Welcome..! Join us to Develop your Humanity
‘நூறு கைகளால் பெற்று ஆயிரம் கைகளால் விநியோகிக்கவும்’ என்ற பழமொழிக்கான முன்மாதிரிகள்
கங்காதர் ராவத் - தனது கிராமத்திற்கு ஒரு பாலம் கட்ட தனது ஓய்வூதிய தொகை ரூ.12 லட்சம் முழுமையும் செலவிட்டவர்.
நமது அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பாதையை அரசங்கங்கம் கண்டுகொள்ளாதபோது நாம் என்ன செய்வோம்?
ஒடிசா மாநிலத்தில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கங்காதர் ராவத், அகவை அறுவதை கடந்தவர். கியோஞ்சர் மாவட்டத்தில் ஓடும் சலந்தி ஆற்றின் குறுக்கே உள்ளூர் நிர்வாகம் பாலம் கட்டும் எனும் நம்பிக்கை கலந்த நப்பாசையில் தனது வாழ்நாள் முழுதும் காத்திருந்தார்.
காரணம் ... சலந்தி நதிக்கரையின் ஒருகரையில் அமையப்பெற்ற அவரது கான்பூர் எனும் அழகிய கிராமம், மறுகரையில் அமைந்துள்ள அதன் விவசாய நிலங்களை அடையும் பாதையை மழைக்காலங்களில் பாய்ந்தோடும் ஆற்று வெள்ளம் துண்டிப்பதால், அக்கிராம மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை நிலையாய் இருந்தது. கனமழை பெய்யா காலங்களில் கூட கடந்து செல்ல ஒரு பாலம் இல்லை எனும் ஒரே காரணத்தினால் கிராமவாசிகள் தங்களின் விளைநிலங்களை அடைய கை வலிக்க துடுப்பு போட்டு படகில் செல்ல வேண்டும்; அல்லது கால் கடுக்க பல மைல்கள் நடந்து சுற்றி செல்லவேண்டும் எனும் நிர்பந்தமே இருந்தது.
பலவருடமாய் காத்திருந்து சோர்வடைந்த ராவத், தனது சேமிப்புடன் ஓய்வூதியத்தையும் வழித்தெடுத்து, கான்பூர் கிராமத்தை டேனிபூருடன் இணைக்க 2016 அக்டோபரில் ஆற்றின் குறுக்கே 270 அடி நீளமுள்ள பாலத்தை கட்டத் தொடங்கினார்.
ஏறத்தாழ 1200 கிராம வாசிகளை கொண்ட கான்பூர் கிராமம் பல ஆண்டுகளாக பாலம் கட்ட கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தது. ஏனோ அந்த கிராமத்தின் மீது அரசாங்கத்தின் கடைக்கண் கடைசி வரை விழவில்லை. நமது மக்கள் பலரும் அரசின் கைகளையே நம்பி கொண்டு இருக்கும் அக்கறையின்மையை நினைத்து இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.
பத்தாண்டுகளுக்கும் முன்னதாக, உள்ளூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஒரு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் ஹடாடிஹி தொகுதி நிர்வாகம் ஆகியவை இனைந்து, பாலம் கட்ட ரூ.6 லட்சம் நிதியை வழங்கின. இருப்பினும், நிதி பற்றாக்குறை காரணமாக, பாலத்தின் கட்டுமானம் பாதியிலேயே நின்றது.
பாலத்தை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகளையும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளையும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்கள் கோரிக்கை கேட்பாரற்று கிடந்தது. உள்ளூர் லாரி உரிமையாளர்களின் சங்கம் மற்றும் பிற தனியார் அமைப்புகளும் எங்களுக்கு நிதி உதவி செய்யவில்லை. வேறு வழியில்லாமல், நான் பொறுப்பை ஏற்க முடிவு செய்தேன், ”என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' எனும் நாளிதழில் பேசிய ராவத் கூறினார்.
