Welcome..! Join us to Develop your Humanity
தன் வாழ்நாளையே சிற்ப வேலைப்பாடுகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட 95 வயது நிரம்பிய ஒரு அற்புதமான சிற்பி ராம் வாஞ்சி சுதார்.
ஸ்ரீ ராம் வாஞ்சி சுதார் கடந்த 70 வருடங்களில் நமது தாயகத்திற்கு ஏறத்தாழ 8,000 சிற்பங்களை வடித்து தந்திருக்கிறார். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பை யார்தான் பாராட்டாமல் இருப்பார்கள் அவருடைய நேர்த்தியையும் அவருடைய அர்ப்பணிப்பையும் பல இடங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.
ஒற்றுமையின் வடிவமான நர்மதை நதிக்கரையில் அமைந்திருக்கும் இரும்பு மனிதரின் உலகின் மிக உயர்ந்த உலோக சிலை இவரது தலைமையின் கீழ் வடிவமைக்கப்பட்டது தான். அந்த சிலை பாரத சுதந்திரப் போர் களையும் அதனால் அடைந்த சுதந்திரத்தையும் நினைவு கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான நினைவுச்சின்னம் அமெரிக்காவின் statue of Libertyயை விட இரு மடங்கு உயரமாக அதாவது 597 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேள்விப்படும் தகவல்களின்படி இந்த சிலையின் மையப்பகுதி 18500 டன் வலுவூட்டப்பட்ட எஃகு, மற்றும் 6500 டன் கட்டுமான இரும்பு கொண்டு, 74 லட்சம் கன அடி கான்கிரீட்டால் செய்யப்பட்டு, அதன்மேல் ஆயிரத்து 700 டன் வெண்கலத்தகடுகள், மற்றும் 1850 டன் வெண்கலத்தாலான 565 பெரிய பகுதிகள் மற்றும் 6000 சிறிய பகுதிகளாக உரை பூச்சு செய்து முழுமையாக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய குவிமாடம் ஆகிய, புனேவில் உள்ள வேர்ல்ட் பீஸ் யூனிவர்சிட்டியில் அமைந்துள்ள, sant Dyaneshwar world peace dome, சுதார் அவர்களுடைய கைவண்ணத்தாலான தனித்துவம் வாய்ந்த 54 வெண்கல சிலைகளை கொண்டுள்ளது.
மத்திய பிரதேஷ் மாநிலம், காந்தி சாகர் அணையில் உள்ள 45 அடி உயர சம்பள் தேவியின் கற்சிலை சுதாகர் அவர்களின் முதல் குறிப்பிடத்தக்க வேலைப்பாடாக உள்ளது. அந்த நினைவுச் சின்னம் ஒற்றைக் கல்லாலானதாகும் . 1961 இல் திறக்கப்பட்ட அந்த சிலை, சம்பல் மாதா மற்றும், மத்திய பிரதேஷ் - ராஜஸ்தான் மாநிலங்களில் இடையிலான சகோதரத்துவத்தை குறிக்கும் வகையில் இரண்டு குழந்தைகள் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் குண்டூர் கிராமத்தில் 1925 இல் ஒரு தச்சரின் மகனாக பிறந்த சுதார், சிறுவயதிலிருந்தே தனது கலை ஆர்வத்தை காகிதத்தில் தொடங்கி சுவர்கள் வரையிலுமான பென்சில் வரைபடங்களில் காட்டத் துவங்கினார். கையில் கிடைத்த கற்களில் எல்லாம் சிற்பக் கலையின் மீதான அவரது காதல், வெளிப்படத் துவங்கியதும் இந்த காலத்தில் தான்.
ஐந்தாம் வகுப்பு பள்ளி கல்வியை முடிக்கும் பருவத்தில் சுதார் அவர்களின் வாழ்க்கை ஒரு பெருந்திருப்புமுனையை சந்தித்தது, அவரது ஆசிரியர் பணியிட மாற்றத்தால் சுதாரும் தனது ஆசிரியருடன் வேறு ஒரு கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. சென்ற இடத்தில் பள்ளிக் கல்வியை தொடரமுடியாமல் சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து நாட்கள் கடந்தன.
இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் இரவு தூக்கத்தில் தனது கனவில் தங்க குருவி ஒன்று தோன்றி, உனது கலை ஆர்வத்தினை நோக்கி பயணம் செய் என்று கூறியதை, வேதவாக்காகக் கொண்டு வெறும் காலிலேயே நடந்து மும்பை சென்றடைந்தார் சுதார். அங்கு பல இடங்களில் சிறு சிறு வேலைகள் செய்து வயிற்றுப்பசியாற்றிக்கொண்டு கலைப் பசிக்காக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து சிலை வடிவமைப்புக்கான மதிப்புமிக்க மேயோ தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.
1959ல் கல்லூரிக் கல்வி முடிந்தபின் சிறிதுகாலம் தில்லியில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் வேலை செய்தபின்னர், சுதாகர் தன்னிச்சையான சிற்பியாக செயல்பட்டு வந்தார். அந்த காலத்தில் அவர் எல்லோரா மற்றும் அஜந்தா குகைகளின் உள்ள சிற்ப வேலைப்பாடுகளின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டார்.
இந்தியா மட்டுமல்லாது சுதார் அவர்களின் கலை வேலைப்பாடுகள் ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் பல இடங்களில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை மட்டுமல்லாது மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ஜெயபிரகாஷ் நாராயண், மவுலானா ஆசாத், மகாராஜா ரஞ்சித் சிங், சாஹீத், பகத்சிங் என பல தலைவர்களின் சிலைகளை பல இடங்களில் வடிவமைத்து தந்துள்ளார்.
“வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல!” என்பது போல, சுதார் அவர்களுக்கு வயது ஆகி விட்டதே தவிர, தனது வேலையில் அவர் காட்டும் சுறுசுறுப்பும் ஆற்றலும் தான் இப்போதைக்கு இந்த தேடுதலை நிறுத்தப் போவதில்லை என்று நடைமுறையில் நிரூபித்துக் காட்டும் விதமாக உள்ளது. தனது 95 வயதிலும் ஒவ்வொரு நாளும் சரியாக 11 மணிக்கு சிற்பச்சாலைக்கு வந்து சேரும் இவர் எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் சிலைகளுக்கான களிமண் மாதிரிகளை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தனது மகன் அணில் ராமுடன் சேர்ந்து நொய்டாவில் உள்ள அவரது சிற்பச் சாலையில் தேசத்திற்காக இன்னும் பல நினைவுச் சின்னங்களை செய்தவண்ணம் இருக்கிறார்.
நமது நாட்டில் கனவு காணுங்கள் என்று ஒருவர் சொன்னார் ஆனால் நடைமுறையில் கனவு காணுதல், அதை பின்பற்றி அதை அடைதல் வரை வாழ்ந்து காட்டிய எடுத்துக்காட்டு மாமனிதர் ராம் வாஞ்சி சுதார் ஆவார்.