Welcome..! Join us to Develop your Humanity
ரா. கணபதி- தனது எழுத்துக்களின் மூலம் ஆன்மீகப் பெரியோர்களின் வாழ்க்கைக்கு உயிரோட்டம் கொடுத்தவர்.
தமிழ் இலக்கிய உலகில் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த ரா. கணபதி அவர்கள் 1935 செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து, 2012 பிப்ரவரி 20ஆம் தேதி வரை வாழ்ந்த ஒரு மாபெரும் எழுத்தாளர் ஆவார். அவர் தனது எழுத்தாற்றல் மூலமாகவும், ஆதாரபூர்வமான சுய அனுபவங்கள் மூலமாகவும், ஆன்மீக அருளாளர்களின் அருளுரைகளின் சாராம்சத்தை உள்ளது உள்ளபடியே அற்புதமாக வெளிக்கொணர்ந்த அரிதிலும் அரிதான எழுத்தாளராக விளங்கினார். கணபதியின் தந்தையார் சி. வி. ராமச்சந்திர அய்யர் ஆவார். இவர் கணிதத்தில் ஆனர்ஸ் பட்டம் பெற்றவராகவும், வைதீக அறிஞராகவும் விளங்கியவர். மேலும் இவர் வணிக வரித்துறையில் அலுவலராக ஆங்கிலேயர் காலத்திலும், பிறகு சுதந்திர இந்திய அரசாங்கத்திலும் பணியாற்றியவர் ஆவார். இவரது தாயார் திருமதி. ஜெயலக்ஷ்மி வழக்கறிஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவராக, மிகவும் உயர்ந்த குணங்கள் உடைய சிறந்த பெண்மணியாக விளங்கினார்.
கணபதி அவர்கள் காஞ்சி மடத்தின் பரமாச்சாரிய சுவாமிகளுடன் தனது இளவயதிலேயே அறிமுகம் ஆகி விட்டார். மேலும் அவர் தனது வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பரமாச்சாரியாரின் வழிகாட்டுதல் படியே நடந்து கொண்டார். இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீவித்யா உபாசனை என்னும் தேவி வழிபாட்டை ஏற்றுக் கொண்டார். அதன்படி சூலினி துர்கா என்கிற வடிவில் அன்னையை அவர் ஆராதித்து வந்தார். இவருடைய சிறந்த எழுத்தாற்றலின் மூலம் இவர் எழுதும் கருத்துக்களை பின்பற்றும் ஆயிரக்கணக்கான ஆன்மீக அபிமானிகளையும், ரசிகர்களையும் இவர் கொண்டிருந்தார்.
பாரதத்தின் தலைசிறந்த ஞானிகளின் வரலாற்றையும், உபதேசங்களையும் பற்றி தெரிந்துகொள்வதற்கு காரணமான இவருடைய எழுத்துப்பணி தனிச்சிறப்பான ஒரு இடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஆதிசங்கரர், காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்கிற பரமாச்சாரிய சுவாமிகள், புட்டபர்த்தி சாய்பாபா ஆகியோரின் வாழ்க்கையையும், உபதேசங்களையும் இவரது எழுத்துப் பணிக்கு குறிப்பிடத்தக்க உதாரணங்களாக நாம் குறிப்பிடலாம். இவர் ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பத்தகுந்த அடியாராகவும் விளங்கினார். வாழ்க்கை முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரது தமிழ் எழுத்து நடை மிகவும் ரசிக்கும் படியாகவும், சில சிக்கலான சொற்கோவைகள் மூலம் படிப்பவரை திக்குமுக்காடச் செய்யும் வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. பல இடங்களில் இவரது எழுத்து நடை சம்ஸ்கிருத மொழியை தழுவிய மணிப்பிரவாள நடையில் அமைந்தாலும், தமிழின் தனித்தன்மையை பாதிக்காமல் அதை வெளிப்படுத்துவதையும், பாரம்பரிய இந்திய ஆன்மீக உணர்வை தனது எழுத்துக்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்துவதையும் இவர் சிறப்பாக செய்துள்ளார்.
