரக்கணக்கான ஏழைகளை தெருக்களில் இருந்து மீட்டு அவர்களை தன்மானமான வாழ்வு வாழ வைத்த கல்லூரி மாணவி
ஸ்வாதி போந்தியா 21ம் நூற்றாண்டில் பிச்சைக்காரர்களை தொழிலாளிகளாக மாற்றிய சமூக தொழில் அதிபர். அவர் தற்கால சமூக தொழிலதிபராக அமைந்து ஏழைகளின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியாக மிளிர்கிறார். கண்ணியமாக சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை நடத்தி, பிறகு பிச்சை எடுக்கும் அளவிற்கு ஏழ்மைக்கு தள்ளப்பட்டவர்கள் வாழ்வில் இவர் நட்சத்திரமாக மிளிர்கிறார்.
2011ஆம் ஆண்டு பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் , வாகன ஓட்டிகள் அனைவரும் பச்சை விளக்கு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி எங்கே பச்சை விளக்கு வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒவ்வொரு வாகனமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமி தற்செயலாக 18 வயது ஸ்வாதியிடம் கைகளை நீட்டினாள். ஸ்வாதி அவளுக்கு பணம் தர மறுத்துவிட்டார். எதிர்பாராத விதமாக அந்த சிறுமி அழத் தொடங்கி விட்டாள். இதை கண்டு பதைபதைத்த ஸ்வாதி தனது ஆட்டோவிலிருந்து இறங்கி அந்தச் சிறுமியை சமாதானப்படுத்தினார்.
ஸ்வாதி அவளுக்கு உணவும் உடைகளும் வாங்கித்தந்தார். ஆனால் அந்த சிறுமியோ,"அக்கா எனக்கு இதெல்லாம் தேவையில்லை, எனக்கு பத்து ரூபாய் தாள் தான் தேவை. நான் பணம் எடுத்துச் செல்லவில்லை என்றால், என் அம்மா என்னை அடிப்பார்", என்றாள் அந்தச் சிறுமி.
ஸ்வாதி ஒரு பெருமூச்சு விட்டார். அவர் இப்பொழுது அந்த சிறுமியின் தாய் மேல் மிகவும் கோபப்பட்டார். அதே நேரத்தில் தனது பொறுமையற்ற நிலையை நினைத்தும் கவலைப்பட்டார். ஸ்வாதி அந்த சிறுமியிடம் அவரது தாயிடம் அழைத்துச் செல்லுமாறு கூறினார். அவரது மூளையில் அந்த சிறுமியின் தாயிடம் என்ன கேட்கலாம் என்று ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.
ஆனால் ஸ்வாதிக்கோ அந்நாளின் இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைகளிடம் இருந்து பணத்தை சுரண்டும் தாயை காணப் போகிறோம் என எண்ணியிருந்த ஸ்வாதி, குடிகார கணவருடன், பல குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழும் உதவியற்ற புலம்பெயர் பெண்ணை பார்க்க நேரிட்டது. அந்தக் குடும்பம் ராஜஸ்தானிலிருந்து வேலை நிமித்தமாக அங்கு வந்திருந்தது. ஆனால் அவர்களை யாரும் நம்பத் தயாராக இல்லை, அவர்களுக்கு வேலை அளிக்கவும் தயாராக இல்லை. இதனால் பிச்சை எடுத்தலே அவர்களின் முடிவாக அமைந்தது.
இளைய பருவத்தில் இவ்வாறு உணர்ச்சிவசப்படுவது சகஜம் என நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஸ்வாதிக்கு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற ஆழமான உணர்ச்சி ஏற்பட்டது. அவர் அந்த குடும்பத்திற்கு வேலை வாங்கி தருவதாக வாக்களித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு, அந்த புலம்பெயர் குடும்பத்திற்காக ஸ்வாதி வேலைகளைத் தேடினார். இந்தத் தேடல் ஸ்வாதிக்கு அந்த குடும்பங்கள் படும் கஷ்டங்களை புரியவைத்தது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள், புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்துவிட்டார்கள். அந்நியர்களை நம்ப அவர்கள் தயாராக இல்லை.
ஏமாற்றமடைந்த ஸ்வாதி அந்த குடும்பத்திடம் தன்னால் அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்க முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்கச் சென்றார். ஸ்வாதி அவர்களின் இருப்பிடத்திற்கு நுழைந்த பொழுது அவருக்கு முழுவதும் புதுமையான காட்சி தென்பட்டது. அந்தக் குடிகார கணவன் சவரம் செய்து சுத்தமாக காணப்பட்டார், அந்த குழந்தைகள் பிச்சை எடுக்கச் செல்லவில்லை. அந்தத் தாயோ தங்கள் வாழ்க்கை மாறப்போகிறது என்று நம்பிக்கையுடன் இருந்தார். இதனைக்கண்ட ஸ்வாதிக்கு அவர்களுக்கு வேலை தேடும் முயற்சியில் தான் தோற்றுவிட்டதை கூறமுடியவில்லை.
