Welcome..! Join us to Develop your Humanity
நன்றிக் கடனை செலுத்தும் திபெத்திய துறவி
லோப்சங் ஜம்யங்- ஒரு திபெத்திய துறவி சேரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ஓர் இல்லத்தை நடத்துவதன் மூலம் ‘பாரதமே நன்றி’ என்று கூறி தன் அர்ப்பணிப்பை செலுத்த மனதை கவரும் வழியை கண்டுபிடித்தார்.
பெரும்பாலும் நாம் போக்குவரத்து நெரிசலில், தெருவில் குப்பை பொறுக்குபவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பிச்சை எடுப்பதை கார் ஜன்னல் வழியே பார்க்க நேரிடுகிறது. சில சமயங்களில் நாம் பார்ப்பது நம்மை கோபப்படுத்தும். மற்ற சமயங்களில் பாதுகாப்பான வாழ்க்கையை பெற அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்து சிந்திக்கிறோம். ஆனால் கங்ரா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு துறவி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மற்றும் மெக்லியோட் கஞ்ச் அருகே சேரிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறு குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றுவதாக தாமாகவே முடிவெடுத்தார்.
அவரது அமைப்பின் பெயர் டோங்-லென் நற்பணி மன்றம். திபெத்திய மொழியில் கொடுங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற மந்திரத்தில் இருந்து சோகத்தை மற்றவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியை திருப்பிக் கொடுங்கள் என்பதாக இந்தத் துறவி புரிந்து கொண்டார்.. தர்மசாலாவை சுற்றியுள்ள சேரிகளை சேர்ந்த பல குழந்தைகள் இன்று பல்வேறு பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள் மற்றும் தொழிற்கல்வி பட்டங்களை படிக்கிறார்கள் என்பது ஒரு நபரின் முழுமையான முயற்சிக்கு சான்றாகும். மேலும் அவரது கதை மனஉறுதி, இரக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை சேர்ந்த ஒன்றாகும்.
லோப்சங் ஜம்யங் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ,ஒரு ஆபத்தான மலைப் பகுதியை கடந்து 1997-ல் இந்தியா வந்தடைந்தார். “அது ஒரு கடினமான நாள். நான் பிழைப்பேனா என்று எனனால் உறுதியாக சொல்ல முடியாத தருணம் “ என்று அவர் நினைவு கூர்ந்தார். மத்திய திபெத்திய மாகாணமான யு-சாங்கிலிருந்து இருந்து வந்த அவர் பின்னர் தென்னிந்திய நகரமான பைலாகுப்பேவில் உள்ள செரா ஜெய் மடாலயத்திற்கு குடிபெயர்ந்தார்.
அவரது குடும்பத்திலிருந்து பிரிந்ததில் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டார். 2002-ல் திபெத்தை சேர்ந்த ஒருவரை நான் புத்தகயாவில் சந்தித்தேன். அவர் நான் இறந்துவிட்டதாக கருதியதாக கூறினார். நான் மெக்லியோட் கஞ்ச்க்கு வந்தவுடன் என் பெற்றோரிடம் திரும்பி செல்லவே முடிவு செய்தேன். ஆனால் ஒருநாள் குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுப்பதை நான் கண்டேன். நான் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று யோசித்தேன். எனக்கு அப்போது இந்தி (அ) ஆங்கிலம் தெரியாது. இந்த நிலைக்கு அவர்களை கொண்டு வந்த சூழ்நிலைகள் என்ன என்று நான் தர்க்கரீதியாக அரிய முயற்சித்தேன். அனைத்து சேரி குழந்தைகளுக்கும் நாம் எவ்வாறு கல்வி கற்பிக்க முடியும் என்றெல்லாம் யோசித்தேன்” என்கிறார் 46 வயதான இந்தத் துறவி
இந்த சம்பவம் அவரது வாழ்க்கையின் போக்கை மாற்றியது அவர் இந்தியாவிலேயே இருப்பதாக முடிவு செய்தார். 2004 ஆம் ஆண்டில் தர்மசாலாவை சுற்றியுள்ள பல சேரி குழந்தைகளுக்காக டோங்-லென் நற்பணி மன்றத்தை தொடங்கினார். ஏனெனில் அவர்கள் சமூக நெறிமுறை மற்றும் உணர்வு பூர்வமான வளர்ச்சியுடன் ஒரு நல்ல கல்வியை பெறுவது முக்கியம் என்று அவர் உணர்ந்தார்.
எனவே அவர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் படி குடும்பங்களை கேட்டு சேரிகளில் வீடு வீடாக சென்றார். பெற்றோர் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை. கல்வி அவர்களுக்கு உணவு கொடுக்காது என்று வாதிட்டனர். குழந்தைகள் கொண்டு வந்த வருமானத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்று அவர் நினைவுகூர்ந்தார். எனவே அவர் அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் பிச்சை எடுப்பதை நிறுத்தி பள்ளியில் சேர்ப்பதற்கான இழப்பீடாக அவர் மாதத்திற்கு ரூபாய் 150 கொடுப்பார், ஒரு பேரழிவு அல்லது கடினமான காலங்களில் உணவு வழங்குவதாக உறுதி அளித்தார், வீட்டில் பெண்கள் நோய்வாய்ப்பட்டால் குடும்பத்திற்கு உணவு,இலவச மருந்துகள் மற்றும் சிறிய மற்றும் பெரிய மருத்துவ அறுவை சிகிச்சைக்கான செலவுகளுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
அவர் தனது சன்னியாசி கடமைகளை தவிர என்னவெல்லாம் செய்கிறார் என்று அவரது சக சந்நியாச சகோதரர்கள் வியந்தனர்.. இன்று அவரது அமைப்பு கக்ரா பள்ளத்தாக்கின் பல சேரிகளில் சுகாதாரம் கல்வி மற்றும் பிற சேரி நலத்திட்டங்கள் உடன் செயல்பட்டு வருகிறது. அவரது ஊழியர்கள் தினசரி பராமரிப்பு, பகல் நேரபள்ளி வசதிகள் மற்றும் சேரிகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் உணவு அளிக்கின்றனர்.