கணபதி அவர்களின் எழுத்துப்பணி தற்போது தொடராமல் இருந்தாலும், அவர் இதுவரை எழுதிய நூல்களே நமக்கு வாழ்நாள் முழுவதும் படிக்கக்கூடிய மிகப்பெரும் தொகுப்பாக அமைந்திருக்கிறது. தனது எழுத்தாற்றலின் மூலம் கடந்த 100 வருடங்களுக்குள்ளாக வாழ்ந்த இரண்டு ஆற்றல்மிக்க ஆன்மீகப் பெரியோர்களின் நெருக்கத்திலேயே வாழக் கூடிய மிகப் பெரும் பேற்றினை அவர் பெற்றிருந்தார். காஞ்சி மஹா ஸ்வாமிகளின் வாழ்வையும் வாக்கையும் ஆதாரபூர்வமாக தனது "தெய்வத்தின் குரல்" என்கிற தொகுப்பின் மூலம் வெளிப்படுத்தியதன் மூலம் ரா.கணபதி அவர்கள் தனது வாழ்நாள் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கணக்கிலடங்கா எதிர்காலத் தலைமுறைகள் இவரின் இந்தப் பணிக்காக இவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரான திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் இதைப் பற்றி குறிப்பிடும் போது தெய்வத்தின் குரல் என்னும் இந்த புத்தகத் தொகுப்பானது "ஸ்ரீசந்திரசேகரேந்திர உபநிஷத்" என்று சொல்லுமளவிற்கு ஏழு தொகுதிகளாக, ஒவ்வொரு தொகுதியும் 700 பக்கங்களைக் கொண்டதாகவும், சனாதன தர்மத்தின் பல்வேறு கோட்பாடுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கருத்தாக்கம் கொண்டதாகவும் விளங்குகிறது. தெய்வத்தின் குரல் பதிப்பானது அனேகமாக இந்து தர்மத்தின் கலைக்களஞ்சியம் என்று சொல்லும் அளவிற்கு கருத்துச் செறிவு கொண்டதாக இருக்கிறது.
சங்கர பக்த ஜன சபாவின் செயலர் ஜி. வைத்தியநாதனுக்கு எழுதிய கடிதத்தில் கணபதி அவர்கள் இந்த தெய்வத்தின் குரல் பதிப்பிற்காக எவ்வளவு அரும்பாடுபட்டு காஞ்சி பரமாச்சாரியாரின் உரைகளைத் தொகுத்தும், அதற்கு ஏற்ற மேற்கோள்களை இணைத்தும் அதன் தொடர்ச்சியை உருவாக்கினார் என்பதை விவரித்துள்ளார்.
ரா. கணபதியைத் தவிர வேறு யாராலும் இந்த பணியை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்றும் இவருடைய முயற்சியாலேயே இப்பதிப்பு சாமானிய மக்களையும் சென்றடைந்தது என்றும் வைத்தியநாதன் கூறுகிறார். கணபதி அவர்கள் காஞ்சி மஹாஸ்வாமியின் உரைகளை குறிப்பெடுத்தும், அவற்றை உறுதிப்படுத்தும் குறிப்புகளை கண்டுபிடித்தும், அதைப் பற்றி தெரிந்த பெரியவர்களோடு நேரடியாகப் பேசி குறிப்பிட்ட விஷயங்களை ஊர்ஜிதம் செய்தும் தனது பணியை நிறைவு செய்தார்.மகா சுவாமிகள் ஒரு விஷயத்தைப் பற்றி ஓர் இடத்தில் கொஞ்சம் பேசிவிட்டு, பிறகு வேறு ஒரு இடத்தில் அதே விஷயத்தின் தொடர்ச்சியை விரிவாகப் பேசி முடிப்பார். இதை ஊன்றிக் கவனித்து அதன் தொடர்பு அறுபடாமல் விஷயத்தை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கணபதி அவர்களின் கூர்மையான ஞாபகசக்தியும், விழிப்புணர்வு கொண்ட கவனிக்கும் திறனும் அவருடைய இந்தப் பணியை எளிதாக்கின. இவ்விதமாக அவர் தனது எழுத்துப் பணிக்கு இறுதி வடிவம் தந்து அது ஒரு கட்டுரையாக மலரும் போது அதில் எந்த விதமான முரண்பாடும் இருக்காது. காஞ்சிப்பெரியவர் பயன்படுத்திய அதே மொழி நடையை தனது எழுத்தில் கொண்டு வந்ததால் அவருடைய கட்டுரைகளைப் படிக்கும்போது நாமே மகாபெரியவருடன் உரையாடுவது போல் இருக்கும் என்று வைத்தியநாதன் குறிப்பிடுகிறார்.
