Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் சேகர் ராகவன் - கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நிலத்தடி நீரை உயர்த்த உதவிய ‘மழை மனிதன்’!
நிதி (NITI) ஆயோக் என்கிற மத்திய அரசின் திட்டக் குழுவின் அறிக்கையின் படி 2020 க்குள் 21 முக்கிய இந்திய நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, இந்த பயங்கரமான பாதிப்பை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.
ஆனால் இந்த கஷ்ட காலத்தினால் நூற்றுக்கணக்கான நகர குடியிருப்பு வாசிகள் வாழ்வின் இருண்ட யதார்த்தத்தையும், நகரத்தின் வளங்களை அதிகமாக அனுபவிப்பவர்கள், தங்களது பொறுப்பையும் உணரத் தொடங்கினர் . நாம் தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை துணிதுவைப்பதற்கு மற்றும் பாத்திரங்களைக் கழுவுவதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றை ஒருபோதும் ஈடு செய்வதில்லை. இயற்கை வளங்கள் பயன்படுத்த முற்றிலும் இலவசம் இல்லை. அவற்றிற்கான விலையை நாம் அவற்றை நீடித்த முறையில் நிலைத்திருக்கச் செய்வதன் மூலம் செலுத்துகிறோம் .
டாக்டர் சேகர் ராகவன் இந்த பொறுப்பை குடியிருப்பு வாசிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை தனி ஒரு மனிதராக வலியுறுத்த தொடங்கினார். சென்னையின் “மழை மனிதன்” (Rain Man) என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகவன், இருபதாண்டுகளுக்கும் மேலாக நகரத்தில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறார். அவரது அயராத முயற்சிகள் இப்போது பாராட்டப்படுகின்றன, இன்று, நீர் நெருக்கடியின் நடுவில், இந்த சுற்றுச்சூழல் போராளிக்கு தினமும் கிட்டத்தட்ட 20 தொலைபேசி அழைப்புகள் வந்து, வீட்டு வளாகங்கள் மழை நீர் சேகரிப்பை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்று விசாரிக்கின்றன.“நான் ஒவ்வொரு வீட்டையும் பார்வையிடுகிறேன். நாங்கள் போதுமான விழிப்புணர்வை பரப்பியுள்ளோம். இப்போது செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, நான் செயல்படுவேன் ”என்று 72 வயதான அவர் கூறுகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த டாக்டர் ராகவன் கடற்கரைகளுக்கு அருகிலுள்ள வீட்டு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்த விவரம் கதைக்கு முக்கியமானது, ஏனென்றால் அவர் இன்று நீர்ப் பாதுகாப்பு போராளி ஆக்குவதில் அவரது வீட்டின் இருப்பிடம் முக்கிய காரணமாக இருந்தது.
"நான் இப்போது சுமார் 50 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறேன்," என்று அவர் விளக்குகிறார், "எனது குடியிருப்பு பகுதி வளர்ந்த விதம் எப்போதும் என்னை கவலையடையச் செய்கிறது. சிமென்ட் சாலைகள் மற்றும் கட்டப்பட்ட கட்டடங்கள் தண்ணீரை நிலத்தில் ஊடுருவாமல் தடுத்துள்ளன, எனவே, அனைத்து நீரும் கடலுக்கு சென்று கலக்கின்றன . அது கடலைச் சந்திக்கிறது அல்லது நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும். 1995 ஆம் ஆண்டில், நான் வீட்டுக்கு வீடு செல்ல ஆரம்பித்தேன், மழைநீரை அறுவடை செய்யுமாறு மக்களை கெஞ்சினேன். ஆரம்பத்தில், எனக்கு நிறைய எதிர்ப்பு வந்தது , ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள், எனது செய்தியின் முக்கியத்துவத்தை நான் நிறுவியிருந்தேன். அதுதான் எனது போரின் தொடக்கப் புள்ளியாக இருந்தது. ”
ராகவனின் செய்தி முக்கியத்துவம் பெற்றதும் , மழைநீரை நகர அளவில் சேமிக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பை தொடங்கினார் . அது தான் ‘மழை மையம்’ (‘Rain Centre’ (RC)).
அனைத்து கட்டடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு முறை கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்ததால் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஒரு சிறந்த கொள்கை ஊக்கத்தைக் கண்டது. உத்தரவிற்கு இணங்கவில்லை என்றால் அபராதம் அல்லது அரசாங்க நீர் வழங்கல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. .
"2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரி மழையை விட குறைவாகவே பெற்றது, எனவே, மழை நீர் சேகரிப்பு முறையை நடைமுறைப்படுத்திய மக்களுக்கு, முடிவுகள் தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், அடுத்த ஆண்டில், நிலத்தடி நீரை நிரப்பிய பலத்த மழை பெய்தது. ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் தண்ணீரை அறுவடை செய்வதன் நன்மைகளை ஒப்புக் கொள்ளவும் பாராட்டவும் இது போதுமான வலுவூட்டலாக இருந்தது. மொத்தத்தில் 40 சதவிகிதம்தான் உண்மையில் நல்ல தரமான அமைப்புகளை செயல்படுத்தியுள்ளன என்பதை எனது ஆய்வுகள் காட்டுகின்றன. அப்படியிருந்தும், இதன் நன்மைகளை இன்று நாம் அனுபவிக்க முடியும், ”என்று இந்த சுற்றுச்சூழல் மருத்துவர் கூறுகிறார்.
