Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் ஜிதேந்திர சதுர்வேதி - 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 2000 குழந்தைகள் மற்றும் 6000 விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியவர்!
"ஐந்து வயதாக இருந்தபோது பசியுடன் போராடுவது எனக்கு கடினமாக இருந்தது. என் அம்மா கல்வியறிவற்றவள். என் தந்தை காணாமல் போன பிறகு, அவள் மூன்று குழந்தைகளுடன் இறப்பதற்காக ஒரு மாட்டுத்தொழுவத்தில் வீசப்பட்டாள். அங்கு இருந்த பண்ணைத் தொழிலாளர்களிடம் உருளைக்கிழங்கைத் தோண்டியபின் அவர்கள் கொட்டிய மண்ணைப்பற்றி கேட்பார். அதில் எங்களை பட்டினியிலிருந்து காப்பாற்றுவதற்காக சில உருளைக்கிழங்கைக் கண்டுபிடிப்பதற்காக அதிகாலை 3 மணிக்கு அவள் எழுந்திருப்பாள் ”என்று மனித முன்னேற்றத்திற்கான மேம்பாட்டுக் கழகத்தின் (Developmental Association for Human Advancement (DEHAT).) நிறுவனர் டாக்டர் ஜிதேந்திர சதுர்வேதி கூறுகிறார். தேஹாத் என்பது ஓர் அமைப்பின் சுருங்கிய பெயர் வடிவமாக இருந்தாலும், தேஹாத் என்கிற ஹிந்திச் சொல்லே கிராமத்தான் என்கிற சொல்லாக அமைவது இதன் கூடுதல் சிறப்பு ஆகும்.
அவரது குடும்பம் உத்தரபிரதேசத்தின் குஷி நகர் கிராமத்தில் மிகவும் வளமான குடும்பங்களில் ஒன்றாகும். இருப்பினும், அவரது தந்தை குடும்ப தகராறின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். ஜிதேந்திராவின் தாய் கல்வியறிவற்றவர், 1976 ஜனவரி 13 ஆம் தேதி அவர் திரும்பி வரும் வரை ஒவ்வொரு மாதமும் அவரது தந்தை அவர்களுக்காக ஒரு பண அஞ்சல் (Money Order) அனுப்புவார் என்பது அவருக்குத் தெரியும். மூன்று ஆண்டுகளாக, ஜிதேந்திரா, அவரது தாயார் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளும் ஒரு மாட்டுத்தொழுவத்தில் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் .
“என் அம்மாவிற்கு படிக்கவோ எழுதவோ தெரியாது . என் உறவினர்கள் பண அஞ்சலைப் (Money Order) பெற்று, ரசீதில் ஒரு கட்டைவிரல் ரேகையை வைக்கச் சொல்வார்கள். கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதற்கான எனது முதல் பாடம் அதுதான். மேலும், நான் சந்தித்த சோதனையானது எனது குழந்தைப்பருவத்தை முற்றிலுமாக நாசமாக்கியது. இது வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்று நான் விரும்பினேன் ”என்கிறார் ஜிதேந்திரா.
ஜிதேந்திரா 1990 இல் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BHMS) பெற்றார். ஆனால் பணம் சம்பாதிக்கும் விளையாட்டில் இறங்குவதற்குப் பதிலாக, உ.பி.யின் தொலைதூர கிராமங்களில் ஒன்றான பஹ்ரைச் (Bahraich) மாவட்டத்தில் பித்தியா (Bithiya) என்ற காட்டிற்குச்சென்றார். ஒரு குடிசையில் வசிக்கலானார் . சில நாட்களுக்குப் பிறகு, ஜிதேந்திரா ஒரு அசாதாரண வழக்கத்தை கவனித்தார். ஒவ்வொரு நாளும் கிராமவாசிகளின் ஒரு குழு காட்டை நோக்கி சென்றது , ‘பேகர் ’ (Begar ) என்று வேலை செய்யப் போவதாகக் கூறினர். பேகர் (கட்டாய உழைப்பு) என்பது பணம் இல்லாமல் சமூக உழைப்பின் ஒரு வடிவம். உழைப்பை பரிமாற்றத்தின் ஒரு முக்கிய பொருளாகக் கருதப்பட்டபோது, அதன் தோற்றம் பணத்திற்கு முந்தைய காலத்திற்கு செல்கிறது அதாவது பண்டமாற்று முறையில் உடல் உழைப்பை ஒரு பொருளாகக் கருதிய காலம்.
