Welcome..! Join us to Develop your Humanity
சுவாமி பிரணவானந்தா - இலங்கைக்கு படகில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை காப்பாற்றிய துணிச்சல்காரத் துறவி
ஒருவர் தான் மேற்கொண்ட சமூக நற்சேவைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசின் நேரடி அடக்குமுறைகளுக்கு, கைது நடவடிக்கைகளுக்கு, இன்னல்களுக்கு, மிரட்டல்களுக்கு உள்ளாகிய ஒரு உன்னத துறவி பற்றி இன்று அறிவோம்.
இராமேஸ்வரம், தனுஷ்கோடி மீன்பிடி கிராமத்தில் மணற்பரப்பிற்கும், உப்புக்காற்றிற்கும் நடுவே அந்த சுவாமி விவேகானந்தா குடில் அமைந்து இருந்தது. இது ஒரு சுயநலமற்ற, சமரசமற்ற, ஒரு துறவியின் நெடுநோக்கு, கனவு மற்றும் மன உறுதியின் அடையாளமாக விளங்குகிறது. அங்கு 36 ஆதரவற்ற குழந்தைகள் தங்கி இருந்தனர்.
ராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க துறவிகளில் ஒருவரான சுவாமி பிரணவானந்தா இருபதாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். 1980 களின் முற்பகுதியில் அவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட ஏழைகளுக்கு சேவை செய்து வந்தார். அப்போது அவரது வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனை தோன்றியது.
1983-ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது. போரில் பாதிக்கபட்ட எண்ணற்ற மக்கள் தனுஷ்கோடி வழியாக அகதிகளாக இந்தியா வந்தடைந்தனர். இரு நாட்டு அரசாங்கமும் தத்தமது அன்றாட நிர்வாக பணியில் லயித்திருந்தனர். இது துறவியை முழுநேர பணியில் ஈடுபடுத்தியது. கடல் கடந்து வாடும் ஆதரவற்ற குழந்தைகளின் அழுகுரல் கடற் சீற்றத்தை தாண்டியும் இவருக்கு ஒலித்துக்கொண்டே இருந்தது. ஊடுருவலை எதிர்கொள்ள இரு நாடுகளின் கடற்படைகளும் கடலில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இரவில் கடல் சீற்றத்திற்கு நடுவே, பாதுகாப்பு வீரர்களை ஏமாற்றி, கையால் துடுப்பு போடும் படகை ஸ்ரீ லங்காவுக்கு செலுத்தி ஆதரவற்ற குழந்தைகளை சுவாமிஜி மீட்டு வந்தார்.
வாடும் சிறு தெய்வங்களுக்கு உதவாமல் அன்றாட உணவும், இறை பணி எவ்வாறு முழுமையாக செய்வேன் என்ற தீர்க்கமான எண்ணமே அவரை தினமும் இருமுறை என்று ஒரு மாதத்திற்கும் மேலாக 70 சிறார்களை மீட்டு வர வைத்தது.
அதன்பிறகு, ராமகிருஷ்ணா மிஷன் அதன் நிலத்தை குழந்தைகளின் வீட்டுவசதிக்கு வழங்கி அவருக்கு உதவியது. உள்ளூர் மீனவர்களின் ஒத்துழைப்புடன், சுவாமி பிராணாவானந்தா 1983 ஆம் ஆண்டில் “சுவாமி விவேகானந்தா குடில்” என்ற அமைப்பை நிறுவி தொண்டாற்றி வந்தார். இன்று, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான வறிய குழந்தைகள் இங்கு தங்கி, படித்து பயன்பெருகின்றனர். இவ்வாறாக இந்த இருண்ட தீவில் சுவாமி பிரணாவானந்தாவும் சுவாமி விவேகானந்தா குடிலும் இம்மக்களுக்கு நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகின்றனர்.
தீவு மற்றும் மீனவ கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை பெய்து வந்தது. இது வெகுஜன மக்களை பாதித்தது. பின்னர், இந்தியாவில் பிற பாதிக்கபட்ட பகுதிகள் போலவே, அரசாங்கத்தின் பல நன்மைகளும் இந்த கிராமங்களை அடையவில்லை. விரக்தியுடன் மக்கள் குடிப்பழக்கம், கல்வியறிவின்மை, கெட்ட பழக்கங்கள் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சுவாமி பிராணவானந்தர் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நம்பிக்கையின் பிரகாசமான ஒளி விளக்காக இருந்து வருகிறார்
மீன் பிடித்தல் மட்டும் தொழிலாக இருந்த மக்களுக்கு, தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பை பற்றிய கல்வி அறிவை உண்டாக்கினார். நிதித் தடையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்த மாற்றம் படிப்படியாக உணரப்பட்டு மேலும் அவர்களால் கனவில் மட்டும் இருந்த பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தார். அரசாங்க சலுகைகள் பற்றி விவரித்தார். சுய உதவிக் குழுக்களை ஊக்குவித்து அதன் மூலம் பல நற்செயல்கள் செய்தார்.
பல வருடங்களாக அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக, மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமும் பலவாறு போராடினர். அதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார். இவருடைய அமைப்பு அவசர காலங்களில் மக்களுக்கு போக்குவரத்து வசதியும் செய்து தருகிறது.
ஏழை மக்களின் அடிப்படை தேவைகளுக்காக, அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி அனைத்து வகையான போராட்டங்களையும் முன்னெடுத்தார். இதற்காக இவர் மிரட்டப்பட்டார், காவலில் வைக்கப்பட்டார், பலவந்தமாக நடத்தப்பட்டார். இருப்பினும் இவர் அத்தகைய கடுமையான சூழ்நிலைகளை பொருட்படுத்தவில்லை.
அவருக்கு வரவிருந்த மானியம் தடை பட்டபோதும், அரசாங்க உதவிகள் நிறுத்த பட்ட போதும், அவருடைய சுவாமி விவேகானந்தா குடில் பள்ளி மூடபட்டு, தேசத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தபட்டபோதும், அந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்று தருவதில் சமரசம் செய்து கொள்ளவில்லை. கிராமங்களில் புதிய நீர் வழங்கல், கான்கிரீட் சாலைகள், மின்சாரம் மற்றும் வடிகால் அமைத்து தந்ததே அவரது மகிழ்ச்சியான தருணமாக கொண்டிருந்தார். உண்மையின் பாதையில் மீன் பிடி சமூகத்திற்கு எதிரான அரசாங்க உத்தரவுகளை மாற்றி அமைத்தார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ‘அனைத்து மத கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்தார். மீனவர்களிடையே கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்த, நாட்டுப்புற நடனம் மற்றும் தற்காப்பு கலைகளை ஊக்குவித்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமைப்பது, நோயாளியை காப்பது, ஆன்மீகப் பேச்சை வழங்குவது, அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், கல்வி அளித்தல் போன்ற எந்தவொரு வேலையிலும் போரில் ஈடுபடுவது போல முனைப்புடன் சுவாமி பிரணவானந்தா பணிபுரிந்தார்.
மனிதனுக்கு சேவை செய்வது கடவுளுக்கு ஆற்றும் தொண்டு போன்றது என்ற சொல்லை தாரக மந்திரமாக கொண்டு தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்தினார். மேலும் சுவாமி விவேகானந்தர் குடில் ஏழைகளின் உரிமை, கலாச்சார, கல்வி மற்றும் ஆன்மீக உயர்வுக்காக உழைக்கும் ஒரு அமைப்பாக வளர்த்தும் காட்டினார் சுவாமி பிரணவானந்தா.