தெய்வத்தின் குரல் ஆங்கிலத்தில் வாய்ஸ் ஆப் காட் (Voice of God) எனவும், மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்வியாளரும், மனிதநேயப் பண்பாளருமான மும்பையைச் சேர்ந்த வி. சங்கர் அவர்களின் முயற்சியால் இத் தொகுப்பில் இருந்து மூன்று தொகுதிகள் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு விட்டன.
கணபதி அவர்கள் 35க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், ஆன்மீக விஷயங்கள் குறித்த பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய எழுத்துப்பணி 1962-ல் ஆதிசங்கரரின் வாழ்க்கையை "ஜெய ஜெய சங்கர" என்கிற தலைப்பில் எழுதுவதிலிருந்து தொடங்கியது. அப்போது அது கல்கி வார பத்திரிகையில் தொடராக வெளிவந்து பிறகு புத்தக வடிவம் பெற்றது. கல்கி பத்திரிகையில் 10 வருடங்களிலும், தனிப்பட்ட எழுத்தாளராக 25 வருடங்களிலும் இவர் எழுதிக் குவித்த நூல்கள் மற்றும் கட்டுரைகளில், காஞ்சி மகா பெரியவர், சத்ய சாய் பாபா, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதை மற்றும் பக்த மீராபாய் ஆகியோரின் வாழ்வும், வாக்கும் இடம்பெற்றுள்ளன.
இவர் சங்கீதத்திலும் புலமை பெற்றவராக விளங்கினார். இவரது பல பஜனைப் பாடல்களும், சாஸ்திரிய பாடல்களும் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத வித்வான்களால் பிரபலம் அடைந்து உள்ளன.
இவரது எழுத்து நடையை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நாத்திகவாதியுமான சி.என். அண்ணாதுரையும் புகழ்ந்துள்ளார். பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ள அண்ணாவின் "தன் வரலாறு" என்கிற அவரது சுயசரிதையில் அவர் தனது தாயை இழந்த சோகத்தை குறிப்பிடும் பகுதியில் ரா கணபதி அவர்களின் எழுத்தை நினைவு கூர்ந்துள்ளார். அதேநேரத்தில் கல்கியில் வெளியான ஆதிசங்கரரின் வரலாற்றில் ஆதிசங்கரர் தனது தாயை இழந்து வாடும் தருணத்தை கணபதி அவர்கள் அற்புதமாக சித்தரித்துக் காட்டியுள்ளது தனது மனத்தை மிகவும் தொட்டதாக அண்ணாதுரை குறிப்பிட்டு, அவரது தாயின் இழப்பில் இதே உணர்வை பெற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ரா. கணபதி அவர்களின் வாழ்வு, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் ஒரு மகாசிவராத்திரி அன்று நிறைவு பெற்று பரஞ் சோதியுடன் இரண்டறக் கலந்தது அவருடைய ஆன்மீக மேன்மையை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவர் இறைவனடி சேரும் ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் அந்த உணர்வை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே போல அவரது ஆன்மா பிரியும் நேரத்திலும் அவர் நல்ல உணர்வுடனேயே இருந்து, நாம ஜபம் செய்த படியே மென்மையாக, அமைதியாக தனது இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து மேலுலகம் ஏகினார்.
ரா கணபதி அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலும், அவரைப் பொறுத்தமட்டில் ஒரு முனிவராகவும், விளம்பரத்தை விரும்பாதவராகவும் வாழ்ந்துள்ளார். அவர் பொருளையும், புகழையும் விரும்பவில்லை. அவரோடு பழகியவர்களுக்கு அவர் பணத்தை தன் கையால் தொடாதவராக இருந்தார் என்பது நன்றாகத் தெரியும். அவர் எந்தவிதமான புகழையும் ,சுய அடையாளத்தையும் பெறுவதற்கு முன்பாகவே அவருடைய சுய தேவைகளும், சட்டரீதியான தேவைகளும் ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படும் விதத்தில் தானாகவே தீர்ந்துவிடும்.
இந்த வகையில் ரா. கணபதி அவர்கள் எழுத்தாளர் வடிவில் நடமாடிய தெய்வீக மனிதர் என்று சொன்னால் அது மிகையல்ல.