சுதந்திரத்திற்குப் பிறகு, பேகர் அமைப்பு 1950 இல் தடைசெய்யப்பட்டது. இருப்பினும், இந்த ஏழை கிராமவாசிகள் இதை அறிந்திருக்கவில்லை. ஜிதேந்திரா கிராமங்களின் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றார். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வன அதிகாரிகளுக்கு பயந்து, இது குறித்து அவரிடம் பேசக்கூட மாட்டார்கள்.
மன ஊக்கம் குறையாத, ஜிதேந்திர தந்திரங்களை மாற்றினார். பின்னர் அவர் ஒரு நிலத்தை தானாகவே சுத்தம் செய்து அவர்களை கைப்பந்து விளையாட அழைத்தார். சிறுவர்கள் நட்பாக மாறியதும், ஜிகேந்திரா ‘பேகர் ’ முறையைப் பற்றி இடைவேளையின் போது அவர்களிடம் பேசுவார். சிறுவர்கள் அதை வெறுத்ததாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும், அவர்கள் வன நிலத்தில் தங்கியிருந்ததால், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதிகாரிகள் அவர்களை தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி , அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்ற முடியும்.
அருகிலுள்ள ஐந்து கிராமங்களை ஆய்வு செய்த பின்னர், சுதந்திரத்திற்குப் பிந்தைய வருவாய் துறையின் பதிவுகளில் இந்த கிராமங்கள் சேர்க்கப்படாததால் குடியிருப்பாளர்களுக்கு குடியுரிமை இல்லை என்பதை ஜிதேந்திர உணர்ந்தார். இது கிராம மக்களை ஊழல் வனத்துறை அதிகாரிகளால் சுரண்டலுக்கு ஆளாக்கியது, மேலும் நில உரிமையாளர்கள் இவர்களை உரிமைகள் இல்லாமல் கடின உழைப்புக்கு தள்ளினர் . கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஆவணப்படுத்தத் தொடங்கிய அவர், அதிலிருந்து ஓரங்கநாடகங்களை (ஸ்கிரிப்ட்களை) உருவாக்கினார். பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளி இருவரும் என்ன தவறு நடக்கிறது என்பதை உணரும்படி அவர் அதிகாரிகளையும் கிராம மக்களையும் தெரு நாடக நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்.
விரைவில் ஜிதேந்திராவுக்கு பல ஆதரவாளர்கள் உருவாயினர், அவர் கிராமத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். இது சிலருக்கு பிடிக்கவில்லை, மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இது போலியானது என்று பலர் கூறினர். ஒருவேளை அவரது ஆதரவாளர்களுக்கு முன்னால் அவரை அவமானப்படுத்தும் நடவடிக்கையில், அவர் கைவிலங்கு செய்யப்பட்டு தனது பள்ளி மற்றும் கிராமவாசிகளின் முன்னால் நடத்தி செல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒரு சிலர் பின்வாங்கினர் - ஆனால் ஜிதேந்திராவுக்கு ஆதரவு பல பகுதிகளிலும் இருந்தது.
1993 ஆம் ஆண்டில் கிராமத்தை விட்டு வெளியேறிய அவர், நாடு முழுவதும் காந்திய தத்துவங்களில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப்பற்றி கற்றுக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் 2002 இல் பஹ்ரைச்சிற்குத் திரும்பிவந்து, தேஹாத் (DEHAT) ஐத் தொடங்கினார். முதல் ஆறு மாதங்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் ஜிதேந்திர ஆவணங்களை சேகரித்தார், இது இந்த கிராமவாசிகள் ஆக்கிரமிப்பாளர்களோ அல்லது வேட்டையாடுபவர்களோ அல்ல என்பதை நிரூபித்தது.
“ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அரசாங்க அதிகாரிகள் இந்த கிராம மக்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள், அவர்களுக்கு குடிமையியல் (சிவில்) உரிமைகள் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களிடம் குடியுரிமைச் சான்றிதழ் இல்லை, எனவே அவர்களது குழந்தைகள் படிக்க முடியவில்லை, அவர்களுக்காக ஒரு கணக்கைத் திறக்க எந்த வங்கியும் தயாராக இல்லை, இந்த கிராமங்களில் பள்ளிகள், பொது விநியோக முறைகள் அல்லது பஞ்சாயத்துகள் கூட இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட அரசாங்கத்திற்கு இல்லாதவர்கள். மறுபுறம், வன அதிகாரிகள் பெரும்பாலும் காடுகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவர்களை வீடுகளை விட்டு வெளியே தள்ள முயற்சிப்பார்கள், ”என்கிறார் ஜிதேந்திரா.
