Welcome..! Join us to Develop your Humanity
ராஜேந்திர சிங்! – ராஜஸ்தானத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 9000 க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்களை உருவாக்கிய ‘இந்தியாவின் நீர் நாயகன்’
இந்தியாவின் ‘Water Man’ என்று பிரபலமாக அறியப்படுகிற டாக்டர் திரு. ராஜேந்திர சிங், தனது வாழ்நாள் முழுவதும் - பல இடர்களையும் மீறி ராஜஸ்தானத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றியுள்ளார்!
1959’ல் பிறந்த ராஜேந்திர சிங், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிவற்றைப் பயின்றார். எழுபதுகளில், தனது மாணவர் பருவத்தில் இருந்த திரு. ராஜேந்திர சிங், ‘லோக் நாயக்’ திரு.ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான ‘சம்பூர்ண கிராந்தி’ (முழுமையான புரட்சி) இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர். தனது படிப்பை முடித்த பின்னர், திரு.ராஜேந்திர சிங் - இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ், ஜெய்ப்பூரில் - தேசிய சேவை தன்னார்வலராகச் சேர்ந்தார் .
பின்னர் அவர் ராஜஸ்தானத்தின் வறண்ட மற்றும் ஏழை மக்கள் நிறைந்த ஊர்புறங்களில் பணியாற்றச் சென்றார். முதலாவதாக, இந்த பகுதிகளில் சுகாதார மையங்களை அமைப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. ஆனால் பின்னர், உள்ளூர் மக்களுடன் நெருங்கி தொடர்பு கொண்டதன் மூலம், அவர்களின் மிகப் பெரிய தேவை தண்ணீர்! சுகாதாரப் பாதுகாப்பு அல்ல என்பதை அவர் உணர்ந்தார். சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் வறண்டு கிடந்தன! பயிர்கள் வளரவில்லை! எனவே, அருகிலுள்ள நகரங்களுக்கு மக்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து - பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுடன் அவ்வூப்புரங்களில் இருந்து வெளியேறினர். திரு.ராஜேந்திர சிங் பின்னர் சுகாதார மையங்கள் கட்டும் யோசனையை கைவிட்டு தண்ணீரில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.
1984 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த வேலையை விட்டுவிட்டு கிராமப்புற முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அவ்வாறே அவர் - ‘தருண் பாரத் சங்கத்தை’ (TBS) உருவாக்கித் தனது நான்கு தோழர்களுடன் சேர்ந்து, அப்பகுதிகளில் உள்ள பழைய ஜோஹாட்களை (மழைநீர் சேமிப்பு தொட்டிகள்) பழுதுபார்ப்பதற்கும், ஆழப்படுத்துவதற்கும் கிராம மக்களை ஊக்கப்படுத்த தொடங்கினார் .
அதிஆச்சரியமாக, திரு. ராஜேந்திர சிங் மழைநீரை சேகரித்து-சேமித்து வைக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முறைகளை நடைமுறைப்படுத்தி இருந்தார். இம்மாதிரி முறைகள், இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஆட்சியின் போது அரசால் புறக்கணிக்கப்பட்டு, மக்கள் அம்முறைகளை மறந்து இருந்தனர், ஆனால் இப்போது இம்முறைகள் தான் தண்ணீரை இந்தியாவின் இந்த வறண்ட மாநிலத்திற்கு தருவித்திருந்தது.
1985 ஆம் ஆண்டில் அவர் முதன்முதலில் ஆல்வார் பகுதிக்கு வந்திருந்தபோது - அதன் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதையும், அப்பகுதியின் நீர்நிலைகள் – காட்டுச் சுரங்கங்களாலும், அத்துமீறி புழங்குபவர்களாலும் சேதமடைந்துள்ளதையும் அவர் உணர்ந்தார். இதன் விளைவாக மழைக்காலங்களில் இப்பகுதிகளில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட காரணமாய் அமைந்திருந்தது.
