Welcome..! Join us to Develop your Humanity
சுஜாதா. S.ரங்கராஜன்– அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தகவல்களை சாமானிய வாசகனுக்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர்.
சுஜாதா என்ற பெயரில் எழுதி வந்த எஸ்.ரங்கராஜன், தமிழ் இலக்கியத் துறையில் மிகவும் பிரபலமானவர். சிறுகதை, அறிவியல் புனைவு, நாடகங்கள், வரலாறு, திரைக்கதை என பலவற்றில் சாதித்து காட்டியவர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள புதிய தகவல்களை எளிய கட்டுரைகள் மூலம் சாமானிய வாசகனுக்கு எடுத்துச் சென்றதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். பொறியாளராக இருந்த சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்துத் தயாரித்ததில் முக்கிய பங்காற்றியவர். தற்போது அது இந்தியா முழுவதும் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற தமிழ் வார இதழ்களுக்கான இவரது கட்டுரைப் பகுதி பரவலாகப் பிரபலமானவை, எல்லா வயதினருக்கும் அவரது படைப்பு ஈர்க்கக்கூடியதாக இருந்தது . தமிழ் இலக்கியத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது நயமான மொழிநடையால் ஈர்த்தவர். மேலும் பல தமிழ் படங்களுக்கு திரைக்கதை, வசனம் இவர் எழுதியுள்ளார்.
1935 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா, திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் தனது தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் படிப்பைத் தொடர்ந்தார். திருச்சி கல்லூரியில் இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கல்லூரித் தோழர் ஆவார். பின்னர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் படித்து முடித்தார்.
அவரது பல படைப்புகள் அவரது கல்வி பின்னணி, குறிப்பாக அறிவியல் புனைகதை வகையைச் சார்ந்தவையாக இருந்தன. "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" (ஸ்ரீரங்கம் ஏஞ்சல்ஸ்) என்னும் தொடரை 1950-களில் அவர் அவ்வூரை மையமாக வைத்து எழுதினார். குமுதம் இதழில் இவரது முதல் சிறுகதைகள் வெளிவந்தன. ஆனந்த விகடனில் வெளியான "பாலம்" வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது.
2020க்குப் பிந்தைய சென்னை, அங்கு ஏர் டாக்ஸிகளும், ஜிகோலோவும் புழக்கத்தில் இருக்கும் என்று தனது அறிவியல் புனைகதையில் எழுதினார். குழந்தை பாலியல் வன்கொடுமைகள் பற்றிய பல விஷயங்களில் தமிழ் சமூகம் அதிகம் விவாதிக்காத ஒரு காலகட்டத்தில் அதைப் பற்றிய கருத்தாக்கத்தையும் அவர் முன்வைத்தார்.
ஏறக்குறைய 100 நாவல்கள், 200 சிறுகதைகள் எழுதியுள்ளது மட்டுமின்றி பிரபல தமிழ் வார இதழான குமுதம் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். சங்கத்தமிழ் முதல் அறிவியல் புனைகதை வரை, அகநானூறு முதல் வானவியல் இயற்பியல் வரை, நாலயிர திவ்ய பிரபந்தம் முதல் நானோ டெக்னாலஜி வரை. கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளிலும் இவர் எழுதி இருக்கிறார்.கணினிகளை சாதாரண மனிதனுக்கு அறிமுகப்படுத்திய முதல் எழுத்தாளர் இவர். அவர் ஒரு தீர்க்கதரிசியாக 70களின் தொடக்கத்தில் கணினிமயமான எதிர்கால உலகை கணித்தவர். எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியராக இருந்த போதே, அவர் ஒரு வளரும் எழுத்தாளராக எழுதத் தொடங்கி விட்டார், அது அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.
சுஜாதா தனது சிறுகதைகள் மூலமும், பிரபல தமிழ் சஞ்சிகைகளில் எழுதிய தொடர்கள் மூலமும் வேகமாக வளர்ந்து வந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றிய புதிரான தகவல்களை எளிமைப்படுத்தி சாமானிய வாசகனுக்கு கொண்டுவந்து சேர்த்த நவீன எழுத்தாளர்களுள் முதன்மையானவர் ஆவார்.. பிற்காலத்தில், வைணவ இலக்கியங்களான திவ்ய பிரபந்தங்கள், திருப்பாவை போன்ற அரிய விஷயங்களை நவீன கால இளைய தலைமுறையினர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்து நடையில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
நவீன கவிதைகள் குறிப்பாக நவீன "ஹைக்கூ" வகையின் மீது இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதினரையும் இவ்விதமான குறுங்கவிதைகள் எழுதிட தூண்டுகோலாய் சுஜாதா விளங்கினார். நவீன சிந்தனையை ஏற்றுக் கொள்வதில் அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மை, தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் வளர்ச்சியைத் தந்தது. தமிழ் இலக்கிய பரிமாணங்களில் சுஜாதா தொடாத துறையே இல்லை.
சுஜாதா எழுதிய சில புதினங்கள் திரைப்பட வடிவம் பெற்றன. மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ரோஜா படத்தில் அவர் எழுதிய வசனங்கள் திரை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி--தி பாஸ், கமல்ஹாசனின் தசாவதாரம் ஆகிய படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் சுஜாதா.
சுஜாதா பெருமளவில் தமிழை நேசிப்பவர் என்றாலும், ஆங்கிலம், இந்தி, கன்னடம் போன்ற பிற மொழி இலக்கியங்களையும் ரசிப்பவராக விளங்கினார்..
கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புதிய பரிமாணத்தில் பல தலைப்புகளில் தமிழ் எழுத்தாளராக புத்துணர்ச்சியை ஊட்டியவர் சுஜாதா. தொல்லியல், வானியற்பியல், உயிரியல் தொழில்நுட்பம் , நரம்பியல் துறை , கர்நாடக இசை, தமிழ் இலக்கியம், சமூகவியல் போன்ற பல துறைசார்ந்த ஆராய்ச்சிகளும் இவரது ஆர்வங்களில் அடங்கும். இவர் ஒரு ஆர்வமான படிப்பாளி. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தும், மற்ற புதிய கவிஞர்கள் முன்னேறவும் இவர் உதவியவர் ஆவார். தமிழ் மொழி அடிப்படையிலான பல்வேறு கணினி மென்பொருள்களை உருவாக்கும் பல திட்டங்களில் இவர் தீவிரமாக ஈடுபட்டார்.
அதே நேரத்தில் , இவரது எழுத்து அனைத்து வகையான வாசகர்களுக்கும் மிகவும் அணுகக்கூடியதாக இருந்தது. 2008, பிப்ரவரி 27 ஆம் தேதி அவர் உலகத்தை விட்டு சென்ற போதிலும், புகழ் மிக்க தமிழ் இலக்கியத் துறையில் சுஜாதா ரங்கராஜனின் பெயர் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும்.