Welcome..! Join us to Develop your Humanity
40 ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தனது 80% வருமானத்தைப் பயன்படுத்தும் - ஒரு தேநீர் விற்பனையாளர் - முகமது மஹபூப் மாலிக்
கான்பூரில் உள்ள ஷார்தா நகர் சந்திப்பில் இருக்கும் ஒரு நடைபாதையில் அமைந்திருக்கும் தேநீர் விற்பனையாளர் முகமது மஹபூப் மாலிக்கின் சிறிய தேநீர் விற்பனையகம், கடந்த நவம்பரில் இருந்து பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. ஏனென்றால், இந்த எளிமையான தேனீர் விற்பனையாளர் இப்போது பலரிடையே பிரபலமான ஓர் நபராக இருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது ட்விட்டர் கணக்கில், 29 வயதான முகமது மஹபூப் மாலிக் ஒரு ‘ஹீரோ’ என்று புகழ்ந்துள்ளார்.
மாலிக் பாய் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் 29 வயதான இவர் தனது வருமானத்தில் 80 சதவீதத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக 40 க்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் கல்வி கற்பதற்காக செலவிட்டு வருகிறார்!
பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “நான் ஆறு உடன்பிறப்புகளுடன் ஒரு குடும்பத்தில் பிறந்தேன்-ஐந்து சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்த, என் தந்தை கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது வருமானம் ஆறு குழந்தைகளின் கல்விக்கு நிதி அளிப்பதற்கு போதவில்லை. இந்த கடினமான சூழ்நிலையால், கல்வியில் ஆர்வமுள்ளவனாக இருந்தபோதிலும், என்னால் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. ” என்று கூறுகிறார் முகமது
ஒரு தேநீர் விற்பனையாளராக, மாலிக் தன் வீட்டு அருகில் பல குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் கண்டார். அவர்களில் பலர் தந்தை இல்லாமல் தாயிடம் வளரும் குழந்தைகளாக இருந்தனர். இந்த தாய்மார்கள்- வீட்டு உதவியாளர்களாக வேலை செய்வது போன்ற மோசமான வேலைகளை செய்து தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு உணவு அளிக்கவே கஷ்டப்படும் இந்த குடும்பம், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப எவ்வாறு பணத்தை சேமிப்பார்கள்?
“நான் அந்த குழந்தைகளிடம் என்னைப் பார்த்தேன். நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன், ‘எனக்கு மேல் படிப்புக்கான வாய்ப்பு கிடைத்திருந்தால், சாலையோர உணவகத்தில் தேநீர் விற்றுக்கொண்டு இருந்திருக்க மாட்டேன். மாறாக இதைவிட நல்ல நிலையில் இருந்து இந்த நாட்டிற்கு பங்களித்து இருந்திருப்பேன். எனவே இந்த வாய்ப்புகளை இந்த குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்ய என் சக்திக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று முடிவு செய்தேன், ”என்று முகமது தெரிவிக்கிறார்.
இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான பயணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இவர் ஷார்தா நகருக்கு அருகிலுள்ள மாலிக் பஸ்தி, குருதேவ் டாக்கீஸ் மற்றும் சாகேரியில் உள்ள கான்ஷிராம் காலனி ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களை அமைத்து, அங்கு 350 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்தார். ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் குழந்தைகளுக்கு கற்பிக்க தலா ரூ .2,000 சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்தார்.
"இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தபோதிலும், இந்த குழந்தைகளில் பலரின் எதிர்காலம் இருண்டதாகத் தான் தோன்றியது. சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் நல்ல பண்புகளை கற்பிப்பதன் மூலம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர இரண்டு மணி நேர வகுப்பு எங்களுக்கு உதவவில்லை. நான் அதை அடைய ஒரே வழி எனது சொந்த பள்ளியைத் தொடங்குவதுதான். ”
இவர் நண்பர் நிலேஷ் குமாருடனான உரையாடலின்போது, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கீழ் இந்த முயற்சியைத் தொடங்குவதற்கான யோசனையை உதித்த்து. எனவே 2017 இல் மா துஜே சலாம் அறக்கட்டளை நிறுவப்பட்டது. ஐந்து முக்கிய குழு உறுப்பினர்கள் மற்றும் பிற தன்னார்வலர்களுடன், மாலிக் நிறுவிய அமைப்பு இப்போது ஒரு ஆரம்ப பள்ளியாக இயங்கி வருகிறது, அங்கு 40 குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வியை வழங்குகிறது. மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், சாக்ஸ், பைகள் மற்றும் பிற எழுதுபொருள்கள் உட்பட தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கப்படுகிறது! வாடகைக் கட்டடத்திலிருந்து இயங்கும் இந்த பள்ளியை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நிதிகளும் மாலிக் சேமிப்பு மற்றும் தேநீர் கடையில் இருந்து அவர் சம்பாதிப்பவை.