‘ஊரக சுயாட்சி’ மற்றும் தன்னம்பிக்கை குறித்த காந்திஜீயின் போதனையால் ஈர்க்கப்பட்ட திரு. ராஜேந்திர சிங் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த ஊர்சமூகத்து தலைமையிலான நிறுவனக் குழுக்களை அறிமுகப்படுத்தினார். அதாவது கிராம சபைகள், மஹிலா வங்கிகள், நதி நாடாளுமன்றம்... போன்றவற்றை அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான கிராமங்களில் ‘கிராம சுயசார்பு’ (Gram Swayalamban) விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினார் .
கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திரு.ராஜேந்திர சிங், 1985 ஆம் ஆண்டில் கோபால்புரா கிராமத்தில் நீர் பாதுகாப்பு மூலம் கிராமபுற முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். ராஜஸ்தானத்தின் ஒன்பது மாவட்டங்களில் 6500 சதுர கி.மீ பரப்பளவில் - 1058 கிராமங்களில் - 8600 ஜோஹாட்களைக் கட்டுவதில் அவர் பெரும்பங்கு வகித்தார்.
இப்பேற்பட்ட முயற்சிகளின் விளைவால், வடகிழக்கு ராஜஸ்தானத்தில் கிட்டத்தட்ட வறண்டு போயிருந்த ஐந்து பருவகால ஆறுகள், வற்றாத ஜீவ நதிகளாக ஆகியுள்ளன.
இதுபோக - மீன் மற்றும் பிற நதிவாழ் உயிரினங்களை பாதுகாக்க, அப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை தடை விதிக்கக்கோரி, அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக, மூன்று மாத கால சத்தியாக்கிரக போராட்டத்தையும் வெற்றிகரமாக செய்தார்.
நதிகளின் புனிதம், தூய்மை மற்றும் மலைகளின் பசுமை இவைகளை பாதுகாக்க 1995 ஆம் ஆண்டில், திரு. ராஜேந்திர சிங் “நதி / மலை இவைகளை காப்போம்” (Nadhi Pahar Bachao yatra) என்னும் ஒரு யாத்திரையை ஜெய்பூரின் கால்டா பகுதியிலிருந்து - உத்தரகாசியின் கங்கோத்ரி வரை மேற்கொண்டார். பின்னர் அவர் 1996 இல் ‘நீரை சேமிப்போம் உயிர்த்து எழுவோம்’ (Jal Bachao Johad Banao) போன்ற பிரச்சாரத்தையும் தொடங்கினார்.
டிசம்பர் 2002 இல், புது தில்லி, ராஜ்காட், காந்தி சமாதியில் இருந்து ஒரு ‘தேசிய நீர்ப் பயணம்’ (Rashtrya Jal Yatra) ஒன்றை ஏற்பாடு செய்தார். இச்சுற்றுபயணம் - இந்தியாவில் 30 மாநிலங்களில் உள்ள 144 நதிப் படுகைகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்த யாத்திரையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் – ஐந்து ‘தேசிய நீர் மாநாடுகள்’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த ‘ராஷ்டிரிய ஜல் யாத்ரா’ - இந்திய குடிமக்கள் மத்தியில் நீர் தொடர்பான சங்கடங்களை பகிர்ந்து-புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியேயாகும்! ஆறுகளை ஒன்றோடொன்று இணைப்பதை விட ஆறுகளுடன் மக்களை இணைக்க நாம் பாடுபட வேண்டும் என்ற உண்மையை இந்த யாத்திரை வலியுறுத்தியது.
இந்த யாத்திரையின் தற்போதய அனுபவம் தான் - Tharun Jal Vidyapeeth (TJV) ஆக உருவெடுதுள்ளது.
