Welcome..! Join us to Develop your Humanity
ஞானம்மாள் - வயதில் மூத்த பெண் யோகா குரு - 90 ஆண்டுகள் யோவிற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்கை.
எலும்பு இல்லாத உயிரினம் போல தன் உடலை வளைத்து, திருப்பி, முறுக்குவதோடு, தலையால் நிற்கவும் செய்யும் அந்த பெண்மணி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்! இதனை படிக்கும் போது ஏதோ சீனா அல்லது ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒரு உயர் வகுப்பு ஜிம்னாஸ்ட்டுவின் தினசரி வழக்கம் போல் தோன்றலாம்.
சற்று நிதானமாக மூச்சை இழுத்து விடுங்கள். ஏனெனில் இந்த அதிர்ச்சியூட்டும் செயலை செய்பவர் தமிழகத்தின் கோவையை சேர்ந்த 99 வயது மூதாட்டி ஞானம்மாள் ஆவார். வயது என்பது ஒரு சாதாரண எண் என இந்த துடிப்பான யோகா குரு நிரூபித்துள்ளார். ஞானம்மாள் தான் பயிற்றுவித்த நூற்றுக்கணக்கான யோகா மாணாக்கரை தனது பிள்ளைகளாகவே பாவித்தார். தனது 10 வயதிலிருந்தே யோகக்கலையை பயிலும் ஞானாம்பாள், அனேகமாக, நம் நாட்டின் மிகவும் வயதான யோகா பயிற்றுவிப்பாளராக இருந்திருக்க கூடும்.
அம்மையாரின் உற்சாகத்திற்கு நன்றி செலுத்தும்விதமாக, அவரிடம் யோகா பயின்ற அவரது குடும்பத்தை சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் இன்று மற்றவர்களுக்கு யோகா கற்பிக்கிறார்கள். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்த ஞானம்மாளிடம் ஈர்க்கப்பட்டு, அவரிடம் யோகா பயில பலரை கோவையை நோக்கி பயணிக்க வைத்தது.
கோவையில் உள்ள ஜமீன்கலியபுரத்தில் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த ஞானம்மாள், தனது 14-ம் வயதில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதற்பரிசு வென்றார். அதன்பிறகு, தனது சொந்த ஊரான கோவையில் சில சிறுவர் சிறுமிகள் இந்த பண்டைய பாரதீய பயிற்சியைக் கற்றுக் கொண்டதைக் கண்ட பின்னர் மிகுந்த ஆர்வத்துடன் தனது தாத்தாவிடமிருந்து யோகாக்கலையை மேலும் கற்கத் தொடங்கினார் ஞானம்மாள். “நான் ஒரு சித்த மருத்துவரை மணந்த பிறகு என் மாமனாரிடமிருந்தும் யோகா கற்றுக்கொண்டேன். அந்த நாட்களில் யோகா கிராமப்புற பயிற்சியாக மட்டுமே கருதப்பட்டது,”என்று ஞானம்மாள் குறிப்பிட்டிருந்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த கொள்ளு பாட்டி, தனது ஆரோக்கியத்திற்கு யோகாவே காரணம் என்கிறார். தினசரி யோகா செய்வதின் மூலம் தனக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லை எனவும், தான் எந்த மருந்துகளும் எடுத்துக்கொண்டதில்லை எனவும் கூறினார். மேலும், "உடற்பயிற்சியின் மீதான என் பற்றின் காரணமாக நான் இன்னும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறேன். நான் இதுவரை ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை, எந்த மருந்தையும் பயன்படுத்தவில்லை" என்று ஞானம்மாள் கூறியிருந்தார்.
இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் பெற்ற ஞானம்மாள், தனது வீட்டில் குறைந்தது 100 மாணவர்களுக்கு தினமும் யோகா கற்பித்தார். யோகா வகுப்புகளுக்குப் பிறகு தனது மாணவர்கள் "நன்றாக உணர்கிறார்கள்" என்று அவர் கூறினார். அவரது மாணவர்கள், பொதுவாக அம்மையாரை விட மிகவும் இளையவர்கள். அந்த மாணவர்களில் 70 வயதில் இரண்டு பெண்கள், சுமார் 60 வயதுடையவர்கள் சிலரும் உள்ளனர். அவர்களுள் மிகவும் வயதில் இளையவர் ஆறு வயதுடைய ஒரு பெண் குழந்தை ஆவார்.