"இப்போதே, எனது சேமிப்பு மற்றும் வருவாய் மழலையர் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் 40 குழந்தைகளுக்கு போதவில்லை. எனினும் இனிவரும் காலங்களில் மேலும் கடினமாக உழைத்து 200 மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகளை விரிவுபடுத்த விரும்புகிறேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
“நீங்கள் எங்கள் குழந்தைகளைச் சந்தித்தால், அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்று உங்களுக்குப் புரியும். அவர்களுக்கு ஒரு நல்ல தளம் மற்றும் சரியான வகையில் ஆதரவு தேவை. இப்போது, யாராவது தங்கள் கனவு பற்றி அவர்களிடம் கேட்கும்போது, அவர்களின் கண்கள் ஜொலித்த படி அதைப் பற்றி பேசுகின்றனர், ”என்று அவர் புன்னகைக்கிறார்.
முகமது மஹபூப் மாலிக்கின் அன்றாட வழக்கம்
முகமது தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து 5:30 முதல் 7:30 மணி வரை தேநீர் கடையில் வேலை செய்கிறார். 7:30 மணிக்கு, அவர் பள்ளிக்குச் செல்ல உணவகத்தை விட்டு வெளியேறும்போது, அவரது தந்தை உணவகத்தை பார்த்துக் கொள்கிறார். மதியம் 2:30 மணிக்கு பள்ளியை விட்டு வெளியேறி, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தேநீர் கடையில் மீண்டும் பணியைத் தொடங்குகிறார். இந்த சுழற்சி தினமும் தொடர்கிறது.
“நான் பள்ளிக்காக ஒரு நாளைக்கு குறைந்தது ரூ .500 சேமிக்க முயற்சிக்கிறேன். இதை நிலைநிறுத்துவது கடினமாக இருந்தாலும் நான் விடாமுயற்சியுடன் இயங்குகின்றேன், எனது பணியை நிறைய பேர் பாராட்டியுள்ளனர் அவர்களுக்கும், திரு வி.வி.எஸ் லக்ஷ்மனுக்கும் நன்றி. இதன் தொடர்பாக நிதியளிக்க யாரும் முன்வரவில்லை என்றாலும், இந்த குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகளை கொடுக்க நான் கடுமையாக உழைக்கிறேன். எனது சேமிப்பு குறைந்து வருகிறது. இருந்தாலும் இதை இயக்க நான் இரண்டுமடங்கு கடினமாக உழைக்கிறேன், ”என்று அவர் தெரிவிக்கிறார்.
பள்ளி கட்டிடத்திற்கான வாடகை மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ .10,000 ஆகும். பள்ளியின் ஆசிரியர்கள் மான்சி சுக்லா, பங்கஜ் கோஸ்வாமி, அகங்க்ஷா பாண்டே ஆகிய மூவரும் பள்ளியின் அடிப்படைக்கழு முக்கிய உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் இவர்கள் சம்பளத்தையும் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை. மாலிக்கின் மூத்த சகோதரர் நூரி மாலிக் இந்த முயற்சியில் அவருக்கு முழு மனதுடன் ஆதரவளித்து வருகிறார்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளின் மாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய அவர், “எனது சுற்றுப்புறத்தில் உள்ள பலர் என்னை‘ பைத்தியம் ’என்று அழைப்பார்கள், மேலும்‘ எனது சேமிப்பை சமூக சேவையில் வீணாக்குகிறார்கள் ’என்று என்னை விமர்சித்தனர். ஆனால் இப்போது, எனது பணி வியப்பாக பார்க்கப்பட்டு பாராட்டப்படும்போது, அதே நபர்கள் என்னை முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். ”
நல்லெண்ணம் கொண்ட மனித்ர்கள் உதவ வசதியாக மாலிக் தன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவுசெய்து 80 ஜி சான்றிதழைப் பெற எல்லா முயற்சிகைளயும் மேற்கொண்டுள்ளார்.
மாலிக் விடைபெறும்போது கூறுகையில், “என்னைச் சுற்றியுள்ளவர்களின் சேவைக்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன், என் கடைசி மூச்சு வரை நான் தொடர்ந்து செய்வேன். உங்களைச் சுற்றியுள்ள யாரேனும் ஒருவர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையை முன்னுக்கு கொண்டுவர மிகச் சிறிய நடவடிக்கையை மேற்கொண்டால் கூட, அந்த ஹீரோக்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ”