Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் டி.எஸ்.கனகா - 80 பெண்களை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாற்ற ஊக்கப்படுத்திய ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
டாக்டர் தஞ்சாவூர் சந்தானகிருஷ்ண கனகா 31 மார்ச் 1932 அன்று மெட்ராஸில் (இப்போதய சென்னையில்) பிறந்தார். ஆரம்பத்தில் ஆன்மீக படிப்பை நோக்கி ஈர்க்கப்பட்ட அவர், பின்னர் மருத்துவத் துறையில் சேர விரும்பி, 1954 இல் தனது எம்பிபிஎஸ் முடித்தார்.
அதன்பிறகு, 1963 ஆம் ஆண்டில் பொது அறுவை சிகிச்சையில் தனது முதுகலைப் பட்டத்தை பெற்று, மேலும் 1966 ஆம் ஆண்டில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டப்படிப்பைச் செய்தார். 1973 ஆம் ஆண்டில் அவர் பெற்ற பிஎச்டி பட்டத்தின் ஆய்வறிக்கை, 'பெருமூளை வாதத்தில் ஸ்டீரியோடாக்டிக்ஸ் மதிப்பீடு' என்பதாகும்.
இந்தியன் மெடிக்கல் டைம்ஸுக்கு ஒரு சுவாரஸ்யமான நேர்காணலில், டாக்டர் கனகா தன்னை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக மாறத் தூண்டியது என்ன என்பதை விளக்குகிறார்.
“நான் என் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டு இருக்கும் பொழுது, எனது அண்ணியின் வலிப்பு கோளாறு சிகிச்சைக்காக, அவர் இந்தியாவின் ஆரம்பகால நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் பி.ராமமூர்த்தியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தியாவில் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆரம்பத்தில் சென்னை, வேலூர் மற்றும் பம்பாய் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே இருந்தது. எனவே, ஒரு உற்சாகமான மருத்துவ மாணவராக, நான் அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு வந்தேன். அவர் என்னிடம், உங்கள் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு வாருங்கள், நான் உங்களுக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை பற்றி கற்பிக்கிறேன் என்றார். அதுவே என்னை இந்த துறையில் வருவதற்கு தூண்டிய சம்பவமாக அமைந்தது”
பிறகு நடந்தது எல்லாம் வரலாறாக அமைந்துவிட்டது.
1975 ஆம் ஆண்டில் ஆழ்ந்த மூளை தூண்டுதலின் செயல்திறனை கண்டறிந்ததை தவிர, இந்தியாவின் மூளையில் நாள்பட்ட எலக்ட்ரோடு உள்வைப்புகளைச் செய்த முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெருமையை டாக்டர் டி.எஸ். கனகா பெற்றுள்ளார். டாக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர் எஸ் கல்யாண்ராமன் போன்ற முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு நரம்பியல் அறுவை சிகிச்சையின் முன்னணி ஆதரவாளராக 1960 களில் மற்றும் 70 களின் பிற்பகுதியில் இவர் விளங்கினார்.
அவரது ஆர்வம் நிறைந்த மற்றும் ஆராய்ச்சி பூர்வமான மருத்துவப் பணி மூலம், ஸ்டீரியோடாக்டிக் அறுவைசிகிச்சை (ஸ்டீரியோடாக்ஸி) இல் அவர் செய்த பணிக்காக அவர் நிறைய பாராட்டுக்களைப் பெற்றார்.
டாக்டர் ராமமூர்த்தி தலைமையிலான அணியின் உறுப்பினராக, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஸ்டீரியோடாக்டிக் நடைமுறைக்கான ஆராய்ச்சிப் பணியில் இவர் பங்கேற்றார். மேலும், 1963 முதல் 1965 வரை சீன-இந்தியப் போரின்போது நியமிக்கப்பட்ட அதிகாரியாக கேப்டன் பதவியில் இந்திய ராணுவத்தில் இவர் பணியாற்றினார்.
அவரது மருத்துவ வாழ்க்கையின் பெரும்பகுதியை மெட்ராஸில் (இப்போது சென்னை) உள்ள அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றியும், மேலும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் கற்பித்தல் பணியிலும் செலவிட்டார். மேலும் தொற்றுநோயியல் மையம், அடையார் புற்றுநோய் நிறுவனம் மற்றும் இந்து மிஷன் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றினார். சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்காக இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக தனது 20 வருட அறுவை சிகிச்சை அனுபவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் படிப்பில் ஆர்வம் கொண்டு மருத்துவ உயர் கல்வியில் டிப்ளோமா பெற்றார்.
