Welcome..! Join us to Develop your Humanity
கடைக்காரர் இல்லாத கடைகள் - பல நூற்றாண்டுகளாய் மிசோரமில் சமுதாய அடிமட்ட அளவில் நடந்து வரும் ஒரு புதிய வர்த்தக நடைமுறை.
பெருநகரங்களில் வசிக்கும் நாம் எந்த ஒரு பெரிய கடைக்கு சென்றாலும் வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக கடையின் ஆட்கள் ஒரு படை போல ஆங்காங்கே மேற்பார்வையில் இருப்பதைப் பார்க்க முடியும். ஒருவேளை கடையில் மேற்பார்வை செய்ய யாருமே இல்லை என்றால், அவ்வளவுதான் கடைக்காரர் தலையில் ஒரு துண்டை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! கடைக்காரர் இல்லாத கடையை இங்கே நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஒருவேளை, கடைக்கு வரும் மக்களை முழுமையாக நம்ப கூடிய இடம் ஏதாவது இருக்குமா என்று பார்த்தால், ஆம் அது மிசோரமில் இருக்கிறது. இங்கே பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ள நேர்மையான மரபால் இத்தகைய நிலை சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில், தொலை தூரத்தில் அமைந்துள்ள இந்த மிசோரம் மாநிலத்தைப் பற்றி நாம் அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. காடுகளால் மூடப்பட்ட மலைகளும், அடர்த்தியான மூங்கில் காடுகளும், பசுமையான நெல் வயல்களும், ஆபத்தான மலைச்சரிவுகளும், அழகான நீர்வீழ்ச்சிகளும், மிசோரமை இயற்கையின் உறைவிடமாக ஆக்கியுள்ளது. இவ்விதம் இயற்கை எழிலோடு விளங்கும் இந்த அமைதியான மாநிலம் நமது நாட்டிலேயே மிகவும் பணிவான மற்றும் நேர்மையான மக்களைக் கொண்டுள்ள ஒரு சில இடங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.
மிசோரமில் உள்ள நெடுஞ்சாலைகளில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் காட்டிலிருந்தும், வயலில் இருந்தும் கிடைக்கும் சொற்ப பொருட்களை விட, அவர்களை நாடி வரும் வாடிக்கையாளர்களின் நாணயம் மற்றும் நேர்மையை நம்பியே தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.
மிசோக்கள் தங்களின் நேர்மைக்கும், உபசரிக்கும் தன்மைக்கும், வெளிப்படையான வாழ்க்கை முறைகளுக்கும் பெயர் பெற்றவர்கள். இவ்விதம் வாழும் முறைக்கு "ட்லாமின் கைஹ்னா" (t|awmn gaihna) என்று மிசோ மொழியில் அழைக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் எப்பொழுதும் அன்பாக, விருந்தோம்பல் செய்பவராக, சுயநலம் அற்றவராக, மற்றவருக்கு உதவி செய்பவராக இருப்பது என்றாகும்.
மிசோக்கள் சுயமாகவே தங்கள் மக்களின் நல்லெண்ணம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் ஓர் அடித்தட்டு நிலை வர்த்தக முறையை மேம்படுத்தி உள்ளார்கள். "நகாஹ் லோ த்வார்" (nghah lau dawr) அதாவது , கடைக்காரர் இல்லாத கடை என்னும் அலாதியான முறையை அவர்கள் தங்களுடைய அறுவடை பொருட்களை , விற்கவும் வாங்கவும் பயன்படுத்துகின்றனர்.
மிசோரம் தலைநகர் அய்ஜ்வாலில் இருந்து 65 கி.மீ. தூரமுள்ள செலிங் என்ற இடத்திலே நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இத்தகைய கடைகள் சர்வசாதாரணமாக காணக்கிடைக்கின்றன.
இந்தக் கடைகளில் காய்கறிகள், மலர்கள் ,பழங்கள் போன்ற விளை பொருட்கள் ஒரு விலைப்பட்டியலுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியில் காசை போட வேண்டியதுதான். மக்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை அந்த பெட்டியில் போட்டு விடுகிறார்கள். சரியான சில்லரை இல்லாதவர்கள் அங்கே வைக்கப்பட்டுள்ள சில்லரை பெட்டியிலிருந்து சில்லரையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தப் கடையை நடத்தும் கடைக்காரர்கள் கூறுவது என்னவென்றால், இவர்கள் இவ்விதமான கடைகளை வருடம் முழுவதும் நடத்துகிறார்கள். தாமாகவே எடுத்துக்கொள்வது, உரிய காசை போடுவது, தேவைப்பட்ட சில்லரையைப் பெறுவது என்கிற வழக்கம் மாறாமல் வியாபாரம் நடந்து வருகிறது. பொருட்கள் எப்போதும் காணாமல் போனது இல்லை.
சாலையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள கூரை வேய்ந்த இந்த மூங்கில் குடிசைகளில் ஒவ்வொரு நாள் காலையிலும் தேவையான புதிய காய்கறிகள் ,பழங்கள், சில நேரங்களில் பழரசங்கள் உள்ள பாட்டில்கள், உலர்த்தப்பட்ட சிறிய மீன்கள், நன்னீர் நத்தைகள் என பொருட்களை விற்பனைக்குத் தயாராக வரிசைப்படுத்தி விடுவார்கள். பிறகு அடுப்புக்கரி அல்லது சாக்பீஸால் ஒரு பலகையில் விலைப்பட்டியலை எழுதி தொங்க விடுவார்கள். பிறகு சிறிய கல்லாப் பெட்டியையும், சிறிது சில்லரை காசுகளையும் வைத்து விட்டு அவர்கள் தங்கள் பண்ணைகளில் அல்லது வயலில் வேலை செய்யத் திரும்பிவிடுவார்கள். மக்கள் கடைக்கு வந்து பொருட்களை தாமாகவே வாங்கிக் கொண்டு சரியான விலையை பெட்டியில் போட்டு விட்டுச் செல்லும் போதெல்லாம் இவர்கள் பண்ணைகளில் அல்லது வயலில் தங்கள் வேலையை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
விவசாய நிலங்கள் சிறியதாகவும், அதிக செலவு பிடிக்கும் இடங்களாக இருப்பதாலும், இவர்களால் கடையில் ஒருவரை இருக்க வைத்து வியாபாரத்தை கவனிக்கச் செய்ய கட்டுபடியாவதில்லை. கல்லாப்பெட்டியில் விழும் ஒவ்வொரு நியாயமான தொகையுமே அவர்கள் உழைப்பிற்கு கிடைக்கும் சரியான கூலி ஆகும். இவ்விதமான கடைக்காரர் இல்லாத கடைகளில் வெகு சிலவே ஆயினும் வாடிக்கையாளர்கள் அவர்களை ஏமாற்றுவதே இல்லை என்பதே அவர்களுக்கு பெரிய ஆறுதல்.
உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் நம்பிக்கையும் நாணயமுமே இத்தகைய கடைகள் நடந்திட அடிப்படையான விஷயமாக உள்ளது. தங்களை நம்பி அவர்களின் நாணயத்தை நம்பி, கடைகள் நடந்து வருவது குறித்து அம்மக்கள் பெருமை அடைகிறார்கள்.
இந்தக் கடைகளின் விற்பனையாளர்கள் மக்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்று அவர்களின் உழைப்பிற்கான மதிப்பை ஈடு செய்கிறார்கள்.
மிசோரமில் உள்ள குறு விவசாயிகள் இத்தகைய முகம் தெரியாத வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், நேர்மையையும் நம்பியே தங்களின் வர்த்தகத்தை நடத்துகிறார்கள். மிசோரம் தனித்தனி கிராமங்களாக இருந்து வந்த நாட்களிலிருந்தே தொடர்ந்து நடந்துவரும் இந்த மரபானது இன்றளவும் மாறாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது அம்மக்களின் நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இதோடு கூட, மிசோரமில் சாலையோர இலவச புத்தக சாலையும், நூலகமும் இயங்கி வருகின்றது. மக்கள் இலவசமாக இங்கே நூல்களை படித்து செல்லலாம். இது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒரு இயக்கமாகவே நடத்தப்படுகிறது. அழகான மர அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைக் கொண்டுள்ள நூலகங்கள் சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
மிசோ மக்களின் பண்பாட்டோடு ஊறிய இந்த மரபானது அவர்கள் பரஸ்பரம் தங்கள் மக்கள் மீது உள்ள நம்பிக்கையையும், நன்மதிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது மிசோரம் மாநிலத்தை நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனித்துவம் கொண்ட இடமாக வேறுபடுத்திக் காட்டுகிறது.