கக்ரா சேரி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர் இவ்விதமாக விளக்குகிறார். சேரிகளில் வசிப்பவர்கள் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 60 மற்றும் 70 களில் மோசமான வானிலை காரணமாக இங்கு குடியேறினர். அவர்கள் டெல்லி,மணாலி மற்றும் பஞ்சாப் வழியாக இங்கு வந்தனர். அவர்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் நாடோடி வாழ்க்கையை நடத்துகிறார்கள். பெண்கள் புல் வெட்டுகிறார்கள் அல்லது பிச்சை எடுப்பார்கள். குழந்தைகளும் பெண்களும் சேரிகளில் பாதிக்கப்படுகிறார்கள் ஆண்களிடையே குடிப்பழக்கம் பொதுவானதாக இருந்தது.. நோய்கள் பரவலாக இருக்கின்றன எனவே குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடும் உள்ளது. குழந்தை திருமணங்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளும் உள்ளன.
சாரா கிராமத்தில் உள்ள அவரது விடுதி பல்வேறு சேரிகளை சேர்ந்த, பல்வேறு வயதில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டுள்ளது. சிலர் உள்ளூர் தயானந்த் மாடல் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். மேலும் வயதில் பெரிய மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் ஆகிறார்கள். பளிச்சென்று வண்ணமயமாக காட்சி அளிக்கும் அந்த பள்ளி கட்டிடத்தின் வெளியே பள்ளிப் பேருந்துகள் மற்றும் மருத்துவ அவசர ஊர்திகளை காண முடிகிறது உள்ளே, ஒரு கூடைப்பந்தாட்ட மைதானம், சிறிய இடங்களுக்கான விளையாட்டு பகுதி மற்றும் மேன்மை பொருந்திய திரு தலாய் லாமா அங்கு வந்து இருந்த பொது அவருக்கு தங்கள் சாதனைகளை விளக்கக்காட்சி வழங்கிய ஒரு மேடை போன்ற வசதிகள் இந்த பள்ளியில் இருக்கின்றன. சேரிகளுக்கு 24×7 சுகாதாரத் திட்டம், ஆம்புலன்ஸ் மற்றும் செவிலியர்கள் போன்ற ஏற்பாட்டினை தலாய்லாமா அறக்கட்டளை மூலம் பெறுகிறார்கள்.
பிங்கி ஐந்து வயதிலிருந்தே டோங்-லெனில் இருக்கிறார். அவரது பெற்றோர் ஒரு சேரியில் தங்கி இருக்கிறார்கள். சில நேரம் அவர்கள் அந்த சேரியில் இருந்தும் வெளியேற்றப் படுகிறார்கள். ஆனால் இவரோ இன்று அவர் நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வருகிறார், மேலும் மருத்துவராக விரும்புகிறார். விடுதியில் வசிக்கும் கிஷான், ராஜஸ்தான் நகரை சேர்ந்தவர். அவரது பெற்றோரும் தர்மசாலா அருகே ஒரு சேரியில் வசிக்கின்றனர். கிஷான் அருகில் உள்ள கல்லூரியில் ஓட்டல் நிர்வாகம் படிக்கிறார். விஜய் தற்போது தனது பி.காம் பட்டத்தின் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கணக்காளர் பட்டம் படிக்க திட்டமிட்டுள்ளார். பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வியை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான பயிற்சி இங்கு கிடைக்கிறது.
இந்தக் துறவி தனக்கு பிடித்த குழந்தையை பற்றி அன்புடன் நினைவுகூர்ந்தார். நிஷா குமாரி என்ற ஒரு சிறுமி என் அலங்கார அங்கியை இழுத்து ஒரு வாழை பழத்திற்காக பிச்சை எடுத்தாள். மெக்லியோட் கஞ்ச்சில் உள்ள கோவில் படிக்கட்டுகளில் அவள் என்னை துரத்தி வருவாள் பின்னர் பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணிகளை பின்தொடருவாள். ஆனால் இன்று அவர் பெங்களூரில் பத்திரிகை துறையில் படித்து வருகிறார். மேலும் தனது முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் என்று அவர் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், விடுமுறை நாட்களில் குழந்தைகள் பெற்றோரை சந்திக்க செல்கிறார்கள் . நான் அவர்களுக்கு 3 லட்சியங்களை பற்றி கூறுவேன் . அவை
1) உங்களுக்கென ஓர் நல்ல வாழ்க்கை
2) அவர்களது குடும்பங்களின் மீதான பொறுப்பு
3) சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வதற்கான அர்பணிப்பு
என் அர்ப்பணிப்பை அளித்து “பாரதமே நன்றி “ என்று சொல்ல எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று அவர் முடிக்கிறார். தர்மசாலாவில் உள்ள சேரி குழந்தைகளுக்கு புதிய வாழ்க்கை வழங்கிய துறவிக்கு பாராட்டுக்கள். அவர் துறவியே ஆனாலும் தமது சமுதாயக் கடமைகளை துறந்து விடவில்லை என்பது நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும்.