Welcome..! Join us to Develop your Humanity
குஷல் கோன்வர் ஷர்மா – கடந்த 33 ஆண்டுகளாக, வார இறுதி விடுமுறைகூட எடுக்காமல், வருடத்திற்கு 700 யானைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்
குஷல் கோன்வர் ஷர்மா இதுவரை 20 முறைகள், யானைகளால் மரணத் தாக்குதலுக்கு உள்ளானாலும், அவர் யானைகளுக்காக உழைப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. அதுபோன்ற அபாயங்களுக்கு நடுவிலும், இந்த யானை டாக்டரை பணி செய்யத் தூண்டுவது எது? அவர் சொல்கிறார், “நான் அதை வேலையாகப் பார்ப்பதில்லை, அதை ஒரு கேளிக்கையாகவே செய்கிறேன். யானைகளுக்கு அருகில் இருப்பதே மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது. நகர வாழ்க்கை அதைத் தருவதில்லை. இப்போது இந்த கணத்தில்கூட எங்கேனும் ஒரு யானைக்கு, ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டு உதவி தேவைப்பட்டால், நான் உடனடியாகப் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவேன்”
ஆசிய யானைகளின் தனிப்பட்ட மற்றும் சமூக நல்வாழ்வு என்பது, டாக்டர் கே.கே.ஷர்மாவின் வாழ்வுப்பணியாகவே ஆகிவிட்டது.
அவருக்கு 7 வயதானபோது, அவருடைய பாட்டி, லக்ஷ்மி என்ற ஒரு யானையைத் தத்தெடுத்து செல்லப் பிராணியாக வளர்த்தபோது, யானைகளின் மீதான அவரது ஆர்வம் ஆரம்பமானது. ஆனால் அந்த யானை ஒருநாள் காயமடைந்து இறந்து போனது.
“லக்ஷ்மி இறந்ததற்குக் காரணம் அவளைக் குணப்படுத்துவதற்குத் தகுந்த நல்ல சிறப்பு மருத்துவர் இல்லாததே. இந்த சிந்தனையே என்னை ஒரு கால்நடை மருத்துவனாக ஆக்கியது” என்றார் டாக்டர் ஷர்மா.
கால்நடை மருத்துவத்தில் 1983ல் இளங்கலை மற்றும் 1986ல் முதுகலைப் பட்டமும், அதன்பின் அறுவை சிகிச்சையில் பி.எச்.டி-யும், 1994ல் மயக்க மருந்து நிபுணராகவும் பயிற்சி பெற்றுள்ளார். பிராணிகளை சாந்தப் படுத்தும் மயக்க ஊசிகளைப் பயன்படுத்துவதில் வடகிழக்கு மாநிலங்களில் அவரே முன்னோடி.
இதுவரை 139 மதங்கொண்ட யானைகளை சாந்தப்படுத்தி பிடித்ததிலிருந்து, நூற்றுக்கணக்கான காயமடைந்த, பிடிபட்ட யானைகளுக்கு சிகிச்சை அளித்தது வரை, ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் பணியில் பெரும்பங்காற்றியுள்ளார். இந்த விஷயத்தில் இவர் உலக சாதனையே படைத்துள்ளார்.
இவரது ஒருநாள் பொழுதானது, நீண்ட தூரங்கள் பயணித்து, யானைகளுக்கு மாமூலான நோய்தடுப்பூசிகள், வைட்டமின் ஊசிகள் கால் பராமரிப்பு என்பதுடன், கருவுற்ற பெண்யானைகள் மற்றும் பிறந்த கன்றுகளின் பராமரிப்பு என்று நீள்கிறது. கடுமையான மலைப்பாதைகளில் பயணித்து நச்சுப் பொருளால் நோயுற்ற காட்டு யானைகளையும், காளைகளையும் கண்டு சிகிச்சையளிப்பதும் உண்டு.
கடந்த 33 ஆண்டுகளில் டாக்டர் குஷல் கோன்வர் ஷர்மா, ஒரு முறைகூட வார இறுதி விடுமுறை எடுத்ததில்லை. இந்தியாவின் யானை டாக்டர் என்றழைக்கப்படும் இவர் ஒவ்வொரு ஆண்டும் 700 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
தனது அறுபது வயதிலும், டாக்டர் ஷர்மா வாரயிறுதி நாட்களில் களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். வடகிழக்கு பாரதத்தில் உள்ள வனங்கள் மற்றும் அந்தந்த மாநிலங்களால் பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கும் சென்று யானைகளுக்கு சேவைபுரிகிறார்.