சரிஸ்கா தேசிய பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள காடுகளையும் மீளுருவாக்கம் செய்ய, கிராம சமூகத்தை ஊக்குவிப்பதற்காக, திரு.ராஜேந்திர சிங்கின் தலைமையில் வனப் பாதுகாப்புக் குழுக்கள் - 90 கிராமங்களில் அமைக்கப்பட்டன. மேலும் 32 குழுக்கள் - ராஜஸ்தானத்தில் மற்ற மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று, ஓரு மக்களின் சரணாலயமாக, 12 சதுர கி.மீ. - பைரவ் தேவ் லோக்-வனவிலங்கு சரணாலயம், ஆல்வார் பகுதியில் Bhanvta-Kolyala கிராமத்துச் சமூகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் தரிசாக இருந்த இப்பகுதியில் இப்போது நல்ல வனப்பகுதியும் வனவிலங்குகளும் உள்ளன.
1986 முதல், அவர் ஒரு ‘Ped Bachao Ped Lagao’ (மரங்களை பாதுகாப்போம்) என்னும் லட்சிய பாதயாத்திரையைத் தொடங்கினார் . இது இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த பிராந்தியத்தில் வெவ்வேறு கிராமங்களில் இவ்வாறாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டில், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க அவ்வூர்ச் சமூகங்களை ஊக்குவிப்பதற்காக “வனவிலங்குகளை காப்போம்” (Jungle-Jeevan Bachao Yatra) என்ற யாத்திரையை அவர் ஏற்பாடு செய்தார். இதில் - பாரம்பரிய மருத்துவத்தில், மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் போன்ற ஆவணங்களும் அவரால் முன்னெடுக்கப்பட்டது .
ஆரவல்லீ மலைப்பகுதிகளில் காட்டுவளச் சுரண்டல்களின் காரணமாக, காடுகள் அழிப்பிற்கு எதிரான பிரச்சாரத்திற்கும் திரு. ராஜேந்திர சிங் தலைமை தாங்கினார் - இதன் விளைவாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் - மத்திய அரசு அக்காட்டு வளங்களை சுரண்ட தடை விதித்தது. இதன் விளைவாக, அப்போதிருந்த ராஜஸ்தானத்து அரசால் கிட்டதட்ட ஒராயிரம் சுரங்கங்கள் - இதில் சரிஸ்கா பகுதியில் மட்டுமே, அதை சுற்றி இருந்த 470 சுரங்கங்கள் மூடப்பட்டன. அத்துடன், ‘தருண் பாரத் சங்கத்தால்’ தொடங்கப்பட்ட பல்வேறு வகையான கிராமப்புற மேம்பாட்டு வேலைவாய்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மூலமும், நீர் மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் வேலை இழந்து இருந்த தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற்றனர்.
அன்னாரது முயற்சிகள் - வறண்ட நிலத்தை பயிரிடக்கூடியதாகவும், பெரிய அடர்த்தியான காடுகளை நீர் மேலாண்மையால் வனவிலங்கு சரணாலயங்களாகவும் மாற்றி, வறண்ட ஆறுகளை, ஆண்டு முழுவதும் நீரோடும் ஜீவ நதிகளாகவும் ஓடச் செய்தன.
அவர் மேலும் தொடர்ந்து கூறுகிறார்: “மழை அறுவடை செய்வதாலும்; நிலத்தடி நீரை மறுசுழற்சி (Recharge) செய்வதாலும்; நமது பகுதியில் வறட்சியோ அல்லது வெள்ளமோ ஏற்பட வாய்ப்பில்லை. நம்முடையதான இச்செயல் உலகளவில் வெள்ளம் மற்றும் வறட்சி இரண்டையும் தீர்க்கும் ஒரு வழியாகும். எனவே இச்செயலின் தாக்கம் உள்ளூர் மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக கிராம மட்டத்திலும் ஏற்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் ... ”
திரு. ராஜேந்திர சிங் மற்றும் அவரது அமைப்பான ‘தருண் பாரத் சங்கம்’ கடந்த 23 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர் .
நீர் பாதுகாப்புத் துறையில் தனது அர்ப்பணிப்பு பணிக்காக, டாக்டர் சிங் 2001 இல் ‘மாக்சேசே விருது’ மற்றும் 2015 இல் ‘Stockholm Water Prize’ போன்ற மதிப்புமிக்க விருதுகளையும் வென்றுள்ளார்.