இனி தானே அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்வாதி முடிவு செய்தாள். அவர் அந்த குடும்பத்துடன் அமர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த குடும்பம் தங்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யும் கலை தெரியும் என்று கூறினர். இதனால் ஸ்வாதி அவர்களை கைவினைப் பொருட்கள் செய்ய வாய்ப்பளித்தார். ஸ்வாதி கைவினைப் பொருட்கள் செய்ய அவர்களுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்களை வாங்கி வந்து தந்தார். அதை வைத்து அவர்கள் அழகான கைவினை பொருட்களை செய்தனர். இப்பொழுது அந்த போக்குவரத்து சிக்னல் பக்கம் மறுபடியும் சென்றனர்.
அவர்கள் தாங்கள் செய்த பொருட்களை நடைபாதையில் காட்சிப்படுத்தினார்கள். அன்றைய தினம் அவர்கள் 750 ரூபாய் சம்பதித்தனர். இது அவர்களுக்கு பெருமைக்குரிய நாள் என ஸ்வாதி கூறினார்.
இந்த வெற்றியால் அவர்களின் மனம் உந்துதல் பெற்று, அவர்கள் மேல் அவர்களுக்கே நம்பிக்கை பிறந்தது. அந்த குடும்பம் மேலும் பல கைவினைப் பொருட்கள் செய்ய ஆரம்பித்தனர். ஸ்வாதி அவர்களின் கைவினைப் பொருட்களை ஓம் சாந்தி வர்த்தகர்கள்(Om Shanti traders) என்னும் பெயர் பலகையின் கீழ் பெங்களூருவின் போக்குவரத்து நிறைந்த சிக்னல் பகுதிகளில் விற்கலானார். ஸ்வாதி அவர்களின் பொருட்களை பெருநிறுவனப் பொருட்கள் என்று கூறி விற்கலானார்.பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமானது அதனால் ஓம் சாந்தியின் கீழ் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமானது. ஸ்வாதி அந்த குடும்பத்திற்கு கொண்டுவந்த மாற்றத்தை கண்டு, வீதியில் வசிப்போர் பலர் அவரது நிறுவனத்தை தேடி வந்தனர்.
இன்று, தெருக்களில் சுற்றித் திரிந்த சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஓராயிரம் தனிநபர்கள் இப்பொழுது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து மரியாதையான வாழ்வு வாழ்கிறார்கள். ஸ்வாதி ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, அவர்களுக்கு என தங்கும் வசதி ஏற்படுத்தும் அளவிற்கு அந்தத் தொழிலை முன்னேற்றினார். ஓம் சாந்தி நிறுவனத்திடம் வேலை கோரும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயமாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என ஸ்வாதி அறிவுறுத்தினார். அதற்கு வேண்டிய நிதியையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்தார்.ஆண் பிள்ளைகளும் பள்ளிக்கு செல்வதில்லை என்று கவனித்தார், அவர்களும் பள்ளி செல்ல வழிவகை செய்தார்.
ஏழைகளின் வாழ்வை மாற்றிக் கொண்டிருந்த ஸ்வாதி, ஒரு கல்லூரி மாணவியாகவும் தன் வாழ்வை தொடர்ந்தார். தனது சமுதாய வேலையுடன், அவர் BBM மற்றும் MBA கற்றுத்தேர்ந்தார். ஸ்வாதி தொழில் முனைவோர்களுக்காக பல கண்காட்சிகள் மூலம் துணிகர முதலீடுகள் செய்ய ஆரம்பித்தார். அவரது நிறுவனம் பல எக்ஸ்போக்களை நடத்த ஆரம்பித்தது, மேலும் ஒரு கிராமத்திற்கு 20 லட்சம் வீதம் 12 கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்தது. அவர் ஒன்றன் பின் ஒன்றாக பல நிறுவனங்களை ஆரம்பித்தார். மேலும் அவர் கூறுகையில், சமுதாயத்தில் முன்னேறியவர்களும், பின்தங்கியவர்களை இணைக்கும் பாலமாகும் தனது கனவு மெய்ப்படும் எனக் கூறினார்.
வளர்ச்சி என்னும் கோபுரத்தின் அடியில் இருந்து ஏற்படும் மாற்றம் - "Bottom of the pyramid challenge" என்னும் திட்டத்திற்காக ஸ்வாதியை இந்தியாவின் பிரதிநிதியாக ஐ நா சபை 2014 ஆம் ஆண்டு அழைத்தது. இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், அடிமட்ட நிலையில் இருக்கும் மக்களின் வறுமையை ஒழிப்பது ஆகும். அவருக்கு உலக அளவில் பல அங்கீகாரங்கள் கிடைத்தன. ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (Junior Chamber International) எனும் அமைப்பு உலகின் தலைசிறந்த 10 இளமையான சமூக சேவகர்களில் ஒருவராக இவரை 2015ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கனஜ்வா என்னுமிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவித்தது. அந்த அமைப்பு உருவான 100 வருடங்களில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய பெண்மணி இவராவார். கல்லூரி மாணவியாக இருந்தாலும் ஸ்வாதியின் தைரியமும், சமூக நோக்கும் அவரை ஒரு தலைசிறந்த உதாரண மங்கையாக மாற்றியுள்ளது.