இந்தப் பணியில் மதம்பிடித்த யானைகளின் அருகில் சென்று, சிறிது தூரத்திலிருந்து மயக்க ஊசிகளை எய்தல் போன்ற அபாயங்களை மேற்கொள்ள வேண்டும். மயக்க ஊசியை எய்தவுடன், அந்த யானை மயக்கமுறும் வரை காத்திருந்து, யானையைப் பிடிக்கும் இந்த முறை அபாயகரமானது. ஆனாலும் அதுவே மனிதத்தன்மையானது.
சாதாரண நாட்களில் டாக்டர் ஷர்மா, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியாலஜி துறைத்தலைவர் என்ற முறையில், அஸ்ஸாமின் கௌகாத்தியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம் செலவிடுகிறார். வாரயிறுதி நாட்களை யானைகளின் சேவைக்காக அர்ப்பணிக்கிறார்.
யானைகளிடமிருந்து தங்கள் சொத்துக்களையும், தங்கள் உயிரையும் காத்துக்கொள்ள அபாயகரமான பாதுகாப்பு பொறிகளைத் தவிர்க்குமாறும், அதற்குப் பதிலாக இயற்கை வேலிகளை அமைப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இதனால் யானைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. யானைகளுக்கு உணவளிக்கும் வகையில் பழமரங்களையும், யானைகள் அண்டவிடாதபடி முள்செடிகளை வளர்ப்பதையும் அவர் ஊக்குவிக்கிறார். அதன் மூலம் யானைகள், அவர்களின் சொத்துக்களை சூரையாடுவது தவிர்க்கப்படும்.
அத்துடன் அவர் உபயோகப்படுத்தப்படாத மற்றும் தரிசு நிலங்களில் வனங்களை உருவாக்கும் முறையைத் துவக்கியுள்ளார். தங்களின் இயல்பான வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டதால்தான், யானைகள் மனித வசிப்பிடங்களுக்குள் நுழைகின்றன என்பதே யதார்த்தம். எனவே மறுவனமாக்கப்பட்ட பகுதிகளே, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடையாளமாகும்.
யானைகள் மட்டுமல்லாமல், டாக்டர் ஷர்மா அவர்கள், இந்திய இனமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 1990களில் அஸ்ஸாமில் இருந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வன வேட்டையாளர்கள் வேட்டையாடி காண்டாமிருகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்கள். டாக்டர் ஷர்மாவின் முயற்சியால், மானஸ் தேசிய பூங்காவில் காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்பட்டு, படிப்படியாக அவற்றின் எண்ணிக்கை பழையநிலைக்கு மீண்டு வருகிறது.
வனவிலங்கு மற்றும் குறிப்பாக ஆசிய யானைகள் பாதுகாப்பில், அவரது பங்களிப்பைப் பாராட்டி கடந்த ஜனவரி 2020ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிப்ரவரி 2020ல் காஸிரங்கா வைல்ட்லைஃப் சொசைட்டி சார்பாக, வாழ்நாள் சாதனையளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
உலகத்தோருக்கு டாக்டர் ஷர்மாவின் செய்தியானது, “யானைகள் நமது நிலங்களை உழுவதுமில்லை, நமக்குப் பால் கொடுப்பதுமில்லை. இருந்தும் நாம் ஏன் அவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் பொதுவான கேள்வியாக உள்ளது. ஆனால் யானைகள் நமது பாரம்பரியத்தின் அடையாளம் என நான் நம்புகிறேன். வனப்பாதுகாப்பில் விதைகளை பரவவிடுதல் மூலம் யானைகள் பெரும்பங்காற்றுகின்றன. யானைகளின் P53 ஜீன்கள் காரணமாக அவைகளுக்கு புற்று நோய் வருதில்லை என்பதால், புற்றுநோய் பிரச்சினைக்கான தீர்வுக்கு நம்பிக்கையளிக்கின்றன. யானைகள் இல்லையென்றால் வனங்கள் இல்லை. வனங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இந்தியா இரண்டையும் பெற்றுள்ளது.”