டாக்டர் கனகா ஒரு வருடம் கொழும்புவில் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் பெல்லோஷிப்பைப் பெற்றவர். வலி மேலாண்மை மற்றும் உதரவிதான வேகக்கட்டுப்பாடு உள்ளிட்ட ஃபிரெனிக் நரம்பு தூண்டுதல் மற்றும் உயிர் மருத்துவ சேவைகளைப் படிக்க அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார். இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் தனது சுற்றுப்பயணங்களில் அவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினார், அவற்றில் பெரும்பாலானவை ஆழ்ந்த மூளை தூண்டுதல் எனும் கருத்துக்கு தொடர்புடையவை. பெருமூளை வாதம் கொண்ட நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடிய ஒரு ஆழமான மூளை தூண்டுதல் கருவி வடிவமைப்பதில் அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவிட்டார்.
புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் நிறுவனத்தில் பணிபுரிந்து 1990 ஆம் ஆண்டில், தனது 58 வயதில் டாக்டர் கனகா ஓய்வு பெற்றார், பின்னர் ஒரு ஆலோசனை சேவை மையம் அமைத்தார். அவர் தனியார் மருத்துவ பயிற்சி செய்ய விரும்பவில்லை.
ஏழைகள் மற்றும் நலிந்தவர்களிடம் அவர் கொண்டிருந்த அக்கறை மற்றும் அனுதாபத்தின் வெளிப்பாடாக தனது சொந்த நிதிகளையும் இருப்புக்களையும் திரட்டி அவரது பெற்றோரின் நினைவாக சந்தானகிருஷ்ணா பத்மாவதி ஹெல்த் கேர் மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைத்தார். தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கம்.
தனது ஆரம்ப ஆண்டுகளில், டாக்டர் கனகா சமுதாயத்தின் பாரபட்சமான போக்குகளினால் பாதிக்கப்பட்டார், மேலும் 60களின் முற்பகுதி மற்றும் 70 களில் நிலவிய ஆணாதிக்கத்தின் காரணமாக பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை, ஆனால் அவர் ஒருபோதும் தன் முயற்சியை கைவிடவில்லை. நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் நிபுணத்துவம் பெற பல பெண்களுக்கு அவர் ஒரு தூண்டுகோலாக இருந்தார். அவர் இரத்த தானம் செய்வதில் பேரார்வம் கொண்டவராக இருந்தார், மேலும் அவரது வாழ்நாளில் வியக்கத்தக்க அளவு 139 முறை இரத்த தானம் செய்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
டாக்டர் கனகா 1996 இல் ஆசிய பெண்கள் நரம்பியல் சங்கத்தின் கௌரவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 14 நவம்பர் 2018 அன்று தனது 86 ஆவது வயதில் காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் தனது முழு வாழ்க்கையையும் மருத்துவம் மற்றும் நரம்பியல் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளின் தேவைகளுக்கு சேவை செய்வதில் அர்ப்பணித்தவர் அவர். கடைசி நாள் வரை தீவிர ஆலோசகராக இருந்த அவரின் மறைவு, மருத்துவ வட்டாரங்களில் ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றது.
“அவர் உலகிலேயே மூன்றாவது பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் குறைந்தது 75 முதல் 80 பெண்களை நாட்டில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாற்ற ஊக்கப்படுத்தியுள்ளார். 11 வயது குழந்தையாக, நான் இருந்ததிலிருந்து, அவரை பார்த்து வளர்ந்த நான் எங்கள் குடும்பத்தில் இரண்டாவது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக மாறினேன்” என்று தி இந்துவுடனான உரையாடலில் வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தற்போதைய தலைவரான ஜி விஜயா அவர்கள் கூறினார். ஜி விஜயா என்பவர் மறைந்த டாக்டர் டி.எஸ்.கனகாவின் மருமகள்.
டாக்டர் கனகா தனது அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை மூலம் பெண்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் நுழைவதற்கான பாதையை வகுத்த முன்னோடியாக திகழ்ந்தார்.