தன் கைகளை தரையில் ஊன்றி தனது முழு உடலையும் மேலே தூக்கி அந்தரத்தில் தாங்கி பிடித்து பார்ப்பவர்களை மூக்கின் மீது விரல் வைக்க செய்கிறார் இந்த 'வயதே ஆகாத' பாட்டி. ஞானம்மாள், தனது ஒவ்வொரு வகுப்பையும் சுமார் ஒரு டஜன் ஆசனங்களுடன் தொடங்கி, தியானத்துடன் வழிகாட்டும் தளர்வு பயிற்சிகளுடன் முடிக்கிறார். "புதிய திறமைகளை வெளிக்கொணர மக்களுக்கு உதவுவதோடு, மற்றவர்களின் வாழ்க்கையிலும் யோகாவைக் கொண்டுவருவதில் நான் ஊக்கமடைகிறேன்," என்று அவர் கூறுனார்.
“நான் எப்போதும் நமது பாரம்பரிய புடவையை மட்டுமே அணிகிறேன். இருப்பினும், என்னால் 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்ய முடியும், ”என்று ஞானம்மாள் கூறினார். முதுமையின் விளைவுகள் ஞானம்மாள் மீது படவில்லை. அந்த வயதிலும் அவரால் பத்திரிகைகளில் உள்ள சிறுசிறு எழுத்துகளைக் கூட தெளிவாகப் படிக்க முடிந்தது. என்றும் வாழ்க்கையைப் பற்றி ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அம்மையார், தினமும் காலையில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தார்கள். "நான் எப்போதும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு யோகா செய்கிறேன். பின்னர் காலையில் எழுந்ததும் என் மாணவர்களுடன் மீண்டும் யோகா செய்கிறேன்," என்று அவர் கூறினார். "நான் தினமும் காலையில் 4.30 மணிக்கு எழுந்திருக்கிறேன், வழக்கமாக நான் இரவில் நேரமாகவே தூங்க சென்றிடுவேன்," என்று அவர் மேலும் கூறினார்.
ஞானம்மாளின் உணவில் பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் மட்டுமே உள்ளன. மேலும், அவர் அரிசி மற்றும் அசைவ உணவுப் பொருட்களைத் தவிர்த்தார். ஞானம்மாளின் நுட்பம் 'இந்திய யோகா பயிற்றுவிப்பர் கூட்டமைப்பின்' கவனத்தை ஈர்த்தது. அதன் தலைவர் இந்த யோகியை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வகுப்புகளை வழிநடத்த அழைத்தார். "ஞானம்மாள் வெறுமனே அறிவுறுத்துவது மட்டுமல்லாமல், மாணவர்களுடன் இணைந்து பயிற்சியும் செய்கிறார்" என்று அந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ். கிருபாகர் முரளி கூறினார்.
உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் யோகாவின் பங்கு குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டார்.
தனது திறமை, திறன் மற்றும் யோகாவில் சிறந்து விளங்கியதற்காக, ஞானம்மாள் 2018-ல் பத்மஸ்ரீ விருதும், 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று இந்திய ஜனாதிபதியிடமிருந்து 'நரி சக்தி புராஸ்கர்' விருதையும் பெற்றார். அதனை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டில் கர்நாடக அரசால் யோகா ரத்னா விருது ஞானம்மாளுக்கு வழங்கப்பட்டது. கோயம்புத்தூரில் 20,000 மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு யோகா கற்பிப்பதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியையும் ஞானம்மாள் மேற்கொண்டிருந்தார்.
தனது வாழ்நாளில் ஏறத்தாழ 90 ஆண்டுகள் யோகாவிற்காக செலவழித்த இந்த கொள்ளுப்பாட்டி ஞானம்மாள், 2019-ல், தனது 100-வது வயதில் இந்த பூவுலகை விட்டு பிரிந்தார்.