டாக்டர் ராகவன் தலைமையிலான ஆர்.சி (RC)., குழாய் வேலை செய்யும் தொழிலாளர்களையும் மற்றும் கிணறு தோண்டுபவர்களின் குழுவையும் கொண்டுள்ளது. இவர்கள் நகரம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்து ஆய்வுகள் நடத்தினர் . மழைநீர் சேகரிப்புக்கு குடியிருப்புவாசிகளுக்கு ஒரு மாதிரி வீட்டைக் காட்ட அவர்கள் விரும்பினர். 2005 மழைக்குப் பிறகு, நிலத்தடி நீர்மட்டம் 20 அடி உயர்ந்ததை அவர்கள் கண்டார்கள். இந்த சாதகமான அறிகுறி அவர்களின் இந்த பணியைத் தொடர காரணமாய் இருந்தது .
இன்று, ராகவன் தண்ணீரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதன் விளைவாக , சென்னை மீண்டும் இந்த செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, ஆர்.சி.க்கு (R.C) ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 அழைப்புகள் வருகின்றன, மழைநீர் சேகரிப்பு முறை குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளையும், செலவு மதிப்பீடுகளையும் கேட்கின்றன. இதுவரை, 500 வீடுகளில் மழைநீரை அறுவடை செய்ய அவர் வெற்றிகரமாக உதவியுள்ளார்.
குடியிருப்பு வளாகங்களின் மழைநீர் சேகரிப்பு முயற்சிகளில் அவர் எவ்வாறு உதவுகிறார் என்பதைப் பற்றி பேசுகையில், ராகவன் கூறுகிறார், “ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் (e-mail) பதிலளிக்க ஒவ்வொரு இரவும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் செலவிடுகிறேன். நான் இதுவரை சுமார் 300 தகவல்களைப் பெற்றுள்ளேன், மேலும் 100 அனுப்புநர்களைப் பார்வையிட்டேன். நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் இறுதியாக புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு இருப்பிடமும் பகுதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது, மேலும் நான் ஒவ்வொரு நாளும் ஒரு வட்டாரத்தை பார்வையிடுகிறேன். எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தை நம்ப முடியாது. சில முயற்சிகள் தனிநபர்களால் செய்யப்பட வேண்டும், மேலும் விருப்பமுள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலை உறுதி செய்வதில் நான் எந்தவிதமான வாய்ப்பையும் விட்டுவிட மாட்டேன். ”
நிலைமையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, 200 அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட வீட்டு வளாகங்களுக்கு ஆர்.சி அதிக முன்னுரிமை அளிக்கிறது. பின்னர் குறைந்த குடியிருப்புகளைக் கொண்ட வளாகங்கள் வந்து, பட்டியலின் முடிவில், குறைந்த நீர் தேவைப்படும் பெரிய தோட்டங்களைக் கொண்ட தனி வீடுகள் இருக்கின்றன .
இரண்டு வகையான மழைநீர் சேகரிப்பு உள்ளது" என்று இந்த சுற்றுச் சூழல் மருத்துவர் நமக்குச் சொல்கிறார். "உங்கள் கட்டடத்தின் கீழ்நிலை நீர்த்தொட்டியில் தண்ணீரை சேகரிக்கும் முறை ஒன்று, அதற்கு நீங்கள் ஒரு வடிகட்டியைச் சேர்க்க வேண்டும், ஆனால் சேகரிக்கப்பட்ட தண்ணீரை உங்கள் வீட்டு உபயோகத்திற்காக வைத்திருக்க முடியும். இரண்டாவது முறை நிலத்தடி நீரை வலுவூட்டுவது. இது எங்கள் முதன்மை பணியாகும் . வறட்சியின் காரணமாக மக்கள் ஒரு நல்ல காரணத்திற்காக ஒன்று சேருவதை என்னால் காண முடிகிறது. மழைநீர் அறுவடை முறைகளை உருவாக்குவது ஒவ்வொரு கோடைகாலத்திலும் தண்ணீர் டேங்கர்களுக்கு பணம் செலுத்துவதைப் போல விலை உயர்ந்ததல்ல, எனவே, மழைநீர் அறுவடை முறைகளைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர், இருப்பினும் இவை தனிப்பட்டவர்கள் தனித்தனியாக பயனடைய முடியாது. ”
இந்தியாவில் நன்னீரின் முக்கிய ஆதாரமாக மழை உள்ளது, உருகிய பனி இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது துணைக் கண்டத்தின் நிலப்பரப்பு மற்றும் காலநிலை இரண்டாவது முறையை அனுமதிக்காததால், முதலாவது முறையை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். இயற்கையை சுரண்டுவதை நாம் தொடர்ந்து செய்ய முடியாது, மேலும் நாம் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகை பரவலான இரசாயனங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத மாசுபாட்டால் இயற்கை சுழற்சியை தடுக்கும்போது அது தன்னை சரி செய்துகொள்ளும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?. நவீன சிக்கல்களுக்கு சில சமயங்களில் பாரம்பரிய தீர்வுகள் தேவைப்படுகின்றன. இயற்கையிடம் இருந்து கிடைக்கக்கூடிய வளங்களை அறுவடை செய்த பின் , திரும்பி இயற்கை வளத்தை ஈடு செய்யவேண்டும் . டாக்டர் சேகர் ராகவன் இயற்கையை ஈடு செய்வதில் தனது மகத்தான பங்கு பணியை தொய்வில்லாமல் செய்து வருவது மிகவும் பாராட்டிற்கு உரியது.