2003 ஆம் ஆண்டில் பஹ்ரைச்சில் ஏழு வனவாசி கிராமங்களுக்கு ‘வன உரிமை இயக்கம்’ தொடங்கினார், கிராமவாசிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து கற்பித்தார். அடையாளச் சான்றுகள் மற்றும் ரேஷன் கார்டுகளைப் பெறவும் அவர் அவர்களுக்கு உதவினார். அதேசமயம் ஜிதேந்திராவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினார். எனவே அவர் ‘ஸ்வாவலம்பன்’ என்னும் தற்சார்பு மற்றும் ஃபசல்(FASAL) (நிலையான வேளாண் சார்ந்த வாழ்வாதாரங்களுக்கான உழவர் நடவடிக்கை) போன்ற முயற்சிகளைத் தொடங்கினார், ஃபசல் என்றால் அறுவடை என்றும் பொருளாகும். இதன் கீழ் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை விவசாய முறைகள் உதவியுடன் கிராமவாசிகள் தங்கள் விவசாய நுட்பங்களை மேம்படுத்தினர் . விவசாயிகள் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள் .
2006 ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - இது காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தது. ஆனால் பஹ்ரைச்சின் இந்த ஏழு கிராமங்களில் உள்ள கிராமவாசிகள் பழங்குடியினர் அல்லாதவர்கள். பல போராட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த பின்னர், 300 குடும்பங்கள் இறுதியாக நிலத்திற்கு உரிமை பெற்றனர். இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் உரிமைகளுக்காக ஜிதேந்திர இன்னும் போராடி வருகிறார். அதிகாரிகளின் எந்த உதவியும் இல்லாமல் இருப்பினும், அவரது முயற்சியினால் இந்த கிராமங்களில் மின்சாரம், சாலைகள், பொது விநியோக அமைப்பு (P.D.S) மற்றும் கை பம்புகள் கிடைத்துள்ளன. அவரால் இந்த கிராமங்களில் சிலவற்றில் இணைய வசதியையும் பெற்று தர முடிந்தது. இந்த கிராமங்களில் ஒன்றை அவர் முற்றிலும் போதை அடிமையிலிருந்து விடுவித்தார் .
இந்த கிராமங்களில் டெஹாட் இப்போது பத்து பள்ளிகளை நடத்தி வருகிறது, அங்கு 400 மாணவிகள் பயில்கின்றனர். இன்று இந்த கிராமங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர், ஜிதேந்திரா மற்றும் அவரது டெஹாட் குழு (இப்போது 117 உறுப்பினர்களைக் கொண்டது) 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகள், 6000 விவசாயிகள் மற்றும் ஏழு கிராமங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் போன்ற நிரந்தர உள்கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை அரசாங்கத்திடமிருந்து ஒதுக்க முடியும் என்பதற்காக இந்த கிராமங்களை ‘வருவாய் கிராமத்தின்’ உரிமைகளைப் பெற அவர் இன்னும் போராடுகிறார்.
“இந்த நாடு எங்களுடையது! இதை சிறப்பாக்க வேறு யாரும் வரமாட்டார்கள். நாம் எந்தப் பாத்திரத்தில் /பொறுப்பில் இருந்தாலும், அதை நேர்மையுடனும், நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் செய்ய முயற்சித்தால், அது ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க உதவும். இது ஒரு ஜிதேந்திரா செய்ததைப் பற்றியது அல்ல, ஆனால் ஒரு சமூகமாக நாம் எவ்வாறு செய்கிறோம் என்பது பற்றியது. இன்று எல்லோரும் பணத்திற்காக வாழ்கிறார்கள், சமுதாயத்திற்கு முன்னுரிமை இல்லை . ஆனால் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், குறிப்பாக நம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும், நாம் ஒன்றாக நம் நாட்டிற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் ”என்று 2015 ஆம் ஆண்டில்‘ தேசத்தின் பெருமை ’என்று விருது பெற்ற டாக்டர் ஜிதேந்திர சதுர்வேதி முடிக்கிறார்.