மேலும், "எனது ஓய்வூதியத்தில் ஒரு கார் வாங்கலாம் எனும் ஆசையில் இருந்தனர் என் குடும்பத்தினர். ஆனால், பாலத்தை முழுமை படுத்த அப்பணத்தை செலவிட விழையும் என் விருப்பத்தை நான் தெரிவித்தபோது அவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அந்த பணி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது, என் வாழ்க்கையில் கடினப்பட்டு நான் ஈட்டிய பணமானது ஓர் உன்னத காரியத்திற்காக செலவிடப்பட்டது எனும் உணர்வுடன் மீதமுள்ள என் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க முடியும்," என ராவத் கூறுகிறார்.
ரூ .12 லட்சம் ஓய்வூதிய பணத்தை கையில் எடுத்துக்கொண்டு, தன் உறவினர் இளைஞன் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு, ஒரு பாலம் கட்ட என்னென்ன தேவை என்பதை புரிந்துகொள்ள அப்பகுதியில் உள்ள பல்வேறு பாலங்களை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் பாலம் கட்டுவதற்கு தேவையான சிமென்ட், செங்கல் மற்றும் இரும்பு கம்பிகளை வாங்கினர். அவற்றுடன், வெளியில் இருந்து கிடைக்கப் பெற்ற சிறு உதவிகளின் மூலம் அக்டோபர் 2016-இல் கட்டுமானப்பணியை துவக்கினர்.
பாலம் காட்டும் பணி அதற்கே உரிய சில சவால்களை அவரை சந்திக்க வைத்தது. துவக்கத்தில் ரூ.6 லட்சத்திற்குள் பாலம் கட்டப்பட இருந்தது. ஆனால், பாலத்தை தாங்கும் தூண்களை அமைக்க மட்டுமே அவருக்கு ரூ .10 லட்சம் வரை செலவானது.
"நான் கிட்டத்தட்ட பணம் இல்லாத நிலையை அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக, என் குடும்பத்தில் சிறிய குழந்தைகள் யாரும் இல்லை, அதனால் நான் அதிகம் யோசிக்காமல் செலவிட முடிந்தது. என் இரண்டு மகன்களும் வாழ்க்கையில் நன்கு முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர்; என் மகளுக்கும் திருமணமாகிவிட்டது. எனக்கு மிகக் குறைவான தேவைகளே உள்ளன, ”என்று அவர் இந்துஸ்தான் டைம்ஸில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவாறாக மாவட்ட நிர்வாகத்தின் கண்ணில் அவரது முயற்சிகள் தென்பட்டது. பின்னர், கியோஞ்சர் மாவட்டத்தின் ஆட்சியர் ஆஷிஷ் தாக்ரே, “ஒரு குழு ஏற்கனவே அந்த இடத்தைப் பார்வையிட்டது. மாவட்ட நிர்வாகம் அதன் வளங்களைக் கொண்டு பாலத்தை நிறைவு செய்யும். ராவத்தின் முயற்சிகள் இல்லாதிருந்தால், பாலத்தை பூர்த்தி செய்யும் பணி தொடங்கியிருக்காது. இதற்கிடையில், வாகனங்கள் கடந்து செல்ல பாலத்திற்கு அணுகல் சாலைகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உதவும்.,” என்று தெரிவித்தார்.
இந்த பாலத்தை கட்டிட ஏதுவாக, ஓடிஸா அரசிடம் இருந்து தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய நிலுவைதொகையை ராவத் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். ஆம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பாலத்தின் கட்டுமானத்தை முடிக்க அவர் மேலும் 2 லட்சம் செலவழிக்க இருப்பதாக தெரிகிறது.
ஒடிசா அரசின் அக்கறையின்மையையும் மீறி ராவத் ஆற்றிய மெச்ச தகுந்த பணியை கான்பூர் கிராமவாசிகள் உளமாற பாராட்டுகின்றனர்." பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அவர்கள் அனைவரில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறார் கங்காதர் ராவத். அரசியல்வாதிகள் உட்பட பலரை நாங்கள் அணுகியிருந்தோம், ஆனால் யாரும் அக்கறை காட்டவில்லை. கங்காதர் தான் எங்கள் இன்னல் போக்கும் ஆபத்பாந்தவர். அவரை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'-இல் உள்ளூர்வாசி ஒருவர் முகம் மலர கங்காதர் ராவத்தை போற்றுகிறார்.